Camera : R. K. Bose
Editor : Mohan Kaul
Music : Vanraj Bhatia
Cast : Raghuvir Yadav, Barry John, Arundhati Roy, Virendra Saxena
1986/ 118 Mins/ Hindi/ Social
Thanks: http://www.nfdcindia.com/view_film.php?film_id=36&show=all&categories_id=8
1986 இல் வந்த திரைப்படம். இந்த அருமையான திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சி மூலம் கிட்டியது. என்னைக் கவர்ந்த படங்களுள் இதுவும் ஒன்று.
1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மிகவும் மதிக்கிறான், நம்புகிறான். ஒரு க்ளார்க்காக பணிபுரியும் அவன் செயல்கள், நடத்தை, உடை எல்லாமே பிரிட்டிஷ் அதிகாரிகளை ஒத்திருக்கின்றன. மத்திய இந்தியாவில் வாழும் அவனது செய்கைகள் அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் வியப்பூட்டுபவையாக அமைகின்றன. கடைகளுக்குச் செல்லும் அவன் தான் ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யாத்தின் வேலையாள் என்று சொல்லி கடன் வாங்குகிறான். தொடர்ந்து கடன் தர மறுக்கும் நபர்களை மிரட்டி வைக்கிறான். ஆனால் உண்மையில் மாஸே ஒரு அப்பாவி. அவன் மிரட்டும் வேளைகளில் கூட எதிராளிகள் அவன் ஒரு அப்பாவி என்பதை உணர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் சாலி (சாலியாக நடித்திருப்பவர் எழுத்தாளர் அருந்ததிராய்) என்கிற காட்டுவாசிப் பெண்ணை அவன் சந்திக்கிறான். பார்த்த கணமே காதல் ஏற்படுகிறது. அவளை மணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அவன் வீட்டுக்காரர்கள் ஆரம்பத்தில் மறுக்கிறார்கள். என்றாலும் அவன் தருவதாகச் சொல்லும் பணத்துக்காகச் சம்மதிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் திருமணம் நடப்பதுபோல, ஒரு சர்ச்சில் வைத்து அவன் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன இரவே, (முதலிரவு முடிந்துவிடுகிறது) சாலியின் உறவினர்கள் வந்து அவன் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராததால் சாலியைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான் மாஸே.
அருந்ததி ராய், ரகுவீர் யாதவ்
மாஸே வேலை செய்யும் இடத்திலுள்ள ஆங்கிலேயர்களிடம் மிகவும் நெருக்கமானவனாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். சார்லஸ் ஆடம் என்கிற பிரிட்டிஷ் உயரதிகாரி அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கேட்கிறார். முதலில் ஏதேதோ காரணம் சொல்லும் மாஸே, பின் தான் செலவுக்கு அந்தப் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்கிறான். அதோடு நில்லாமல், அதை எப்படி கணக்குக் காட்டித் தன்னைத் தப்ப வைக்கமுடியும் என்றும் ஆடமுக்கு விளக்குகிறான். கடும் கோபம் கொள்ளும் ஆடம், இது அரசாங்கத்தின் பணம் என்றும் இது திரும்ப கிடைக்கும்வரை அவனை வேலையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகவும் உத்தரவிடுகிறார். உண்மையில் அந்தப் பணம் நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் சாலைகளுக்கான பணம்.
மனைவியையும் இழந்து வேலையையும் இழந்து நிற்கும் மாஸே, தனக்கு எப்படியும் தனது மேலதிகாரி ஆடம் உதவுவார் என்று நம்புகிறான். வருடங்கள் ஓடுகின்றன. மனைவி சாலியையும் தனது மகனையும் யாருக்கும் தெரியாமல் சந்திக்கிறான் மாஸே. இதை அறியும் சாலியின் அண்ணன் கோபத்தில் மாஸேயை பெரும் கழியால் தலையில் அடித்துவிடுகிறான். பின் யாருக்கும் தெரியாமல் சாலியையும் தன் மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிறான்.
மழைக்காலத்தில் சாலை போடும் பணிகள் மந்தமடைவதால் தன் ஊருக்குச் செல்கிறார் ஆடம். பருவ நிலை மாறுகிறது. சாலை போடவேண்டிய வேலையைத் துரிதப்படுத்தும் அரசின் ஆணையோடு, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு திரும்ப வருகிறார் ஆடம். என்ன முயன்றும் சாலை போடும் வேலை மெத்தனமாகவே நடக்கிறது. சாலைகள் காடுகள் வழியே போடப்படவேண்டி இருக்கிறது. காட்டை அறிந்தவர்கள் யாரும் துணையில்லாமல் திண்டாடுகிறார் சார்லஸ் ஆடம். அவரது மனைவி இப்படி ஒரு வேலை தேவையா என்று சலித்துக்கொள்கிறார்.
காட்டில் டெண்ட்டைப் பார்க்கும் மாஸே அது தனது அதிகாரி ஆடமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து அங்கு செல்கிறான். அங்கு ஆடமைப் பார்க்கும் அவன் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். ஆடமும் மாஸேயை வேலையை விட்டுத் தூக்குவதைத் தவிர தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொல்லி வருந்துகிறார். வெளியில் நிற்கும் தனது மனைவியையும் ஆடமுக்கு மாஸே அறிமுகப்படுத்துகிறான். கையில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் ஆடம், அக்குழந்தையின் பெயரைக் கேட்கிறார். சார்லஸ் என்கிறான் மாஸே. ஆடம் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகிறார். எப்படி மாஸேக்கு உதவுவது என்று யோசிக்கிறார்.
மாஸே ஆடமுக்கு சாலை போடும் விஷயத்தில் உதவ முடிவெடுக்கிறான். ஆடமிடமும் சொல்கிறான். ஒரு அரசாங்கத்தால் முடியாததை எப்படி மாஸே தனியாளாகச் செய்யமுடியும் என்று கேட்கிறார் ஆடம். நாளை காலை உங்களுக்குத் தேவையான ஆள்களை வேலைக்குக் கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் செல்கிறான் மாஸே. அதை நம்பாத ஆடமின் மனைவி ஆடமையும் மாஸேயையும் கேலி செய்கிறாள்.
மாஸே அன்று இரவே எல்லா காட்டுவாசி குடியிருப்புகளுக்கும் சென்று, தான் அரசாங்கத்தின் ஆள் என்று சொல்லி, நைச்சியமாகப் பேசியும் ஆசை காட்டியும் பயமுறுத்தியும் அனைவரையும் வேலைக்கு வர வைக்க சம்மதம் பெறுகிறான். மறுநாள் ஆடமின் கூடாரத்துக்கு (Tent) வெளியே கேட்கும் பெரும் சத்தத்தைக் கேட்டு வந்து பார்க்கிறாள் ஆடமின் மனைவி. அனைவரும் வேலைக்கு வந்தவர்கள் என்றறியும்போது அவளுக்கும் மாஸேயின் மீது பெரிய ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வேகம் பெறுகிறது. அரசு நிர்ணயித்த தினத்திற்கு முன்பாகவே சாலைகள் போடப்பட்டுவிடும் என்று அரசுக்கு தகவல் அனுப்புகிறார் ஆடம். அதற்கு முக்கியக் காரணம் மாஸேதான் என்றும் அவனை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பரிந்துரை ஏற்கப்படுகிறது. சாலையைத் திறந்துவைக்கும் விழா நடைபெறுகிறது. ஆடம் உரையாற்றுகிறார். மாஸேயைப் புகழ்ந்து அவனுக்கு வேலை மீண்டும் தரப்படுவதை உறுதி செய்கிறார். அப்போது அங்கு வரும் காட்டுவாசிகள், சாலையைத் திறந்து வைக்க வரும் அரசின் பிரதிநிதிகளிடம், சாலைக்கான வரியை ரத்து செய்யவேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். அரசின் பிரதிநிதியும் ஆடமும் அதிர்ந்து போகிறாகள். அப்படி ஒரு வரி இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். அந்த இடத்திற்கு வரும் மாஸே அனைவரையும் திட்டி விரட்டுகிறான். ஆனால் ஆடமுக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, மீண்டும் காட்டுவாசிகளைக் கூப்பிட்டுக் கேட்கிறார். அவர்கள் அனைவரும் மாஸே வரி வசூலித்ததைச் சொல்கிறார்கள்கள். கடும் கோபம் அடைகிறார் ஆடம். அரசு மாஸேவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.
சிறையில் எவ்விதத் துன்பமும் இன்றி இருக்கும் மாஸே தன்னை எப்படியும் ஆடம் காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறான். ஆடமுக்கு இருக்கும் கோபம் வடிந்து, இயல்பாகவே மாஸே மீது இருக்கும் அன்பு பொங்குகிறது. ஆடமின் மனைவியும் ஆடம் எப்படியும் மாஸேவைக் காப்பாற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். சட்டத்தை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில், அவனைத் தனிமையில் சந்திக்கும் ஆடம் மாஸே எப்படி நீதிமன்றத்தில் பேசவேண்டும் என்று சொல்லித் தருகிறார். அனைத்தையும் அலட்சியப்படுத்தும் மாஸே, ஆடமிடம் 'எப்படியும் என்னை நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள் எனத் தெரியும்' என்று சொல்கிறான். எவ்வளவு விளக்கியும் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறான் மாஸே. ஆடம் செய்வதறியாமல் வீட்டுக்குப் போகிறார். நீதிமன்றத்தில் மாஸேவுக்கு தூக்குத் தண்டனை உறுதியாகிறது. தூக்குத் தண்டனைக்கு முந்தைய நாள்கூட ஆடம் எப்படியும் தன்னைக் காப்பாற்றுவார் என்றும் நம்பும் மாஸே, ஆடமே தன்னைச் சுட்டுக் கொல்வது போல கனவு காண்கிறான். மறுநாள் மாஸேவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதாக திரையில் எழுத்தில் காண்பிப்பதோடு படம் முடிவடைகிறது.
காடுகளில் சாலை போடும் காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மாஸேயாக வரும் நடிகர் ரகுவீர் யாதவும் ஆடமாக வரும் ஆங்கில நடிகரும் மிக அழகாக, இயல்பாக நடித்திருந்ததே படத்தின் பலம். ரகுவீர் யாதவ் ஆடமை மேயர் சாப் என்றே கடைசி வரை அழைக்கிறார். அவர் அழைக்கும் விதம், அந்தக் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அருந்ததி ராய்தான் மாஸேயின் மனைவியாக நடித்தவர் என்ற செய்தி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
மாஸே பெண் கேட்டுச் செல்லுமிடத்தில், காட்டுவாசிகள் பிரிட்டிஷ்காரர்களைப் போல நாகரிகம் தெரியாதவர்கள் என்று உணர்கிறார். ஆனால் அதேசமயம் தன் காதலை விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லை. அவர் தரும் பணத்திற்காக சம்மதிக்கும் சாலியின் அண்ணன், மாஸே அணிந்திருக்கும் கோட்டையும் பேண்ட்டையும் கேட்கிறான். வேறு வழியின்றி அதைக் கொடுத்துவிட்டு, கால்சட்டையுடன் திரும்புகிறான். அவன் வைத்திருக்கும் குடையையும் சாலியின் தந்தை பிடுங்கிக்கொள்கிறான். இதற்குப் பின்னர்தான் மாஸேயின் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது, காட்டுவாசிகள் வழக்கம்போல் எப்படி துண்டை போர்த்திக்கொள்வார்களோ அதேபோல அந்த கோட்டை போர்த்திக்கொண்டு வருகிறான் சாலியின் அண்ணன். அதைப் பார்க்கும் மாஸேயின் முகபாவம் ரசிக்கத்தக்க ஒன்று.
காட்டுவாசிகளிடம் சாலை வேலைக்கு வருமாறு கேட்கும் காட்சிகளில் மாஸே செய்யும் தந்திரங்கள் எளிமையானவை, நம்பத் தகுந்தவை. எந்தக் குழுக்கள் சாலை வேலைக்கு வருகிறார்களோ அவர்கள் மட்டுமே சாலையைப் பயன்படுத்தமுடியும் என்கிறான். ஒருகுழுவிடம் மற்றொரு குழு இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறான். இப்படியே ஆள்களை வேலைக்குச் சேர்க்கிறான்.
கணக்கு கேட்டு வேலையை விட்டு துரத்தப்படும் நிலையில், ஆடமின் வீட்டு முன்னால் நின்றுகொண்டு சத்தம் போடும் காட்சி இன்னொரு சிறப்பான காட்சி. 'என்ன கணக்கு வேணும் பெரிய கணக்கு, நானா திருடினேன், என் டைரியில இருக்கு கணக்கெல்லாம். பாருங்க. யார் யாருக்கு எவ்ளோ கொடுத்தேன்னு இதுல இருக்கு பாருங்க' என்று ஆடம் வீட்டு முன்பு நின்று கத்துகிறான். பின்பு அந்த டைரியை அவர் வீட்டின் முன் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறான்.
ஆடமுக்கு மாஸேயின் மீது இருக்கும் சாஃப்ட் கார்னர் அழகாக விவரிக்கப்படுகிறது. மாஸேயின் மகனுக்குத் தன் பெயரான சார்லஸ் என்று வைத்திருப்பதை அறியும் கணத்தில் அவனுக்கு தான் ஏதேனும் செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை உணர்கிறார் ஆடம். கடைசி காட்சிகளில், ஆடம் எப்படி நீதிமன்றத்தில் சொன்னால் தப்பிக்கலாம் என்று விளக்கும்போது அவர் அடையும் விரக்தியும் ஏமாற்றமும் தன்மீதான மாஸேயின் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பேரி ஜானால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.
Search Tips: Indian Movies, Indian Award Movies.
3 comments:
one correction made...
//1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) //
இப்படியெல்லாம் படங்கள் வந்ததா என்ன??
//இதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.//
நீங்கள் கதையை விவரித்த விதம் அருமை. ( விமர்சனம் என்று சொல்ல மாட்டேன்)
தொடர்ந்து எழுதுங்கள்..
//( விமர்சனம் என்று சொல்ல மாட்டேன்)//
உண்மைதான். நன்றி.
Post a Comment