Monday, March 22, 2004

ரொட்டித்துண்டும் இட்லிப்பானையும் - கவிதை

 
உபயோகப்படுத்தாத பழைய இட்லிப்பானை
என் கற்பனையையும்
கவிதைப் பிரயத்தனங்களையும்
ரொப்பி வைக்கும் நெளிந்த சேமிப்புக்கிடங்காக இருந்த காலத்தில்
குடியேறின எலிகள் இரண்டு, இளமையானதும்
பெட்டையொன்றும் ஆணொன்றும் என்றறிந்தேன்
குஞ்சுகள் ஜனிக்கவும்.

பானையில் பரவிக்கிடந்த
வெற்றுக்கற்பனைகளை வெளித்தள்ளி
வெற்றிடத்தை ஸ்தாபித்து
சிரிப்பும் கும்மாளமுமாய்
சண்டையும் சச்சரவுமுமாய்
தன்னிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது எலிக்குடும்பம்

பொழுதுபோகாத ஒருநாளில்
நானே எதிர்பாராத இரக்க உணர்வு
பானையின்மீது படர்ந்த நிமிடத்தில்
இரண்டு ரொட்டித்துண்டுகளைப் போட்டுவைத்தேன்,
மறுநாள்
மீண்டும் என் கற்பனைகளை எதிர்பார்த்து
காலியாகக் கிடந்தது இட்லிப்பானை.