Thursday, September 2, 2004

தூவானம் - அ.யேசுராசாவின் பத்திகளின் தொகுப்பு - என் பார்வை


தூவானம், அ.யேசுராசா, மூன்றாவது மனிதன் பப்ளிகேஷன், கொழும்பு


"விமர்சன மனநிலைக் கண்ணோட்டம் என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது. அது அடிமனதிலும் பதிந்து வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் சொல்லலாம். படைப்பாளிகளிடம் இத்தகைய நிலை இருக்கவேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்" - அ.யேசுராசா.

பொதுவாகவே பத்திகள் படிக்க சுவாரஸ்யமானவை. அவை தொடர்ந்து வாசகனுக்கு நிகழ்காலத்தின் நிகழ்வுகளையும், எழுதுபவனின் அனுபவத்தையும், ஒரு படைப்பின் அறிமுகத்தையும் விவாதத்தையும் முன்வைக்கின்றன. சமூகக்கோபங்களைப் பத்திகளில் பரவலாகக் காணலாம். காலங்கடந்து அந்தப் பத்திகளையோ பத்திகளின் தொகுப்பையோ வாசிக்கும்போது அவை ஒரு பதிவாகவும் அமைவதைக் காணலாம். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் இதே வேலையைச் செய்துவருகிறது. திசை வாரவெளியீட்டில் அ.யேசுராசா எழுதிய பத்திகளின் தொகுப்பே "தூவானம்."

பத்தி எழுத்துகள் ஆழமான விமர்சனமல்ல என்ற முன்னுரையோடே தொடங்குகிறது நூல். அ.யேசுராசாவின் பத்திகளில் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். ஓவியம் போன்ற கலைகள் இலங்கையில் கண்டுகொள்ளப்படவில்லை என்பதான கோபம் இருக்கிறது. சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நல்ல திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நல்ல கவிதைகள் பற்றிய பதிவு இருக்கிறது. மிகவும் தெளிவான சிக்கலற்ற மொழியால் எழுதப்பெற்ற பத்திகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு "தூவானம்."

உமாவரதராஜன் என்னும் இலங்கை எழுத்தாளரைப் பற்றிய குறிப்பொன்றில் சுஜாதா அவரைப் பற்றிச் சொன்னதையும் பதிவு செய்திருக்கிறார் அ.யேசுராசா. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை யேசுராசா தொடர்ந்து வாசித்திருக்கிறார். அங்கங்கே தேவையான இடங்களில் குறிப்புகளைக் தந்துவிட்டுச் செல்கிறார்.

ஓவியம் பற்றிய குறிப்பில் இலங்கையில் ஓவியம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் பரவலைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லும் யேசுராசா சிங்களர்கள் மத்தியில் ஓவியக்கலை செழித்து வளர்கிறது என்று குறிக்கிறார். தமிழ்நாட்டில் ஓவியத்தின் பரவல் என்னவென்பதை என்னால் யூகிக்கமுடியவில்லை. நவீன ஓவியங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் எந்த அளவில் தரப்படுகிறது என்று யோசித்தாமானால் நாமிருக்கும் நிலைமையின் மோசம் புரியும்.

தூர்தர்ஷனில் கலைப்படங்கள் என்னும் பதிவு மிக சுவாரஸ்யமானது. தூர்தர்ஷனில் மாநில மொழித்திரைப்படங்கள் வரிசையில் எல்லா மொழிகளிலும் இருந்து கலைப்படங்களைத் தேர்ந்தெடுத்து முன்பு ஒளிபரப்பினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம். ஆங்கில துணைத் தலைப்புகளுடன் (Sub title) ஒளிபரப்பாகிய அத்திரைப்படங்களைத் தவறாமல் பார்த்தவர்களின் இரசனை கொஞ்சம் மேம்பட்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. அப்போது ஒளிபரப்பான "அக்கரே", "காற்றத்தே கிளிக்கூடு", "புருஷார்த்தம்", "சிதம்பரம்" போன்ற மலையாளப்படங்களையும் கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள பல கலைப்படங்களையும் பார்த்து அது பற்றிய தனது கருத்துகளைப் பதிந்திருக்கிறார் யேசுராசா. உலகின் பல்வேறு மொழிகளிலிருந்தும் வெளிவரும் பல்வேறு கலைப்படங்களைப் பற்றிய பார்வை யேசுராசாவிற்குத் திரைப்படங்கள் பற்றிய கூர்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிங்களப் படங்கள் பற்றிய பதிவிலும் இதே நேர்த்தியைக் காண முடிகிறது.

கவிதைகள் பற்றிய பதிவில், "இலங்கைப் பத்திரிகையின் வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்கிற பெயரில் - இடம் நிரப்பிகளாகவும் - வெளியிடப்படுகின்றன" என்கிறார். அதற்கு அவர் யூகிக்கும் காரணம், "இக்கவிஞர்களில் பலரும் பெரும்பாலும் வாசிப்புப் பழக்கம் அற்றவராகவே இருப்பார்கள். அவர்களின் கண்களில் கிடைக்கக்கூடிய கவிதைகளில் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும் அவற்றையே முன்னுதாரனமாகக் கொண்டு இவர்கள் எழுத முனைவதும் ஒரு முக்கியக்காரணியாகலாம் என்று நினைக்கிறேன்" என்கிறார். தமிழ்நாட்டிற்கும் அவர் குறித்திருக்கும் நிலையிலிருந்து அதிக மாறுபாடில்லை. "விரிவும் ஆழமும் தேடி"யிலும் சுந்தரராமசாமி கிட்டத்தட்ட இதே கருத்தையே
முன்வைக்கிறார். வவுனியா திலீபன் என்னும் கவிஞரைப் பற்றிய பதிவில் "தென்னகக் கவிஞர்களான நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவாறு தவிப்பதும்" தெரிகிறது என்பதை ஒப்புகிறார். (திலீபனின் கவிதைத் தொகுப்பில் கவித்துவமான வரிகள் என்று சொல்லி யேசுராசா சொல்லியிருக்கும் வரிகளில் எந்தவிதமான கவித்துவமும்
தென்படவில்லை. அவை வெறும் வசன கவிதைகளாகத்தான் இருக்கின்றன. அதையும் கோடு காட்டியிருக்கிறார் யேசுராசா.)

கவிதைகள் பற்றிய கருத்துகள், கலைப்படங்கள் பற்றிய பதிவுகள், அப்போதைய நிகழ்வுகளும் அதை ஒட்டிய நினைவுகளும் என "தூவானம்" படிக்க சுவாரஸ்யம் மிக்கதாகத்தான் இருக்கிறது. தெளிவான நடை ஒரு பலம். சில விஷயங்களின் பின்புலம் (தமிழ்நாட்டு வாசகர்களுக்குப்) பிடிபடாமல் போகும் அபாயம் இருக்கிறது. "க.நா.சு. சில குறிப்புகள்" என்ற எம்.ஏ.நு·ப்மானின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது கைலாசபதியின் மீதான நு·ப்மானின் குறிப்பினை
எடுத்தாள்கிறார். யேசுராசா, கைலாசபதியின் உறவு எத்தகையது என்பது புரியாததால் குழப்பமே மிஞ்சுகிறது. இதேபோல் "வாசகரெல்லாம் வாசகரல்ல" என்ற பதிவில் ஒரு எழுத்தாளர் பேசியதைப் பற்றிய அங்கதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த எழுத்தாளர் அவர், என்ன பிரச்சனை என்பது போன்ற விவரங்கள் இல்லை. இவையெல்லாம் பொதுவாக, "பத்தி"களின் தோல்விகள் போல. குறும்பா பற்றிய பதிவில் இப்படிச் சொல்கிறார். "இலக்கிய உலகில் நிலவி வரும் குழு மனோபாவத்தினால் குறிப்பிட்ட காலம் வரை இவர் (ஈழத்து மஹாகவி) உரிய இடத்தைப் பெறவில்லை. எம்.ஏ.நு·ப்மான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அக்கறை எடுத்துச் செயற்பட்டதன் விளைவாக அவரது நூல்கள் பல வெளிவந்ததோடு அவரது கவிதா ஆளுமையின் முக்கியத்துவமும் தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது" என்கிறார். என்ன விதமான குழு மனப்பான்மை நிலவியது என்பது பற்றிய புரிதல் எனக்கில்லை. இலக்கிய உலகில் குழுமனப்பான்மையும் போட்டியும் எல்லாவிடத்தும் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

"வாசகரெல்லாம் வாசகரல்ல" பத்தியில் "குமுதம், ராணி, கல்கி, ஆனந்தவிகடன் இரசிகர்கள் - சாண்டில்யன்களை, புஷ்பா தங்கதுரைகளை, சுஜாத்தாக்களை, இராஜேந்திரகுமார்களை, குரும்பூர்க் குப்புசாமிகளைத்தான் இரசிப்பார்கள்" என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறார். சுஜாதாவின் இலக்கியப் பங்கு விவாததிற்குரியது என்றாலும் குரும்பூர்க்குப்புசாமிகளுடன் சேர்க்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. மேலும் ஆசிரியரே உமா வரதராஜன் பற்றிய பதிவில் சுஜாதாவை
மேற்கோள் காட்டுகிறார். அப்போது "குரும்பூர் குப்புசாமி"ப் பட்டியலில் இல்லாத சுஜாதா சில பக்கங்கள் (வாரங்கள்) கழித்து எப்படி அப்பட்டியலில் சேர்ந்தார் என்பதை யேசுராசாதான் சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும், சுருங்கச் சொல்லப்பட்ட பதிவுகள். கூரான விமர்சனங்கள். நவீன கவிதைகளைப் பற்றிய சிறந்த புரிதல். கலைப்படங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய அறிமுகங்கள். இவையே "தூவானம்" எனலாம்.

மிகப்பிடித்த சில வரிகளும் மேற்கோள்களும்.

"எழுதுகிறவரெல்லாம் எழுத்தாளரல்ல என்பது போல், வாசிக்கிறவனெல்லாம் வாசகன் அல்ல"-ஜெயகாந்தன் சொன்னதாக மேற்கோள்.

"பொதுவாக நான் கதைகள் எழுதும்போது, வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள் எழுதுவேன். கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன்." -- பாரதி சொன்னதாக மேற்கோள்.

பயணம்
=======

காலிலே தைத்த
.....முள்ளினைக் கழற்ற
ஒரு
கணம் திரும்பவும்
.....காதலியோடு என்
ஒட்டகம் எங்கோ
.....ஓடி மறைந்தது!
ஒரு கணம்
.....திரும்பிய கவனம்;
ஒரு நூற்றாண்டாய்
.....நீண்டது பயணமே.

மேலே சொன்ன கவிதை, சுதந்திர போராட்டத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவரது சுயசரிதையில் எழுதியதின் மொழிபெயர்ப்பு. "ஒரு கணம் திரும்பிய கவனம்" என்கிற வரி பல்வேறு அர்த்த விரிவுகளை தன்னுள் ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் யேசுராசா. எனக்கும்.

பின்குறிப்புகள்:

[1] இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்த லண்டன் பத்மநாப ஐயருக்கு நன்றி பல.

[2] புத்தகத்தில் "ஏகாப்பட்ட" அச்சுப்பிழைகள்.

No comments: