வண்ணதாசன். முழுக்க முழுக்க யதார்த்த தளத்திலான கவிதைகள். தீவிரபோக்குக் கவிதைகளெல்லாம் இல்லாமல் நேரடியாய்ப் பார்க்கும் விஷயங்களை, உறுத்தாத, இயல்பான உவமைகள் கொண்டு, மிக யதார்த்தமான கவிதைகள் அவரது பலம்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுவதிலும் இதே மாதிரியான கவிதையின் படிங்களைக் காணலாம். ஒன்றிரண்டு கதைகள் எந்தவொரு கதையையும் சொல்லாமல், நிகழ்ச்சி விவரிப்புகளாகவும் கதைக்கள விவரிப்புகளாகவும் கண்முன் விரிகின்றன. ஒரு சம்பவத்தை கண்முன் பார்த்த மாதிரியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன.
கதைகளின் பெரிய பலம் மற்றும் காரணம் மனிதர்களின் மன உணர்வுகளைப் படம் பிடிப்பதுதான். நேரில் பார்த்த சம்பவங்களையும் கற்பனைகளையும் கலந்து, கட்டுரையா கதையா என்ற சந்தேகம் வராமல், கதையாக்கும் வித்தையை மிக அழகாகச் செய்திருக்கிறார் வண்ணதாசன்.
கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் திருநெல்வேலியில்தாம் நிகழ்கின்றன. நெல்லைதான் வண்ணதாசனுக்குச் சொந்த ஊர். சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் சென்று கதை எழுத முயற்சிக்கவில்லை. எது இயல்பாக வருகிறதோ அதைச் செய்திருக்கிறார். அதனால்தான் கதைகள் முழுவதிலும் நெல்லை மண்ணின் வாசம் வீசுகிறது.
அவரே முன்னுரையில் சொல்கிறார்.
"சென்னையில் இருக்கும்போது எழுதியவை, அல்லது சென்னையில் இருந்துவிட்டு வந்த நிலையில் எழுதியவை இந்தக் கதைகள். ஏதோ ஓரிரண்டு கதைகளில், ஓரிரண்டு வரிகளில் ஓடுகிற மின்சார இரயில் மட்டும் நான் சென்னையிலும் இருந்த அடையாளத்தைச் சொல்லக் கூடும்.
இருந்த இடம் வாழ்ந்த இடம் ஆகாது.
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிராம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குள் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து
கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டி முட்டி முடை தேடுகிற நிஜம் அது. இந்த விதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என் மீது கவிகிறது. அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்"
பாம்பு உவமை ஒரு எடுத்துக்காட்டு. இது மாதிர் நிறைய உவமைகள் கதைகள் முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. சித்திரத்தைக் கண்முன் கொண்டு வர விழையும் அந்த உவமைகளைத் தொகுத்து எழுதினால் அது சிறந்த கவிதைகளைப் படித்த உணர்வைத் தரும் என்பது என் எண்ணம்.
கதையில் சில அழகான கவிதைப் படிமங்களும் விரவிக்கிடக்கின்றன. கதைகளின் தலைப்பே கவிதைத்துவமாகத்தான் இருக்கிறது. உள்புறம் வழியும் துளிகள், கூண்டுக்கு வெளியே ஒரு புல்வெளி, ஒரு நிலைக்கண்ணாடி... சில இடவல மாற்றங்கள், விதை பரவுதல், மின்மினிப்பூச்சி வெளிச்சத்தில் ஒரு தாத்தாவின் முகம் - இவையெல்லாம் கவிதைத்துவமான தலைப்புகள்.
கதைகளிலும் இதே மாதிரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்ட கவிதை போன்ற வரிகள் விரவிக்கிடக்கின்றன.
"வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னமோ" (ஆறாவது விரல் கதையில்)
"ஓடுகிற தண்ணீருக்குள் நடு ஆற்று மணலில் கை புதைப்பது மாதிரி, நானும் என்னுடைய விரல்களை அரிசிக்குள் வெதுவெதுப்பாய் புதைத்துக்கொள்ள விரும்பினேன்" (ஆறாவதுவிரல் கதையில்)
"நூறு வருஷத்துக்கு முந்தின மண்டபம் சரிந்து கடலுக்குள் பாசியும் சிப்பியும் அப்பிக் கிடந்த கல்தூண்போல இருந்த அண்ணாச்சியின் முகம் அதைக் கேட்டதும் பரவசமாகச் சிரித்தது" (ஊரும் காலம் கதையில்)
"உயர்த்தின ஒவ்வொரு டம்ளர் உள்சுவரிலும், மிச்சமிருந்த குளிர்பானத்துளிகள் வழிந்து கீழ் இறங்கிக்கொண்டிருந்தன" (உள்புறம் வழியும் துளிகள் கதையில்)
"அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு" (சின்னு முதல் சின்னு வரை கதையில்)
"அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஓடுகள்" (சின்னு முதல் சின்னு வரை கதையில்)
இதுமாதிரி ஏகப்பட்ட படிமங்கள் கதை முழுவதும் காணக்கிடைக்கின்றன. இயல்பான நெல்லை வட்டார வழக்கும், விளி முறைகளும், ஊரைப்பற்றிய வர்ணனைகளும், வாதாங்கொட்டை, நந்தியாவட்டை, வேப்பம்பூ, சீம்பால் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், நெல்லையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களின் பெயர்களும், நெல்லையின் தேரோட்டம் பற்றிய குறிப்புகளும் கதைகளில் அணிச்சையாக வந்துபோகின்றன. அவை நம்மை வசமிழக்கச் செய்து கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. எல்லோரையும் போலவே தாமிரபரணியும் தேரோட்டமும் ஆசிரியரை நிரம்பப் பாதித்திருக்கிறது.
சில இடங்களில் தேவையில்லாத வர்ணனைகள் இருந்து, தனியே துருத்திக்கொண்டும் தெரிகின்றது. எடுத்துக்காட்டாய், "தாயின் மார்க்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்" (சின்னு முதல் சின்னுவரை கதையில்) என்பது போன்ற அவசியமற்ற உவமைகளைச் சொல்லலாம்.
வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன, ஆனால் வெகு அழுத்தமான கணங்களைக் கூட வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வண்ணதாசன்.
"அப்பாவின் சட்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது, அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது" என்ற வரியில் பொதிந்திருக்கும் உண்மை மற்றும் வலியின் ஆழம் அதிகம். இதை உணர்ந்தவர்களால்தான் எழுதவோ இரசிக்கவோ முடியும்.
நல்ல கதையைப் படிக்க நினைப்பவர்களும், எழுத்தாளர்களாக முயற்சிப்பவர்களும் இந்தச் சிறுகதைகளை அவசியம் வாசிக்கவேண்டும். ஒரு புதிய கோணத்தை, இந்தக் கதைகள் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அதிலுள்ள பன்னிரண்டு கதைகளில், என் பார்வையில் சிறந்ததாகச் சின்னுமுதல் சின்னுவரை கதையைச் சொல்லுவேன். அதிலுள்ள ஒரு சில வரிகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.
"டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு பள்ளிவாசல் தாண்டி, ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் "சை.. சை.. " என்று மூக்கைப்
பிடித்துக்கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக்காரிகளையும், வயசாளிகளையும் ....." (சின்னுமுதல் சின்னுவரை கதையில்)
விமானதளத்தில் காத்திருக்காமல், எமிக்ரேஷன் செக்கிங் இல்லாமல், காசு செலவில்லாமல் என் வீட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த ஆஸ்பத்திரிக்குப் பின்னாடிதான் என் வீடு இருக்கிறது.
No comments:
Post a Comment