Friday, December 7, 2007

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள்

உயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு

ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.



அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும் கேள்விக்கும் ஆய்விற்கும் தர்க்கத்திற்கும் உள்ளாகவேண்டிய பெரிய உலகத்தை திறந்து வைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் இந்த சமூகத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் தனது விமர்சன நிழலைப் பரப்பித் திரியும் இக்கதைகள், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் களத்திலும் செயல்பட்டு புதிய தேடலை சிருஷ்டித்துக்கொள்கின்றன. தான் இயங்கும், எதிர்கொள்ளும் சமூகத்தையும் சமூகத்தைச் சார்ந்த மனிதர்களையும் வெறுத்தோ அல்லது பதிலிறுக்கமுடியாத கேள்விக்குட்படுத்தியோ அவற்றிலிருந்து விலகாமல் அவற்றிற்குள்ளேயே உயர்ந்த பட்ச தேடலை, புதிய அலையை உருவாக்க முனைகின்றன ஆபிதீனின் எழுத்துகள். கதைகள் என்கிற இலக்கணத்தை உடைத்து கதைகளிலிருந்து கதைகளை நீக்கி, ஏற்கனவே கவனம் கொள்ளத் துவங்கியிருக்கும் புதிய மரபில் நான்கு கால் பாய்ச்சலில் செல்கின்றன இவரது கதைகள். 'கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை' என்பதன் மூலம் புனைவிற்கான வெளியை விரிவுபடுத்துவதிலும் பொதுமைப்படுத்துவதிலும் முக்கிய இடம் பெறுகின்றன 'உயிர்த்தலம்' தொகுப்பின் சிறுகதைகள்.

உயிர்த்தலம் (சிறுகதைகள்) - ஆசிரியர்: ஆபிதீன் - பக்கங்கள்: 256 - விலை: 130

வாஸந்தி கட்டுரைகள்

இந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.



1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை "பெண்ணியக் கட்டுரை"களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். "பத்திரிகை தர்மம்" என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.

வாஸந்தி கட்டுரைகள் - பக்கங்கள்: 240 - விலை: 120


பாவண்ணனின் நதியின் கரையில்:

புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.



எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடையத் துடிக்கும் அழகான மனநிலைகளை படம் பிடிக்கின்றன பாவண்ணனின் எழுத்துகள். எளிமை என்றுமே இயல்பானது, அதனால் என்றுமே அழகானது என்கிற அடிப்படையில் சுழலும் பாவண்ணனின் உலகம், மனம் விம்மும் பெரும் சோகத்தைக் கூட இதே சூத்திரத்தில் முன்வைக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு கைக்கூடும் இந்தப் புள்ளி அவன் எழுத்தின் உச்சம் எனலாம். பாவண்ணன் மிக எளிதாக இந்த உச்சத்தில் சென்று அமர்கிறார். தான் கண்ட காட்சியை விவரித்துக்கொண்டே வரும் பாவண்ணன், ஒரு கட்டத்தில் அதை தான் ரசித்த கவிதைக்கு விளக்கமாகவும் அல்லது விமர்சனமாகவும் மாற்றும் கட்டத்தில், அந்த நிமிடம், அக்கட்டுரை காட்சியை விவரிக்கிற எழுத்து என்கிற தளத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கியத் திறப்புக் கொள்கிறது. இதை இயல்பாகச் செய்துவிடுவதுதான் இக்கட்டுரைகளின் கூடுதல் பலம். அழகியல் மனநிலைகளை படம்பிடிக்கும் இக்கட்டுரைகள் வாழ்வியல் அனுபவமாகவும் விரிகின்றன.

நதியின் கரையில் (கட்டுரைகள்) - ஆசிரியர்: பாவண்ணன் - பக்கங்கள்: 144 - விலை: 70


வெளி நாடக இதழ்த் தொகுப்பு:

இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி நாடக இதழ். நவீன நாடகங்களின் கூறுகளை நம் பாரம்பரிய நிகழ் மரபிலிருந்தும் தெருக்கூத்துகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உள்வாங்கி புதிய பரிமாணத்தை, புதிய உலகை சிருஷ்டிக்கமுடியும் என்கிற உண்மையை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலத்திற்கு வெளியான இந்த வெளி இதழ்கள் தமிழ் உலகிற்கு உணர்த்தின. வெளி ரங்கராஜன், சே.ராமானுஜம், ந.முத்துசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு நாடகக் கலைஞர்களும் வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வெளி இதழில் தொடர்ந்து தீவிர பங்காற்றினர். இந்த இதழ்களில் வெளி வந்த சிறப்பான பகுதிகளை கட்டுரைகள், நாடகங்கள், பேட்டிகள் என்கிற மூன்று பிரிவில் வெளி ரங்கராஜன் தொகுத்திருக்கிறார்.



ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) - தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் - பக்கங்கள்: 320 - விலை: 160

மேலதிக விவரங்களுக்கு: http://anyindianpublication.blogspot.com/

No comments: