Monday, November 10, 2003

சில விவாதங்களும் ஒரு காதலும்
--ஹரன் பிரசன்னா

அந்தக் குளத்தில் எறியப்பட்டக் கல் மூழ்கி உள்ளே செல்லும்போது நீரின் மேற்பரப்பில் பலப்பல வளையங்களை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொரு சிறிய வளையமும் பெரியதாகி பெரியதாகிக் குளத்தின் கரைகளில் முட்டிக் கலைந்து கொண்டிருந்தது. அதற்குள்ளாக அடுத்த கல் ஏற்படுத்திய வளையங்கள் முன்னேறிச்செல்ல அந்தக்குளம் முழுதும் கலங்கக்தொடங்கியது. குளம் என்று பார்த்தால் பெரிய குளம் என்றெல்லாம் சொல்லி விடமுடியாது. சிறியதாய் ஒரு குளம். அதன் கரையில் ஒரு புளியமரம். அந்தப் புளியமரத்தில் ஒரு ஆணி அடிக்கப்பட்டிருந்தது. ஊரைச் சுற்றும் பேயை அந்த ஆணியில் பிடித்து வைப்பது வழக்கம். அந்த மரத்தின் கீழே நின்று கொண்டு குளத்தில் கல்லெறிந்த படி பானுவின் வரவுக்காய் காத்திருந்தான் சுகிர்தன். அங்கிருந்து பள்ளிக்குச் செல்ல பத்து நிமிடம் எடுக்கும். கல்லூரியும் பள்ளியும் அடுத்து அடுத்து இருந்தது. சுகிர் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தான். பானு கல்லூரியில் முதல் ஆண்டில் இருந்தாள். இந்த நட்பு அவனாலேயே சற்றும் எதிர்பார்க்கப்படாத நட்பு. அனிதாவின் வற்புறுத்தலின் பேரில் அவள் வீட்டிற்குச் சென்ற போது பானுவின் நட்பு கிடைத்தது. சுகிரைப் பொறுத்தவரையில் அவன் யாருடனும் எளிதில் பழகுவதில்லை. அவனது வீச்சு சற்று அதிகமானதாய் இருந்தது. ஒரே விதி விலக்கு பானு மட்டும். பானு வந்துவிட்டிருந்தாள்.

"அதிகான சிந்தனையில் இருப்பது போல இருக்கிறது?"

"-----"

தூய தமிழில் பேசுவதற்கு முதலில் கடினமானதாய் இருந்தாலும் இருவருக்கும் இப்பொது கொஞ்சம் பழகி விட்டிருந்தது.

"சரி நேற்று என்ன நடந்தது?"

"உனக்குத் தெரியாதா?"

"என்ன ஆயிற்று சுகிர்? பேச்சுப்போட்டிக்குத்தானே சென்றாய்? அங்கே என்ன பிரச்சனை?"

"உனக்கு மீனாட்சிசுந்தரம் தெரியுமா? பத்தாம் வகுப்பில் இருக்கிறான். அவன் பேசும்போதுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. "

"ம்"

"பாரதியைப் பற்றிய பேச்சுபோட்டி அது. நமது பள்ளியின் சார்பில் நானும் அவனும் சென்றிருந்தோம். முதலில் அவன் சுற்று. பேசும்போது பாரதியைப் புகழ்ந்துகொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவன் தொனி மாறியது. சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடலில் சேர நன்நாட்டிளம் பெண்களுடனே என்ற வரி பாரதியின் வக்கிரத்தன்மையைக் காட்டுவதாய்ச் சொன்னான். நான் பேசும்போது அது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல். மற்ற எண்ணங்கள் ஒன்றும் இல்லை. வக்கிரத்தன்மை உங்கள் பார்வையின் கோளாறு என்றேன். சட்டென்று எழுந்திருத்த அவன் பரிசுக்காய் நம் ஜாதி பட்ட கொடுமைகளை மறந்துவிட்டு பார்ப்பனர்களைப் புகழாதே என்றான். பின்னர் நடந்ததெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையின் அடித்தளமாகத்தான் அமையும் என நினைக்கிறேன். இன்று பள்ளிக்குச் சென்றால்தான் தெரியும்."

"அப்படி என்ன உங்களுக்கு நாங்கள் செய்து விட்டதாய் நினைக்கிறான் அவன்?"

"நீ உன்னை உன் ஜாதியின் பிரதிநிதியாய் நினைத்துக்கொண்டால் நான் இதுபற்றி பேச விரும்பவில்லை."

"இல்லை. வாய் தவறி வந்துவிட்டது. அப்படி என்ன அநீதி உங்களுக்கு இழைக்கப்பட்டு விட்டது? முன்னர் நேர்ந்திருந்தாலும் இப்போது எல்லாம் மாறி விட்டதாகவே உணருகிறேன்"

"நீங்கள் உணரலாம் அது முக்கியமில்லை. நாங்கள் உணரவேண்டும். எல்லாரும் வெளியில் நன்றாய்ப் பேசுகிறார்கள். ஆனால் உள்ளே எதுவும் மாறவில்லை. எல்லாம் அப்படியே. இன்னும் சாக்கடையாய். உனக்கு எங்கள் முன்னோர்கள் பட்ட கஷ்டமெல்லாம் தெரியாது. அத்தனை அனுபவித்திருக்கிறோம். வேண்டாம் விடு. இது பற்றி பேசும்போதெல்லாம் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவனாகி விடுகிறேன்."

"மீனாட்சி சொல்லிவிட்டான். நீ சொல்ல வில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்."

"விடு வேண்டாம் அந்த பேச்சு"

"இல்லை. என்னால் விடமுடியாது. உனக்கு மட்டும் அல்ல. அந்த பிராபகருக்கும் இதே எண்ணம் தான். ஜாதி பற்றிப் பேசித்தானே மேடையில் கைத்தட்டு வாங்குகிறான்."

"அவன் கைத்தட்டு வாங்குவது அவன் திறமையின் அடையாளம். அதை அங்கீகரி முதலில்"

"அதை இல்லை என்று சொல்லவில்லை. அதை நம் பள்ளியில் இருக்கும் மாணவர்களின் ஆதரவு சொல்லும். நான் தனியே சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் அவன் மனதில் என்னை என் ஜாதியை ஒட்டித்தான் பார்க்கிறான். நான் என்ன பேசினாலும் அதே மேடையிலேயே என்னை எதிர்க்கிறான்"

"நீயாக எதையும் உருவகப்படுத்திக்கொள்ளாதே"

"அப்படியே இருக்கட்டும். ஆனாலும் மேல் ஜாதிக்காரர்கள் ஜாதிகளை மறந்தாலும் நீங்கள் மறக்கவில்லையோ என்று தோன்றுகிறது. குறிப்பாய் நீயும் பிராபகரும்"

"இது செய்த, செய்கின்ற தவறை எல்லாம் மறைக்கும் இன்னொரு இன்னொரு முயற்சி. ஒருவேளை நீ சொல்வது உண்மை என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டால் கூட அது அத்தனை எளிதில் மாறாது. மனதில் விழுந்த வடுக்கள் அவை."

"உன்னை திருத்த முடியாது"

சிரித்தான் சுகிர்.

"பானு காதல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"என்ன திடீரென்று..?"

"இல்லை எல்லாம் பற்றியும் பேசிக்கொள்கிறோம். இது பற்றியும் உன் கருத்தை தெரிந்துகொள்ளலாம் என்று தான்."

"உண்மையில் அது மட்டும் தான் காரணமா?"

"வேறென்ன காரணம் இருக்கக்கூடும்?"

"வேறு காரணங்கள் இல்லை எனில் சந்தோஷமே."

"சொல்.. காதல் பற்றிய உன் கண்ணோட்டம் என்ன?"

"முட்டாள்த்தனம்"

சிரித்தான்.

"நான் எதிர்பார்த்தேன். காதலென்றால் முட்டாள்த்தனமா? எப்படிச் சொல்கிறாய்? அனுபவம் இருக்கிறதா?"

"அனுபவம் இருந்தால் தான் கருத்து சொல்லவேண்டும் என்பதில்லை."

"ஏற்கிறேன். ஏன் முட்டாள்தனம் என்றாய்?"

"பின் வேறென்ன சொல்வது? மணிக்கணக்காய் காத்திருப்பதும் அவள் தூக்கி எறிந்த சில்லறை பொருட்களை எல்லாம் அவன் பாதுகாத்து வைப்பதும் அவன் தந்த வாழ்த்துஅட்டைகளை அவள் முத்தமிட்டுக்கொள்வதும்.. சுகிர்.. ஒரு நாடகத்தன்மை இல்லை இவற்றிலெல்லாம்?"

"எனக்குத் தெரியாது"

"நீ தப்பிக்கப் பார்க்கிறாய்"

"எதிலிருந்து?"

"எதிலிருந்தோ.."

"உன் கற்பனை அது"

"உன் கற்பனை கூடத் தவறு"

"எனக்கு ஒரு கற்பனையும் இல்லை. நான் என்னை உணர்ந்திருக்கிறேன்."

"பேசுவது எளிது. பார்க்கலாம்"

அவன் அவள் முகம் பார்க்காமல் பேசியதை முதல்முறையாய் பானு கவனித்தாள். அவளால் யூகிக்கமுடிந்தும் அவனிடம் கேட்கவில்லை. அவன் ஒரேயடியாய் மறுக்கக் கூடும். அவனாய்ச் சொல்லட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

"சுகிர்.. உனக்குத் திரைப்படங்கள் பிடிக்காதா?"

"பிடிக்காது"

"ஏன்?"

"மாயத்தைக் கண்டு ஏமாற நான் முட்டாளில்லை"

"ஒரு பொழுது போக்குதானே?"

"அது பொழுதுபோக்கு என்ற அளவில் இருக்கும் மட்டும்"

"இப்போது என்ன கெட்டுவிட்டது? அது பொழுதுபோக்காய் மட்டும் தானே இருக்கிறது?"

"யார் சொன்னது? ஒரு நடிகனை நடிகன் என்ற அளவில் வைக்காமல் கடவுளாய் சித்தரிப்பதும் கோயில் கட்டுவதும் அரசியலுக்கு அழைப்பதும்.. ஏனிப்படி?"

"ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?"

"தாராளமாக வரட்டும். சிறிதேனும் அவர்கள் இருக்கும் நாட்டைப்பற்றி, மாநிலத்தைப்பற்றித் தெரிந்துகொண்டு பின் வரட்டும். வெறும் கூட்டம் மட்டும் போதுமா என்ன?"

"மாநிலம் பற்றித் தெரிந்தவர்கள் கொள்கைவாதிகள் இன்று வரை நாட்டை ஆண்டவர்கள் என்ன சாதித்தார்கள்? ஒரு முறை அரசியல் தெரியாதவன் வந்தால் என்ன கெட்டுவிடும்?"

"விளையாடிப் பார்ப்பதற்கு, சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்பதற்கு இது வீடு அல்ல. நாடு. நான் மற்றும் நீ சம்பந்தப்பட்டதல்ல. ஒரு சமுதாயம் சம்பந்தப்பட்டது. இதுவரை வந்தவர்கள் எல்லாம் ஒன்றும் சாதிக்கவில்லை என்பதற்காய் யாரிடம் வேண்டுமானாலும் நாட்டைக் கொடுக்கலாமா என்ன? முட்டாள்த்தனமாய் பேசாதே"

"உனக்கெதிரான கருத்து சொன்னால் அது முட்டாள்தனமா?"

"எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது"

"அப்படியென்றால் நீ தான் முதல் முட்டாள்"

"சரி விடு. பிறகு தீர்மானித்துக்கொள்வோம் யார் முட்டாள் என்று"

"எது பேசினாலும் ஏன் எதிராகவே சொல்கிறாய் சுகிர். எப்போதும் நமது விவாதம் சொல்லப்படாத ஒரு சண்டையிலேயே முடிந்துவிடுவதைக் கவனித்தாயா?"

"முட்டாள்களுடன் பேசினால் அப்படித்தான் முடியும் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் நீ விரும்பமட்டாய்."

பானு முறைத்தாள்.

"இந்தியா முன்னேறுமா?"

"ஏன் திடீர் சந்தேகம்?"

"இல்லை. இன்று மக்கள்தொகை கணக்கெடுப்புக்காய்ச் சென்றோமே.. அங்கே பார்த்தாயா? ஆண்டுவாரியாய்க் குழந்தைகள். வயிற்றில் வேறு. ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை. அரசாங்கம் சொல்லாத அறிவுரைகளா?"

"சுகிர்.. அரசாங்கம் சொல்வதெல்லாம் இருக்கட்டும். உண்மையில் கல்வி மட்டுமே இவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். கல்வியை போதிக்காமல் குடும்பக்கட்டுப்பாடு உட்பட எந்த ஒரு விளம்பரமும் அத்தனை வெற்றி பெறாது"

"உண்மைதான்"

"படிக்கும் ஒவ்வொரு மாணவனும் தான் திருமணம் செய்துகொள்ளுமுன் ஒரு நபருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்"

"ஏன் மாணவிகள் வேண்டாமா?"

"மாணவிகளும் தான். ஆனாலும் இந்த சமூகம் இன்னும் ஆண் சம்பத்தப்பட்டதாயேதான் இருக்கிறது. சேவை செய்யும் பெண்களுக்கு சமூகம் தரும் பெயர் எனக்குத் தெரியும். அதனால் அப்படிச் சொன்னேன். பெண்ணுக்கு உரிமைகள் இன்னும் தொடர்ந்து மறுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இதை மறுப்பதற்கில்லை "

"அதெல்லாம் ஒரு காலத்தில். இப்போது மாறிவிட்டதாய்த்தான் உணருகிறேன்"

"நீங்கள் உணரலாம். அது முக்கியமல்ல. நாங்கள் உணரவேண்டும்."

"ஜாதி பற்றிப் பேச்சு வந்த போது இதையேதான் நான் சொன்னேன். நீ மறுத்தாய்"

"ஜாதி பற்றிப் பேசாதே சுகிர்"

"எப்போதும் நான் மறுப்பேன். நீ தொடர்வாய். இன்று என்ன மாற்றம்?"

"காரணம் நான் கேள்விப்படுவதெல்லாம் நம்பக் கடினமாய் இருக்கின்றன."

"அப்படி என்ன விஷயம்? என்னைப் பற்றியா?"

"வேறு எவரையோ பற்றியது என்றால் நான் இத்தனை தூரம் உன்னிடம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன்"

"சரி சொல். என்ன விஷயம்?"

"நீ யாரையாவது காதலிக்கிறாயா?"

அந்தக் கேள்விக்குப் பின் சுகிருக்கு அத்தனை எளிதாய் பானுவுடன் பேசமுடியவில்லை.

"சொல். யாரையாவது காதலிக்கிறாயா?"

"இன்னொரு நாள் பேசுவோம் பானு. இன்று வேண்டாம்."

"என்றாவது ஒரு நாள் பேசித்தானே ஆகவேண்டும். சொல்."

"என்றாவது ஒரு நாள் பேசலாம். ஆனால் இன்று வேண்டாம்"

"சரி பேச வேண்டாம். கேள். இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் மூட்டைக் கட்டி விட்டு படித்து முன்னேறும் வழியைப் பார். பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பு தவிர மற்ற எல்லாம் வருகிறது உங்களுக்கு"

"பொதுப்படுத்தாதே. என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை"

"எல்லாவற்றிலும் தனித்துவம் வேண்டும் நீ இதில் மட்டும் அறிவிலியாய் இருப்பது ஏன்?"

"காதல் வந்தால் தனித்துவம் போய் விடுமா என்ன? மந்தத்தன்மை வந்துவிடுமா என்ன?"

"என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்"

"நீ அப்படியே வைத்துக்கொள். ஆனால் அதை பொதுவாக்காதே. அப்படிப் பொதுவாய் நினைத்துக்கொண்டால் நீ உன்னை உனக்கே புரியவிடாமல் ஒளித்துக்கொள்ளப்பார்க்கிறாய் என்று அர்த்தம்."

"உனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் இருக்கிறது சுகிர். உன்னுடன் பேசுபவர்கள் எல்லாம் முட்டாள். நீ மட்டும் அறிவாளி என்கிற எண்ணம். இது நல்லதல்ல"

"எல்லோரும் கர்வி என்பார்கள். நீ அதையே சற்று மென்மையாகச் சொல்கிறாய்"

"மற்றவர்கள் சொல்வது தவறாகவே இருக்கட்டும். அதை யோசித்துக் கூடவா பார்க்கக்கூடாது?"

"இதுவரை நான் யோசிக்கும் படியாய் யாரும் என்னிடம் பேசியதில்லை, நீ உட்பட"

"அப்படியென்றால் நானும் மற்ற முட்டாள்களில் அடக்கமா? பின் ஏன் இந்த நட்பு?"

"நான் பார்த்த முட்டாள்களிலேயே கொஞ்சம் அறிவுள்ளவள் நீ.. அதனால்தான்"

"என்னை விட வேறு யாராவது அறிவுள்ளவர்கள் கிடைத்தால் இந்த நட்பு அவ்வளவுதானா?"

"அப்படிச் சொல்லிவிடமுடியாது. ஆனாலும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கும்போதுதான் நானே உணரமுடியும் இந்த கேள்விக்கான பதிலை"

"அதிகம் எதார்த்தம் கூட அசிங்கமாய் இருக்கிறது சுகிர்"

"மாற்றிச் சொல். அதிகம் அசிங்கமாய் இருந்தாலும் அதுதான் எதார்த்தம். அதைப் பற்றிப் பேச பயப்படுகிறோம். அவ்வளவுதான்"

"நீ மாறமாட்டாய்"

"மாறுவேன். ஆனால் மாற்ற முடியாது. என் சரிகள் எனக்கு தவறாகும்போது சரியை நோக்கி மாறுவேன். ஒரே மூச்சில் மாற்ற முயற்சிக்காதே"

"எத்தனையோ முறை பேசியிருக்கிறோம். இன்று தான் நீ உளருகிறாய்"

"நீயும்"

"சரி இனியும் வேண்டாம். இன்னொரு நாள் சந்திக்கலாம்"

சுகிருக்குத் தான் பேசியதெல்லாம் சரி என்றே பட்டது. ஆனாலும் காதல் பற்றி அவள் கேட்ட கேள்விகள் இன்னும் நெஞ்சில் இருந்தது.

நான்கைந்து மாதங்கள் கடந்திருக்கும். முன்பு போல் பானுவுடன் பல விஷயங்கள் பற்றிப் பேச முடியவில்லை. பானுவும் அதிகம் ஆர்வம் காட்டாதது போல இருந்தது அவனுக்கு. இரண்டு மூன்று முறை பேச ஆரம்பித்த போது கூட சிறிது நேரத்திலேயே வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். ஒரு நல்ல நட்பை இழக்கிறோமோ என்று தோன்றும் சுகிருக்கு. பின்பு தன்மேல் தவறு இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விட்டுவிட்டான்.

அன்று நூலகத்தில் இருந்தபோது எதிரே அனிதா வந்து அமர்ந்ததை அவன் கவனிக்கவே இல்லை.

"ஒரு நிமிஷம் உன் கூடப் பேசணும்”"

நூலகம் என்பதால் ரகசியக் குரலில் பேசினாள். அவனும்.

"நீ எப்ப வந்த? நா கவனிக்கவே இல்ல"

"இப்பத்தான்"

"சொல்லு. என்ன விஷயம். பானு எப்படி இருக்கா?"

"அக்கா நல்லா இருக்கா. இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்திலிருக்குற குளத்துக்கு வரச்சொன்னா"

"என்ன விஷயம்?"

"தெரியல"

"அத அவளே சொல்லிருக்க வேண்டியதுதான.. உன்கிட்ட ஏன் சொல்லி விட்டா?"

"தெரியல"

"சரி வர்ரேன்னு சொல்லு"

"ஆமா.. உனக்கும் அக்காவுக்கும் எதாவது சண்டயா?"

"சே சே.. அதெல்லாம் இல்ல.. ஏன் எதாவது சொன்னாளா?"

"அக்கா என்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டா. உங்கிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்லுவா.. இப்ப கொஞ்ச நாளா நீங்க ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்காத மாதிரி இருந்தது. அதான் கேட்டேன்"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல"

"சரி மறந்துறாத.. ராத்திரி வந்துரு"

"சரி"

சுகிர் இனம் புரியாத சந்தோஷம் பரவுவதை உணர்ந்தான்.

ஏழுமணிக்கெல்லாம் அத்தனை இருள் சூழ்ந்துவிட்டது. குளத்தில் ஒரு நிசப்தம் இருந்தது. தூரத்தில் பள்ளியினுள்ளே உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மஞ்சள் நிற பல்பு கண்ணுக்குதெரிந்தது. தூரத்தில் பானு வருவது தெரிந்தது. சுகிருக்கு என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை. இத்தனை நாள் பேசாதது அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒரு இடைவெளியைத் ஏற்படுத்திவிட்டதோ என்று அவனுக்குள் சந்தேகம் வந்தது. பானுவுடன் இடைவெளியா என்று அந்த சந்தேகத்தைத் துடைக்குமுன்பு பானு மிக அருகில் வந்துவிட்டாள்.

"எப்படி இருக்கிறாய் பானு?"

"நல்லா இருக்கேன்"

நன்றாக இருக்கிறேன் என்றல்லவா சொல்ல வேண்டும். என்ன ஆயிற்று. நான்கு மாதம் தானே பேசாமல் இருந்தோம். அதற்குள் யாருடன் எப்படி பேசுவோம் என்று கூடவா மறந்துவிடும்?

"என்ன விஷயம்?"

"சும்மாதான்"

"இல்லை. ஏதேனும் விஷயம் இல்லாமல் அனிதாவிடம் சொல்லி அனுப்பி வரச்சொல்லி.. "

"சொல்றேன். என்ன நீ தப்பா நெனைக்கக்கூடாது"

"நான் ஏன் உன்னைத் தவறாக நினைக்கவேண்டும்? சொல்"

"காதல் பத்தி நீ என்ன நினைக்கிற?"

"இதைக் கேட்கவா வரச்சொன்னாய்?"

"சொல்லு முதல்ல."

"ஒன்றும் நினைக்கவில்லை"

"ஏன் இப்படி பதில் சொல்ற. ரொம்பப் புதுசா இருக்கு ஒன் பதில்"

சிரித்தான் சுகிர்.

"ஏன் சிரிக்கிற?"

"நீ தான் புதுமையாய் இருக்கிறாய் பானு. வழக்குத்தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேச முயற்சிக்கலாம் என்று நீதானே சொன்னாய். எத்தனைக் கஷ்டப்பட்டு உனக்காய் பேச ஆரம்பித்தேன். அது பற்றி ஞாபகம் இல்லாதது போல நீ சாதாரணமாய் பேசுவது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது"

"சரி அத விடு. காதல் பத்தி நீ என்ன நெனைக்கிற?"

"நீ சொல்ல வந்ததை முதலில் நேரடியாகச் சொல்"

"என்னத் தப்பா நெனக்காட்டி சொல்றேன்"

"சொல்"

"நா ஒருத்தர காதலிக்கிறேன்"

"பொய் சொல்லாதே. உன்னால் முடியாது. என்னைக் கிளற ஒரு உத்தி இது"

"இல்ல சுகிர். உண்மையாதான்"

"என்னால் நம்ப முடியாது"

"நா கூடத்தான் மொதல்ல நம்பல. அவரு என்கிட்ட அவரோட காதல சொன்ன பெறகுதான் எனக்கே தெரிஞ்சது நானும் அவரக் காதலிக்கிறேன்னு.."

அவள் ஏதோ ஒரு காரியமாய்த்தான் பேசுகிறாள் என்பது சுகிருக்குப் புரியத் தொடங்கியது. மெல்ல படபடப்பு தொற்றிக்கொண்டது.

"அவரோட டைரி கொடுத்து என்னயப் படிக்கச் சொன்னாரு. ஒவ்வொரு நாளும் என்னப்பத்திதான் எழுதிருந்தாரு. என்ன கலர் ரிப்பன், என்ன பூ. இப்படி ஒவ்வொண்ணும்.. ஒருத்தரு நம்ம மேல இத்தனை ஈர்ப்பா இருக்கும்போது அத எப்படி வேணாங்கிறது?"

"ம்"

"எதாவது சொல்லு சுகிர்"

அவனுக்கு ஒரு நிலைக்கு வரவே சிறிது நேரம் எடுத்தது.

"என்னைக்கோ என் தலயில இருந்த விழுந்த பூவ எடுத்து அவரோட டைரியில ஒட்டி வெச்சிருக்கிறாரு.. அதப் பார்த்த ஒடனே எனக்கு கண்ணுல கண்ணீரே வந்துருச்சு"

"ம்"

"முட்டாள்னு சொல்லத்தோணுதா?"

"இல்லை. சொல்"

"யாருன்னு கேட்க மாட்டியா?"

"யார்?"

"சொன்னா ஆச்சரியப்படுவ.."

"சொல்"

"பிராபகர்"

சுகிருக்குள் மீண்டும் அதிர்வலை.

"நானே எதிர்பார்க்கல. என்னக் கவரணும்னுதான் எல்லா போட்டியிலயும் நா பேசுணுதுக்கெல்லாம் எதிர்த்து எதிர்த்து பேசுனாராம்.."

"ம்"

"அவருக்கு சுத்தத் தமிழ்ல பேசுணா பிடிக்காதாம்.. பேசும்போது சாதாரணமா பேசுனாதான் புடிக்குமாம்.. உன்கூடப் பேசி பேசி சில சமயம் அவரோட பேசும்போதும் அப்படியே வந்துருது.. அதனாலதான் உன்கூடயும் சாதாரணமாவே பேசலாம்ணு.."

"ம்"

"இப்ப வந்தது என்னோட காதல மட்டும் சொல்றதுக்கில்ல"

"ம்"

"விஷயம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய தெரிய ஆரம்பிச்சிருச்சு.. எப்படியும் வீட்டுல சொன்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஜாதி அது இதுன்னு பிரச்சனை பெருசாவும்.. அதனால வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிகலாம்னு.."

சுகிரால் யோசிக்கவே முடியவில்லை. எத்தனை ஒரு மாற்றம். ஒரு முடிவெடுக்க எத்தனை யோசிக்கிறார்களோ அத்தனை வேகமாய் செயல்படுத்துகிறார்கள் பெண்கள். உண்மையில் புதிர்தான்.

"ம்"

"எனக்குத் தெரிஞ்ச ஒரே நல்ல க்ஷிபிரண்டு நீதான்.. ஒன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.. அது மட்டும் இல்ல.."

"ம்"

"ரெஜிஸ்டர் ஆக்ஷிபிஸஞிக்கு வந்து நீ தான் என் சார்பா கையெழுத்து போடணும்... போடுவியா?"


"சுகிர்.. உன்னத்தான்.. ?""சுகிர்.. சுகிர்.."

அப்போதுதான் சுகிர் தன் நிலைக்கு வந்தான்.

"என்ன ஆச்சு சுகிர்?"

"ஒன்றுமில்லை"

"சொல்லு.. என்ன ஆச்சு? எத்தனை தடவை சுகிர் சுகிர்னு கூப்பிட்டேன்?"

"ஒன்றுமில்லை"

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொன்னாலும் நீருனுள்ளிருந்து காற்றுக்குமிழ் வேகமாய் வெளியே வருவது போல அவன் வயிற்றுக்குள்ளே இருந்து மனதிற்கு வந்த அந்த எண்ணம் அதிகமான படபடப்பையும் ஒரு வித சந்தோஷத்தையும் கலவையாய்த் தந்தது அவனுக்கு.

"ஒரு நாள் அனிதாவும் என்னுடன் வரக்கூடும்"

No comments: