Friday, July 23, 2004

நிறம் - கவிதை

காலையில் தொடங்கி
வெள்ளை நிறங்கொண்ட வார்த்தையைக்
கருத்துக்குமிழிகள்
நுரைத்துத் துப்புகின்றன

மிகக்கவனமெடுத்து
தேர்ந்தெடுத்த வண்ணம் பூசுவேன்

இரண்டாம் முறை நிதானித்து
பச்சைக் கலப்பில் முக்கியெடுத்து
வெளியனுப்பிவைத்தேன்

என் நுரையீரல் காற்றறைகள்
மூச்சை இழுத்துப்பிடித்துக்கொள்ளும்
அடுத்த வார்த்தையொன்றை வெளித்துப்ப

இரண்டாமதன் பிறவி நிறம் கருப்பு
பெரிய யோசனைக்குப் பின்
வெள்ளிமுலாம் பூசி
வீதியனுப்பி வைத்தேன்

பெரும்பாலும்
நீல நிற வார்த்தைகளை
வெளிர் நீலமாக்கி மென்மையாக்குவேன்

அன்றைய என் தினம்
என் நிறத் தேர்ந்தெடுப்பைத் தீர்மானிக்கும்

கணந்தோறும் கருத்துக்குமிழிகள் கர்ப்பந்தரிக்கவும்
குழந்தை பிறக்கவும்
நிறம் பூசி நான் அனுப்பி வைக்கவும்
வளரும் என் கர்வம்

சிற்றறைகளின் வீரியம் குறைய
பெரும்பாலும் இரவாகும்

இப்போதுதான் கவனிக்கிறேன்
எனக்குத் தெரியாமல்
எவனோ என் வெள்ளைச்சட்டையின் பின்னே
சிவப்பு நிற மையைத் தெளித்திருக்கிறான்

நாளைக்கான கர்ப்பந்தரித்தலுக்கு
புணரத் தொடங்குகின்றன கருத்துக்குமிழிகள்

நான்
சிவப்பு நிற மையைத் தெளித்தவனைப் பற்றிய
பிம்பத்திற்காக யோசிக்கத் துவங்குகிறேன்

-oOo-


No comments: