Sunday, November 25, 2007

மஜித் மஜிதியின் பரன் - இரானியத் திரைப்படம் (Majid Majidi's Baran - Iranian Movie)

பரன் (இரானியத் திரைப்படம்)

கதை: (கதையை விரும்பாதவர்கள் இதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து வாசிக்கவும்!)

மஜித் மஜிதி (Majid Majidi) 2001ல் இயக்கி வெளிவந்த திரைப்படம். உலகப் புகழ் பெற்ற Children of Heaven திரைப்படத்தைப் போலவே மிக எளிமையான கதையை, செய்நேர்த்தியின் மூலம் உன்னதப் படைப்பாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். சிறப்பான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு, ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எடுத்துக்கொள்ளும் உழைப்பு இவற்றின் வழியாக பரன் ஒரு சிறந்த படமாகிறது.

பதின்ம வயதில் இருக்கும் லதீ·ப் (Lateef) ஒரு இரானியன். டெஹ்ராடூனில் கட்டுமானத் தொழில் நடக்கும் இடத்தில், அங்கிருக்கும் தொழிளாலர்களுக்கு தேநீரும் உணவும் செய்து பரிமாறும் வேலையைப் பார்க்கிறான். வயதிற்கேற்ப விளையாட்டுத்தனத்தோடும் துடுக்கோடும் திரியும் அவன் வாழ்க்கையில் ஒரு பெண் ஏற்படுத்தும் மாறுதலும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும் கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் போர் நடப்பதால், அங்கிருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இரான் வரும் அகதிகள், சொற்ப சம்பளத்தில், சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள். அப்படி வேலை பார்க்கும் ஒரு ஆப்கானிஸ்தானியான நஜ·ப் (Najaf) இரண்டாவது மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறான். அங்கு வரும் லதீ·ப் "ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதிச்சார்" எனக் கேட்கிறான். படம் ஆரம்பித்த இரண்டு, மூன்று காட்சிகளில் லதீ·பின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிடுகிறது. அவன் இப்படி கேட்கும் வசனமும் அதற்கு இசைவாக இருக்கிறது.

மறுநாளிலிருந்து சொல்தான் (Soltan) என்னும் மனிதனுடன் நஜ·பின் 14 வயது மகன் ரஹ்மத்தும் வேலைக்கு வருகிறான். மேஸ்திரி மெமர் (Memar) முதலில் சிறுவனை வேலைக்குச் சேர்க்க மறுக்கிறான். சொல்தானின் வற்புறுத்தலுக்கு இணங்க, நஜ·பின் வறுமையை மனதில் கொண்டு, சம்மதிக்கிறான். 14 வயது சிறுவனால் சிறப்பாக வேலை செய்யமுடியவில்லை. எல்லாரும் அவனைத் திட்டுகிறார்கள். நிலைமை கட்டுக்கு மீறும் சமயத்தில், அவன் வயதை கருத்தில் கொண்டு, மெமர் சிறுவனுக்கு தேநீர் செய்யும் வேலையையும் லதீ·ப்க்கு கடினமான வேலையையும் மாற்றித் தந்துவிடுகிறான். இதைத் தொடர்ந்து கடும் கோபமடையும் லதீ·ப் சிறுவனுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறான். ஆனால் சிறுவன் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்து, அனைத்து தொழிலாளர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிடுகிறான். இது மேலும் எரிச்சலைத் தருகிறது லதீ·புக்கு. திடீரென ஒருநாள் தற்செயலாக சமையலறையில் பார்க்கும்போது, அந்தச் சிறுவன் ஒரு சிறுவனல்ல என்றும், அது ஒரு பெண் என்றும் அறிந்துகொள்கிறான் லதீ·ப்.
அவனுள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவளுக்கு ஒரு கார்டியன் போலச் செயல்படுகிறான். சோதனைக்கு வரும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். அதன் பின்பு அரசாங்க அதிகாரிகள் பாஸ்போர்ட் இல்லாத ஆ·ப்கானிஸ்தானியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என்று மெமரைக் கடுமையாக எச்சரிக்க, அந்தப் பெண்ணும் சொல்தானும் வேலை வரமுடியாமல் போகிறது.

