Saturday, July 24, 2004

காற்றுத்தோழமை - கவிதை

வானம் நோக்கிக் குவிந்திருக்கும்
மொக்கின் இதழ்கள் ஒவ்வொன்றாய்
தன்னை அறுத்துக் காற்றில் பரவுகிறது
காற்றின் உக்கிரம் தாளாமல்.

     -காற்று
      தொடர்ந்து நிரம்பும் வண்ணக்கனவுகள்
      உச்சந்தொட்டு வண்ணப்பிரிகைகளாய் பிரியும் கணத்தில்
      வேர்வையை ஆசுவாசப்படுத்தி
      தொலையும் என்னை மீட்டெடுக்கும்
      நட்புத் தொடக்க காலத்தில்.

     -எஸ்.எஸ்.எல்.சி.யில் நானூற்றிச் சொச்சமெடுத்த தினமுழுதும்
      கூடவிருந்து சாமரம் வீசி
      சிரித்துத் தோளிற் கைவைத்து
      சந்தோஷம் பகிர்ந்துகொண்டது
      தலைவாராமல் பரட்டைத் தலையுடன்
      சிக்கிற் சிக்குண்ட தாடியுடன்
      ஒரு கூலிங்-கிளாஸ¤ம் அணிந்து
      மிக வேடிக்கையாய் இருந்தது அதனுருவம்.

     -கையில் ஒற்றைப் பூவுடன்
      எச்சில் இலைகளில் மாடுகள் மேயும் தேரடி முடுக்கில்
      காத்திருந்தபோது, வேகம் குறைத்து
      மெலிந்து வீசி
      சுற்றுப்புறத்தில்வீணையை மீட்டிப் போனது

     -இறுகிப் பிணைந்து கிடந்த காலத்தில்
      முதுகில் வருடி மீச்சிலிர்ப்பைத் தந்து
      எப்போதும் உடனிருந்தது.

பிளாஸ்டிக் மக்கில் நீரூற்றவரும் சிறுமி
நேற்றிருந்த மொக்கு இன்றில்லாத காரணமறியாமல்
கண்ணைப் பணிக்கும்போது
இசையற்ற பேரோசையை நான் உணர்வேன்
பின்னர் விடையென்னவோ
நம் தோழமையின் முற்றுப்புள்ளிதான்.

(02.07.2004, நிஸ்வா, மஸ்கட், அதிகம் காற்றடித்த ஓர் இரவு.)

No comments: