Thursday, June 9, 2005

இப்போது வேண்டாத மழைக்கு - கவிதை

இம்மழை எனக்காகவே பெய்கிறது, நானறிவேன்
நான் இம்மழையைக் கவிதையில் பிடிக்க விரும்புகிறது
எதிர்பாராத ஒரு நேரத்தில்
இம்மழை அதற்காகவே பெய்கிறது
மூடியிருக்கும் கதவிடுக்கின் வழியே
வழிந்து வரும் நீர் ஏக்கத்துடன் பார்க்கிறது
என்னை எழுதேன் என்று
வெளியில் கேட்டுக்கொண்டிருக்கும்
ஹோவென்னும் சத்தத்தை மீறிக்கொண்டிருக்கிறது
அறைக்குள் சுற்றும் ஃபேனின் சத்தம்
நான் மழைக்குச் சொல்லவில்லை
வானெங்கும் என் கண்கள்
கொஞ்சம் வெயிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதென்று
என்னையும் மழையையும்
பிரித்திருக்கும்
சுவர்களின் கீறல்களின் வழியே
இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்

5 comments:

ஜெ. ராம்கி said...

ஏலேய்.. நீங்க எந்த வெளையாட்டு வேணும்னாலும் வெளையாடுங்களே... நான் கவிதய ஒரு கை பார்க்கிறேன்னு சொல்றாப்புல இல்லே இருக்கு!

நண்பன் said...

மழையைக் கவிதையில் பிடிக்க விரும்பணும் - அந்த மழை கதவிடுக்கில், சுவர்களின் மீறல் என்று மண்டியடித்து கெஞ்சும் பொழுது, வெய்யிலைப் பற்றி சிந்திக்கணும் - நல்ல அரசியல்வாதியான கவிஞனாகத் தான் இருக்க வேண்டும். கொஞ்சம் தாராளமாகக் கிடைத்துவிட்டால் அலட்சியப்படுத்துவதும், அந்த சமயத்து கிடைக்காத வேறொன்றின் மீது மனதை செலுத்துவதும் மனித இயல்பாகப் போய்விட்ட மனிதனை நன்றாகத் தான் அடையாளம் காட்டுகிறீர்கள், ஹரன்பிரசன்னா....

பாராட்டுகள் + வாழ்த்துகள்....

தொடரட்டும்.... கவிதைகள்.....


நட்புடன்

நண்பன்.....

ப்ரியன் said...

//சுவர்களின் கீறல்களின் வழியே
இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்//

அருமையான வரிகள்...கவிதைக்கு உயிர் ஊட்டிய வரிகள்.
அருமையான கவிதை...தொடரட்டும்...

மானஸாஜென் said...

நல்ல கவிதை!

மானஸாஜென்

கானகம் said...

Really an exc ellent kavidhai... Hats off Hari.. JK