படம்: சூரஜ் கா சாத்வன் கோடா (சூரியனின் ஏழாவது குதிரை)
இயக்கம்: ஷ்யாம் பெனகல்
மொழி - ஹிந்தி
ஷ்யாம் பெனகலின் 'சூரியனின் ஏழாவது குதிரை திரைப்படம்', அலஹாபாத்தில் வசிக்கும் ஒரு ரயில்வே ஊழியரின் பால்ய வயது, பதின்ம வயது மற்றும் இளம் வயது காதல்களை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக பெண்களைப் பற்றிய, காதலைப் பற்றிய, வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆணின் பார்வையை முன்வைக்கிறது. ரகுவீர் ஆதவ் என்னும் நடிகர் தன் நண்பர்களைப் பற்றிய நினைவுகளை நினைக்க படம் ·ப்ளாஷ் பேக்கில் துவங்குகிறது. ரயில்வே துறையில் வேலை பார்க்கும் மாணிக் முல்லா அவரது நண்பர்களுடன் தினம் தினம் கதைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறான். சிறந்த கதை சொல்லியான அவன் கதைகளை ஆர்வமுடன் கேட்கும் அவன் நண்பர்கள் அது பற்றிய கடுமையான விவாதமும் மேற்கொள்ளுகிறார்கள். கதையைச் சொல்லி அதைக் கேட்பதை விட அவர்களுக்கு வேறு நல்ல பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். அப்படி ஒரு நாள் தன் பால்ய கால காதல் கதையைச் சொல்லுகிறான் மாணிக் முல்லா.
தன்னாவும் ஜமுனாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தன்னாவிற்குப் பெண்ணைத் தர ஜமுனாவின் அம்மாவிற்குச் சம்மதம் இல்லையென்றாலும், தன் பெண்ணின் சந்தோஷமே முக்கியம் என்று சம்மதிக்கிறார் ஜமுனாவின் தந்தை. தன்னாவிற்குப் பெண்ணைத் தர சம்மதிக்காததற்குக் காரணம், தன்னாவின் சாதி தனது சாதியை விடத் தாழ்ந்த சாதி என்று ஜமுனாவின் தாய் நினைப்பதுதான். ஆனாலும் சில நிபந்தனைகளுடன் பெண் தரச் சம்மதிக்கிறாள். அதில் முக்கியமானது, தன்னா தன் வீட்டுடன் மாப்பிள்ளை ஆகவேண்டும் என்பது. அதற்கு தன்னா மறுக்க, அவன் சாதியைச் சொல்லித் திட்டி விரட்டுகிறாள் ஜமுனாவின் தாய். மாணிக் முல்லா படிக்கும் வயதில் இருக்கிறான். அவன் மேல் மிகுந்த அன்பு காட்டுகிறாள் ஜமுனா. தன் திருமணம் தடைபட்டுப்போன சோகத்தில் மாணிக் முல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் மேல் ஆதரவாகச் சாய்கிறாள். மனம் மயங்கிச் சரியும் பொழுதொன்றில் அவனை முத்தமிடவும் முயல்கிறாள். தன் மன மயக்கத்தை கண்டு அஞ்சி அவனை விட்டு விலகி ஓடுகிறாள். மாணிக் முல்லாவின் பதின்ம வயது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் மாற்றத்துக்குள்ளாகிறது. அவனால் ஜமுனாவை மறக்கமுடியவில்லை. ஆனாலும் அது காதலில்லை என்றும் தெளிவாக உணர்கிறான். ஜமுனாவிற்கும் வயதான ஒரு செல்வந்தருக்கும் மணம் முடிகிறது. ஜமுனா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். இதை எதிர்த்து தன்னாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் கொடுமைக்கார தந்தைக்குப் பயந்து தன் காதலை தன் மனதிலேயே புதைத்துக்கொள்ளுகிறான். பின்பு தன்னாவிற்கும் வேறொரு பணக்கார பெண்ணான லில்லிக்கும் திருமணம் நடக்கிறது. இதை அறியும் ஜமுனா, அவள் வீட்டிற்கு வரும்போது தன்னாவிடம் அவள் மனைவி தன்னைவிட அழகியா என்று கேட்கிறாள். என்ன சொல்வது என்று தெரியாமல் தன்னா தடுமாறும்போது, அவன் எதிர்பாராத சமயத்தில் ஜமுனா அவனைக் கட்டிபிடித்துக்கொள்ளுகிறாள். அவளை பலவந்தமாக விலக்கித் தள்ளிவிட்டு ஓடுகிறான் தன்னா. தனது புதிய வாழ்க்கை மிகுந்த செல்வம் நிறைந்ததாக இருக்க, அதனால் கர்வம் கொள்ளும் ஜமுனா, வம்படியாக தன்னாவை வெறுக்கத் துவங்குகிறாள். தன்னா இல்லாத சமயத்தில் லில்லியிடம் பேசி தன்னா பற்றிய ஒரு எதிர்மறை சித்திரத்தையும் உருவாக்க முனைகிறாள். இந்நிலையில் ஜமுனாவின் வயதான செல்வந்தக் கணவர் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக சில பூஜைகளை மேற்கொள்ளுகிறார். அதை கவனித்துச் செய்ய தன் வேலைக்காரனைப் பணிக்கிறார். அந்த வேலைக்காரனுக்கும் ஜமுனாவிற்கும் இடையே ஏற்படும் புரிதல் மெல்ல காதலாகி உறவில் முடிகிறது. பூடமாகச் சொல்லப்படும் இக்காட்சிக்குப் பின் ஜமுனாவிற்குக் குழந்தை பிறக்கிறது. அதைக் கொஞ்சுகிறார் வயதான கணவர். அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிய அவர் உயிர் பிரிகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து விடப்படும் ஜமுனா பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அவர் வீட்டிலேயே வாழ்கிறாள். வேலைக்காரனும் அவளுடனேயே இருந்துவிடுகிறான் கார்டியனாக.
முதல் கதை முடிந்ததும் நண்பர்கள் விவாதிக்கிறார்கள். ஒரு நண்பன் இதை கற்பனைக் காதல் கதை என்று சொல்ல, வெடித்தெழும் ரகுவீர் யாதவ் இக்கதை பெண்களின் மீதான வன்முறை என்கிறார். பெண்கள் என்றைக்கும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்கிறார். இன்னொரு நண்பர் கண்ணீர் சிந்தி அழுகிறார் தன்னாவிற்காக. இரண்டாவது கதையைக் கேட்கிறார்கள் நண்பர்கள். மாணிக் முல்லா சொல்லத் தொடங்குகிறார்.
தன்னாவின் தந்தை மஹசேர் தலால் தனது கிழட்டுப் பருவத்தில் திருமணம் செய்துகொள்கிறார். மகன் காதலில் இருப்பது தெரியாமல் தனக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர, அவரது மகள்கள் அருவருப்பின் உச்சத்திற்குச் செல்கிறார்கள். மகன் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பது மஹசேர் தலாலுக்குப் பெரும் எரிச்சலைத் தருகிறது. தன் இரண்டாவது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்போது அங்கு வரும் தன்னாவின் மீது எரிந்து விழுகிறார். திடீரென தன்னாவிற்கு பணக்காரப் பெண் லில்லி கிடைக்கவும் அவன் திருமணத்திற்கு நிச்சயிக்கிறார். ஜமுனாவின் மீது காதலில் இருக்கும் தன்னா தன் தந்தையை எதிர்க்கும் தைரியமின்றி திருமணத்திற்குச் சம்மதிக்கிறான். தன் கணவன் தன் மீது அன்பாக இல்லை என்கிற எண்ணம் உண்டாகிறது லில்லிக்கு. அதை ஆமோதிக்கும் விதமாக ஜமுனாவும் பேச, தன்னா தன் மீது அன்பாக இல்லை என்கிற முடிவுக்கே வந்துவிடுகிறாள் லில்லி. இதில் ஏற்படும் பிரச்சினையில் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விடுகிறாள் லில்லி. எதேச்சையாக ஒருநாள் ரயில்வே ஸ்டேஷனில் ஜமுனாவைச் சந்திக்கிறான் தன்னா. ஜமுனா கணவனை இழந்து, தன் வீட்டு வேலைக்காரனுடன், கையில் குழந்தையுடன் அடுத்த வண்டிக்குக் காத்திருக்கிறாள். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். விடைபெற்றுச் செல்லும் தன்னா, எதிர்பாராமல் ஒரு ரயிலில் அடிபடுகிறான். ஜமுனா அவனை மருத்துவமனையில் சேர்க்கிறாள். அவனுக்கு ஒரு கால் போய்விடுகிறது. தன்னா கதறி அழுகிறான். ஜமுனாவும் அழுகிறாள். அப்போது ஏற்படும் நெஞ்சு வலியில் தன்னா இறந்துவிடுகிறான். தன்னாவைப் பார்க்க வரும் லில்லியைக் கட்டிக்கொண்டு ஜமுனா கதறி அழ, லில்லிக்கு சில விஷயங்கள் பிடிபடுகின்றன.
இத்துடன் இரண்டாவது கதை முடிவடைகிறது. நண்பர்கள் கதை பற்றி விவாதிக்கிறார்கள். இது மிகவும் சோகமான கதை என்கிறான் ஒரு நண்பன். வாழ்க்கையில் ஏற்படும் சங்கிலித் தொடர் போன்ற சோகங்கள் சொல்வதுதான் என்ன என்று தீவிரமாக விவாதிக்கிறார்கள். மூன்றாவது கதை கேட்க நண்பர்கள் அவசரப்படுகிறார்கள். மூன்றாவது கதை தொடங்குகிறது.
மூன்றாவது கதை இரண்டு கிளைகளில் செல்கிறது. முதல் கிளையில் தன் நண்பர்களுக்கு காதல் என்றால் என்ன விளக்க மாணிக் முற்படுகிறான்.
நிலவும் மழையும் பொழியும் இரவில் கவிதைத்துவமாகப் பேசுகிறான் மாணிக். அவனது பேச்சில் மயங்கிக் கிடக்கிறாள் லில்லி. தனக்கும் தன்னாவிற்கும் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதைச் சொல்கிறாள் லில்லி. அதை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மாணிக் அன்று தான் கண்ட வங்காளப் படத்தின் காதல் காட்சிகளை அவளுக்குச் சொல்கிறான். இது விளையாட நேரமல்ல என்று லில்லி எத்தனைமுறை சொல்லியும் அதை பொருட்படுத்தாமல், இது விளையாட்டல்ல இதுவே வாழ்க்கை என்கிறான் மாணிக். இரவீந்தரநாத் தாகூர் எழுதிய காவிய வரிகளை அவளுக்குச் சொல்லி அவளைத் தேற்றுகிறான். அவளிடமிருந்து என்றென்றுமாக விடைபெறுகிறான். லில்லிக்கு அவன் மேலிருக்கும் ஈர்ப்பு குறையவில்லை. ஆனாலும் அதை மறந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்கும் இன்னொரு காரணம் பின்னர் சொல்லப்படுகிறது.
தன்னாவின் தந்தை மஹசேர் தலால் இனிப்புக் கடையில் அமர்ந்திருக்கும்போது அங்கு இனிப்பு விற்க வருகிறாள் சத்தி. அவளை நோட்டமிடும் கடைக்காரனை சத்தி கத்தியைக் காட்டி மிரட்டுகிறாள். அதைப் பார்க்கும் தன்னாவின் தந்தையின் மனதுக்குள் அவள் மீது காதல் அரும்புகிறது. ஏற்கனவே இரண்டாவது திருமணமாகி வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை மறுக்க மூன்றாவது பெண் மீது காதல் கொள்ளுவதுதான் வழியென முடிவெடுக்கிறார் மஹசேர் தலால். இதை அறியும் இரண்டாவது மனைவி சண்டை பிடிக்க, அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார் மஹசேர் தலால். தன் தந்தையின் இரண்டாவது மனைவிக்கும் தன்னாதான் ஆறுதல் சொல்கிறான். சத்திக்கு கார்டியனாக இருப்பவன் சத்தியை அலஹாபாத்தின் ஓரிடத்தில் கண்டெடுத்ததாகவும் அதுமுதல் அவளை வளர்த்துவருவதாகவும் சொல்கிறான். அவனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து அவளை அடைய விரும்புகிறார் மஹசேர் தலால். அதற்குச் சம்மதிக்கிறான் சத்தியின் கார்டியன். சத்திக்கு மிட்டாய் விற்றதில் ஏற்படும் கணக்குக் குழப்பங்களைத் தீர்க்கிறான் மாணிக். இதனால் மாணிக் மேல் சத்திக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணிக் படித்து பெரியாளாக வேண்டும் என்று சத்தி மெனக்கெடுகிறாள். மாணிக்கும் பாஸ் செய்கிறான். இடையில் ஒருநாள் இரவு சத்தி மாணிக்கைத் தேடிக்கொண்டு அவன் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். உடனே அன்றிரவே அவள் எங்கேனும் போகவேண்டும் என்கிறாள். மஹசேர் தலால் அவளைத் துரத்துவதுதான் காரணம். அவரிடமிருந்து தப்பிக்க மாணிக்கிடம் தஞ்சமடைகிறாள். மாணிக் அவளைத் தன் வீட்டில் இருக்க வைத்துவிட்டு தன் அண்ணனிடம் வந்து சொல்கிறான். சத்தி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். அவளுக்கும் தன் தன் தம்பி மாணிக்குக்கும் உறவு இருப்பதை விரும்பாத மாணிக்கின் அண்ணன், மஹசேர் தலாலிடமும் சத்தியின் கார்டியனிடமும் அவள் இங்கிருப்பதைச் சொல்லிவிடுகிறார். அங்கு வரும் இருவரும் சத்தியை இழுத்துச் செல்கிறார்கள். சத்தியின் வீட்டில் ஏற்படும் பிரச்சினையில் சித்தி மரணமடைகிறாள். இதைக் கேட்கும் மாணிக் பெரும் சோகம் கொள்கிறான். மஹசேர் தலாலை போலிஸ் தேடுகிறது. அவர் தலைமறைவாகிறார்.
மூன்றாவது கதை முடிவடைகிறது. இதில் பல்வேறு காட்சிகள் முதலிரண்டு கதையோடு பொருந்தி படத்திற்கு வேறொரு கோணத்தைத் தருகின்றன. முதலில் முக்கியமானது, மஹசேர் தலால் தலைமறைவாகியிருப்பது லில்லியின் வீட்டில். லில்லியின் தாய்க்கும் மஹசேர் தலாலுக்கும் இடையே உறவு இருக்கிறது. இதனால்தான் லில்லி தன்னாவுடன் சேர்ந்திருப்பதில் சுணக்கம் கொள்கிறாள். லில்லிக்கும் மாணிக்கிற்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. இதனால் லில்லி, ஜமுனவிற்கும் தன்னாவிற்கும் இடையே இருக்கும் காதலை உணரும் கணத்தில், வாஞ்சையுடன் ஜமுனாவின் தலையைத் தடவிக்கொடுக்கிறாள். இப்படி பல முடிச்சுகள் மூன்றாவது கதையில் அவழ்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் மாணிக் சந்திக்கும் ஜமுனா அவனுக்கு ஒரு மாட்டின் லாடத்தைப் பரிசாகத் தருகிறாள். அதை பத்திரமாக, தன் பால்ய, இளமைக்காலத்தின் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறான் மாணிக்.
நண்பர்கள் பெரும் குழப்பத்திற்கும் ஆச்சரியத்திற்கும் ஆளாகிறார்கள். ரகுவீர் யாதவ் இனி கதையே வேண்டாம் என்று சொல்லி அழுது மாணிக்கைக் கட்டிக்கொள்ளுகிறான். நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டே, கதைகளில் சந்தேகம் கேட்டுக்கொண்டே, டீ குடிக்கச் செல்லுகிறார்கள். அங்கு ஒரு ஊனமுற்றவனைக் கொண்டு பிச்சை எடுக்க வருகிறாள் சத்தி. இவனைக் கண்ட நேரத்தில் அந்த இடத்தை விட்டு மறைகிறாள். அவளைத் தேடும் மாணிக் அவளைக் காணாமல் பெரும் குழப்பம் கொள்ளுகிறான். ஒரு குதிரை கட்டுக்கடங்காமல் பிடறி சிலிர்க்க ஓடி வருகிறது. தன் நினைவுகளில் இருந்து மீள்கிறான் ரகுவீர் யாதவ். படம் நிறைவடைகிறது.
மூன்று கதைகளில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று ஊடாடி முன்னர் சொல்லப்பட்ட கதைக்கு எதிரான புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன. முதல் கதையில் நாம் பச்சாதாபம் கொள்ளும் பாத்திரம் அடுத்த கதைக்குப் பின் அதன் எதிர்த்திசையில் நின்று கொள்கிறது. நாம் கோபம் கொள்ளும் பாத்திரம் மூன்றாவது கதைக்குப் பின் பாவம் கொள்ள வைக்கிறது. காட்சிகள் தொடங்கும்போதெல்லாம், அவை அதற்கு முன்னர் வந்த காட்சிகளின் நிறைவுப் பிரதிகளாக அமைந்து காட்சிகளுக்கு பெரும் கனத்தைச் சேர்க்கின்றன. இதை இயக்குநரின் உச்சபட்ச திறமை என்று சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக களம் கொள்ளும் கதை கடைசியில் இன்னொரு பெரும் யோசனையை கதை சொல்லிக்கும் நண்பர்களுக்கும் தருகிறது. அவர்கள் சத்தியை உயிருடன் பார்த்த நேரத்தில் அதுவரை சொல்லப்பட்ட கதையை எல்லாம் நாம் மீண்டும் யோசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.
மாணிக் முல்லா கொள்ளும் மூன்றுவித பால் ஈர்ப்புகளும் அவற்றிற்குப் பின்னர் மிகப்பெரிய மறைபிரதியை வைத்திருக்கின்றன. அவற்றை தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்கிறான் மாணிக் முல்லா. தன் மேல் காதலாக இருக்கும் லில்லி மணக்கப் போகும் தன்னா ஏற்கனவே ஜமுனாவுடன் காதலில் இருந்தவன் என்கிற உண்மை அவனுக்குத் தெரிவதால், லில்லி காதல் சொல்லும் நேரங்களில் மிக நிதானமாக அதை எதிர்கொள்ளுகிறான். வாழ்க்கை போடும் கோலங்களைப் புரிந்து கொள்ளுகிற கணத்தில் அவனுக்குக் காதல் மீது புதிய புரிதல் ஏற்படுகிறது. கடைசியில் சத்தியைப் பார்க்கும் நேரத்தில் அவன் மீண்டும் வாழ்க்கையைப் படிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதை உணர்கிறான். அதுவரை தான் சொல்லும் எல்லாக் கதைகளும் தனக்கு முழுக்கப் புரிந்தது என்கிற 'சொல்லும்' நிலையிலிருந்து, தனக்கே புரியாத பிரதிகள் இன்னும் வாழ்க்கையில் வாசிக்கக் காத்துக்கிடக்கின்றன என்பதை உணர்கிறான் மாணிக்.
இப்படத்தின் வசனங்களின் தீர்க்கம் படத்தை மிக உன்னதமான கலைப்படைப்பாக மாற்றுகின்றன. முன்னுக்குப் பின் முரணான கதை சொல்லல் மூலம் தொடர்ந்து முடிச்சுகளை உருவாக்குவதும் அடுத்தடுத்த காட்சிகள் அதை அவிழ்ப்பதுமாக படத்தின் ஒவ்வொரு காட்சியும் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் பார்த்த முடிந்தவுடன் படத்தைப் பற்றிய சிந்தனையை யாரும் அத்தனை சீக்கிரம் விட்டுவிடமுடியாது. உண்மையில் மேலும் மேலும் சிந்திப்பதையும் மறைந்து கிடக்கும் வாழ்க்கையின் பிரதிகளையும் வாசிப்பதையுமே இப்படம் முன்னிறுத்துகிறது.
அடைந்து கிடக்கும் ஒரு கதவைத் திறக்க அதனுள்ளே கதவுகள் பல திறந்துகொண்டே செல்லும் அனுபவம் போல ஒவ்வொரு கதைக்குள்ளும் செல்லும் நாம் மீண்டும் முதல் கதைக்கு வந்து அதன் வழியாக மீண்டும் அடுத்த கதைகளை அடைந்து கொண்டே இருக்கிறோம். வாழ்க்கை என்பதே இப்படி பல அறைகளைக் கொண்டதுதான்.
சூரியனின் ஏழாவது குதிரை, ஏழு குதிரைகளில் மெதுவாகச் செல்லக்கூடியதும் வலிமையற்றதுமாகும். ஆக, இந்தக் குதிரையே ஏழு குதிரைகளின் ஒட்டுமொத்த வேகத்தையும் நிர்ணயிக்கக்கூடியது. இப்படியே இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நம் முடிவுகள் அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு கதாபாத்திரத்தை நிர்ணயிக்க, நாம் அதன் கடைசி இயக்கம் வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது. எப்படி சூரியனின் ஏழாவது குதிரை சூரியனின் வேகத்தை முடிவு செய்கிறதோ அதைப் போல.
ஷ்யாம் பெனகலின் இத்திரைப்படம் தந்த அனுபவம் மிக உன்னதமானது. முதல் முறை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, இரண்டாவது முறை லோக்சபா தொலைக்காட்சியில் பார்த்தபோது, நாம் ஒரு மிகச்சிறந்த இந்தியப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டேன். பத்து நிமிடம் பார்த்துவிட்டு அணைத்துவிடலாம் என நினைத்து நினைத்து, படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பும் அதன் நினைவு என்னை விட்டு அகலவில்லை.
(கதையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதற்குச் சிறிய வாய்ப்பு இருக்கிறது. அப்படியே மாறியிருந்தாலும் கதை இதுதான். டிவிடி கிடைக்காததால் சரி பார்க்கமுடியவில்லை. மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தால், பெயர்களில் தவறு இருந்தால் திருத்தி வைப்பேன். கதையை இவ்வளவு விஸ்தாரமாக எழுதி வைப்பது பின்னர் யாருக்காவது (எனக்கும்!) உதவும் என்பதற்காக.)
No comments:
Post a Comment