ரஹ்மத்தைப் பார்க்காமல் லதீ·பின் உலகம் இருள்கிறது. அவளைத் தேடிக் கிராமத்துக்குச் செல்வது என்று முடிவெடுத்து, மெமரிம் பொய் சொல்லிவிட்டு அவளைத் தேடிப் போகிறான். கிராமத்தில் ரஹ்மத் லதீ·பைக் கண்டாலும், அவன் கண்ணில் படமால் மறைந்துகொள்கிறாள். எதேச்சையாக சொல்தானைச் சந்திக்கும் லதீ·ப், ரஹ்மத் குடும்பத்தின் வறுமை நிலையை அறிகிறான். அதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் மெமரிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதை சொல்தானிடம் தருகிறான். அப்பணத்தை சொல்தான் நஜ·ப்க்குத் தரவேண்டும் என்றும் அது தான் தந்ததாக நஜ·பிற்குத் தெரியவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறான். மறுநாள் அவரை சந்திப்பகாதக் கூறிச் செல்கிறான். மறுநாள் சொல்தானுக்குப் பதில் அங்கு நஜ·ப் வருகிறான். சொல்தான் பணத்தைத் தனக்குத் தர வந்ததாகவும் தன்னைவிட பணம் சொல்தானுக்குத்தான் தேவை என்பதால் சொல்தான் அப்பணத்துடன் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாகவும் கூறுகிறான் நஜ·ப். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறான் லதீ·ப். அப்போது ரஹ்மத்தின் உண்மையான பெயர் பரன் என்றும் அறிந்துகொள்கிறான்.

வீட்டின் வறுமை தாளாமல் பரன் ஆறுகளில் கல் பொறுக்கும் வேலை செய்வதைப் பார்த்து மிகவும் வருத்தமடைகிறான் லதீ·ப்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் போரில் நஜ·பின் அண்ணன் இறந்துவிடுவதால் நஜ·ப் உடனடியாக ஆப்கானிஸ்தான் செல்லவேண்டியிருக்கிறது. நஜ·பைப் பார்க்கவரும் லதீ·ப் இதை அறிந்துகொண்டு, தன் பாஸ்போர்ட்டை விற்றுப் பணம் கொண்டு வந்து நஜ·பிற்குத் தருகிறான். அந்தப் பணத்தை மெமர் தந்ததாகவும் அது நஜ·பிற்குச் சேரவேண்டிய பணம்தான் என்றும் பொய் சொல்லுகிறான். அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தன் மகள் பரனுடன் ஆப்கானிஸ்தான் செல்கிறான். அவள் விட்டுச் செல்லும் கால் சுவட்டை அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போது மழை கால்சுவட்டை நீரால் நிறைக்கிறது.

பதின்ம வயதில் லதீ·பிற்கு ஏற்படும் உணர்வுகள் வெகு அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. ரஹ்மத்தாக வேலை செய்யும் ஆண் நிஜத்தில் ஒரு பெண் என அறிகிற நேரத்தில் அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. பரனாக வரும் கதாபாத்திரம் ஒரு வசனம் கூட இப்படத்தில் பேசுவதில்லை. கடைசியில் ஆப்கானிஸ்தான் செல்லும்போது, ஒரேயொரு முறை லதீ·பைப் பார்த்து புன்னகைக்கிறாள். அவளை நினைத்தே லதீ·ப் இவ்வளவும் செய்கிறான் என்பதை அவள் புரிந்துகொண்டிருக்கிறாள் என்பதை அக்காட்சி காட்டுகிறது.

அழகான ஒரு காதல் கதைக்கு இடையில் ஆப்கானிஸ்தான் அகதிகள் படும் கஷ்டமும் சொல்லப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்தவுடன், அனைத்து ஆப்கானிஸ்தான் தொழிலாளர்களும் அவர்களிடத்தில் மாட்டாமல் இருக்க மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். மெமர் ஒரு காட்சியில், இரானியர்களை வேலைக்கு வைப்பதை விட ஆப்கானிஸ்தான் அகதிகளை வேலைக்கு வைப்பது நல்லது என்கிறான். காரணம், ஆப்கானிஸ்தான்காரர்கள் மாடு போல் உழைப்பவர்கள்; அவர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்தால் போதுமானது.

குறிப்பு: baran என்பதன் சரியான உச்சரிப்பு தெரியவில்லை. பாரோன் என்பதாக இருக்கலாம். இப்போதைக்கு பரன் என்றே எழுதியிருக்கிறேன்.

லதீ·ப் இரானியன் என்பதால் அவன் பாஸ்போர்ட் நல்ல விலைக்குப் போகிறது. அதை ஏதேனும் ஒரு ஆப்கானிஸ்தானியின் படம் ஒட்டி, அவனை இரானியாக உலவ விட பயன்படுத்திக்கொள்ளமுடியும். உண்மையில் இது லதீ·பின் எதிர்காலத்தையே தகர்த்துவிடக்கூடியது. அதுமட்டுமில்லாமல், லதீஃப் அத்தனை காலம் உழைத்த பணம் முழுவதையும் நஜ·பிற்குக் கொடுக்க முடிவெடுக்கிறான். விடாமல் துரத்தும் அந்தப் பெண்ணின் நினைவே அதன் காரணம். அவள் நினைவாக அவளது ஹேர் பின்னையும் அதில் சிக்கியிருக்கும் அவளது முடி ஒன்றையும் கடைசி வரைக்கும் வைத்திருக்கிறான். அவள் அவனை விட்டு விடைபெறும் காட்சிக்கு முன்னதாக அதுவும் அவனுக்குத் தெரியாமலேயே அவனிடமிருந்து விடைபெற்றுவிடுகிறது.

Children of Heaven வருவது போலவே இப்படத்திலும் ஒரு ஓட்டக் காட்சி இடம்பெறுகிறது. அக்காட்சி படம் பிடிக்கப்பட்ட விதம் அப்படியே Children of Heavenல் கடைசி காட்சியில் அலி ஓடுவது போலவே இருக்கிறது. பின்னணி இசை எதுவில்லாமல், சிறப்பான ஒளிப்பதிவில், ஒருவரை ஒரு முந்தும் காட்சி, அதே போல வேக வேகமாக இளைக்கும் மூச்சுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தன் சிறந்த படத்தை நினைவுபடுத்தும் விதமாக மஜித் மஜிதி இக்காட்சியை வேண்டுமென்றே வைத்திருக்கலாம்.
அதேபோல Children of Heaven படத்தில் வருவதுபோல அழகிய சிவப்பு மீன்கள் உலவும் குளமும் இப்படத்தில் வருகிறது. இரானின் வீதிகளில் இதுபோன்ற சிறிய நீர் தேக்கங்கள் இருக்குமோ என்னவோ.

Children of Heaven படம் போலவே, இப்படத்தில் வரும் ஒவ்வொரு சட்டமும் (Frame) புகைப்படத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் இரானின் பனிப்பொழிவுக் காலத்தில் கதை நடைபெறுகிறது. வீதியெங்கும் அப்பிக் கிடக்கும் வெண்பனியும், மழைக்காலத்தில் தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும், ஓடும் வாய்க்காலுமென ஒரு ஒளிப்பதிவு இயக்குநர் அதிகம் விரும்பும் களமாக இப்படத்தின் களன் அமைந்துவிட்டது. அதை மிக அழகாக, இதைவிட சிறப்பாகச் செய்யமுடியாது என்ற அளவிற்கு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் Mohammad Davudi. ஏகப்பட்ட காட்சிகள் கிரேன் ஷாட்டுகள் மூலம் எடுக்கப்பட்டிருப்பதால், நடிகர்களைத் தாண்டி அவர்களைச் சுற்றியிருக்கும் வண்ணமயமான வெளியும் படத்தில் பிரிக்கமுடியாத ஒன்றாக கலந்துவிடுகிறது. கடைசி காட்சியில் பரன் விட்டுப் போன காலடிச் சுவட்டை மழை நிறைக்கிறது. இதுவும் ஒரு புகைப்படத்தன்மை உள்ள காட்சியே.

மஜித் மஜிதியின் இரண்டு திரைப்படங்களிலும் (Children of Heaven, Baran) முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் நல்லவர்களாகவே வருகிறார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. Children of Heaven திரைப்படத்தில் ஒரு காட்சியில் அலி தான் குடிக்கும் க·பாவிற்கு சர்க்கரை கேட்பான். அலியின் தங்கை வீட்டில் கிடக்கும் உடைக்கப்படாத சர்க்கரையை எடுத்துத் தரப்போவாள். அப்போது அவர்களின் தந்தை சொல்லுவார், "மசூதிலேர்ந்து சர்க்கரை துண்டுகளை உடைக்கச் சொல்லி கொடுத்திருக்காங்க. அது மசூதிக்குச் சொந்தமானது. உனக்கு வேண்டியது வீட்டுல அம்மா கிட்ட கேளு" என்று. இதே போன்ற நேர்மை இத்திரைப்படத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் செல்லும் சொல்தான் ஒரு சீட்டில் இப்படி எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறான். "ஆண்டவன் ஆணையாக இப்பணத்தைத் திரும்பத் தருவேன்." மஜித் மஜிதியின் மனிதர்கள் இயல்பில் கள்ளமில்லாமலேயே படைக்கப்படுகிறார்கள். அவ்வளவு பணத்தை பார்த்த நஜ·ப், தான் கால் நடக்கமுடியாத அந்த நேரத்திலும் அந்தப் பணம் தனக்குச் சொந்தமானதில்லை என நினைப்பதால், அப்பணத்தை சொல்தானையே வைத்துக்கொள்ளச் சொல்லுகிறான். மெமரும் இப்படியே. (Children of Heavenல் அலியின் தந்தையாக வரும் நடிகரே (Mohammad Amir Naji) இப்படத்தில் மெமராக நடித்திருக்கிறார்.) அவன் தன் கையில் பணம் வைத்துக்கொண்டு யாருக்கும் பணம் இல்லை என்று சொல்லுவதில்லை. இப்படியான மனிதர்கள். இப்படி அழகழகான மனிதர்களுடன், அழகழகான காட்சிகளுடன், கவிதை போல செல்கிறது திரைப்படம்.

இரண்டு அடிப்படை விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. ஒன்று, ஆண் வேஷமிட்டு வரும் பெண்ணை யாரும் கண்டறிவதில்லை. ஆனால் நாம் முதல் காட்சியிலேயே அதைக் கண்டுபிடித்துவிடுகிறோம். இரண்டாவது, ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு பெண்ணிற்காக தன் எதிர்காலத்தையே ஏன் பணயம் வைக்கிறான் லதீ·ப்; பதின்ம வயதுக்கோளாறு இத்தனை தூரம் கொண்டு செல்லுமா என்பது. இது போன்ற அடிப்படை லாஜிக்குகள் இடித்தாலும் படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட் படத்தை மிகச் சிறப்பான ஒன்றாக்குகிறது.

பரன் என்றால் மழை என்று அர்த்தமாம். (ஆதாரம்: விக்கி பீடியா.) மழை போல ஒரு பதின்ம வயது வாலிபனின் மனதில் பெய்துவிட்டு மறைவதால் இப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் இயக்குநர்.

மேலதிக விவரங்களுக்கு: http://www.imdb.com/title/tt0233841/

10 comments:

கானகம் said...

நல்ல விமர்சனம் பிரசன்னா..

உங்கள் விமர்சனங்கள் ஒரு படம் பார்த்த திருப்தியை கொடுத்து விடுகின்றன. தொடருங்கள்.

ஜெயக்குமார்

PKS said...

Children of Heaven came in 1997 (not 2001). I remember it because it was nominiated for Oscar that year. - PK Sivakumar

ஹரன்பிரசன்னா said...

PKS, Yes, I have also told the same.

vel said...

Very good writing about the movie. keep it up.
Can I know how do you get hold of the copies of these films.

ஹரன்பிரசன்னா said...

Vel, Thanks. The movies are available in chennai barma bazar.

Anonymous said...

For info : I remember another iranian film "Bashu" I appreciated very much. May be you already commented it here.
Marago

ஹரன்பிரசன்னா said...

I have not seen Bashu. I just searched for movie details. When I read the story, I found the story of Malayalam movie 'kaazhcha' by blessy is matching with this story!!! http://www.imdb.com/title/tt0096894/plotsummary. I will try to see this movie. Thanks.

Balaji Chitra Ganesan said...

ஹரன்,

உங்கள் விமர்சனங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன! கில்லியில் தாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை சுட்டியிருந்தார்கள். அதன் மூலமாக இங்கு வந்தேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் விமர்சனப் பதிவுகளை vimarsanam.wordpress.com இல் crosspost செய்ய வாருங்கள்!

ஹரன்பிரசன்னா said...

பாலாஜி, உங்கள் கருத்துக்கு நன்றி.

எனது வலைப்பதிவில் ஏற்றுவதே பெரிய ஆயாசமான வேலையாக இருக்கிறது. இதில் என்னால் க்ராஸ் போஸ்ட் போடுவதெல்லாம் சாத்தியமா எனத் தெரியவில்லை. ஸாரி.

உங்கள் அழைப்பிற்கு மிக மிக நன்றி.

M.Rishan Shareef said...

அருமையான விமர்சனம்.

"ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதிச்சார்" லத்தீபின் இந்தக் கேள்வியில் 'ஏன் பாஸ்போர்ட் இல்லாமல் இங்கு பாடுபடவந்தீர்கள்?" எனும் மறைமுகக்கேள்வியும் இருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் பரண் லத்தீபைப் பார்த்து தனது முகத்திரையை இழுத்து ஒரு புன்னகையோடும் வெட்கத்தோடும் தனது முகத்தினை மூடிக்கொள்கிறாள். லதீபின் மேல் அவளுக்கும் காதல் வந்துவிட்டதென்பதை அழகாகச் சொல்கிறது இது.

//அதேபோல Children of Heaven படத்தில் வருவதுபோல அழகிய சிவப்பு மீன்கள் உலவும் குளமும் இப்படத்தில் வருகிறது. இரானின் வீதிகளில் இதுபோன்ற சிறிய நீர் தேக்கங்கள் இருக்குமோ என்னவோ.//

இந்தப் படத்தில் காட்டப்படும் நீர்த்தேக்கம் ஒரு மயானத்தில் உள்ளது. பொதுவாக மசூதிக்குச் செல்லுமுன் கை,கால், முகம் கழுவி பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் இஸ்லாமியர்களிடத்தில் இருப்பதால் இது போன்ற நீர்த்தேக்கங்கள் பல இடங்களில் அமைந்திருக்கும்.

மிக அழகான திரைப்படம் குறித்த பதிவு இது.

தொடருங்கள் நண்பரே :)