Monday, January 23, 2006

சலனம் - கவிதை

தலைக்கு மேல்
பயணிக்கிறது நதி

வெளியுலகைச்
சுவீகரித்து
உள் அனுப்புகிறது நீர்

நதியின் மீதான சலனத்தில்
அசைந்து கொண்டிருக்கவேண்டும்
கரை மர நிழல்

நீர் மோதும்
பாறைகளின்
மிக நுண்ணிய சலனங்கள்
பிரபஞ்சத்தின் பேரமையில்
கேட்பதாயிருக்கும்

மெல்ல கண் திறக்க
நீர் வளையம்

என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
சூரிய ஒளியும் சில துகள்களும்

108 எண்ணி முடித்திருப்பான் முருகன்
இன்னும் சில எண்களில்
நான் நீர் வளையத்தைத் துறந்தாக வேண்டும்

நீரை ஒரு மிடறு விழுங்க
என்னுள் அடங்குகிறது
அந்நதி
அத்தனைச் சலனங்களுடனும்

1 comment:

Anonymous said...

//மிக நுண்ணிய சலனங்கள்
பிரபஞ்சத்தின் பேரமையில்
கேட்பதாயிருக்கும்//

இது " பேரமைதியில் கேட்பதாயிருக்கும்" என்றிருக்க வேண்டும் ஹரன்..

//நீரை ஒரு மிடறு விழுங்க
என்னுள் அடங்குகிறது
அந்நதி
அத்தனைச் சலனங்களுடனும்//

நல்ல கவிதை ஹரன்..