Tuesday, July 20, 2004

இரத்த உறவு - நாவல் - யூமா. வாசுகி

===================================================

தமிழினி பதிப்பகம், 342, டிடிகே சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014.

====================================================


இதுதான் நான் முதன்முதலாக வாசிக்கும் யூமா. வாசுகியின் நாவல். அதனால் முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் வாசிக்க முடிந்தது.

இரத்த உறவு - குடிகார, கொடுமைக்காரத் தந்தை மற்றும் இரக்கமற்றவர்கள் நிறைந்த குடும்பத்தில் தாயும் மகளும் இரு மகன்களும் படும் பாட்டை, இரத்த உறவுகளால் ஏற்படும் மனவலியை, சித்திரவதையை அதீத உணர்ச்சிகளோடு மிகச் சொல்லி முன்வைக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே மூத்த அண்ணனின் மரணம் சம்பவிக்க ஒருவித இறுக்கச் சூழலுக்குள் நம்மை அழைத்துக்கொண்டுவிடுகிறது நாவல். இந்த இறுக்கச் சூழலும் சோகமும் அதீத உணர்ச்சியும் கடைசி வரை நாவலில் கூடவே வருகிறது. ஒரு சில இடங்களில் சலிப்பு ஏற்படும் அளவிற்குக் கூடவே விடாமல் துரத்துகிறது.

குடிகாரத் தந்தை. தன் செலவுக்கெல்லாம் தம்பி மனைவியிடம் காசு வாங்குவதால் தம்பி மனைவிக்கும், நல்ல நிலைமையில் இருக்கும் தம்பிக்கும் அடங்கியே வாழ்கிற தந்தை. தன் மனைவியை விட தன்னைப் பெற்ற அம்மாவையே அதிகம் விரும்பும் தந்தை. மனைவி, மகன் மற்றும் மகளின் நன்மையை, அவர்களின் வாழ்க்கையை, அவர்களில் கனவை எல்லாவற்றையும் புறக்கணிக்கும் அளவிற்குத் தன் நிலையில் இல்லாத தந்தை. கையில் கிடைத்ததை எடுத்துக் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவரது செய்கைகள் மகன், மகள் மற்றும் மனைவி மீது மட்டுமே செல்லுபடியாகின்றன. அத்தனைக்குப் பின்னரும் அம்மாவும் மகனும் மகளும் அப்பாவிடம் அன்பு மழை பொழிகிறார்கள். நாவல் நெடுகிலும் இதுதான் முக்கியக்கதை . கிளைக் கதையாக சுற்றுப்புறத்தில் வாழும் மனிதர்களின் கதைகளும் சிறு வயதுத் தம்பிகளின் வாழ்க்கையும் அவர்களின் உலகமும் சொல்லப்படுகின்றன.

சிறுவர்களின் உலகம் இந்த அளவுக்கு விஸ்தாரமாகவும் அழகாகவும் அதிக விவரணைகளோடும் சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் பொழுதுபோக்குகளாகச் சொல்லப்படாத விளையாட்டுகளே இல்லை. பொன்வண்டு வளர்ப்பதிலிருந்து காந்தித் தாத்தாப் பஞ்சைப் பார்த்து பாஸா ·பெயிலா எனக் கேட்பது வரை எல்லா விளையாட்டுகளுமே சொல்லப்பட்டிருக்கிறது. சில இடங்களில் நினைவலைகள் படிக்கிறோமோ என்று சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு, தேவையில்லாமல், நுழைத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்துடன் சில அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பாட்டியின் உலகமும் பாட்டியின் வசனங்களும் படு யதார்த்தம். ஒரு கொடுமைக்காரப் பாட்டி கூடவே இருக்கிற மாதிரியான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர்.

