எப்படி இத்தனை நாள் அந்தப் புகைப்படத்தை
நினைக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.
இப்படித்தான் நிறைய மறந்துவிடுகின்றது.
சேது வீட்டில் ஆல்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது
கண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ
வெகு கம்பீரமாய்
கால் மேல் கால் போட்டு
முகத்தில் புன்னகை கொப்பளிக்க
வயதுக்குரிய கொணட்டல்களுடன்
அவள் வீற்றிருக்க, பயந்த முகத்துடன்
நான் பின்னின்றிருக்கிறேன்.
நேற்றிரவு எழுந்த கனவில் கூடப்
பின்னின்றிருந்தாள்
இப்போது
உறக்கத்தில் கூட
நான் வலப்புறமாய்ப் படுத்திருக்க
என் முதுகு நோக்கி அவள்.
எப்போதும் எனக்குப் பின்னாலே
இருந்த நினைவுதான் தேங்குகிறது.
ஏழாம் வகுப்பில்
மஞ்சள் பை சுற்றிக்
காற்றில் பறந்த போதும்
பின்னின்றிருந்தாளாம்,
கேட்டபோது கலக்கமாயிருந்தது.
தாலி ஒன்றைக் கட்டிவிட
வீட்டில் கலகங்களில்
தெருவின் குரைப்புகளில்
ஆகாசக் கோட்டைகளில்
கற்பனைகளில்
எப்போதும்
எல்லா இடங்களிலிலும்
பின்னால்தான்.
அந்த ஃபோட்டோவைக்
கேட்டு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
1 comment:
நிஜத்துக்கும், விருப்பங்களின் முகத்துக்கும் இடையே இழையோடும் உங்கள் பதட்டம் கவிதையில் தெரிகிறது.
அன்புடன்
சேவியர்
Post a Comment