Sunday, April 18, 2004

சூழற்கல்வி - கவிதை

 
தண்டவாளச் சரிவில்
மழையில் நமநமத்துச் சிதைந்த
மரக்கட்டைக்கூழில்
முளைத்திருக்கும்
பழுப்பு நிற நாய்க்குடைக்காளான்
புகைவண்டி கடக்கையில்
அதிர்ந்தடங்கி
அடுத்த அதிர்வுக்கு
வெளிர்மெலிக்காம்புடன் தயாராகிறது.

நாத்திகக்கேள்வி கேட்கும் விளம்பரச்சுவர்களில்
ஒட்டிக்காய்ந்த வராட்டியின் கைரேகை பார்க்க
ஜோதிடன் வேண்டியதில்லை.

"மலையும் மலை சார்ந்த இடமும்" பாடத்தில்
மஞ்சள் பூச்சுச் சுவருக்குள்
கனத்த புத்தகம் கையிலிருக்க
இரயிலும் இரயில் சார்ந்த இடமும் மறந்து
அதிர்காளான் அறியாமல்
கைரேகைக்கிழவியின் நிகழ்வாழ்வறியாமல்
தேர்வை எதிர்பார்த்து
நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும்
மோசமொன்றுமில்லை,
அறியும் பின்னொரு நாளில்
அறியாததை அறிந்தமாதிரி
கவிதை எழுதுவார்கள்.

No comments: