Thursday, May 19, 2005

சௌந்தரம்மாளின் நினைவுகள் - கவிதை

சௌந்தரம்மாளைப் பார்க்கவேண்டும்
நேற்றுதான் அவள் பெயரை அறிந்திருந்தேன்
காகிதக் கப்பல்கள் பொதுமிக் கிடந்த நாளொன்றில்
நிறைய ஃபோன்களுக்குப் பின்
சௌந்தரம்மாள் வீட்டைக் கண்டேன்
வீடெங்கும் தோசை மணம்
சௌந்தரம்மாள் ஒரு சிறிய அறையில் படுத்திருந்தாள்
நான் உள்ளே செல்லவில்லை
கையிலிருந்த ஆவணத்தைத் தந்து கையெழுத்து வேண்டுமென்றேன்
மகனின் முகத்தில் அகற்றவியலாத சோகம் அப்பியிருந்தது
திரையில் மெல்ல நகரும் கலைப்படம் ஒன்றின்
கதாநாயகன் போல அதை வாங்கிச் சென்றான்
மறுநாள் சௌந்தரம்மாள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
பார்வதி தியேட்டரை அடுத்துள்ள சந்தில் நுழைந்து மீளும்போதெல்லாம்
என்னளவில் வயது ஒரு நாளேயான
நான் பார்த்திராத சௌந்தரம்மாள் பிறந்துகொண்டேயிருக்கிறாள்

2 comments:

-/பெயரிலி. said...

பிரசன்னா,
கவிதையென்ற அளவிலே நன்றாகவிருக்கிறது.

ஜெ. ராம்கி said...

யோவ்... நெல்லைச்சாமி, நீ ஏன் இன்னும் நிறைய கவிதை எழுதக்கூடாது?!