Thursday, March 18, 2004

புலிநகக்கொன்றையினூடாக என் தாத்தாவின் நினைவுகள்

 
என்னுள்ளே என் தாத்தாவின் நினைவுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்றேதான் நம்புகிறேன். என் தாத்தாவின் ஆளுமைகளை நினைக்க ஆரம்பித்தாலே மிக அதிக உணர்ச்சிவசப்படுதலுக்குள்ளாகி புல்லரிப்பு ஏற்படுவது எனக்கு எப்போதும் ஏற்படுமொன்று. இன்று எனக்கிருக்கும் அறிவுக்கு அடித்தளம் இட்டவர் என் தாத்தா. அதனால் இன்று நானிருக்கும் எந்தவொரு நிலைக்கும் அவர்தாம் மிகப்பெரிய தூண்டுதல். குடும்ப சமாச்சாரங்களில் என் தாத்தாவின் சில வீழ்ச்சிகளைப் பார்த்திருந்தாலும் காலநகர்வில் மனதுள் நிற்பதென்னவோ என் தாத்தாவைப் பற்றிய பிரமிப்புத்தான்.

நினைவலைகளை யார் யார் எழுதவேண்டுமென்பதில் என்னளவில் சில வரையறைகள் உள்ளன. அதனால் நினைவலைகள் என்று எழுதுவதை இயன்றவரையில் தவிர்ப்பது என் இயல்பு. இன்று என்னால் தவிர்க்க இயலாமல் போனதாகத்தான் உணர்கிறேன். அதற்குப் பி.ஏ. கிருஷ்ணன் காரணம். புலிநகக்கொன்றை காரணம். விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், பாலிதீன் பைகள், ஜெ.ஜெ.சில குறிப்புகள் வரிசையில் என்றென்றும் மறக்கவியலாத ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. நாவலைப்பற்றிப் பிறிதொரு சமயம்.

என் தாத்தா, ஆர்க்கால் N. வெங்கட்ராமராவ், என்னுடன் விட்டுச்சென்ற அவரின் சில பால்யகால நினைவுகள் இன்று என்னைப் புரட்டிப் போட்டுவிட்டன. வேறெதையும் யோசிக்க விடாது என்னைப் பற்றிக்கொண்டுவிட்டன. இரண்டரை வருடங்களுக்கு முன்னால் இறந்துபோன அவரை புலிநகக்கொன்றையின் சில பக்கங்களில் நான் பார்க்க நேர்ந்தது, கொஞ்சம் விசும்பலுடன்.

என் தாத்தா நிறைய முறை எனக்குச் சொன்ன நினைவுகளுள் ஒன்று வ.வே.சு. ஐயருடனான அவரது பால்யகால பரிமாற்றங்களை.

என் தாத்தாவின் பூர்வீகம் சேர்மாதேவி. (சேரன்மகாதேவி). திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். அங்கு வ.வே.சு.ஐயர் ஒரு பள்ளி நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் வ.வே.சு. ஐயரையும் அவரது மனைவியையும் ஏறக்குறைய தினமும் சந்திக்கும் மாணவர்களுள் என் தாத்தாவும் ஒருவர். வ.வே.சு. ஐயரின் ஆங்கிலப்புலமையை என் தாத்தா மெச்சியது நினைவுக்கு வருகிறது. அவரது ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களின் உச்சரிப்புப் போன்றே இருக்குமென்றும் அதைப் பயன்படுத்தி ஆங்கிலேயன் போல மாறுவேடம் பூண்டு ஆங்கிலம் பேசி போலீஸிடமிருந்து தப்பித்ததாகச் சொல்வார் என் தாத்தா.

எப்போதெல்லாம் வ.வே.சு. ஐயரின் மனைவியை மாணவர்கள் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் மாணவர்களுக்கு, தங்கள் தோட்டத்திலிருந்த மாமரங்களிலிருந்து மாம்பழம் பறித்துத் தருவாராம் வ.வே.சு. ஐயரின் துணைவியார்.

வர்ணாசிரம முறையை வ.வே.சு. பின்பற்றவேண்டிய நிர்பந்தம் வந்ததையும் வேறு வழியில்லாமல் அதை அவர் ஒப்புக்கொண்டார் என்றதையும் தானே அதை நேரில் பார்த்ததுண்டு என்றும் என் தாத்தா சொல்லியிருக்கிறார்.

பின்பொரு சமயம் வ.வே.சு. ஐயர் குற்றாலம் சென்றபோது அவரது மகன் அருவியில் தவறி விழுந்ததாகவும் அவரைக் காப்பாற்ற வ.வே.சு ஐயரும் குதித்ததாகவும் அதில் இருவருமே பலியானதாகவும் என் தாத்தா சொல்லி, "வ.வே.சு ஐயர் நீச்சல்ல கில்லாடி.. அவர் ஒருதடவை கப்பல்லேர்ந்து மாறுவேஷத்துல தப்பிச்சு கடல்ல ரொம்பத் தொலை நீந்தியே வந்தாராம். அப்படி இருந்தும் அவரால தப்பிக்க முடியல. மகனைக் காப்பாத்த போய் அவரும் செத்துட்டார்" என்று சொல்வார்.

க்ளப்பிலும் மரத்தடியிலும் வ.வே.சு. ஐயர் பற்றிய பேச்சு வந்தபோது இதைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். நினைவிலிருந்ததை எழுதுவதில் தயக்கம் இருந்தது. என் தாத்தா சொன்னதை நான் மறந்து, எதையாவது மாற்றி எழுதிவிட்டால் அதனால் வரும் அவப்பெயர் அவருக்குப் போகவேண்டாம் என்று நினைத்தும் எழுதாமலிருந்தேன்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் என் தாத்தா எனக்குச் சொன்ன வ.வே.சு. ஐயர் பற்றிய குறிப்புகள் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என் தாத்தா சொன்னதில் அல்லது நான் கிரகித்துக்கொண்டதில் சிற்சில முரண்பாடுகள். (என் தாத்தா சரியாகச் சொல்லி நான் மறந்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.) அருவியில் தவறி விழுந்தது வ.வே.சு.ஐயரின் மகனல்ல. மகள். சுபத்ரா. வ.வே.சு. ஐயரும் அவரது மகளும் இறந்தது குற்றால அருவியிலல்ல. பாபநாசம் அருவியில். இதைத் தவிர மற்ற எல்லாமே - வ.வே.சு. ஐயரின் பள்ளியில் தரப்பட்ட பயிற்சிகள், பள்ளியின் சூழல், பள்ளியைச் சுற்றியிருந்த தோப்புகள், வர்ணாசிரம பிரச்சனைகள் - கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களைப் படித்தபோது இந்த விஷயங்களை எனக்குச் சொன்ன என் தாத்தாவின் நினைவுதான் இருந்தது.

வ.வே.சு. ஐயரின் ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் மாறுவேடம் பூண்டு நீந்தித் தப்பித்தது பற்றியும் நாவலிலில்லை. இதுவும் உண்மையாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் என நம்புகிறேன்.

No comments: