Tuesday, May 17, 2005

ஜெயலலிதாவின் வெற்றி

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஏழு கட்சிக் கூட்டணிகளின் பலத்தில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று மிக நம்பியபடியால், ஏற்கனவே முடிவு தெரிந்துவிட்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க விரும்பாததுபோல், இந்தத் தேர்தலிலும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தேன். நேற்று காலை முக்கியச் செய்தியாக ஜெயாவில் "அ.தி.மு.க. முன்னணி" என்று ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் ஷாக் அடித்தது போல் உணர்ந்து, ஜெயா டி.வி. வழக்கம்போல் முதல் சுற்றை மட்டும் வைத்துக்கொண்டு பொய் சொல்லும் என்று நினைத்து, சன்னுக்கு மாறினேன். அங்கேயும் அதே முக்கியச் செய்தி. என்னால் சிறிது நேரத்திற்கு நம்பவே முடியவில்லை. 1998 நாடாளு மன்றத் தேர்தலிலும் 2001 சட்ட சபைத் தேர்தலிலும் கூட இதே போல் நடந்தது நினைவுக்கு வந்தது. வாக்கு வித்தியாசங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.விற்குச் சாதகமாகவே ஏறிக்கொண்டு வந்தது. அ.தி.மு.க. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் வெற்றியை விட தி.மு.க. மற்றும் கூட்டணியின் தோல்வி எனக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏழு கட்சிக் கூட்டணியை ஜெயலலிதா முறியடிப்பார் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க.வின் பக்கம் கணிசமான தன்னம்பிக்கை உயர்ந்திருக்கிறது. தி.மு.க.வின் நிலைமை நேர்மாறாகியிருக்கிறது. தி.மு.க. வென்றிருந்தால் கூட்டணிக் கட்சிகளைக் கருணாநிதியால் சமாளிக்க முடிந்திருக்கும். இப்போது கூட்டணிக் கட்சிகளின் கையில் கருணாநிதி சிக்கியிருக்கிறார். இட ஒத்துக்கீட்டில் பெரும் குழப்பங்கள் நேரும் வாய்ப்புள்ளது. ஒன்றிரண்டு கட்சிகள் கூட்டணி தாவும் சாத்தியக்கூறுகளும் அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதா ஏற்கனவே "தாம் வெற்றி பெற மட்டும் பிறந்தவர்" என்று நினைப்பவர். இந்த வெற்றியின் மூலம் அந்தக் கனவை நிஜம் என்று மீண்டும் நம்புவார். கூட்டணி சேர விரும்பும் கட்சிகளைக் கூட "தன் இலக்கணப்படியே" அலட்சியப்படுத்துவார். இப்படி பல நிகழ்வுகளை சாதகமாகவும் பாதகமாகவும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.


Thanks: Dinamani.com


அடுத்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெல்லக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிறைய இல்லை எனினும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்று நான் நினைப்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. கருணாநிதி முடிவு எடுக்கத் தெரியாதவர்; தயங்குபவர். யாருக்கும் குற்றமில்லாமல் நல்ல பெயர் வாங்கப் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஜல்லி அடிப்பவர். மிக முக்கியமாக, தீவிரவாத விஷயத்தில் அவரின் மனம் தீவிரவாதிகளுக்குப் பரிவு என்ற நிலையையே எப்போதும் எடுக்கும். ஹிந்து மத தூஷனை ஒன்றே மதச்சார்பின்மை என்று நம்பும், அதைத் தீவிரமாகப் பரப்பும் கருத்துடையவர். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கையில் சிக்கி சுதந்திரமாகச் செயல்படும் தன்மையை இழந்தவர். இக்காரணங்களால் தி.மு.க. வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் சில விஷயங்கள் நான் மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்திருக்கின்றன. அவையெல்லாம் ஜெயலலிதாவின் முடிவு எடுக்கும் தன்மைக்கும், தைரியத்திற்கும் சான்றளிப்பவை. அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றத் தடைச் சட்டம், தீவிரவாதத்தின் மீது தொடந்து நடவடிக்கை, சங்கராசாரியார் கைது போன்றவற்றைச் சொல்லலாம். வீரப்பன் கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தைத் தூற்றி உளறிக்கொட்டாமல் இருப்பதும் கூட பாராட்டப்படவேண்டியதே. அமைச்சர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று நினைக்கவைக்கும் அமைச்சரவை, தொடர்ந்து அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் நிர்வாகக் குளறுபடி போன்ற விஷயங்கள் ஜெயலலிதாவிடம் இருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் அரசியலைப் பார்க்கும்போது, அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவது நல்லது என்று தோன்றுகிறது.

இந்த இடைத் தேர்தல் வெற்றி, அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை. பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள், ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே அமையும். (1990 வாக்கில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது இந்தக் கருத்தை கருணாநிதி வழிமொழிந்திருந்தார்!) அப்படி இருந்தும், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது பற்றி தி.மு.க. தரப்பு ஆலோசிப்பது நல்லது. 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும்போது, "இது பணநாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் தோல்வி" என்று ராமதாஸும், "அதிகாரத் துஷ்பிரயோகமும் பணபலமும் கொண்டு ஜெயலலிதா வென்று விட்டார்" என்று நல்லகண்ணுவும் "விதிகளை மீறிச் செயல்பட்டு அ.தி.மு.க. வென்றது" என்று கருணாநிதியும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளாமல் இருப்பது. இவையெல்லாம் இல்லாமல் தேர்தல் நடந்தது என்று உறுதி சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றில் தி.மு.க. கூட்டணி சளைத்ததல்ல என்பதே நாம் நோக்கவேண்டியது. அதில்லாமல், இந்த முறை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்பு மிக அதிக அளவில் இருந்தது. அதனால் பணத்தின் மூலம் வென்று விட்டார்கள் என்று சொல்லி, தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராயாமல் ஜெயலலிதா பாணியில், தி.மு.க. அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல் யோசிப்பது நல்லது.

அ.தி.மு.க. வெற்றிக்குப் பின் வலைப்பதிவில் வந்து பார்த்தேன். யாரும் அதைப் பற்றி எழுதவில்லை. தேர்தலுக்கு முன்பு, மூக்கு சுந்தர் மட்டும் அவர் பதிவில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நல்லது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். (என்ன தைரியம்!) இதே தி.மு.க. வென்றிருந்தால் ஊடகங்கள் மாறி மாறி ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கையும் எதேச்சாதிகாரத்தையும் மாறி மாறிக் கண்டித்த வண்ணம் இருக்கும். அ.தி.மு.க.வின் வெற்றியை ஏற்றுக்கொள்வதோ பாராட்டுவதோ, ஊடகங்கள் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் "அ.தி.மு.க. வை எதிர்ப்பது மட்டுமே நடுநிலைமை" என்ற நடுநிலைமைக்கு எதிரானதாக அமைந்திருக்கும். ஆனால் வெற்றி பெற்றதோ அ.தி.மு.க. பின் எப்படி பாராட்ட முடியும்? ஆனால் அந்த "நடுநிலையாளர்கள்" வகையில் இருக்க விரும்பவில்லை. இந்த அ.தி.மு.க. வெற்றி தேவையான ஒன்று. தொடரவேண்டிய ஒன்றும். இந்த கருத்தைச் சொல்லவே இந்தப் பதிவு.

12 comments:

Mookku Sundar said...

ஜெயலலிதா ஜெயிக்கணும்ணு சொல்றதுக்கு தைரியம் வேணுமா...?? எதுக்கு ஸாரே..??

நான் எனக்குப் பட்டதைத்தான் எழுத முடியும். எல்லாருக்கும் அனுசரணையா, எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி, எழுத முடியுமா..??

நல்ல கவிதை எழுதி ரொம்ப நாளாச்சே..ஒண்ணு போடறது.... கட்டுரைகளை விட புனைவுப் படைப்புகள்தான் உங்களுக்கு சூப்பரா வருது. ( இதுக்கு அர்த்தம் கட்டுரை நல்லால்லே என்கிற அர்த்தம் இல்லை)

Anonymous said...

இதை எப்பட்படி தமிலில் எலுதமுடிகிரது
விவரம் தேவை கூரவும்

ENNAR said...

I want to know how to write in tamil in the blog

Anonymous said...

எனக்கு தமிழில் எழுத வேரு வழி என்ன

Haranprasanna said...

//ஜெயலலிதா ஜெயிக்கணும்ணு சொல்றதுக்கு தைரியம் வேணுமா...?? எதுக்கு ஸாரே..??//

நிலைமை அப்படி இருக்குது மாஷே!

ஐயா அநாமதேயக்காரர்களே, தமிழில் எப்படித் தட்டி உள்ளே போடுவது என்பது பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் கேட்கவும். என்னிடமா கேட்பது???

-/சுடலை மாடன்/- said...

//தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்று நான் நினைப்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. கருணாநிதி முடிவு எடுக்கத் தெரியாதவர்; தயங்குபவர். யாருக்கும் குற்றமில்லாமல் நல்ல பெயர் வாங்கப் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஜல்லி அடிப்பவர். மிக முக்கியமாக, தீவிரவாத விஷயத்தில் அவரின் மனம் தீவிரவாதிகளுக்குப் பரிவு என்ற நிலையையே எப்போதும் எடுக்கும். ஹிந்து மத தூஷனை ஒன்றே மதச்சார்பின்மை என்று நம்பும், அதைத் தீவிரமாகப் பரப்பும் கருத்துடையவர்.//

உண்மைதான். தீவிரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்ஸையும், பயங்கரவாதிகளான குரங்கு இயக்கத்தவரையும் (முழிக்காதீர்கள், பஜ்ரங் தளத்தைத்தான் அழகாகத் தமிழில் சொன்னேன்) அவர்களை ஆதரிக்கும் சோ இராமசாமி போன்றவர்களையும் போடாவில் பிடித்து உள்ளே வைக்காமல், கஞ்சா கேஸ் போடாமல் ஜல்லியடித்துக் கொண்டிருப்பவர்.

அவர் எப்படிச் செய்வார், அவருக்குக் குடும்பம் மட்டும் தானே முக்கியம். தரகர் சோ மூலம் இரஜினியின் வோட்டுக்களை வாங்க முடியுமா என்று பத்து வருடங்களாக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறாரே. அதனால் அம்மா ஜெவுக்கே ஜே போட்டால் போச்சு!


நன்றி - சொ. சங்கரபாண்டி

Haranprasanna said...

நீங்கள் சொல்லும் "இடைத்தரகர் சோ" என்கிற தீவிர, எந்த நேரத்திலும் மாறாத கருத்துக்கூட கருணாநிதியிடம் இல்லை. பஜ்ரங்தள்ளையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் உள்ளே போட்டால் நாளை எப்படிக் கூட்டணி வைக்கமுடியும்? அதனால் இதைச் செய்யாமல் இருப்பவர்களை இனம் கண்டு, ஜெயலலிதாவிற்கு சங்கரபாண்டி போடப்போகும் உங்கள் வாக்குதான் எத்தனை முக்கியமானது!!!!

Anonymous said...

காஞ்சி மட வேட்பாளர் வாங்கிய 400 ஓட்டுக்கு யாருமே இது வரை
மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையே
:(

Anonymous said...

Dear Haran Prasanna,
This is the first time you have presented your political knowledge in a right way. Potruvaar Potrattum.. Thootruvaar Tootrattum.. Let us clear our stand to the world... or at least to the web.

greetings..
Jeyakumar - Doha

Anonymous said...

Dear Haran Prasanna,
This is the first time you have presented your political knowledge in a right way. Potruvaar Potrattum.. Thootruvaar Tootrattum.. Let us clear our stand to the world... or at least to the web.

greetings..
Jeyakumar - Doha

Haranprasanna said...

Jayakumar, Thanks for your comments. I dont have any fixed stand. My comments are issue-based.

Thanks,
Haranprasanna

Anonymous said...

அய்யோ பாவம்! ஆடு நனைகின்றதே என்று ஓநாய் பரிதாபப்பட்டதாம்! அப்படி இருக்குய்யா உங்க பதிவு! ஜெ மிகப்பெரிய அளவில் தைரியாமாக முடிவு எடுக்கக்கூடியவராக இருந்தால் ஏன் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரின் அத்தனை அறிவிப்புகளையும் வாபஸ் வாங்கி மண்டியிட்டார். அய்யா,
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததை வாரிக்கொட்டி அளப்பதை இனியாவது நிறுத்திக்கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன். நாற்பது இடங்களிலும் மண்ணைக் கவ்விய பின் அதிமுக இந்த இரண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடிகின்ற போது, இரண்டு இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக ஏன் மீண்டும் வெற்றி பெற முடியாது? மீண்டும் கலைஞர் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம்! அதைப் பார்த்து பலருக்கு (நீங்கள்உட்பட)வயிறு எரியப்போவது உறுதி!