Sunday, October 21, 2007

சில கவிதைகள்

புதுஎழுத்து

நீண்ட வாக்கியங்களில்
நம்பிக்கையற்றுப் போனபோது
வார்த்தைகளில் விழுந்தேன்
அவையும் அதிகமென்றானபோது
எழுத்துகளைப் பிடித்துக்கொண்டேன்
ஒற்றையெழுத்துகளும் சலித்தபோது
மொழியின் போதாமையில்
என்னை புதைத்துக்கொண்டது மௌனம்
மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி

யாருமற்ற தனிமை

அடைந்து கிடந்த அறையினுள்ளிருந்து
முதலாமவன் வெளியேறினான்
அவன் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டி
அவனுக்கு முகமன் கூறினார்கள் மற்றவர்கள்
இரண்டாமவன் போனபோது
அவன் நற்செய்கைகளை காட்டி
வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தார்கள்
மூன்றாமவன் போனபோது
சந்தோஷமான நிமிடங்களை
நான்காமவன் நினைத்துக்கொண்டான்
கடைசியாக அவனும் விடுவித்துக்கொண்டபோது
தனித்து விடப்பட்டது அந்த அறை

அடைந்து கிடந்தபோது
அவர்கள் பரிமாறிக்கொண்ட
அன்பான வார்த்தைகளை விட்டுவிட்டு
அவர்களைச் சொல்லி
திட்டிக்கொண்டிருந்தது அறை

சின்னஞ்சிறு கவிதைகள்

சிதைப்புகையை
ஆழ்ந்து உள்ளிழுக்க,
இனியென்னை
வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்

-oOo-

ஒரு பூனையின் நிமிடங்கள்
ஒரு எலியின் நிமிடங்கள்
ஒரு பூனை மற்றும் எலியின் நிமிடங்கள்
முடிந்துவிடுகிறது பேருலகம்

-oOo-

தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்

-oOo-

வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை
ஆயத்தமற்ற
நொடிக்கோபத்தில் விளையும்
அமைதியின் குறிப்புகள்

-oOo-

10 comments:

LakshmanaRaja said...

//நீண்ட வாக்கியங்களில்
நம்பிக்கையற்றுப் போனபோது
வார்த்தைகளில் விழுந்தேன்
அவையும் அதிகமென்றானபோது
எழுத்துகளைப் பிடித்துக்கொண்டேன்
ஒற்றையெழுத்துகளும் சலித்தபோது
மொழியின் போதாமையில்
என்னை புதைத்துக்கொண்டது மௌனம்
மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி//

ரொம்ப அழகா இருக்குங்க..நான் எல்லர்கிட்டயும் சொல்லிட்டிருப்பேன்..என் மொழி..என் வார்த்தைகள்..என் அர்த்தங்கள் ன்னு.. அதை அப்படியே உங்க எழுத்துக்கள் பிறதிபளிக்குது..
வாழ்த்துக்கள்..


//சிதைப்புகையை
ஆழ்ந்து உள்ளிழுக்க,
இனியென்னை
வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்
///

//தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்///


மிக அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..

சில கவிதைகள் எனக்கு புரியல.ஆனா கண்டிப்பா ரொம்ப ஆழமான கவிதைகள்.

ஹரன்பிரசன்னா said...

நன்றி லட்சுமண ராஜா.

Anonymous said...

//மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி//

அருமை நன்பரே..

//வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்//

வாழ்வெங்கும் துரத்தப் போகும் (மரன) மணம்" என்றிருந்தால் ???


//வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை
ஆயத்தமற்ற
நொடிக்கோபத்தில் விளையும்
அமைதியின் குறிப்புகள்//

நல்ல கவிதைகள் ஹரன்...

கானகம் said...

ஹரி..

புது எழுத்து - கவிதை நன்று.

யாருமற்ற தனிமையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பூனையின் நிமிடங்கள்...

வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை..

இரண்டும் நன்றாய் இருந்தது ப்ரசன்னா..

PKS said...

பிரசன்னா,

உங்கள் எழுத்தில் வளர்ச்சி தெரிகிறது. புரிகிற மாதிரியும் எளிமையாகவும் நேரடியாகவும் எழுத ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துகள். இது எப்போது எனக்குத் தெரிந்தது என்கிறீர்களா? சினிமா விமர்சனத்தில் சினிமா பற்றித் தவிர பிறவற்றைப் பற்றி (சமூகம் முதலியன) எழுதக் கூடாது என்று ஏதும் இல்லை என்ற பொருளில் சமீபத்தில் மரத்தடியில் எழுதினீர்கள். அதிலிருந்தே உங்களின் இறுகிய இலக்கியப் பார்வையிலிருந்து வெளிவந்து விட்டீர்கள் என்று நினைக்க ஆரம்பித்தேன். சிறுகதையிலும் கவிதையிலும் இதை இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்வதுகூட சரியில்லை, சினிமா விமர்சனத்தில் சமூக விமர்சனம் இருப்பது தவறில்லை என்பதுபோல இலக்கியத்திலும் சமூக விமர்சனம், உணர்த்திச் சொல்ல சற்று மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள், நேரடியான வாழ்க்கை உண்மைகள், ஒன்றைப் பேசும்போது இன்னொன்றைத் தொடுதல் ஆகியவை (சு.ரா, ஜெ.மோ பள்ளிகள் அனுமதிக்காத இலக்கிய உத்திகளை இங்கே சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்) தவறில்லை என்ற நிலைக்கு சீக்கிரம் நீங்கள் வளர்வீர்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

புது எழுத்து கவிதை பிடித்திருந்தது. யாருமற்ற தனிமை எனக்குத் தெரிந்த (நீங்களும் அறிந்த) ஒரு மத-அடிப்படைவாதிகள் நடத்துகிற, கூகுள் குழுமச் செயல்பாடுகளை நினைவுறுத்துகிறது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

ஹரன்பிரசன்னா said...

பிகேஎஸ், உங்கள் கருத்துக்கு நன்றி.

யாருமற்ற தனிமை எதையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதல்ல. ஆனால் அதே சமயம் ஒரு கவிதை எழுதப்படாத விஷயம் ஒன்றிற்குப் பொருந்திப் போவதும் இயல்புதான்.

நன்றி.

rajkumar said...

புது எழுத்து கவிதை பிரமாதம்

ஹரன்பிரசன்னா said...

ராஜ்குமார், நன்றி.

தமிழ் படிப்பது உங்களுக்கு இன்னும் மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது. :D

பிரகாஷ் said...

கவிதைகள் நன்று.

மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகும் என் மொழியும்
எப்போதும் வசதியாய் இருப்பதில்லை
இந்த விமர்சனத்தைப் போல.

Maniz said...

first one is good :)