Saturday, November 24, 2007

சொற்கள் - சிறுகதை

ப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது. சுசியின் தொடைவரை ஏறியிருந்த நைட்டியில் பளீரெனத் தெரிந்தது அவளது நிறம். தனியறையில் படுத்திருக்கும்போது அவளுக்கு எப்படி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கமுடிகிறது. இதுவே வேறு ஏதேனும் ஒரு இடத்தில் படுத்திருந்தால், போர்வையை கழுத்திலிருந்து கணுக்கால் வரை போர்த்தியிருப்பாள். அறையை நோட்டம் விட்டேன். இடது பக்கத்தில் படபடத்துக்கொண்டிருந்தது நேற்று வாசித்துவிட்டு நான் கைவாக்காய் வைத்த புத்தகம். சுசி பார்த்தால் 'கண்ட கண்ட இடத்துல புத்தகத்தை வைங்க' என்பாள். அவள் பேசிப் பேசி, அவள் பேசாதபோது கூட அவளது சொற்கள் எங்கும் சிதறிக் கிடப்பது போலத் தோன்றும் எனக்கு. சொற்களைப் பற்றி யோசிக்கும்போதுதான் தோன்றியது, சுசியைப் பற்றி இப்படிச் சொல்லலாம் என. அவள் வாய் எப்போதும் ஒரு வார்த்தையைத் தயாராகவே வைத்திருக்கிறது. நான் எது கேட்டாலும், கேட்ககூட வேண்டாம், பார்த்தாலே போதும், அதற்கான சொல்லை சொல்லிவிட்டிருப்பாள். இப்படி அவளது உலகத்தில் அவள் தயாராய் வைத்திருக்கும் சொற்களைவிடவும் குறைவாகப் பேசி ஒருவனது வாழ்க்கையைக் கழித்துவிட முடியும். இப்படி அவளிடத்தில் குவிந்து கிடக்கின்றன சொற்கள்.

தூக்கம் வராத நேரத்தில் டிவியைப் போட்டுப் பார்ப்பேன். அடுத்த நொடியில் அவள் வாய் பேசத் தொடங்கும். இவ்வளவு நேரம் அவள் தூங்கிக் கொண்டிருந்தாளா அல்லது நான் தூக்கமில்லாமல் அலைந்து எப்போது டிவியைப் போடுவேன் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாளா எனக்கூட எனக்குத் தோன்றும். நேற்றிரவு மெத்தையில் படுத்தபோது, மெத்தையிலிருக்கும் மண்ணை தட்டிவிட்டேன். உடனே அவள் பேசத் தொடங்கினாள். "என்னைக்காவது ஒரு நாளைக்காவது மெத்தையைத் தூசி தட்டிப் போட்டிருக்கீங்களா? மண்ணைத் தட்டிவிட்டு குத்திக் காமிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை." தொடர்ந்து வந்து விழுந்தன சொற்கள். சுசி அவற்றையெல்லாம் வார்த்தைகளாகவும் வசவுகளாவும் பாவித்தே அதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அவை என்னளவில் சொற்களாகி நாள்கள் பல ஆகிவிட்டன. ஓரோர் வேளையில் இத்தகைய சொற்களை நான் எதிர்பார்க்கவும் அவை வராதிருக்கும் நேரங்களில் சலிப்படையவும் ஏக்கம் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒருவித வலியை எதிர்பார்த்திருக்கும் சுகம்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அவளது தம்பி வீட்டிற்கு வந்தபோது அவனிடம் நான் சரியாகப் பேசவில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. அவனது தம்பியின் சொற்கள் வேறு வகையானவை. அவன் என்னிடம் எப்போதும் சொன்னதையே சொல்லுவானேயன்றி எதையும் புதியதாகச் சொல்லிவிடமாட்டான். அவன் ஏதேனும் புதிய வார்த்தைகளை என்னிடம் பிரயோகித்துவிட்டால் அன்றைக்கு பீர் அடிக்கவேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட தொடர்ந்து 16 நாள்கள் கவனித்துப் பார்த்தும், அவன் எந்தவொரு புதிய வார்த்தையையும் சொல்லிவிடவில்லை. அந்த வெறுப்பில் பீர் குடித்தேன். இப்படியும் ஒரு மனிதனால் இருக்கமுடியுமா? அப்படிக்கு அலுத்துப்போனானா அவனது அத்தான்? ஆனால் அவனது சொற்களுக்கும் அவனது அக்கா, என் மனைவி சுசியின் சொற்களுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிடும். இரண்டு பல் சக்கரங்கள் ஒன்றுடன் பொருந்துவது போல, அக்காவும் தம்பியும் சதா எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் என் வாழ்க்கையில் மிகச் சொற்பம் தடவை மட்டுமே கேட்டிருக்கும் சொற்களையெல்லாம் பயன்படுத்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவான். என்னிடம் பேசும்போது அவனுக்குக் கிடைப்பதென்னவோ பத்து அல்லது பதினோரு வார்த்தைகள்தான். "அத்தான் எப்படி இருக்கீங்க, பையன் எப்படி இருக்கான்? அம்மா எப்படி இருக்காங்க? சுசி எப்படி இருக்கா? நான் ஞாயித்துக்கிழமை உங்க வீட்டுக்கு வர்றேன்." எவ்வளவு யோசித்தாலும் இதைவிட அதிகமான சொற்களை அவன் என்னிடம் பேசியிருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஒருமுறை பால்குடத்திற்கு அழைத்த நினைவு வருகிறது. பால்குடத்தினத்தன்று சுசியின் சொந்தக்காரர்கள் முழுவதும் நிறைந்து நின்று பேசிப் பேசி பேசிப் பேசி சொற்களை பால்குட நடையெங்கும் விரித்துவைத்திருந்தார்கள். நான் பயந்து ஓடி தாமிரபரணியில் குதித்து நடுவில் இருந்த பாறையில் ஏறி அமர்ந்துகொண்டேன். எந்தவித சொற்களும் என்னை அணுகாது, நீரின் சத்தத்தில் என்னை மீட்டெடுக்க முடியாமல் போயிருந்தால் அன்று என்ன நடந்திருக்கும் என்று என்னால் இப்போது நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

வீட்டுக்கு வந்த தம்பியிடம் நான் சரியாகப் பேசாததற்கு குறைந்தது அரை மணிநேரமாவது சுசி என்னிடம் பேசித் தீர்த்திருக்கவேண்டும். ஆனால் அவள் அன்று ஒன்றுமே சொல்லவில்லை. மிகவும் மெதுவாக அவள் தம்பியிடம், 'நீ பார்த்துப் போயிட்டு வாடா' என்று சொல்லி அனுப்பிவைத்தாள். அன்று இரவு முழுவதும் காத்திருந்தேன். வேறு ஏதேதோ விஷயங்களுக்கு என்னென்ன விதமான சொற்களெல்லாம் வந்தன. ஆனால் இந்த விஷயத்தைப் பற்றிய சொல்லை மட்டும் காணோம். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு நேரத்தில் அவளிடமே கேட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். அவள் சொல்லாமல் விட்டுப்போன வார்த்தைகள் என்பது ஒன்றாவது இருக்கட்டும் என்று அவளிடம் கேட்காமல் வைத்தேன். ஆனாலும் அது எனக்களித்த அதிர்ச்சி அதிர்ச்சிதான். அன்றுதான் புரிந்துகொண்டேன், அவளின் சொற்களில் எனக்கு வளர்ந்த வெறுப்பு, எப்படியோ எதிர்த்திசையில் வளர்ந்து, அது இல்லாவிட்டால் நான் ஏமாற்றமடைந்துவிடும் நிலைக்குக் கொண்டுவிட்டது என்று. தவிர்க்கமுடியாத காமம் போல தவிர்க்கமுடியாத சொற்கள்? இருக்கலாம்.

மஞ்சள் நிற வெளிச்சத்தைப் புரட்டி அவள் திரும்பிப் படுத்தாள். கைகளை அவள் மீது பரவவிட்டால் உடனே ஒட்டிக்கொண்டு விடுவாள். சொற்களை இறைக்கத் தயங்காதது போல அவள் அவளைத் தருவதிலும் என்றும் தயங்கியதில்லை. சில சமயங்களில் உச்சத்தில்கூட பேசிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவசர அவசரமாக அழுத்தமான முத்தமிடுவேன். அவளின் சொற்கள் வெளியில் சிந்தாமலேயே எனக்குள் அமிழும் தருணங்கள் அவை.

ஒரு சில தினங்களுக்கு முன்பு சுசியுடன் படித்த சில பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அதில் ஒருத்திக்கு கல்யாணமாம். அவள் ஏதோ கேட்க இவள் ஏதோ சொல்ல மாறி மாறி பேசிக்கொண்டார்கள். சுசி பேசும்போது அவளது உதடுகளையே கவனிப்பது வழக்கம். சொற்கள் தாங்கள் பிரசவிக்க எப்படிப்பட்ட வடிவங்களில் துளையை ஏற்படுத்திக்கொள்கின்றன என்று கவனிப்பதில் இருக்கும் ஒரு வெறித்தனமான இன்பம் என்றும் எனக்குள்ளே இருக்கிறது. அதில் லயிக்கத் தொடங்கினால் பின்பு சொற்களும் அதன் பிறப்பிடங்களும் தவிர அவள் என்ன பேசுகிறாள் என்பதையே கவனிக்காமல் போய்விடுவேன். உ, ஊ, ஓ என்ற எழுத்துகள் வரும்போதெல்லாம் உதடுகள் குவிவது எனக்குப் பிடிக்கும். சுசி என்றல்ல, எந்தப் பெண்கள் பேசினாலும் உதடிகள் அப்படி குவிவது பிடிக்கும். அப்படி அடிக்கடி உதடுகளை குவித்துப் பேசும் பெண்களுக்குக் கொணட்டி என்று நானும் என் நண்பர்களும் பெயர் வைத்திருந்தோம். எனக்கு ஒரு கொணட்டியே மனைவியாக வாய்த்ததுதான் நல்ல முரண். நான் அவள் பேசுவதைக் கேட்காமல் அவளது சொற்களையும் உதடுகளையும்தான் கவனிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காது. பெரும்பாலும் சொற்களைக் கொட்டும்போது அவள் என் முகம் பார்ப்பதில்லை. எனக்குப் பக்கத்தில் நிற்கும் யாரோ ஒருவரிடம் சொல்வதுபோல வேகமாகத்தான் சொல்லுவாள். நான் அப்படித்தான் எடுத்துக்கொள்வேன், யாரோ ஒருவன் எனக்கருகே நிற்பவனுக்கானவை அவை. எனக்கானவை அர்த்தமற்ற சொற்களும் அவள் உதட்டின் அசைவும்தான். அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்த, கல்யாணம் நிச்சயமான பெண்ணும் அப்படித்தான். சரியான கொணட்டி. அவள் உதடுகள் சுசியின் உதடுகளைக் காட்டிலும் தீவிரமான வேகத்தில் மாறிக்கொண்டே இருந்தன. விருப்பம்போல சொற்கள் வந்து விழுந்தன. அவர்கள் சென்ற பின்பு, யதேச்சையாக சுசி குப்பைகளைப் பொறுக்கினாள். ஒரு கவிஞனின் லாகவத்தோடு, குப்பை அள்ளும் பிளாஸ்டிக் கையில் சொற்களை அள்ளினாள். குப்பையை வெளியே எறியச் சென்றபோது, யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்பு, கீழே கிடப்பதாக நான் கற்பனை செய்துகொண்ட ஒரு சொல்லை, என் ஆத்திரம் தீர ஓங்கி உதைத்தேன். அந்தச் சொல் எதிரே இருந்த சுவரில் முட்டி, அதிலேயே புதைந்துவிட்டது.


அவள் படம் பார்க்கும்போதுகூட ஏதோ பேசுவது போலேயே எனக்குத் தோன்றும். சில சமயங்களில் அவளின் குரல் கூட கேட்டதுண்டு. ஏன் படம் பார்க்கும்போது பேசிக்கொள்கிறாள் என நினைத்துக்கொள்வேன். இப்படி சதா பேசும் ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பது பற்றியும் அவளுடன் வாழ்ந்துகொண்டிருப்பது பற்றியும், அதுவும் நான் அதை வெறுக்கிறேன்; சில சமயங்களில் ஏங்குகிறேன் என்பதும் இவற்றை அவள் அறியாமல் வாழ்வது பற்றியும் எனக்குப் பெருமையாக இருந்தது. எப்போதோ வந்த அவளது சொந்தகாரன் ஒருவன் அவளிடம் கேட்டான், "படம் பாக்கும்போது அந்த வசனத்தை நீ பாட்டுக்கு சொல்லிக்கிட்டு இருப்பியே, அது இன்னும் இருக்கா" என்று. அதை நான் கேட்டுவிட்டது பற்றி அவள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. நான் இதைப் பற்றிக் கேட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரம் அதற்கு விளக்கம் அளிக்கும் சக்தி அவளிடம் உண்டு என்பதை நான் அறிந்திருந்ததால் நானும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவாறு விட்டுவிட்டேன். அவள் அந்த சொந்தக்காரனிடம் பதில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். அவன் அவளது வெகுளித்தனத்தையும் விகல்பமில்லாமல் பேசும் குணத்தையும் பாராட்டிவிட்டுப் போகிற போக்கில் என்னிடம் "இப்படி ஒரு பொண்ணு உங்களுக்குக் கிடைச்சது நீங்க பண்ணின அதிர்ஷ்டம் மாப்பிள" என்று சொல்லிவிட்டுப் போனான். இதை கிட்டத்தட்ட இரண்டு வருடமாகச் சொல்ல நினைத்திருந்தானாம். "சரி, போயிட்டு வாங்க" என்று மட்டும் சொன்னேன்.

இன்று காலை அவள் மொபைலில் அவள் அம்மாவுடன் பேசினாள். எல்லா பெண்களும் இப்படித்தான் பேசுவார்கள் போல என தினமும் நினைக்கும் விதமாக யாரேனும் ஒருத்தி பேசிவிடுவதுண்டு. இன்று அவள் அம்மா. அப்படி ஒரு பேச்சு. அதில் சுசி அவள் அம்மா சொன்னதையே திரும்பச் சொல்லிச் சொல்லி, அப்படியா என்று கேட்டுக்கொண்டாள். 'என்னது பாலாஜிக்கு கல்யாணமா? அப்படியா?', 'மூணாவது வீட்ல தீ பிடிச்சிட்டா? அப்படியா?' 'அப்பாவை யாரோ கீழ தள்ளிட்டானா? அப்படியா?' என்றும் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் அவளது சொற்களோடு சேர்ந்துகொண்டன அவளது குடும்பச் சொற்களும்.

எப்படியும் என்றேனும் ஓர்நாள் நான் அவளிடம் சொல்லியே ஆகவேண்டும். மிகவும் மிருதுவாக, அவள் அதிர்ச்சி அடையாதவாறு, இத்தனை நாள் அமைதியா இருந்த ஆம்பிளைக்கு அப்படி என்ன திடீர்னு அகம் என்று பதில் கேள்வி எழுப்ப இடம் தராதவாறு, மெல்லச் சொல்லியே ஆகவேண்டும். பேசுவதைப் போலவே பேசாமலிருப்பதிலும் உள்ள சுகத்தை, மௌனம் கூட மொழியின் தேவையை செய்யக்கூடிய அழகைச் சொல்லவேண்டும். ஒருவகையில் அவள் இப்படி பேசிக்கொண்டே இருப்பதற்கு, வீடெங்கும் வழியெங்கும் சொற்களை கொட்டிக்கொண்டு செல்வதற்கு நானும் ஒரு காரணம். எனது அதீத மௌனமும் அவளது அதீத பேச்சும் எதிர்த்திசையில் சந்தித்துக்கொள்வதாக இருக்கலாம். இதை அவளிடம் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள் எனத் தெரியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் அவள் பேசியதெல்லாம் கிறக்கம் தருவதாகத்தான் இருந்தது. பின்னெப்படி எந்தக் கணத்தில் அவளது பேச்சு வீடெங்கும் இறைந்து கிடக்கும் சொற்களாக எனக்கு மாறியது என்பது தெரியவில்லை. ஒருவேளை வாழ்க்கையில் எல்லா ஆண்களும் இப்படிப்பட்ட ஒரு இடத்தை அடைந்தே தீரவேண்டுமோ. அவள் சொல்லாத வார்த்தைகளுக்குக் காத்துக்கிடந்த காலங்கள் இனி ஒருவேளை வராமல் போகலாம். பெண் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவளது ஒரு பேச்சுக்கு மணிக்கணக்கில் காத்துக்கிடந்த காலங்கள், எழுதித் தள்ளிய கடிதங்கள், வாய் மூடாமல் அவளைப் பேசச் சொல்லிக் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் ஒரு கனவைப் போலத் தெரிந்தன. மழை பெய்யாதா என ஏங்கிய மண் வெள்ளத்து நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் போல ஆகிப் போனது. அவள் என் மௌனத்தைப் பற்றி என்ன நினைப்பாள் என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன். அவளுக்கும் சேர்த்தே நாந்தான் யோசிக்கவேண்டும். ஒருமுறை கூட அவளை என் மௌனம் படுத்துகிறது என்று சொன்னதில்லை. இன்னும் ஒரு வகையில் சொல்லப்போனால் என் அதீத மௌனத்தையே அவள் விரும்பியிருக்கக்கூடும். பொதுவாகவே அவள் பேசும் போது இடையில் ஏற்படும் தடங்கல்களை விரும்புவதில்லை. ஒருமுறை கோபமாக அவள் அம்மாவிடம், "மொதல்ல நான் சொல்றத கேளு, எதிராளியைப் பேசவிடாம நொய் நொய்னு பேசாத" என்றாள், நான் இங்கே என் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே உட்காருவதை அறியாமல்.

அன்று அவன் தம்பி வந்திருந்தான். நான் வழக்கம்போல ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, காதுகளை அவர்கள் பேசுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவன் தம்பி புதிய விஷயங்களாகப் பேசினான். எப்படி அவன் அவனது அக்காவிற்காக பேச்சுக்களை சுமந்து கொண்டு வருவான் என்பது ஒரு பெரிய புதிர். அவன் காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணைப் பற்றிய நீண்ட சம்பாஷணைகளை நிகழ்த்தினான். அவள் பேசுவதே இல்லை என்று அரற்றினான். அவன் சொல்வதையெல்லாம் தொகுத்திருந்தால் சிறந்த கையறுநிலை காவியம் ஒன்று கிடைத்திருக்கும். சுசி ரொம்ப இதமாக, "எல்லா ஆம்பிளைங்களும் ஆரம்பத்துல இப்படித்தாண்டா பேசுவீங்க, கொழந்தை பெத்து அதுங்க பேச ஆரம்பிக்கும்போது பொண்டாட்டி வாயத் திறந்தாலே உங்களுக்கெல்லாம் எரியும்" என்றாள். (நல்லவேளை, என் மகன் இன்னும் பிறக்கவில்லை. தப்பித்தான்.) அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்றும் தோன்றியது; இப்படி ஜாடை மாடையாகப் பேசும் அவசியம் இல்லை என்றும் தோன்றியது. அவள் இப்படிப் பேசுவது எனக்கு எரிச்சல் தரும் என்று தெரிந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பாள் என்று நான் நம்பவில்லை. தம்பி பல புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டு, பல தடவை சொல்லி ஓய்ந்த அவர்களது குட்டிக்கால கதைகளை ஆரம்பித்தான். அதுவரை கையில் வைத்திருந்த மிக்ஸியின் ஜாரை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் வசதியாக உட்கார்ந்துவிட்டாள். இன்று சமையல் ஆனாலும் அதில் உப்போ புளியோ நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். நல்ல தம்பி, நல்ல அக்கா.

குட்டிக்கால கதைகள் என்பதைப் பார்த்தவுடன் ஒரு கனவு தேவதையைப் போல சுசியின் குட்டிக்காலங்கள் பல்வேறு கதைகளால் ஆனது என்றெல்லாம் நினைக்கத் தேவையே இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் புரிந்துகொண்டிருந்தேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு கதைகள். அதில் இரண்டு அவள் அப்பா சம்பந்தப்பட்டது. மற்றொன்று எல்லா குடும்ப உறுப்பினர்களும், அவர்கள் என்றோ வளர்த்து பாம்பு கடித்துச் செத்துப் போன நாய் உட்பட, இடம் பெறும் ஈஸ்மெண்ட் கலர் சோகப் படம் ஒன்று, அவள் முதன்முதலாக சென்னை வந்தபோது அவளது சித்தப்பா குடை ராட்டினத்தில் ஏற்றிச் சுற்றிக் காண்பித்த சென்னையைப் பற்றிய சித்திரம் ஒன்று. இவ்வளவுதான். இவ்வளவேதான். இதை எத்தனை தடவை பேசிக்கொள்வார்கள்? தேர்ந்த கலைஞனைப் போல ஒரே கதையை பலவாறாகச் சொல்லும் வித்தையும் இல்லை. முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதையே சொல்லுவாள். அடி பிசகாமல் அப்படியே சொல்லுவாள். நான் சிறுவயதில் படித்த மனப்பாடப் பாடலைக் கூட இப்படி என்னால் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

அவளது அப்பா கதையில் அவள் சொல்லும் வாக்கியம்: ஞானிக்கேத்த புத்தி தீனிக்கேத்த லத்தி. இந்தப் பழமொழியைப் பற்றிப் பேசினால் அவள் இந்தக் கதையைத்தான் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். அந்தக் கதையை ஆதி முதல் அந்தம் வரை வரி பிசகாமல் என்னால் இப்போது சொல்லமுடியும். அத்தனை முறை நேரடியாகவும் காதுகளைக் கடன் கொடுத்தும் கேட்டிருக்கிறேன். ஆனால் அக்கதை இப்போது தேவையில்லை. அவள் முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதே மாதிரி இப்போதும் சொன்னாள். இது 147வது முறையாக இருக்கலாம். முதல் தடவை கேட்டதை விட அதிகம் சிரித்தான் 'நல்ல தம்பி.'

குடும்ப உறுப்பினர்கள் கதையில் அக்காவைப் பற்றி: "அழுதுகிட்டே சொல்றா அவ 'சூடா இட்லி போடும்மா'ன்னுட்டு. அழறோம்கிற ரோஷம் கூட இல்லாம, அதுவும் எத்தனாவது இட்லி? 8வது இட்லி!" ஆறாவது அறிவைப் போல, ஏழாவது உலகத்தைப் போல, யாராவது எட்டாவது என்றால் நான் இட்லி என்பேன். எத்தனை முறை கதை சொல்லியிருக்கிறாள்? ஒரு தடவை கூடவா பிசகாது? மறக்காது? ஆறாவதோ ஏழாவதோ இட்லி என்றுகூட சந்தேகத்தின் பலனைத் தரமாட்டாள். சொற்களை சரியாக வீசுவதில் அவ்வளவு கச்சிதம். 'நல்ல தம்பி' இந்தக் கதையைக் குறைந்தது 200 தடவை கேட்டிருப்பான். 201 வது தடவை கேட்கும்போது அவனுக்கு சந்தேகம் வருகிறது, "அக்கா சட்னி கேப்பாளா, மிளகாய்ப்பொடியா?"

'நல்ல தம்பி' மடையன் அத்தனைக்கும் தலையாட்டினான். அவனும் சில புதிய சொற்களையும் அவளோடு சேர்ந்து நைந்து பிய்ந்து போன பழைய சொற்களையும் சொல்லிவிட்டுப் போனான். தமிழின் தொடக்கத்திலிருந்து கணக்கு கூட்டிப் பார்த்தாலும் அக்காவும் தம்பியும் பயன்படுத்திய சொற்களை அவர்களைப் போல் யாரும் அவ்வளவு பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அவள் தம்பியை வெளியனுப்ப போனபோது, தரையில் சிதறிக் கிடந்த சொற்களைக் கூட்டிப் பெருக்கி குப்பைக் கூடையில் போடலாமா என்று கூட யோசித்தேன்.

