நிர்மால்யா வெளியீடு,
48, முதலியார் தெரு,
கிருஷ்ணன் கோவில்,
நாகர்கோவில் - 629001
=====================
சுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி 1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்
எழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.
எழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை அவதானிக்க விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
முதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத் தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து 'கலகக்காரர்களைக்' கொண்டு செல்கிறது. கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.
அடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின் நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய் கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப் பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும் பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில் விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள் படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த 'அவனுக்கு' ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும் காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும், ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள் மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும் மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில் பாராட்டியிருந்தார்.)
அடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும் அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப் பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல் எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
சீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை 'எடுப்பாக' வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான். வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை. ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
சன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள். மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம் சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும் அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது
நேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு
டீச்சர்களுக்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது மாணவி மீண்டும் வென்றே
ஆக வேண்டும் என்ற நினைப்பில், "நேரமிருக்கிறது. சரி பார்" என இரண்டு மூன்று முறை நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின் வெற்றி.
விகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில் கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச் சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய் அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள் தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச் சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம், கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர். கால்குலேட்டர் வருவதற்கு முன்பு 'கால்குலேட்டராக' இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப் பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத் தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து சேர்கிறது அவருக்கு. கடைசியாக, "இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்" என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.
அடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை. இதுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள். ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக் கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். "செப்பனிடப்பட்ட ஒரு படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி அதைவிடக் கஷ்டம்". பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.
பக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான். அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம் அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: " இன்னொரு பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப் போவேன். அப்பத்தெரியும் உனக்கு". ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின் பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல் செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர் தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டதாகத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின் மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.
எல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.

No comments:
Post a Comment