அக்கா. நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமும் மிக அதிகமாகத் தியாகம் செய்து, தியாகம் செய்வதற்காக மட்டுமே படைக்கப்பட்ட பாத்திரம். தம்பிகளின் மீது அன்பைப் பொழிந்து, தம்பிகளுக்குத் தாயாக, தாயை விட மேலாகப் பணிவிடை செய்யும் பாத்திரம். பொறுமையின் உச்சம். அந்தப் பெண்ணின் வயது பதிமூன்று. அக்கா பாத்திரத்தின் பொறுமையும் தியாக உணர்வும் தமிழ்த்திரைப்படங்களின் அதீத உணர்ச்சியையும் சகிக்க முடியாத பொறுமையின்மையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அனுபவித்த கதையாகவோ (கதை சமர்ப்பணம் வாசுகி அக்காவிற்கு என்று வருகிறது. கதையில் அக்கா பாத்திரத்தின் பெயரும் வாசுகியே) அல்லது நேரில் நின்ற நெருங்கித் தொடர்ந்த உறவாகவோ இருக்கலாம். நாவல் என்ற அளவில் அக்கா கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது மிகுபடச்சொல்லி அதீத உணர்வைத் தூண்டும் ஒரு சாதாரணத் தமிழ்ப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உணரமுடிகிறது. அத்தனை அடித்துத் துரத்தும் அப்பாவிடம் பொறுமையாய் மிகச் சகிப்புத் தன்மையுடன் வீட்டுக்கு வாங்கப்பா என்னும்போது கதையின் நம்பகத்தன்மை குறைகிறதோ என்று எண்ணுமளவிற்கு அக்கதாபாத்திரத்தின் தன்மை மிகையாக ஊட்டப்படுகிறது. தியாக வடிவத்தின் மறு உருவே அக்கா என்னும்படியாக இருக்கும் ஒரு நாவலை 2004ல் படிக்கும்போது ஒரு செயற்கைத்தன்மையும் கதையை வாசிக்கிறோம் என்கிற கரையாத் தன்மையும் மேலோங்குகிறது.

பெரியப்பாவின் தற்கொலையும் பெரியப்பாவை பெரியம்மா அடிக்கும் காட்சிகளும் என கதாபாத்திரங்களுக்கு இரத்தம் வராத அத்தியாயங்கள் மிகக்குறைவு.

கதை முழுவதும் அப்பா, அம்மா, அக்கா, தம்பி மற்றும் பாட்டி போன்ற பொதுச்சொல்லே சொல்லப்படுவது நல்ல உத்தி.

கதையின் இடையிடையே வருகிற மாந்தீரிக யதார்த்தப் பாணியிலான - அப்படித்தான் நினைக்கிறேன்! - பக்கங்கள் (எனக்குப்) புரியா கதியில் பயணிக்கின்றன.

கதை நெடுகிலும் வரும் எழுவாய்-பயனிலை மாற்றி அமைக்கப்பட்ட வாக்கியங்களும் தன் பங்குக்குச் செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இந்த ஒன்றை விடுத்துப் பார்த்தோமானால் யூமா. வாசுகியின் நடையே நாவலின் பெரும்பலம். ஆனாலும் ஒரு நாவலை முழுவதுமாகத் தூக்கிப் பிடிக்க நடை மட்டுமே போதுமானதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.

கதையில் வரும் துணைக் கதைமாந்தர்களின் இயல்பான வசனங்களும் வாழ்க்கையும் கதையின் இன்னொரு பலம். கதையின் முடிவில் அம்மாவும் அக்காவும் தம்பிகளும் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் நல்ல வாழ்வை நோக்கிச் செல்லும்போது "அப்பாடா" என்று மனதுள் தோன்றுவது, சில சமயங்களில் அலுப்பைத் தந்தாலும் விஸ்தாரமாகச் சொன்ன நடையின் வெற்றியே.

நாவலின் முடிவில், சோகமயமான, உணர்ச்சிப் பிழம்பான ஒரு தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்த உணர்ச்சியே மேலோங்குகிறது.

1 comment:

writerpara said...

//இதுதான் நான் முதன்முதலாக வாசிக்கும் யூமா. வாசுகியின் நாவல்//

பிரசன்னா, யூமா வாசுகியின் ஒரே நாவலும் இதுவே. ஒரு சிறுகதைத் தொகுப்பு, மூன்று கவிதைத் தொகுதிகள் தனியே வந்திருக்கின்றன.