Thursday, December 18, 2003

மீண்டும் ஒரு மாலைப் பொழுது - சிறுகதை


சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும் கைதட்டச் சொல்லி பயிற்றுவிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டாக்டர் வேதசகாயம் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டது மாதிரியே இல்லை. போர்னோ படங்கள் நிறைந்த புத்தகத்தைக் கையில் வைத்து ஒவ்வொரு கோணமாக திருப்பத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். ("கொன்னுட்டான் போ") திடீரெனச் சிரித்துக்கொண்டார்.

"இந்தப் புத்தகத்தையே எத்தனைத் தடவை பார்ப்பீங்க?"

"நீ வேணும்னா புதுசா ஒன்னு வாங்கிக்கொடு. வேண்டாம்னா சொல்றேன்?" முகத்தைக்கூடப் பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினார். நான் அந்த அறையைவிட்டு வெளியில் வந்தேன்.

"என்ன இன்னும் டாக்டர் அதே புத்தகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாரா?" என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் புகுந்துகொண்டாள் செல்வி. அங்கிருந்தபடியே கத்தினாள்.

"ஊர்லேர்ந்து அம்மா ஊறுகாய் அனுப்பியிருக்காங்க. ரிஷப்ஷன்ஸ்ல ஷெல்·ப்ல இருக்குது. எடுத்துக்கோங்க."

"சரி"

"ஸ்டோர்ல வெயிட் பண்றீங்களா? இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்"

வாட்ச்மேன் நமட்டுச் சிரிப்பு சிரித்த மாதிரி இருந்தது.

"எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்".

தலையை மட்டும் வெளியே நீட்டி தாழ்ந்த குரலில் "எத்தனை நாள் தப்பிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்" என்றாள்.

பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டு ரிசப்ஷனை விட்டு வெளியில் வந்தேன். பெரிய கேட் பூட்டியிருந்தது. லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. கேட்டுக்கு வெளியே ரோடு போடுவதற்காக கல்லையும் மண்ணையும் குவித்துவைத்திருந்தார்கள். மிதமான காற்றில் மரங்கள் ஆடுவதைப் பார்க்கவே இரம்மியமாக இருந்தது. தூரத்தில் மசூதியிலிருந்து அல்லாஹ¤அக்பர்அல்லா என ஒலித்தது. ஆஸ்பத்திரியின் வலது புறத்திலிருந்து மிக லேசான கைத்தட்டல் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட அரைமணிநேரமாய் சரியான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவன் தான் பேசிக்கொண்டிருக்கவேண்டும். இது முதல் முறை அல்ல. அவன் அவனை இலக்கியவாதி என்பான். ஏற்பார்கள். மற்ற எல்லார் கேள்விக்கும் ஒரு கருத்தை முன் வைப்பான். ஏற்பார்கள். அவன் சொல்லும்போது கூடுவார்கள். அவன் சொல்லும்போது கலைவார்கள். அந்தக்கூட்டத்தில் அவனுக்கு மிகப்பெரிய ஆளுமை உண்டு.. அதனால் ஏற்பட்ட கர்வம் அவன் முகத்தில் தெரியும்.

கூட்டம் நடக்கும் இடம் தேடி, கைதட்டல் ஓசையைப் பின்பற்றி நடந்தேன்.

ஆஸ்பத்திரியின் வளாகம் பெரிய மதில்சுவரால் சூழப்பட்டிருந்தது. மதிற்சுவரின் மேலே சிறிய சிறிய உடைந்த கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. உள்ளே மதிற்சுவருக்கு இணையாக, வரிசையாய் மரங்கள். சின்னச் சின்ன தொட்டிகளில் குரோட்டன்ஸ் செடிகள். அதைத்தொடர்ந்து ஒரு மரத்தின் கீழ் குவிக்கப்பட்ட மணல். அங்குதான் கூட்டம் கூடியிருக்கிறது. பதினைந்து இருபது பேர் உட்கார்ந்திருக்க ஒருவன் மட்டும் நின்றிருக்கிறான். கையைக் கட்டிக்கொண்டு முகத்தில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டுக்கொண்டு அடுத்த கேள்விக்குத் தயாராய் இருக்கிறான். காதில் வெள்ளை முடிகள் வளர்ந்திருந்தன.

ஒரு காலை தரையில் ஊன்று, இன்னொரு காலை மடக்கி, பாதத்தால் மதில் சுவரை மிதித்துக்கொண்டு யாரும் என்னைக் கவனிக்காதவாறு காம்பவுண்ட் சுவரின் மீது சாய்ந்து நின்றுகொண்டேன். எனக்கு இப்படி நிற்பதுதான் பிடிக்கும்.

"புரட்சி. பெரும் புரட்சி. யுகப்புரட்சி. வரும். வந்தே தீரும். அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன."

வானத்தை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் மேலே பார்த்தார்கள்.

"அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறான். இங்கே இருக்கிறான் அவன்"

பூமியை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் பூமியைப் பார்த்தார்கள்.

"உங்கள் முன்னே இருக்கிறான்"

தன்னைச் சுட்டிக்கொண்டான். எல்லோரும் கைதட்டினார்கள்.

அங்கிருந்து பார்க்கும்போது டாக்டரின் அறை தெரிந்தது. மூன்று நாள்களுக்கு முன்னதாக இராபர்ட் அந்த அறையின் வழியாகத்தான் பார்த்திருக்கவேண்டும். இப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் மணலில்தான் நடந்தததாம். இராபர்ட் சொல்லும்போது அவன் குரலில் இருந்த சந்தோஷம் பொறாமையைக் தந்தது.

"நைட் ட்யூட்டியா.. தூக்கமா வந்துச்சு. டாக்டர் அவர் ஷெல்·ப்ல எதாவது பலான புத்தகம் வெச்சிருப்பார்னு எடுக்க வந்தேன். ஜன்னல் வழியா பார்த்தா.. வேப்ப மரம் இருக்குதுல்ல.. அதுக்குப் பக்கத்துல மணல் குவிச்சு வெச்சிருக்காங்கல்ல.. அங்கதான். கவிதாவும் சிவாவும். சிவா ரொம்ப பயந்த மாதிரிதான் இருந்தது. கவிதா அவனை விடவே இல்லை"

கண்கள் அகல விரித்து, அவன் சொன்ன வேகத்தில் ஒன்றிரண்டு எச்சில் துளிகள் என் மீது தெறித்தன. அதைப் பொருட்படுத்தாமல், "முழுக்கப் பாத்தியா?" என்றேன்.

"வேற வேலை? செம ஷோடா.. கொஞ்சம் லைட்டிங் மட்டும் ப்ராப்பரா இருந்ததுன்னு வெச்சிக்கோயேன்.. ரொம்ப சூப்பரா இருந்திருக்கும்."

"அவங்க உன்னைப் பார்க்கலையா?"

"அவங்க என்னைப் பார்க்கிற மூட்லயா இருந்தாங்க.. சிவா இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன்.."

"சே சே.. இப்பல்லாம் போடுறது இல்லை. முன்னாடி ஏதோ ஒரு ஜாலிக்காகப் போட்டுக்கிட்டு இருந்தான். அவனுக்கே பயம் வந்திருச்சு. எங்க அடிமை ஆயிட்டோமோன்னு.. ஒருநா சொல்லிச் சொல்லி அழுதான்.. அப்புறம் விட்டுட்டான்னு தோணுது"

"என்னமோ எனக்குத் தோணுச்சுப்பா.. அரைமணி நேரம் கழிச்சு ஒன்னுமே நடக்காத மாதிரி கவிதா ரிஷப்ஷன்ல புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தா.. என்ன ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டேன்.. ஒன்னுமில்லை; டயர்டா இருக்குதுன்னு சொன்னா.. மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன். செம கட்டைடா.. ஒருநாள் நானும் டயர்டாக்கணும்"

ராபர்ட்டை நம்ப முடியாது. எதையாவது அளந்து வைப்பான். அவன் கேரக்டர் அப்படி.

கூட்டம் அடுத்த பதிலுக்குத் தயாரானது.

"பறவை என்கிறார்கள். பறப்பது பறவை. ஒரு பறவையைப் பிடித்து அதன் இறக்கைகளை வெட்டி அடைத்து வைத்துவிட்டால் அது பறவை இல்லையென்று ஆகிவிடுமா? பறக்காமல் இருக்கும்போது கூட அது பறவைதான். நானும் அப்படிப்பட்ட ஒரு சிறைவாழ்க்கையில் இருக்கிறேன். எழுதாமால் இருந்தாலும் நான் இலக்கியப் பிதாமகன் தான். எனக்குள் இன்னும் அலைமோதும் பல எண்ணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அவையெல்லாம் அச்சாகும்போது என் மேன்மை இன்னும் உயரும். அன்று இலக்கிய உலகம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குப் பெயரும். அதன் காரணகர்த்தா நானாக இருப்பேன். இதில் சிறிதளவும் சந்தேகமில்லை எனக்கு. "

வானத்தை நோக்கி இரண்டு கைகளைத் தூக்கிக் கர்ஜித்தான். அவன் வெட வெட உடம்புக்கும், தொள தொள அழுக்கு வெள்ளைச் சட்டைக்கும், கைலிக்கும், அந்தக் கர்ஜித்தலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது. இன்னொருவன் அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தான். என்ன கேட்டான் என்றே புரிய இல்லை. அவனுக்கும் புரிந்திருக்காது. புரிந்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. அவனுக்கு அவனுடைய பதில்தான் முக்கியம்.

நான் டாக்டர் அறையை நோக்கினேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துச் சைகை காட்டி, தானும் இங்கே வருவதாகச் சொன்னார். சரி என்றேன்.

டாக்டர் வருவதற்குள் அவன் அடுத்தவன் கேள்விக்கு விடை சொல்லத் தயாரானான்.

தொப்பையைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்ததில் டாக்டருக்கு லேசாக மூச்சு வாங்கியது.

"டாக்டர்.. இவரை ஏன் இன்னும் இங்க வெச்சிருக்கீங்க?"

அடிக்குரலில் பேசிக்கொண்டோம்.

"அன்னைக்குப் பார்த்தேல்ல.. கடைசியில என்ன பண்ணான்னு.. பேசிக்கிட்டு இருக்கும்போதே வயலண்ட் ஆயிடுவாங்க. எப்பன்னு சொல்ல முடியாது. அதுக்காகத்தான்."

"அவனைப் பாதி நோயாளியா ஆக்கினதே நீங்கதான்.."

டாக்டர் சிரித்தார்.

"கற்பனையையெல்லாம் கதையோட நிறுத்திக்கக்கூடாதா?"

"நீங்க நார்மல்னு நினைக்கிறீங்களா? ஒரே புத்தகத்தை மாறி மாறிப் பார்க்கலை? கவிதாவோட ப்ராவை திருட்டுத்தனமா வாசனை பிடிக்கலை? கேவலம் வேலைக்காரி.. அவளோட ஸ்லெப்ட் வெல் பண்ணலை?"

ஸ்லெப்ட் வெல் இராபர்ட் சொல்லித்தந்தது. திடீரென ஒரு நாள் மஞ்சு நர்ஸ¤ம் வாட்ச்மேனும் ஸ்லெப்ட் வெல் என்றான். நான் பரிதாபமாக முழித்தேன். ஸ்லெப்ட் வெல் தெரியாதா என்று கேலி செய்து துணைக்குச் சிவாவையும் அழைத்தான். இருவரும் சேர்ந்து ஸ்லெப்ட் வெல்லை விளக்கினார்கள். பின் எப்போது பார்த்தாலும் மறக்காமல் "நேத்து டாக்டரும் அந்த நர்ஸ¤ம் ஸ்லெப்ட்வெல், மூனு நாளைக்கு முன்னாடி யாரும் யாரும் ஸ்லெப்ட் வெல்" எனச் சொல்லாமல் விடமாட்டான்.

"பரவாயில்லை. கோட் வோர்ட்லாம் தெரிஞ்சு வெச்சுருக்க.. பை தி பை, கேவலம் வேலைக்காரின்னா.. நர்ஸ் பரவாயில்லைங்கிறியா?" சிரித்தார் டாக்டர்.

"உங்க புல்ஷிட் ஹாஸ்யத்தை நிறுத்திட்டு, பதில் சொல்லுங்க மொதல்ல.." உஷ்ணமானேன்.

"ஆரம்பிச்சிட்டான்யா அலம்பல.. இப்ப என்ன பண்ணனும்ங்கிற?"

"காசுக்காகத்தானே இதெல்லாம்.."

"காசுக்காகன்னு பார்த்தா காசுக்காகத்தான் எல்லாம்.. நீ எழுதி என்ன சாதிக்கப்போற? உலகத்தைத் திருத்தப்போறியா? இல்லை சோ கால்ட் (so called) இலக்கியவாதியாகப் போறியா? எழுதிக்கிட்டே இருக்கேல்ல.. காசுக்காகத்தான? அது மாதிரிதான்.. வீட்டுல வெச்சுக்க முடியாம கொண்டு தள்ளிட்டுப் போறான். நாங்க பார்த்துக்கறோம். காசு வாங்கறோம். சரி.. காசு வாங்கிட்டா யாரு வேணா பார்த்துக்கலாம்னு நினைக்கிறியா? ஒரு பத்து நாள் இங்க இருந்து பாரேன்.. கொண்டு வந்து விட்டுட்டுப் போயாச்சுன்னா அவ்வளவுதான். எத்தனை பேர் ரெகுலரா வந்து பார்த்துட்டுப் போறான்ற? வாய் ஓயாம கதை, இலக்கியம்னு பேசிக்கிட்டு இருக்கானே.. அவன் பொண்டாட்டி அவனை வந்து பார்த்து அஞ்சு வருஷம் ஆகப்போகுது.. ஆனா மாசா மாசம் டாண்ணு காசு வந்துரும். ஏன் எதுக்குன்னு கேக்காம பில் செட்டில் பண்ணிடுவாங்க."

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பதில். இன்னும் கேட்டால் அவன் ஒரு இராத்திரியில் செய்த லீலைகளை எல்லாம் சொல்வார். இராபர்ட் மிரண்டு போனதை விவரிப்பார். பக்கத்து பெட் ஆசாமி மறுநாள் முழுதும் வலிக்குது வலிக்குதுன்னு புலம்பிக்கொண்டிருந்ததைச் சொல்லிக் காட்டிச் சிரிப்பார். அவன் நார்மல் இல்லை என்பார். ("பைத்தியங்களுக்கே கண்ட்ரோல் பண்ண முடியலையே.. நாமெல்லாம் எந்த மூலைக்கு" என்று அன்று முழுவதும் இராபர்ட் மப்பில் புலமபிக்கொண்டிருந்தான்.) இராபர்ட்டைக் கருத்து கேட்பார்.

இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் கவிதா ஒரு ஊசியோடு வருவாள். அவளைப் பார்த்ததும் இலக்கியவாதி முதலில் ஓடுவான். ஒட்டு மொத்தக் கூட்டமும் ஓடும். கவிதா அசரவே மாட்டாள். பின்னாடியே ஓடிப் போய், கையைப் பிடித்து முறுக்கி ("ஓடப்பாக்கிறியா.. மூதி.." ) ஊசி போடுவாள். அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் அவன் அடங்கிவிடுவான். கவிதாவின் நைட் ஷி·ப்ட் அதோடு முடிந்த மாதிரிதான். அதற்குப்பின் சிவாவும் மணல்மேடும்தான்.

"அப்ப அவன் ஆயுசு முழுக்க இங்க கெடக்க வேண்டியதுதான்றீங்களா?"

"கம் ஆன் யா.. என்ன ஆச்சு உனக்கு? ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா நைட் என் ரூம்ல இரு. அங்கே இருந்து பார்த்தா மணல்மேட்டுல நடக்குற ஷோ கிளீனா தெரியும். ஒருநாள் நானே ஸ்டே செய்யணும்னு இருக்கேன்.." கண்ணடித்தார்.

பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். அவன் குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

"அவன் தன்னை இலக்கியவாதின்னு நினைச்சுக்கிறான். இத்தனைக்கும் அவன் நார்மலா இருந்தப்ப ஒரு புத்தகம் கூட எழுதினதில்லை. நிறைய படிச்சிருப்பான் போல.. பெரும்பாலான நேரத்துல அவன் நார்மல்தான். சில நேரங்கள்ல அப்நார்மல். அன்னைக்கு இராத்திரி நடந்துக்கிட்ட மாதிரி. அப்நார்மாலிட்டி இருக்கிற வரைக்கும் அவனை அனுப்ப முடியாது. அதுதான் விஷயம்"

"எனக்கு இந்தக் கதையெல்லாம் வேண்டாம். அவனுக்குச் சரியாகுமா ஆகாதா? அவனை வெளியில் அனுப்புவீங்களா இல்லை இங்கயே வெச்சு மாசா மாசம் பணம் பார்ப்பீங்களா?"

டாக்டர் வேதசகாயம் எனப்படுகிற அந்த நபர் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு ஒரு பெருமூச்சோடு என்னைப் பார்த்துச் சொன்னார்.

"நீ இன்னைக்கு அப்நார்மலா இருக்க. உனக்கு இப்பச் சொன்னா எதுவும் புரியாது. நீ நார்மலாகும்போது உனக்கே புரியும்" சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

இருட்டத் தொடங்கியிருந்தது.

இராபர்ட் இரவில் ஜன்னல் வழியே பார்ப்பான்.

கவிதா நிலவொளியில் மணல்மேட்டில் வெறியுடன் சிவா ஆளுவாள்.

டாக்டர் ஆயிரத்து எட்டாவது தடவையாகப் புத்தகத்தைக் கையில் எடுப்பார்.

வேலைக்காரி ஒரு அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பாள்.

செல்வி ஸ்டோர் ரூமையே ஏக்கத்தோடுப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவன் தினம் தினம் பேசிவிட்டு, ஊசி மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பான்.

வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிச் சாவியைப் பையில் வைத்துக்கொண்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொண்டார்.

யோசனைக்குப் பின் டாக்டர், " இப்படி இருப்பது ஒரு வகையில கொடுப்பினை" என்றார்.

நான் டாக்டரிடம் "கேட்டே வேண்டாம்" என்றேன்.

***

No comments: