--ஹரன் பிரசன்னா
தங்கராமு வாத்தியார் (அதாவது ராமு வாத்தியார்) எத்தனை முயற்சி செய்தும் பெரிய வாத்தியாருடனான அவரது பிணக்கைத் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. காரணம் இல்லாமல் பெரிய வாத்தியார் எரிந்து எரிந்து விழுவது ஏன் என்று தெரியாமலேயே, காரணம் பிடிபடாமலேயே முப்பது வருட ஆசிரியர் வாழ்க்கையை முடித்துவிட்டார். இப்போது இருக்கும் உதவித் தலைமைஆசிரியர் ரிட்டையர் ஆகிவிட்டால் ராமு வாத்தியார்தான் உதவித் தலைமை ஆசிரியர். இன்னும் அடுத்த ஆறு மாதத்தில் அதுவும் நடந்துவிடும். இருபத்தி நான்கு வயதில், இந்த சேரன்மாதேவியில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து, சொல்லித்தந்த பாடங்களையே மீண்டும் மீண்டும் சொல்லித்தந்து ஒரு வித அலுப்புடன் தான் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது ராமு வாத்தியாருக்கு. இதில் இந்த பெரிய வாத்தியார் பிரச்சனை வேறு. முதலில் இந்தப் பெரிய வாத்தியாருக்கு என்ன கோபமாய் இருக்கும் என்று நிறைய யோசித்தார். ஒன்றும் பிடிபடாமல் போகவே தலைஎழுத்து என்று விட்டுவிட்டார். எப்படியும் வேளைக்கு ஒரு திட்டு ராமு வாத்தியாரைத் திட்டாவிட்டால் பெரியவாத்தியாருக்கு தூக்கம் வராது. அத்தனை திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு அமைதியாகத்தான் இருப்பார் ராமு வாத்தியார். இரண்டு வருடங்கள் முன்பு வேலைக்குச் சேர்ந்த செபாஸ்டியன் சார் கூட பெரிய வாத்தியாரைக் கைக்குள் போட்டுக்கொண்டது ராமு வாத்தியாருக்கு ஆச்சரியமாய் இருந்தது. மதுரைகாரனுவ வெவரமானவனுவ வே என்று சண்முகநாதன் ஐயா செபாஸ்டியன் சார் பற்றிச் சொன்னபோது இவரும் ஏதும் மறுத்துப் பேசவில்லை.
ஊரில் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய விழா என்றாலும் பெரிய வாத்தியாருக்கு அழைப்பு இருக்கும். அன்றும் அப்படித்தான். சிவாஜி இறந்து ஒரு வருடம் முடிந்திருந்தது. அந்த தினத்தை ஒரு விழாவாகக் கொண்டாட ஊரின் பெரியதலைகள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து பெரிய வாத்தியாரை தலைமை தாங்கவும் அழைத்துவிட்டார்கள். பெரிய வாத்தியாருக்கு சினிமா என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் சிவாஜி என்றால் கேட்கவே வேண்டாம். படிக்கும்போது கட் அடித்துவிட்டு சிவாஜி படம் பார்க்கச்சென்றதும் எம்ஜியார் போஸ்டர்களைக் கிழித்ததும் மிக அவசரமாக நினைவுக்கு வந்து போயின அவருக்கு. உடனே சரி என்று சொல்லிவிட்டார். எப்படி எப்படி எல்லாம் பேசவேண்டும் என்று மனதிற்குள் ஒரு திட்டமே தீட்டி வைத்திருந்தார். அதுவும் சிவாஜி பற்றியல்லாவா என்று நினைக்கும்போதே ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது அவருக்கு.
விழா நாளும் வந்துவிட்டது. ஊர் பெரிய தலைகள் எல்லாம் மேடையிலும் பார்வையாளர்கள் எல்லாம் மேடைக்கு முன் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்திலும் அமர்ந்திருந்தார்கள். பெரிய வாத்தியாரை மட்டும் காணவில்லை. எல்லாருக்கும் தெரியும் அவர் நேரத்தை கடைப்பிடிப்பதில் சேரன்மகாதேவி காந்தி என்று. ஆளைக் காணவில்லை என்றதும் என்ன செய்ய என்று யோசித்திக்கொண்டிருக்கும்போது கிராம முனிசீப் பேரன் நரசிம்மன் வேகமாய்ச் சொன்னான்.
'அவரு வரப்ப வரட்டும்வே.. அதுவரைக்கும் நம்மால வெளா (விழா) நடத்தாம இருக்கமுடியாதுல்லா.. நேரம் போயிக்கிடிருக்குல்லா.. ஒரு முடிவு எடுங்கவே'
ஆளாளுக்குக் கூடிப்பேசி முடித்தபோது எல்லாருடைய கண்களும் ராமு வாத்தியாரை முகாமிட்டிருந்தன. ராமு வாத்தியார் மென்மையாக மறுத்துப்பார்த்தார்.
'இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம்லா.. அவரு வாரேன்னா சரியா வந்துருவாருடே.. கொஞ்சம் நேரம் பொறுடே.."என்றார் நரசிம்மனைப் பார்த்து.
'ஐயா உங்களுக்குத் தெரியாததுல்ல.. நம்மல்லா காந்தீய வழி வந்த காங்கிரஸ் காரவுக.. நாமலே நேரப்படி சரியா நடத்தலைனா..'
மற்ற பெரியதலைகளும் அதுவுஞ்சரிதான் என்று இழுக்கவும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ராமு வாத்தியார் தலைமை தாங்க சரி என்றார். அவர் மனதில் இன்று என்ன பேசப்போகிறோம் என்பதைவிட நாளை அந்தப் பெரிய வாத்தியார் என்ன சொல்லுவாரோ என்றுதான் எண்ண ஓட்டம் இருந்தது. இருந்தாலும் அவரால் அப்போது கூட்டத்திற்கு தலைமை ஏற்பதை தட்ட முடியவில்லை.
கூட்டம் தொடங்கியது. ஆளாளுக்குப் பேசினார்கள். சரியாக ராமு வாத்தியார் பேசும்போது பெரிய வாத்தியார் வந்து சேர்ந்தார். ராமு வாத்தியார் ஐயோ பாவமாக பெரிய வாத்தியாரைப் பார்க்க அவர் அதனால் என்ன பரவாயில்லை என்ற தோரணையில் ராமு வாத்தியாரைப் பார்த்தார். இத்தனை வருடப் பழக்கத்தில் ஒரு முறை கூட பெரிய வாத்தியார் அப்படிப் பார்த்தாக நினைவில்லை அவருக்கு. அதனால் ஒரு வித சந்தோஷத்துடன் பேசத் தொடங்கியவர் சிவாஜியைப் பற்றிய அவரது எண்ணங்களையும் சிவாஜியின் திறமைகளையும் திறம்பட பேசினார். அவ்வப்போது பெரிய வாத்தியாரையும் பார்க்கத் தவறவில்லை. அன்று என்னவோ பெரிய வாத்தியார் மிகவும் சிநேகப்பூர்வமாய் பார்ப்பது போலத் தெரிந்தது அவருக்கு. ராமு வாத்தியாருக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்களுடன் விழா ஒரு வழியாக முடிவடைந்தது.
மறு நாள் பள்ளிக்குச் செல்லும்போது அவருடைய மன நிலையை அவராலேயே கணிக்க முடியவில்லை. உள்ளத்தின் ஒரு ஓரத்தில் பயமும் இன்னொரு ஓரத்தில் சந்தோஷமும் இருந்தது. பள்ளிக்குச்சென்று ரெஜிஸ்டரில் கையெழுத்து போடும்போது என்றுமில்லாத முறையாய் பெரிய வாத்தியார் ராமு வாத்தியாரைப்பார்த்து, 'வணக்கம்வே .. எப்படி இருக்குறீரு' என்றார். பதில் வணக்கம் கூட சொல்லத்தோன்றவில்லை ராமு வாத்தியாருக்கு. ஒரு வித மன நிறைவுடன் வகுப்புக்கு வந்து வகுப்பு எடுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்கெல்லாம் பியூன் வந்து சொன்னான்.
'பெரிய வாத்தியாரு உங்கள ஒடனே வந்து பார்க்கச்சொன்னாரு'
என்னாவாயிருக்கும் என்று யோசித்தபடியே பெரிய வாத்தியாரு ரூமுக்கு ராமு வாத்தியார் போனார். அங்கே கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் இருந்தார்கள். இவருக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. எல்லாரும் இவருக்கு வணக்கம் சொன்னார்கள். செபாஸ்டியன் சார் மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. இவரும் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய வாத்தியார் ராமு வாத்தியாரை ஒட்காரச்சொல்லிவிட்டு தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்.
'இப்போ எல்லாரும் இங்க எதுக்கு இருக்கோம்? விஷயம் இருக்குவே.. விஷயம் இருக்கு.. இல்லாம இத்தனை பேரயும் கிளாஸ விட்டுட்டு வரசொல்லுவனா?'
தேவை இல்லாமல் நீட்டி முழக்கிப் பேசுவது எல்லாருக்கும் எரிச்சலாயிருந்தது. இருந்தாலும் அமைதியாயிருந்தார்கள்.
' நேத்து நம்ம ராமு வாத்தியாரு மேடையில பேசுனப்பதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு.. நாமெல்லாம் சிவாஜியப் பார்த்து வளந்துட்டோம். ஆனா இப்ப இருக்குற பசங்களுக்கு எத்தன பேருக்கு அவரப் பத்தி தெரியும்? ஒண்ணத்துக்கும் தெரியாது. அதனால இன்னைக்கு சாய்ங்காலம் மூணு மணிக்கு ஒரு மீட்டிங் வெச்சி அதுல நம்ம ராமு வாத்தியாரையே சிவாஜியைப் பத்தி பேசச் சொல்லணும்னு நா முடிவு பண்ணிருக்குறேன்.. எல்லாரும் என்ன நெனைக்கீங்க?'
காத்திருந்தது போல எல்லாரும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தார்கள். ராமு வாத்தியாருக்கு ஒன்றும் ஓடவில்லை. ஆனால் இத்தனை நாள் கிடைக்காத நல்ல பெயர் சிவாஜியினால் கிடைத்திருக்கிறது என்று மட்டும் நினைத்துக்கொண்டார். முடிவு எடுக்கும் முன்பே என்னவெல்லாம் பேசவேண்டும் என்று மனதளவில் தயாராகிவிட்டார். எல்லாரையும் போகச் சொல்லிவிட்டு ராமு வாத்தியரை மட்டும் இருக்கச் சொன்னார் பெரிய வாத்தியார்.
' நேத்து உம்ம பேச்சு கேட்டேன்வே.. ஏம்வே ஒமக்கு சிவாஜின்னா அத்தன பிடிக்குமாவே?'
நல்லதொரு சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை பெரிய வாத்தியார். சிவாஜியை எத்தனைக் கெத்தனை புகழ்கிறோமோ அத்தனைக்கு அத்தனை பெரிய வாத்தியாருக்கு பிடித்துப் போகும் என்று நினைத்துக்கொண்டார். இப்படித்தான் எதையோ ஒன்றை செய்து செபாஸ்டியன் சார் பெரிய வாத்தியாரைக் கைக்குள் போட்டிருக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டார். அதனால் அவர் தனக்குத்தானே சிவாஜியின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொண்டார். அவர் மேல் அவருக்கே சிவாஜி ரசிகன் தான் என்ற எண்ணம் அதி தீவிரமாய் வந்த பின் பதில் சொல்லத் தொடங்கினார்.
'ஐயா. எனக்கு சிவாஜின்னா பைத்தியம்லா .. ஒரு படம் விடமாட்டேன் தெரியும்லா.. என்ன ஒரு நடிகன்யா.. இப்ப வர்றவனெல்லாம் சும்மா கையக் கால ஆட்டுறதும் சிகெரெட்டத் தூக்கிப்போட்டு பிடிக்கிறதும்.. என்னத்தச் சொல்ல.. சிவாஜி மாதிரி வருமாயா?'
'சரியாச் சொன்னீருவே.. ஸ்டைலுங்கான்.. மூதி.. பார்க்கமுடியல.. இப்ப இருக்குற நம்ம புள்ளக பைத்தியம மாதிரி பின்னாடியே அலையுதுக.. என்னத்த சொல்ல..'
அவரது பேச்சு பெரிய வாத்தியாருக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் மேலும் அளக்கத் தொடங்கினார்.
'சிவாஜிக்குத் தெரியாத ஸ்டைலாயா இவனுக காமிச்சிட்டானுவோ? எல்லாம் நேரங்கய்யா..'
'சரியாச் சொன்னீரு வே.. இன்னைக்கு மேடயில நல்லா பேசும்வே.. ஒம்ம பேச்சக் கேட்டுட்டு எல்லா பயபுள்ளயும் சிவாஜி பயித்தியமா அலயணும்.. பாத்துக்கோறும்..'
'சரிங்கய்யா.'
அவருக்கு சந்தோஷமாய் இருந்தது. மனப்பூர்வமாய் சிவாஜிக்கு நன்றி சொல்லிக்கொண்டார்.
இரண்டரை மணிக்கெல்லாம் எல்லா வகுப்பு மாணவர்களும் வரிசையாக வந்து பள்ளியின் நடுவில் உள்ள விளையாட்டு மைதானத்தின் முன் அமர்ந்தார்கள். சரியாக மூன்று மணிக்கு மாசில் வீணையும் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. அங்கே போடப்பட்டிருந்த சிறிய மேடையில் பெரிய வாத்தியார், உதவித் தலைமை ஆசிரியர், ராமு வாத்தியார் இருந்தார்கள். செபாஸ்டியன் வாத்தியார் கீழே இருந்தார். அவருக்கு பெரிய வாத்தியாரும் ராமு வாத்தியாரும் இவ்வளவு தூரம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொள்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சிவாஜியைப் பற்றிப் பேசி இருவரும் நெருக்கமாவார்கள் என்று செபாஸ்டியன் சார் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
முதலில் பேசிய பெரிய வாத்தியார் தான் சிவாஜியி தீவிர ரசிகன் என்றும் சிறு வயதில் அவரை யாராவது திட்டினால் கடுமையாகக் கோபம் வரும் என்றும் இப்போதும் கூட அப்படித்தான் என்றும் சொன்னார். சிவாஜியின் திறமைகளைப் பற்றி ராமு வாத்தியார் சொல்வார் என்று கூறி அமர்ந்தார்.
கடைசியாய் ராமு வாத்தியார் பேச வந்தார். சிவாஜியின் தொடக்க காலத்தில் இருந்து அவரது சாதனைகளை அழகாக வரிசைப் படக் கூறினார். ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் பெரிய வாத்தியாரைப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு புன்னகையைக் கண்ட போதெல்லாம் ராமு வாத்தியாருக்கு உற்சாகம் ஏறிய வண்ணம் இருந்தது. அன்று தான் அவருக்கே அவருடைய பேச்சுத் திறமை அவருக்கே தெரியவந்தது ராமு வாத்தியாருக்கு. என்னமாய் பேசுகிறோம் என்று தனக்குத்தானே தட்டிக்கொடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் உற்சாகம் கரை புரண்ட போது அவரையே அறியாமல் இப்படிச் சொல்லிவிட்டார்..
'அப்பல்லா நாங்க படிக்கும்போது எங்களுக்குள்ள ரெண்டு பிரிவாத்தான் இருப்போம்.. சிவாஜி ஆளுக ஒருபக்கம்.. எம் ஜியாரு ஆளுக ஒருபக்கம்.. நாங்கல்லாம் சொல்லுவோம்.. சிவாஜி வாயில ஜிலேபி.. எம் ஜி யார் வாயில கோழிப்பீ ன்னு.. அவனுக சொல்லுவானுக.. எம்ஜியார் வாயில ஜிலேபி.. சிவாஜி வாயில கோழிப்பீ ன்னு..'
இதைச் சொல்லவும் அதுவரை நமக்குத் தேவையில்லாத ஒன்றை ராமு வாத்தியார் திணித்துக்கொண்டிருந்ததாக நினைத்த பையன்மார்கள் பலமாகச் சிரிக்கத்தொடங்கினர். முதலில் ராமு வாத்தியார் சந்தோஷப்பட்டாலும் திடீரென மண்டையில் உறைத்தது தேவையில்லாமல் எம் ஜியாரைப்பற்றி பேசி விட்டோமோ என்று. இது உள்ளூர்க்கார அரசியல்வாதிகள் காதில் விழுந்தால் என்னவாகும் என்ற தேவையில்லாத பயம் வரவே அத்துடன் அவசரம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொண்டார். எல்லாரும் கை தட்டினார்கள். பெரிய வாத்தியாரும் கை தட்டினார்.
பெரிய வாத்தியாருக்கும் அவருக்குமான உறவு இரண்டு மூன்று வாரங்களாய்ச் சரியாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் பெரிய வாத்தியார் அவரிடம் சரியாக பேசாதது போலத் தோன்றியது. ஒரு வேளை மீண்டும் செபாஸ்டியன் சார் எதுவும் போட்டுக்கொடுத்திருப்பாரோ?. அப்போது ஒரு பையன் ஓடி வந்து சொன்னான்.
'ஐயா.. முத்துவும் பொன்னையனும் கட்டிப் புடிச்சு சண்டை போடுரானுங்கய்யா.. சொன்னா கேக்க மாட்டேங்கானுவோ..'
'ஏல.. நீ போயி ரெண்டு பேத்தயும் இங்க வரச் சொல்லுல.. நா சொன்னேம்னு சொல்லுல..'
சரிங்கய்யா என்று சொல்லிவிட்டுச் சென்றவன் அவர்கள் இருவரையும் அழைத்துவந்தான். அப்போது பார்க்க பெரிய வாத்தியார் ரவுண்ட்ஸ் வர.. அவரே விசாரிக்க ஆரம்பித்தார் இருவரையும்.
'ஏம்ல படிக்க வந்தீயளா.. எதுக்குலே வந்தீய? ஏம்ல தெரு நாயி மாதிரி கட்டிப்புடிச்சு சண்டை போட்டுக்கிட்டு அலையிறீக?.. சொல்லுல.. கேக்கேம்லா..'
ராமு வாத்தியாரும் உடன் சேர்ந்து கொண்டார்.
'கேக்காவல்லா.. சொல்லுல.. நிக்கானுவோ மரமாட்டம்..'
'ஐயா இவன் என்கிட்ட ரஜினி வாயில ஜிலேபி கமல் வாயில கோழிப்பீங்கான்யா.. அதுதான் அடிச்சேன்..'
ராமு வாத்தியாருக்கு பகீர் என்றது.
'பொய் சொல்லுதான்யா.. அவந்தான்யா மொதல்ல கமல் வாயில ஜிலேபி.. சிவாஜி, எம் ஜி யாரு, ரஜினி எல்லாரு வாயிலயும் கோழிப்பீன்னாங்கய்யா..பொறவுதான் நா சொன்னேன்..'
பெரிய வாத்தியார் ராமு வாத்தியாரைப் பார்த்தார். ராமு வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.
'பார்த்தீராவே.. பசங்களுக்கு சிவாஜியப் பத்தி சொல்லித்தாரும்வேன்னு சொன்னா நீரு என்ன சொல்லிக்கொடுத்திருக்குறீருன்னு..?'
ராமு வாத்தியாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
'பசங்க முன்னாடி பேசும்போது பார்த்து பேசணும்வே.. அன்னைக்கே செபாஸ்டியன் சொன்னாரு வே.. நீரு பேசுனது தேவையில்லாததுன்னு.. அவரு சொன்னது சரிதான்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி நா ஸ்கூலுக்குள்ள நுழையிறேன்.. ரெண்டு மூதிங்க என்னைப் பார்த்துட்டு சிவாஜி வாயில கோழிப்பீன்னு சொல்லிட்டு ஓடிச்சு வே.. அன்னைக்கே நெனச்சிக்கிட்டேன்.. ஒரு வார்த்தயப் பேசும்போது அது சின்னப் புள்ளகள எப்டி பாதிக்கும்னு யோசிச்சிட்டுப் பேசுவே.. மேட ஏறினா என்ன வேணா பேசிறுவீரா? '
மாணவர்களுக்கு மத்தியிலேயெ பெரிய வாத்தியார் திட்டியது ராமு வாத்தியாருக்குக் கவலையாயிருந்தது. இருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
'இனிமே பார்த்துக்குறேங்கய்யா..' என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தார்.
'இனிமே என்னத்த..' சலிப்புடன் பெரிய வாத்தியார் அங்கிருந்து நகன்றார்.
அவர் தலை மறைந்ததும் அந்த ரெண்டு பசங்களையும் நாலு சாத்து சாத்தினார். ஏதோ ஒரு எதுகை மோனைக்காய் சொல்லப்போக அது தேவையில்லாத பிரச்சனையாகி விட்டதே என்று வறுத்தப்பட்டுக்கொண்டார். இருந்தாலும் முப்பது வருடம் ஓயாமல் உழைத்தும் ஒரு நாள் கூட அதை பெரிதாக நினைக்காத பெரிய வாத்தியாரை, ஒரு இரண்டு வார காலம் சிவாஜி வாயில ஜிலேபி சிநேகமாக்கித் தந்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டார். அடுத்த ஒரு வரியை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டார்.
இப்பொதெல்லாம் எல்லா பையன் மார்களுக்கும் பெரிய வாத்தியாரை கிண்டல் செய்வது எளிதாய் இருந்தது. அவரை ரேக்க வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் அவர் கண்ணில் படாமல் நின்று கொண்டு பையன்கள் சிவாஜி வாயில ஜிலேபி இல்ல.. கோழிப்பீ ன்னு சொல்லிட்டு ஓடுவதை வழக்க மாக்கிக்கொண்டிருந்தார்கள். பெரிய வாத்தியாரும் கம்பை எடுத்துக்கொண்டு 'எவம்ல சொன்னது?' என்று கோபமாக வருவார். அவர் வருவதற்குள் பையன்கள் ஓடி விடுவார்கள். இப்படியே நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை யாராவது கிண்டல் செய்யும் போதும் ராமு வாத்தியாரை மனதில் கறுவிக்கொள்வார் பெரிய வாத்தியார். ஒரு நாள் பெரிய வாத்தியார் மேல் கோபம் கொண்ட யாரோ பையன் மார்கள் எல்லா கிளாஸ் சுவற்றிலும் மாங்கொட்டையால் சிவாஜி வாயில ஜிலேபி இல்ல.. கோழிப்பீன்னு எழுதிவிட்டு பெரிய வாத்தியாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாரு? என்றும் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். எல்லா கிளாஸ் சுவரிலும் மஞ்சள் மஞ்சளாய் இப்படிப் பார்த்தவுடன் பெரிய வாத்தியாருக்கு ராமு வாத்தியார் மேல் கோபம் மிக அதிகமாய் வந்துவிட்டது. அவரை அவர் ரூமுக்கு வரச்சொல்லிவிட்டார். போகும் வழியிலேயே ராமு வாத்தியார் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். ராமு வாத்தியார் முகத்தைப் பார்த்தவுடன் பெரிய வாத்தியார் படபடவெனப் பொரியத்தொடங்கினார்.
'வாரும் வே.. வாரும்.. அவனவன் சும்மா கெடந்தான். செந்தீ கருந்தீ செவப்புத்தீன்னு சொல்லிட்டு அலஞ்சான்.. சும்மா இல்லாம என்னென்னவோ பேசி கெடுத்திட்டீரே வே.. சுவத்துலலெல்லாம் எழுதுதான்வே.. இதெல்லாம் தேவயா? எத்தனை வருஷம்வே வேல பார்க்குறீரு? பசங்களுக்கு எத சொல்லணும் எத சொல்லக்கூடாதுன்னு தெரிய வேண்டாம்?'
' நீங்கதானய்யா பேசச் சொன்னீக?'
'சிவாஜியப் பத்திதானவே பேசச்சொன்§ன்.. ஜிலேபியயும் கோழிப்பீயயுமா பேசச்சொன்னேன்?'
'அதுல என்னங்கய்யா தப்பு? நாம சின்னவயசுல வெளயாண்டதச் சொன்னேன்..'
ராமு வாத்தியார் என்றும் இல்லாதவாறு இன்று பதில் சொல்வது பெரிய வாத்தியாருக்கு ஆச்சரியமாய் இருந்தாலும் ' பேசுறதையும் பேசிப்புட்டு வெளக்கம் வேற' ன்னு நினைத்துக்கொண்டார்.
' நாமன்னு சொல்லாதவே.. நீருன்னு சொல்லும்.. நா இந்த மாதிரி கண்றாவியால்லாம் வெளயாண்டது இல்லவே..'
' நா சொன்னது தப்பாவே இருக்கட்டும்.. நீங்க சிவாஜியப் பத்தி இப்ப பேசுனாலும் கோவம் வரும்னு சொன்னதாலதா எல்லாவனும் சொல்லிக்கிட்டு அலயுதானுவோ.. உங்கள ரேக்கணும்னு தான் சொல்லுதானுவோ. நா பேசுனது தப்புன்னா நீங்க கூட அதச் சொல்லிருக்கவேண்டாம்..'
அவ்வளவுதான் பெரிய வாத்தியார் அதிகம் சூடாகிவிட்டார்.
'வே நா என்ன பேசணும் பேசக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு நீரு ஆருவே? நீரு ஆருவே? எனக்குத் தெரியும் வே.. என்ன பேசணும் பேசக்கூடாதுன்னு.. நீரு எனக்குச் சொல்லித்தரணும்னு இல்லவே..'
ராமு வாத்தியாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். அவருக்கும் முப்பது ஆண்டுகால சர்வீஸ் இருப்பது ஞாபகம் வந்துவிட்டது.
'அதேதா இங்கயும். எனக்கும் தெரியும்வே.. ஒம்மால ஒம்மப் பார்த்து கிண்டல் அடிக்கிறவன அடக்க முடியல.. என்னவே என்கிட்ட வந்து தாவுறீரு..? நானும் போனாப் போவுது போனாப் போவுதுன்னு பார்த்தா ஒண்ணும் பெறாத விஷயத்துக்கு கெடந்து குதிக்கீறே..? என்ன சொன்னாலும் சும்மா போவான் சும்பன்னு பார்த்தீறா? பையனுவோ என்னவே சொல்றது? நா சொல்றேன் வே.. சிவாஜி வாயில ஜிலேபி இல்லவே... இல்லேங்கேன்.. கோழிப்பீதான்வே.. என்ன பண்ணுவீரு வே? என்னத்தப் பண்ணிடுவீருங்கேன்? டி ஓ கிட்ட சொல்லுவீரா? எங்க சொல்லுவீரு? சொல்லும்வே.. நானும் ஒருகை பார்க்கேங்கேன்.. நீரு எங்க சொன்னாலும் சரிவே எல்லா எடத்துலயும் வந்து சொல்லுவேன் வே.. சிவாஜி வாயில ஜிலேபி இல்லவே.. போதுமா.'
என்ன பேசினோம் என்பது கூடப் யோசிக்காமல் மிகக்கோபமாய்ச் சொல்லிவிட்டு வகுப்புக்கு வந்து விட்டார். தான் சிறு வயதில் சிவாஜி ரசிகராய் இருந்தபோது சொல்லாததை இந்த ஐம்பத்து நான்கு வயதில் பெரிய வாத்தியார் சொல்ல வைத்து விட்டாரே என்று நினைத்துக்கொண்டார்.
பெரிய வாத்தியார் முகத்தில் ஈயாடாமல் அவர் போன பாதையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
(இந்தக் கதை ராயர் காப்பி க்ளப் இணையக்குழுப் போட்டிக்காக எழுதப்பட்டது)
No comments:
Post a Comment