Tuesday, September 11, 2007

சில இந்தியத் திரைப்படங்கள் - 01

உலகம் முழுக்க சிறந்த படங்களாகப் போற்றப்படும் உலகத் திரைப்படங்களின் டிவிடி விசிடிக்களைக் கொஞ்சம் முனைந்தால் வாங்கிவிட முடிகிறது. ஆனால் சிறந்த இந்தியப் படங்களை வாங்கிப் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே இருக்கிறது. பதேர் பாஞ்சாலி போன்ற திரைப்படங்களை கொஞ்சம் முனைந்தால் அதிக விலை கொடுத்தேனும் வாங்கி விடலாம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு வழியே இல்லை என்கிற நிலைதான் நீடிக்கிறது. இதிலும் மோசம் சிறந்த தமிழ்ப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் இல்லை என்பது. எனி இந்தியன் பதிப்பகம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள பாரதி மணியன் வந்திருந்தார். றெக்கை படத்தில் அவரைப் பார்த்தபோது, இவரை வேறெந்தப் படத்திலேயோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி சட்டென்று பாபாவில் வருவார் என்றார். அப்போதும் எனக்கு பிடி கிட்டவில்லை. திடீரென்று ஒரு தினத்தில் ஒருத்தி திரைப்படத்தில் கிடையை மறிக்கும் கீதாரியாக வருபவர்தான் அவர் என்று பொறி தட்டியது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது குருக்ஷேத்திரம் படத்தில் நடித்திருப்பதாகவும் சொன்னார். அந்த படம் எப்போது வெளியாகும் என்று கேட்டபோது, அது ஆறுமாதங்களுக்கு முன்பே வெளியாகி யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்றார். என்னால் நம்பவேமுடியவில்லை. ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் நடித்த திரைப்படம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கத்து சுவர்களில் குருக்ஷேத்திரம் படத்தின் விளம்பரங்களைப் பார்த்த நினைவிருக்கிறது. பின் தினமலரிலோ வாரமலரிலோ ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் ஹிட்லராக நடிக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்த ஞாபகமும் இருக்கிறது. ஆனால் அந்தப் படம் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. இப்போது கூட அந்தப் படம் வெளி வந்து, யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பதை என்னால் நம்பமுடியாமல்தான் இதை எழுதுகிறேன்.

இதுபோன்ற விருதுப் படங்களில் ஆர்வம் உள்ள ஒருவருக்கே அந்தப் படம் எப்போது வருகிறது, போகிறது என்கிற விவரம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களுக்கு இந்தப் படம் பற்றிய அறிவு என்னவாக இருக்கும்? இத்தனைக்கும் தமிழில் கிட்டத்தட்ட 7 முக்கியமான தொலைக்காட்சிகள் (சன், கே டிவி, ராஜ், ராஜ் டிஜிடல், ஜெயா, தமிழன், விண்) சினிமாவே கதி என்று தங்கள் ஒளிபரப்பைச் செய்துவருகின்றன. இவற்றில் எதிலும் இத்தகைய திரைப்படங்களைப் பற்றிய செய்தி வந்ததாக நான் பார்க்கவில்லை. மகேந்திரனின் சாசனம் திரைப்படம் கடந்த ஒரு வருடத்திற்குள் வெளியானது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். என்னால் பார்க்க இயலாமல் போனது. இன்றுவரை அதன் சிடி கிடைக்கவில்லை. சாலையோரங்களில் எல்லா டிவிடியும் விசிடியும் விற்கிறார்கள். சாசனம் படத்தைக் கேட்டால் 'கிடைக்காது சார்' என்கிறார்கள். அரவிந்த்சாமி கொஞ்சம் தெரிந்த நடிகர் என்பதால் 'கிடைக்காது சார்' என்றாவது சொல்கிறார்கள். இல்லையென்றால் 'அப்படி ஒரு படம் எப்ப வந்தது' என்றுதான் கேட்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு சிறந்த படங்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் சில மனிதர்கள், வீடு போன்றவை. ஆனால் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், மறுபக்கம், சந்தியா ராகம், அக்ரஹாரத்தில் கழுதை, டெரரிஸ்ட், மல்லி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், நண்பா நண்பா, ஊருக்கு நூறு பேர், றெக்கை, கண் சிவந்தால் மண் சிவக்கும், உச்சி வெயில் போன்ற படங்களை வாங்குவதென்பது மிகவும் கடினம். தமிழ்ப்படங்களுக்கே இந்தக் கதி என்றால் இந்தியாவின் மற்ற மாநிலத் திரைப்படங்களைப் பார்ப்பது பற்றி நினைப்பதுவே பாவம். கொஞ்சம் அலைந்தால் மலையாளத் திரைப்படங்கள் சிலவும் பெங்காலி திரைப்படங்கள் மிகக்கொஞ்சமும் கிடைக்கலாம். மற்ற மொழித் திரைப்படங்களைப் பார்க்கவே முடியாது. மேலும் அந்த அந்த மொழிகளில் சிறந்த திரைப்படங்கள் எவை எனவும் அறியமுடிவதில்லை.

மக்கள் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு சிறந்த இந்திய விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 9 படங்களை ஒளிபரப்பியது என நினைக்கிறேன். (அதில் ஒரு தமிழ்த்திரைப்படம்கூட இடம்பெறவில்லை என்பது சோகம்!) இந்த சிறந்த முயற்சியை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இனி இது போன்ற சிறந்த படங்களைக் காணமுடியாது என நினைத்துக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி, லோக் சபா சானலைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அப்படி ஒரு சானல் வருவதே தெரியாது. அடித்துப் பிடித்து ட்யூன் செய்து பார்த்தேன். சுரேஷ் கண்ணனுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னேன். ஷ்யாம் பெனகலின் திரைப்படம். அடுத்த வாரமும் இதே நேரத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் ஒளிபரப்பாகுமா என்கிற ஏக்கத்தில் நாங்கள் மூன்று பேருமே அவரவர் விட்டு தொலைக்காட்சி முன்பு காத்திருந்திருப்போம் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பிரதி சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு பல்வேறு இந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட விருதுத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. மக்கள் தொலைக்காட்சியைப் போலவே, இவற்றிலும் இதுவரை ஒரு தமிழ்ப்படம்கூட ஒளிபரப்பப்படவில்லை என்பது இன்னொரு சோகம். தென்னிய மொழித் திரைப்படங்களில் இதுவரை ஒரே ஒரு மலையாளத் திரைப்படம் (பூத்திருவாதர ராவில் - லோக் சபா சானலில், மக்கள் தொலைக்காட்சியில் மங்கம்மா என்கிற மலையாளத் திரைப்படம்) மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிகமாக ஹிந்திப் படங்களும் பெங்காலி படங்களும் இடம்பெறுகின்றன. எல்லா படங்களுமே சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது அத்தகைய முயற்சியை நோக்கிய படங்கள் என்ற அளவில் அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவையல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை பொதிகையில் எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். சந்தியா ராகம், றெக்கை (இந்தப் படம் விருதுப்படம் என்கிற பிரிவில் வந்தாலும் இது மோசமான திரைப்படம். இத்தகைய செயற்கையான திரைப்படத்தைப் பார்த்ததே கொடுமை) மறுபக்கம் (தங்கத்தாமரை விருது பெற்ற திரைப்படம்) போன்ற திரைப்படங்களைக் காண முடிந்தது. தற்செயலாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாயிறு இரவில் டிடி நேஷனல் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிதி என்கிற கன்னடத் திரைப்படத்தைக் காண முடிந்தது. மறுவாரம் அதே நேரம் டிவியின் முன்பு காத்துக்கொண்டிருந்தபோது, பெரிய தடாகத்தில் மழை நீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டிக்கொண்டிருக்க, யாரோ ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதுபோக இன்னும் சில திரைப்படங்களை நண்பர்களிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். உலக மொழிகளில் இருக்கும் படங்களைப் பார்த்தாலும், இந்திய மொழி பற்றிய படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்கிற நினைப்பு எனக்கு வலுத்துக்கொண்டே வந்தது. ஆனால் எழுதவே முடியாமல் போனது. தேடித் தேடிப் பார்த்த படங்களைப் பற்றி அன்றே எழுதிவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்வதோடு சரி. இதுவரை அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், அப்படி செய்திருந்தால் மிகச் சிறந்த ஒரு கருவூலத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. இதுவரை பார்த்த படங்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை, குறைந்த பட்சம் நாளைக்கு நானே புரட்டிக்கொள்கிற மாதிரி, எழுதி வைக்க நினைத்தேன். அதுதான் இந்த முயற்சிக்கான காரணம்.

01. சாருலதா:

இயக்கம்: சத்யஜித் ரே

நான் பார்க்கும் சத்யஜித் ரேயின் முதல் படம். ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். 1964-ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.

பூபதியும் சாருலதாவும் குழந்தையற்ற தம்பதிகள். பூபதி கொல்கத்தாவில் அரசியல் பத்திரிகை நடத்துபவர். இந்தியாவின் சுதந்திர இயக்கங்களில் நம்பிக்கையும் அதீத ஆர்வமும் உள்ளவர். சாருவின் மீது பூபதி அன்பாக இருந்தாலும், அவரது நேர்மின்மையால் சாரு ரசிக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியாமல் போகிறது. சாருலதா இலக்கியத்தில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர். பூபதிக்கு அது பற்றித் தெரியும் என்றாலும் அதை ஊக்குவிக்கவோ, அதைப் பற்றி விவாதித்து சாருவை சந்தோஷம் கொள்ளச் செய்யவோ அவருக்கு நேரமில்லை. பூபதிக்கு வேலையில் உதவியாக இருக்கிறார் சாருவின் சொந்தக்காரர் ஒருவர்.

இந்நிலையில் அமல் என்கிற, பூபதியின் உறவினர் அங்கு வருகிறான். அவனுக்கும் சாருவுக்கும் ஒரே வயது. சாருவைப் போலவே அமலுக்கும் அதீத இலக்கிய ரசனையும், வங்காள நாடகங்கள் மற்றும் இலக்கியங்களின் மீதான விமர்சனமும் இருக்கின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் தன் இலக்கிய ரசனை மூலமும், தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் மூலம் அமலை நெருங்குகிறாள் சாரு. அவளே அறியாத பொழுதில் அது காதலாக மலருகிறது. அமல் பூபதியின் மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் உள்ளவன். சாருவின் இலக்கிய ரசனை மீது அமலுக்கு உயரிய மதிப்பு இருக்கிறது; மேலும் சாருவை ஏதேனும் எழுதச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் சாரு மறுக்கிறாள். அமல் அறியாமல் சாருவின் படைப்பு ஒன்று பத்திரிகை ஒன்றில் வெளியாகிறது. அதை அறியும் அமல், சாருவைப் பற்றி அவனுக்கே தெரியாமல் அவன் மனதில் இருந்த நம்பிக்கையின்மையை அறிகிறான். அதைத் தொடர்ந்து அவள் மீது அவன் அதிக மரியாதை கொள்கிறான். பின்னொரு சமயத்தில் சாரு தன் மீது கொண்டிருக்கும் காதலை உணர்கிறான் அமல். அதுமுதல் அவனை குற்ற உணர்ச்சி பீடித்துக்கொள்கிறது. அவன் மெல்ல அவளிடமிருந்து விலக முயல்கிறான். அதை அறியும்போது தன் மீதே வெறுப்பேற்படுகிறது சாருவுக்கு.

Thanks: http://www.filmreference.com


இந்நிலையில், பூபதியின் வேலைக்கு உதவியாக இருக்கும் சாருவின் உறவினர் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிறார். பூபதியின் நிலை மிகவும் மோசமாகி, பத்திரிகை மூடப்படுகிறது. அமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியூருக்குப் பயணமாகிறான். இதை அறியும் சாரு மனதளவில் உடைந்து போகிறாள். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள். அமல் ஏன் சென்றான் என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் பூபதி. உண்மையில் அனைத்தும் தன்னை விட்டுப் போனபோது, அமலின் உதவியால் தான் மீண்டும் வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வரலாம் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் போராடுவது என்று முடிவெடுக்கிறார். சாருவின் இலக்கிய சாதனை பற்றி அறிந்துகொண்டு, அரசியல் பத்திரிகை ஒன்றும் இலக்கிய பத்திரிகை ஒன்றும் நடத்த முடிவெடுக்கிறார். வாழ்க்கையில் புதிய வழி கிட்டிவிட்டதாகக் குதூகலிக்கிறார்.

அந்த சமயத்தில் அமலிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது. அமல் இங்கிலாந்து செல்லப்போவதாகவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கடிதம் சொல்கிறது. பூபதியின் முன்பு அந்தக் கடிதம் பற்றிக் கண்டுகொள்ளாதவாறு இருக்கிறாள் சாரு. பூபதி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு, அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதறி அழுகிறாள். தற்செயலாக வீட்டுக்குள் நுழையும் பூபதி நடந்ததை அறிந்து, பெரும் குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகிறார். தன் கணவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்துகொள்கிறாள் சாரு. வீட்டை விட்டுச் செல்லும் பூபதி நகரெங்கும் இலக்கில்லாமல் அலைகிறார். மீண்டும் வீடு திரும்புகிறார். அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாருவின் கையை பிடிப்பதுடன் சாருவின் மீதான பெரும் நம்பிக்கையை முன்வைப்பதோடு முடிவடைகிறது திரைப்படம்.

மனித உறவுகளின் சிக்கல் மீது நடத்தப்படும் இந்தத் திரைப்படம் உச்சகட்ட உணர்ச்சிகளின் தொகுப்பாக உள்ளது. முக்கியமான விஷயம், இந்த உணர்ச்சிகளை நடிகர்கள் வலிய ஊட்டாமல், படம் பார்ப்பவர்கள் தாங்களாகவே கண்டுகொள்வது. தொடர்ந்து இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் அமலும் சாருவும் வரும் காட்சிகளின் ஒளிப்பதிவுக் கோணம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சாரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்க, அமல் கவிதை எழுத முயலும் காட்சி மிகச் சிறப்பான ஒன்று. தன் மனைவி எழுதிய படைப்பொன்று ஒரு பத்திரிகையில் வந்திருப்பதைக் கூட அறியாத பூபதி, அதை அறியும் காட்சியில் அடையும் குழப்பமும் சந்தோஷமும் இன்னொரு சிறந்த காட்சி. சாருவின் முகபாவங்கள், ஏக்கம், கோபம், ஆத்திரம் என எல்லாவற்றையும் மிக நளினமாக வெளிப்படுத்துகின்றன. தனது படைப்பு வந்துவிட்டதை அறிந்த சந்தோஷத்தில், தன்னால் முடியாது என்கிற எண்ணம் கொண்ட அமல் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற வெறியில், அந்தப் பத்திரிகையை மடித்து வைத்து அமலின் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார். வசனங்களே இல்லாமல், அவர் படைப்பு பத்திரிகையில் வந்தது, அமலின் அடிமனதில் இருந்த சாருவின் மீதான தாழ்மதிப்பீடு, சாருவின் கர்வம் என எல்லாம் ஒரே காட்சியில் விரிவடைகிறது. படத்தின் இன்னொரு மிகச்சிறந்த காட்சி இது.

அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை எப்படி பூபதி அறிந்துகொள்ளப் போகிறார் என்பதை படம் நெடுக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாடகம் போல அமைந்துவிட்டது அக்காட்சி. கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, யாருமற்ற வேளையில் சத்தமாகப் புலம்புகிறார் சாரு. அதைக் கேட்டு பூபதி அதை அறிந்துகொள்கையில், அதை ஒரு மேடை நாடகத்தின் பகுதியாகவே என்னால் பார்க்கமுடிந்தது.

படத்தின் முடிவு இன்னொரு சிறப்பு. இலக்கின்றி அலையும் பூபதி, அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய ஒரு தெளிவு கொள்கிறார். வீடு திரும்பும் அவர் சாருவின் கையை அழுத்தி பிடிக்கும் காட்சியில் உறைந்து திரைப்படம் முடிவடைகிறது.

1964இல் வெளிவந்த திரைப்படம் என்று நானறிந்தபோது எனது ஆச்சரியம் இன்னும் அதிகரித்துவிட்டது. இந்தியத் திரைப்படங்களில் சத்யஜித் ரேயின் அனைத்துப் படங்களையும் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் அதிகரித்தது இத்திரைப்படம்.

ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.

"Illustrated weeklyயின் அப்போதைய ஆசிரியராய் இருந்த ஏ.எஸ்.ராமன் மிகப்பிரபலமான தனது 'சியராஸ்குரே' பகுதியில் இரண்டு முறை மிக நீளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். அதில் Jayakanthan's unnai pol oruvan is shade better than Sathyajith Ray என்று சொல்லியிருந்த வரிகள் அதீதமானவை அப்போதே எனக்குத் தோன்றியது உண்டு. ஆனால் A.S.R.இன் இந்தக் கணிப்பு எனக்குப் பெருமையாகவும் இருந்தது. சத்யஜித் ரேயின் படங்களில் உள்ள romanticism இல்லை. இதில் (உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில்) realism இருக்கிறது என்று தனது கட்டுரை திரு.இராமன் விளக்கியும் எழுதி இருந்தார். ... முதல் பரிசுக்கும் மூன்றாம் பரிசுக்கும் சாருலதாவும் உன்னைப் போல் ஒருவன் படமும் போட்டியிட்டன. அந்தத் தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டுரிமை தரப்பட்டிருந்தால், நானும் கூடச் சாருலதா படத்திற்குத்தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன்; உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அல்ல."

10 comments:

பிச்சைப்பாத்திரம் said...

பிரசன்னா,

நல்ல பதிவு. தொடரவும். நீங்கள் குறிப்பிட்டதைப் போல உலக அளவிலான படங்களைக்கூட சிறுமுயற்சி எடுத்தால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், அபூர்வமான இந்திய, தமிழ்த்திரைப்படங்களை காண முடியாத சூழல் நிலவுவது துரதிர்ஷ்டம்தான். பெங்காலி, இந்தி, மலையாளம் தவிர மற்ற மொழிகளில் எந்த மாதிரியான மாற்றுத்திரைப்படங்கள் வந்திருக்கின்றன என்பதை அறியவே முடிவதில்லை. 'அக்ரகாரத்தில் கழுதை' என்கிற ஜான் ஆப்ரகாம் இயக்கின திரைப்படத்தை காண வேண்டுமென்று நீண்ட நாட்களாய் காத்திருக்கிறேன். (யாரிடமாவது குறுந்தகடோ, இதைப் பற்றிய தகவலோ இருந்தால் தந்து உதவவும்).

// கலந்துகொள்ள பாரதி மணியன் வந்திருந்தார்.//

அவர் பெயர் பாரதி மணி. 'பாரதி' திரைப்படத்தில் பாரதி கதாபாத்திரத்திற்கு தந்தையாக நடித்ததினால் வந்த காரணப் பெயர். இவர் பிரபல இலக்கிய விமர்சகர் க.நா.சு.வின் மருமகன் என்பது கூடுதல் தகவல்.

Anonymous said...

//எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி, லோக் சபா சானலைப் பார்க்கச் சொன்னார்//

எனக்கு வந்த குறுஞ்செய்தியின் ரிஷிமூலம் இதுதானா? குட். நன்றி.


//சில நேரங்களில் சில மனிதர்கள், வீடு போன்றவை. ஆனால் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், மறுபக்கம், சந்தியா ராகம், அக்ரஹாரத்தில் கழுதை, டெரரிஸ்ட், மல்லி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், நண்பா நண்பா, ஊருக்கு நூறு பேர், றெக்கை, கண் சிவந்தால் மண் சிவக்கும், உச்சி வெயில் //

சான்ஸே இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் தவிர மீதி ஏதும் கிடைக்காது.

தினமும் டிடி பொதிகையில் இரவு பத்தரைக்கு கதையும் காரணமும் பார்க்கிறீங்களா?

ஹரன்பிரசன்னா said...

சுரேஷ், பாரதி மணி க.நா.சுவின் மாப்பிள்ளை என நினைக்கிறேன். மருமகனா, மாப்பிள்ளையா அல்லது இரண்டுமா என உறுதியாகத் தெரியவில்லை.

பிரகாஷ், தினமும் டிடியில் இரவு 9 மணிக்கு கதை கதையாம் காரணமாம் போடுகிறார்கள். மறுபடியும் மற்றும் அந்த நாள் மட்டும் பார்த்தேன். மற்றவை எல்லாம் நான் ஏற்கனவே பார்த்த திரைப்படங்களே. நன்றி.

Srikanth Meenakshi said...

Thanks for the recap of Charulatha - one of my favorites.

At the end of the movie, when the husband comes back home and sees the wife, the movie ends on a freeze frame with a title card that says 'Broken Nest' - so I'm not entirely sure that the movie ends on a positive note.

There is a wonderful Kishore Kumar song in the movie - a Tagore poem about a "Gobideshini"...

thanks,

Srikanth

Anonymous said...

மறுபடியும் (தமிழ், இயக்கம்: சேது மாதவன்) - 48/100
இயக்கம்: சேது மாதவன் - ??? Is it different from the one directed by Dir.Balu Mahendra?

ஹரன்பிரசன்னா said...

Anony, Marupakkam is the correct name. I wrote wrongly as marupadiyum. Marupadiyum is directed by Balumahendra and Marubakkam is directed by Sethu Mathavan. I corrected in the list. Thanks.

Anonymous said...

Haranprasanna, Prakash,
VCD copies of Marupakkam and Veedu are also available (other than Sila Nerangalil Sila Manidhargal) in the market. At least, they were, when I bought them for myself.

Marupakkam was released as part of a collection of national award-winning south Indian films (Dweepa, Stri, Karuvelam Pookkal etc.) distributed by a company called Dakshin Chitra Express (or some name like that).

ஹரன்பிரசன்னா said...

Dear Zero, When I checked for tamil award movies, I could only get very few movies like vIdu, sila nerangalil sila manitharkaL, etc. I could not Marupakkam. Thanks for your info.

I have watched all other three movies, karuvelam pUkkal (Pumani, Tamil), Sthri (Telugu, Sethu Mathavan) and Dweepa (Girish Kasaravalli, Kannada.) I am planning to write about the movie Dweepa. Thanks.

Abubaker said...

நான் முதலில் பார்த்த சத்யஜித் ரே படமும் சாருலதா தான் :)

Anonymous said...

Could you please mail me the contact details from where the VCDs of Veedu & Marupakkam can be bought? (Please mail to gganesh@gmail.com)