Monday, April 19, 2004

கோடுகளால் ஓர் ஓவியம் - கவிதை

நடைபாதையில்
நேர் கோடுகளால் அடைபட்டிருக்கிறது
ஓர் ஓவியம்

முக்கோணமாய் கழுத்து
அழுகிறதா சிரிக்கிறதா என
இனம் பிரிக்க முடியாதபடி
மூன்று கோடுகள் முட்டிக்கொள்ள
எத்தனித்துக்கொண்டு
கண்களும் மூக்கும்

சரிவகமாய் கழுத்து
இணைகோடுகளால் உடல்
குச்சி குச்சியாய் கைகால்கள்
ஐந்து கோடுகளால் விரல்கள்

பக்கவாட்டிலும் நீளவாக்கிலும்
குறுக்கும் நெடுக்கும்
கோடுகள் ஓடி உருவாக்கிய வலை
இதயத்தைக் குறித்ததையும்
நெற்றிச் சுருக்கத்தில் துளிகளுடன்
காசு விழும் சத்தத்திற்காகக்
காதைத் திறந்து காத்திருக்கும் ஓவியனையும்
காணவில்லை என்பதாக செய்துகொண்ட பாவனைகளில்
என்னைப் பொருத்திக்கொள்கிறது அவ்வோவியம்.


No comments: