Monday, November 15, 2004

மௌனம் - கவிதை


நமதே நமதான நம் மௌனம்
படுக்கை அறையின் தடுப்பைத் தாண்டிய போது
தன்னைச் செறிவாக்கிக்கொண்டது
மூன்றாம் கட்டைக் கடந்தபோது
கொஞ்சம் கூர்மையாக்கிக்கொண்டது
சமையலறையைத் தாண்டியபோது
நிறம்கூட்டிக்கொண்டது
செறிவான, கூர்மையான, கடும் நிறத்துடன் கூடிய மௌனம்
பின்வாசலைக் கடக்குமுன்
அதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்
நானோ நீயோ
என்னையோ உன்னையோ தொடாமல்
ஜன்னலுக்கு வெளியில் அலையும்
ஒன்றுமில்லாத ஒன்றை ஊன்றிக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்
அதற்குள் இன்னொரு மௌனம் தலைதூக்கிவிடும் அபாயத்தை அறிந்தும்
தூங்கிக்கொண்டிருக்கிறது
நமதே நமதான ஆசைகளும், வெளிர் நீல வெளிச்சத்தில் நிர்வாணங்களும்;
அப்போது
அங்கே
உருவாகிவிட்டிருந்த, சீக்கிரம் வெடிக்கப்போகிற
பலூனின் வாழ்நாளில் அமிழ்ந்திருக்கிறது
நம் தன்முனைப்பின் ஆழமான அடையாளங்கள்

4 comments:

Mookku Sundar said...

ஊடலா..??

சரியாய்போயிடும் ராசா..முன்னை விட பிரியம் ஜாஸ்தியாய்டும்.

Anonymous said...

மூக்கன், நான் போட்டது கவிதை. :-) அன்புடன், பிரசன்னா

Anonymous said...

Un mounathil eppadi oru - Valichama?!

Thankalin kavanathiruku,,
Valavan.

Anonymous said...

வளவன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. என் வலைப்பதிவைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி. அன்புடன், பிரசன்னா