நானறியாத ஒரு பொழுதில்
தவறுகளின் கோட்டைக்குள் விழுந்தேன்.
கதவோவியம் கேலி பேசியது
நான் மறந்ததாக நினைத்துக்கொண்டிருந்த
நொடிப்பொழுதின் பிரதியாக நின்று.
வாசல் கடந்த அறைகளின்
பக்கச் சுவர்களில் பலப்பல ஓவியங்கள்
என் முகச்சாயலுடன்.
சிலவற்றின் குரூரப்பார்வை
மனத்தின் மூலைகளில் சவுக்கடித்தது.
சிலவற்றை அமைதியின் உறைவிடமென
யாரும் கூறக்கூடும் (யார் உள்நுழைந்துவிட
முடியும் என்னைத் தவிர)- ஆனால்
அவற்றின் உள்ளோடும் நினைவுகள்
எனக்கு மட்டுமே அத்துப்பிடி.
பற்பல அறைகளில் மேலும் பல
நிறையப் பேசி
என்னைப் பிய்த்து எறிந்தன.
என் நிர்வாணம்
எனக்கெதிரே
சரிந்து கிடந்தபோது
திடீரென்று திறந்துகொண்டது
பெருங்கதவு.
உள்ளே
கடவுளாக அறியப்படும்
ஆன்மாவின் சிலையொன்று.
1 comment:
//என் நிர்வாணம்
எனக்கெதிரே
சரிந்து கிடந்தபோது
திடீரென்று திறந்துகொண்டது
பெருங்கதவு.
உள்ளே
கடவுளாக அறியப்படும்
ஆன்மாவின் சிலையொன்று//
நல்ல வரிகள் ஹரன்..எப்படி இவ்வளவு வீச்சுடன் கவிதை எழுதுகிறீர்கள்??? அருமை..
Post a Comment