ஒவ்வொரு நேரத்தில் யார் பேசினாலும் எனக்கு வெறுப்பு வந்தது. ஏன் இப்படி சொற்களை உதிர்த்துச் செல்கிறார்கள் என்று தோன்றியது. கடலலையைப் பார்த்தால்கூட வெறுப்புத் தோன்றியது. ஏன் இத்தனை ஆர்பாட்டம், சத்தம்? வானத்தில் தூரத்தில் பறக்கும் பறவைகளை ரசிக்க முடிந்தது. வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்து காக்காவைக் கல்லெடுத்து விரட்டினேன். அதை சுசி பார்த்துவிட்டாள். அன்று வீடெங்கும் காக்காய், சனி பகவான் என்பதை ஒட்டிய சொற்கள் சிதறிக் கிடந்தன. எல்லா சொற்களையும் கூட்டிப் பெருக்கி, சனி பகவான் சொல்லை மட்டும் கையில் எடுத்து - பக்திதான் - தூர எறிந்தேன்.

இன்னொரு நாள் சொற்கள் ஏதும் புதியதாக விழாத ஒரு நேரத்தில் 'நல்ல தம்பி' வந்தான். அவன் பீச்சுக்கு அழைத்தான். வரும்போது தனியாக வரமுடியாது என்பதற்காக என்னையும் வரவேண்டும் என்று சொல்லி சுசி அழைத்துப் போனாள்.

மணலில் பாவும்போது வீட்டில் இறைந்து கிடக்கும் சொற்களில் நடந்து நடந்து சலித்துப் போன கால் கொஞ்சம் உற்சாகம் கொண்டது. கொஞ்சம் வேகமாக நடந்தேன். மணலில் கால் புதைந்து வெளியேறி, மணலின் வெம்மையும் நுண்மையும் என்னைக் கொஞ்சம் மீட்டெடுத்தன. என்னை ஒட்டிக்கொண்டு கிடந்த சுசியின் சொற்கள் அனைத்தும் கடலில் கரைந்தொழியட்டும் என்கிற எண்ணத்தில் கடலில் குளித்தேன். தூரத்தில் 'நல்ல தம்பி' கூட்டிக்கொண்டு வந்த பெண்ணிடம் என்னவோ கொஞ்சிக்கொண்டிருந்தான். வேறென்ன இருக்கும்? பேசச் சொல்லிக் கேட்பான். சொன்னால் அவனுக்கு விளங்காது. பட்டால்தான் தெரியும். அந்தப் பெண் முகத்தை நாணிக் கோணி என்னவோ சொல்லியிருக்கவேண்டும். உடனே சுசியைப் பார்த்து வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பதைப் போல என்னவோ சைகை செய்தான். அங்கிருந்து ஓடி வந்து அக்காவிடம் என்னவோ சொன்னான். அவள் சிரித்துக்கொண்டே என்னவோ சொன்னாள். அவன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஓடினான். நான் சுசியிடம் வந்தேன்.

"என்ன சொன்னான் நல்ல தம்பி?"

அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். அப்படி அவள் பார்த்த பார்வை எனக்குக் கொஞ்சம் பயம் தருவதாகவும் கொஞ்சம் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது.

"உன்னைத்தான் கேக்கிறேன். என்ன சொன்னான் உன் தம்பி."

'நல்ல தம்பி' என்பதைக் கவனிக்கவில்லை 'நல்ல அக்கா'. அவள் என்னை லட்சியம் செய்யாதவாறு கடலை நோக்கினாள். அன்றுதான் முதன்முதலாக அலையைப் பார்க்கும் குழந்தையிடம் கூட அவ்வளவு ஆர்வம் இருக்காது. அப்படிப் பார்த்தாள் கடலை. அவளிடமிருந்து சொற்கள் எங்கு போயின? ஒருவேளை திருந்திட்டாளோ? கொஞ்சம் கலவரமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கை வந்தது, அப்படியெல்லாம் சீக்கிரம் என்னை விட்டுவிடமாட்டாளென.

வீட்டுக்கு வந்தோம். வரும் வழியெங்கும் அவளது அமைதி என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நான் என் டைரியில் அவளைப் பற்றிய குறிப்புகளை அவள் படித்து, அவளது சொற்களின் மீது எனக்கு இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டு, என்னைத் தெரிந்து கொண்டு... வாய்ப்பே இல்லை. நான் டைரி எழுதுவதில்லை. எழுதினாலும் அதிலிருக்கும் சொற்கள் எல்லாமே எப்படியும் சுசியின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். பெருக்கித் தூர எரிவதே சிறந்த செயல் என்று நான் நினைத்துக்கொண்ட நாள்களிலிருந்து அவளது சொற்கள் எதுவும் என்னிடம் தங்குவதில்லை. அவை வந்த வேகத்தில் என் பார்வையிலேயே முனை மழுங்கி என் மீது மோதி கீழே விழும், நான் அவற்றைப் பொறுக்கிக் குப்பைக் கூடையில் கொட்டுவேன். இப்படி நான் நினைத்துக்கொண்டுவிட்ட நாள்களிலிருந்து சுசியை என்னால் பார்க்கவாவது முடிந்தது. என்ன ஆயிற்று சுசிக்கு? இந்தக் கேள்விக்கு மட்டும் ஏனிந்த குடலைப் புரட்டும் அமைதி.

மீண்டும் ஒரு தடவை மெல்ல கேட்டேன். "என்ன சொன்னான் உன் தம்பி?"

அவள் மெல்ல இருமிக்கொண்டாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. எங்கே போயின அவள் தயாராய் வைத்திருக்கும் வார்த்தைகள்?

மறுநாள் அவள் தம்பி என்னவோ ·போன் செய்தான். அவள் வள வளவென்று பேசினாள். ஒன்றும் புதியதாக இல்லை. அதே சொற்கள்தான். வெறும் சொற்கள். ஒரு கோணியை எடுத்துக்கொண்டு போய் அவள் வாயருகே ஏந்திக்கொண்டு நிற்கலாமா? அவன் தம்பி சொன்னதையும் சேர்த்துச் சொன்னாள். அவனது சொற்களும் சேர்ந்து அறையில் விழுந்தன. அடுத்து விழுந்த சொல் புதியதாக இருந்தது. அந்தப் பெண் பேசினாள். எனக்கு கொஞ்சம் ஆர்வம் வந்தது. சுசி சிரித்து சிரித்துப் பேசினாள். ·போனை ஒரு கையால் மூடிக்கொண்டு என்னிடம், "இன்னைக்கும் பீச் போகலாமான்னு அந்தப் பொண்ணு கேக்குது" என்றாள். நேற்று முத்தம் கொடுக்க மறந்திருக்கலாம் 'நல்ல தம்பி.'

"நேத்து உன் தம்பி என்ன சொன்னான், அதச் சொல்லு" என்றேன்.

"அத அப்புறம் சொல்றேன்."

"மொதல்ல சொல்லு."

அவள் என்னை முறைத்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் போகலாம் என்று சொல்லி ·போனை வைத்தாள். நான் வரமாட்டேன் என்றேன்.

"நேத்து அவன் ஓடிவந்து, 'அக்கா, பொண்ணு நம்ம அத்தான் மாதிரி முசுடு இல்லை, அப்பப்ப பேசுறா, சிரிக்கிறா'ன்னான். போதுமா" என்றாள். பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் சமையலறைக்குள் சென்றாள். எனக்கு தலை சுற்றியது. நான் இவர்களை பைத்தியம் என்று நினைத்துக்கொண்டிருக்க, பைத்தியங்கள் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு பட்டம் கொடுக்கின்றன. இத்தனை நாள் நானில்லாதபோது இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருப்பார்களோ? அவள் அங்கு சென்றதும் கீழே கிடந்த சொற்களைப் பார்த்தேன். பைத்தியம் என்கிற வார்த்தையும் முசுடு என்கிற வார்த்தையும் தனியே கிடந்தன. அவற்றை காலால் தள்ளியபோது அவை என் காலிலேயே ஒட்டிக்கொண்டன. எத்தனை காலை உதறியும் அவை காலிலிருந்து போகவே இல்லை. எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது.

பீச்சுக்கு போகத் தயாரானேன். பஸ்ஸில் போகும்போது கேட்டாள், "சந்தோஷமா இருக்காங்கள்ல" என்றாள். உம் கொட்டினேன். "அப்படியே இருக்கணும்" என்றாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. "அதுக்கு ரெண்டு பேரும் பேசிக்கணும்" என்றாள். பஸ்ஸின் கண்ணாடியின் வழியே உலகம் என்னை வெறித்து நோக்குவது போல இருந்தது. நான் உம் கொட்டுவதற்கு முன்பு அவள் சொன்ன சொற்களைத் தேடினேன்.

"ஏன் அடிக்கடி எதையோ தேடறீங்க?" என்றாள்.

இங்க சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தான் இருந்தான் என்று சொல்வார்கள் என் நண்பர்கள். நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

"நாம மொதல் மொதல்ல பீச்சுக்கு போனோமே ஞாபகம் இருக்கா?"

"ம்."

"எவ்ளோ சந்தோஷம், இல்ல?"

"ம்."

"ஏன் இப்படி எல்லாத்துக்கும் விட்டேத்தியா பதில் சொல்றீங்க?"

"இல்லியே..."

அவ்வளவுதான். அப்போது ஆரம்பித்ததுதான், பீச்சிலிருந்து வீட்டிற்கு வரும்வரை ஓயவில்லை. தம்பியிடம் அழுது புலம்பி 'சரியான முசுடுகிட்ட மாட்டிக்கிட்டேண்டா' என்று சொல்லி என்னைத் திட்டித் தீர்த்தாள். அன்று மட்டும் அவள் சிதறிய வார்த்தைகளின் எண்ணிக்கை எப்படியும் பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கும். 'நல்ல தம்பி'யோ ஏதோ ஒரு கிறக்கத்திலேயே இருந்தான். சுசி சொன்னதை சிரத்தையாகக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் போன பின்பு சுசி பொதுவாக, "இவன் பொண்டாட்டியும் பொலம்பிக்கிட்டுத்தான் அலயப்போறா" என்று சொன்னது காதில் விழுந்தது.

6 comments:

பிச்சைப்பாத்திரம் said...

கணவன், மனைவி உறவைப் பற்றின அக, புறச்சிக்கல்களைப் பற்றி எத்தனை சிறுகதைகள் எழுதப்பட்டாலும் நமக்கு இன்னும் அலுக்காததின் காரணம், அவை நம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு பகுதியாக இருப்பதினால்தான் என்று படுகிறது.

பிரசன்னா,

இந்தக் கதை சிறப்பாக இருக்கிறது என்றுதான் சொல்வேன். ஆண்கள் எப்போதுமே சுயநலவாதிகள்தான். பெண்களின் பார்வையிலிருந்து ஒரு விஷயத்தை பெருமளவில் அணுகுவதில்லை. தன்னுடைய நியாயமின்மையை உணர்ந்தாலும், அவற்றை உடனே வெளியே ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதில் விருப்பமிருந்தாலும் எங்கே தாம் தோல்வியடைந்து விடுவோமோ என்கிற காரணமில்லாத பயத்தில் வீம்பு பிடிப்பவர்கள். இந்த தொனியை கதை நன்றாக வெளிப்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது.

சில இடங்களில் உயர்ந்த தளத்தில் இயங்கும் வார்த்தைகள் அடுத்த வரியிலேயே தடாலென அதலபாதாளத்திற்கு விழுந்து விடும் சமச்சீரின்மையை சற்றே தவிர்த்தால் நன்றாயிருக்கும் என்றும் தோன்றுகிறது.

"நான்" என்று எழுதாமல் third person-ல் "அவன்" என்று எழுதப்பட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது.

கானகம் said...

பிரசன்னா..

ஒரு நல்ல கதை என்று சொல்வதைக்காட்டிலும் "ஒரு கனவனின் வாழ்க்கை அனுபவங்கள்" என தலைப்பிட்டுருக்கலாமோ எனத் தோன்றும் அளவு நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.

நல்ல உவமானங்கள்... எடுத்துக்காட்டாக..

//மழை பெய்யாதா என ஏங்கிய மண் வெள்ளத்து நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் போல ஆகிப் போனது...//


வார்த்தைகளை பொறுக்குவது, வீடெங்கும் வார்த்தைகளாய் நிறைந்திருப்பதான கற்பனை எல்லாம் நன்று.

இன்னும் நல்ல விதமாய் எழுதி இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

தொடர்ந்து எழுதுங்கள் உற்சாகமாய்... வாழ்த்துக்களுடன்..

ஜெயக்குமார்

பிரகாஷ் said...

நடுத்தர வர்க்கக் கணவன் மனைவிக்கு இடையேயான உளவியலை நெருக்கமாய் நின்று உணரும் அனுபவத்தை தருகிறது இந்த சிறுகதை.
நிறைய குடும்பங்களில் நிகழ்வது போல முதலில் கணவன் சரியாக யோசித்து முடிவெடுப்பதைப் போல தோன்றினாலும்,
முடிவில் நிலைநிறுத்தப் படுவதென்னவோ மனைவியின் நிலைப்பாடுதான்-
"இவன் பொண்டாட்டியும் பொலம்பிக்கிட்டுத்தான் அலயப்போறா"

Anonymous said...

ஏற்கனவே அலுக்க அலுக்க எழுதப்பட்ட விஷயத்தை வித்தியாசமாக கொடுத்து இருக்கிறீர்கள். கொஞ்சம் tiring நடை என்றாலும் worth all the trouble for the reader.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப லைட் வாசகன் நான். கதையின் அத்தனை வார்த்தைகளையும் கூட்டி பெருக்கி உட்கொண்டு ஜீரணிக்க பொறுமையில்லை.

வார்த்தைகளை பருப்பொருட்களாய் உருவகித்திருந்தது சிறப்பு. ஆனால் இத்தனை பெரிய கதை முழுவதும் ஒரு சிறிய ஆதாரத்தை சுழல்வது கொஞ்சம் அயற்சியைத் தருகிறது..

இலக்கியம்ணா இப்டித்தானா? :)

ஹரன்பிரசன்னா said...

சிறில் உங்கள் கருத்துக்கு நன்றி. இலக்கியம் அயற்சியைத் தருவது அல்ல. என் கதையை வைத்து இலக்கியத்தையே வரையறுக்கவேண்டாம். என் கதை நிஜமாகவே அயற்சி தருவதாக இருந்திருக்கலாம். வேறு நல்ல இலக்கிய கதைகளைப் படித்துப் பார்க்கவும்.