Thursday, December 6, 2007

சனி - சிறுகதை

ஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. அதன் சாயல் நன்றாக நினைவிலிருந்தது அவனுக்கு. ஆயிரம் எலிகள் அவன் முன்னே வந்து கெக்கலித்தாலும் அவனுக்கு பிரச்சினைக்குரிய சனியைக் கண்டுபிடித்துவிடமுடியும். பரம்பரை பரம்பரையாக வரும் பகையை கூட அவன் மன்னிக்கத் தயாராயிருந்தான். ஆனால் சனியை அவனால் மன்னிக்கமுடியாது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு இரவில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் அந்த எலி ஓடிவந்தது. அவன் அதை விரட்டுமுன்பு டிவியின் அடியிலுள்ள மேஜையின் கீழே புகுந்துகொண்டது. அவனால் அதை நம்பவேமுடியவில்லை. எப்படி ஒரு எலி ஓடிவந்து வீட்டிற்குள், அதுவும் கண்ணெதிரே இப்படி புகமுடியும்? உடனடியாக மேஜையைப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. அதிசயமாக இருந்தது அவனுக்கு. எலியைத் தேடு தேடென்று தேடினான். வீடெங்கும் தேடியும் எலியைக் காணவில்லை. அந்தத் தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி கண்முன் நுழைந்த எலி காணாமல் போகும்? களைத்து தூங்கத் தொடங்கியிருந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கிய ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் அன்று முழுவதும் உறங்கவே இல்லை. அந்த ஒலி அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பயத்தை கிளப்பிவிட்டிருந்தது. எத்தனை யோசித்தும் அந்தப் பயம் எங்கிருந்து தூண்டப்பட்டது என்பதை அவனால் கண்டடையவே முடியவில்லை. அதன் காரணகர்த்தாவான சனியின் மீது அவன் வெறுப்பு முழுதும் குவிந்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. ஓய்ந்து படுக்கையில் விழுந்தபோது, அப்படுக்கையின் மெத்தையிலிருந்து சில பஞ்சுகளைப் பறக்கவிட்டு எலி பாய்ந்தோடியது. அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வெளியில் சென்று வீரியமிக்க பூனை ஒன்றை வாங்கிவந்தான். வீட்டுக்குள் விட்டான். பூனை புதிய இடத்தைக் கண்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. கடுமையாகக் கத்தியது. அதன் சத்தம் அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அந்த எலியை விடக்கூடாது என்று முடிவு செய்திருந்தான்.

பூனைக்கு வகைவகையாக முட்டையும் பிரெட்டும் வாங்கிக்கொண்டு வந்து பழகினான். பூனை முட்டையையும் அவனையும் மிகவும் நேசிக்கத் தொடங்கியது. பகலெங்கும் வீடைச் சுற்றும் பூனை, இரவில் அவன் வந்து தரும் முட்டையையும் பிரட்டையும் தின்றுவிட்டு அவனுக்கு முன்பே உறங்கியது. எலியைப் பிடிக்கவில்லை. அதேசமயம் எலியையும் வெளியில் காணவில்லை. ஆனால் எலி வீட்டை விட்டுப் போயிருக்காது என்று உறுதியாக நம்பினான் கஸி. அத்தனை எளிதான எலி அதுவல்ல என்பது அவனுக்குத் தெரியும். அந்த எலிக்கு பழங்கால மாய தந்திரங்கள் தெரிந்திருக்குமோ என்று கூட யோசித்த தினம் நினைவுக்கு வந்து கொஞ்சம் கூசிப்போனான். பக்கத்துவிட்டு நண்பனொருவன் பூனையைப் பட்டினி போட்டால்தான் எலியைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மூன்றாம் வீட்டுக்காரன் "எதுக்கும் போலீஸ்ல சொல்லிடுங்கோ. இந்தக் காலத்து எலிங்கள அப்படி நம்பிடமுடியாதுன்னா" என்றார். அவன் முறைத்த முறையில் கொஞ்சம் பயந்து, "அது ·போன் பண்ணி உங்கள காலிபண்ணினாத்தான் உங்களுக்கு உறைக்கும்" என்று சொல்லி சிரித்துக்கொண்டே கதவைப் பூட்டிக்கொண்டார். அவர் சிரிப்பு கதவை மீறி வெளியில் வந்து அவன் கண்களைச் சிவப்பாக்கியது.

அன்று பூனையைப் பட்டினி போட்டான். ப்ளூ கிராஸ் நண்பர்களுக்குத் தெரிந்தால் அவனை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற பயம் ஒருபுறமிருக்க, எலியைக் கொல்லவே அவன் அந்த முடிவுக்கு வந்தான். பூனை மட்டும் அந்த எலியைப் பிடித்துவிட்டால் அதற்கு என்னென்ன உபசாரங்கள் செய்யப்போகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அன்றிரவு பூனையைப் பட்டினி போட்டுவிட்டு படத்திற்குச் சென்றான். படத்தில் ஒரு எலி ஓயாமல் பூனையைத் துரத்தியது. ஏந்தான் இந்தப் படத்திற்கு வந்தோமோ என்று நொந்துகொண்டான். இடைவேளையில் பக்கத்திலிருக்கும் ஒருவரிடம் 'எலியைத் துரத்தும் பூனைப்படம் எந்த தியேட்டர்ல ஓடுது' என்று கேட்டான். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதாக முறைத்த அவர் கையிலிருந்த பாப்கார்னைத் திங்கத் தொடங்கினார். அவனுக்கு எரிச்சலாக வரவும் உடனே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டின் கதவைத் திறக்கும்போது பூனை அவன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. டிவிக்குச் செல்லும் வயர்கள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிடந்தன. ·பிரிட்ஜுக்குள் அவன் வைத்திருந்த பிரெட் முழுதும் தூள் தூளாகிக் கீழே சிதறிக் கிடந்தது. இவனால் அக்காட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நிமிடம் பூனையின் மீது சந்தேகம் வந்தது. உடனே அப்படி இருக்கமுடியாது என்கிற முடிவுக்கு வந்தான் கைலியிருந்த டிக்கட்டைச் சுருட்டி பூனையின் மண்டையைக் குறிவைத்து எறிந்தான். பூனை அதிர்ச்சி அடைந்து எழுந்து அவனைப் பார்த்தது. அவந்தான் என்று தெரிந்தவுடன் லேசாகச் சிரித்துவிட்டு தூங்கிப் போனது. எப்படி பசியைத் தாங்கும் பூனை? நண்பன் சொன்னான், "நாலு நாளாவது சாப்பிடாம இருக்கும் பூனை. நாலு நாள் அப்படியே விடு, பார்க்கலாம் அது எப்படி எலிய பிடிக்காம இருக்குன்னு."

இந்த எலியைப் பிடிக்க இன்னும் நாலு நாள் காத்திருக்கவேண்டும் என்பதே அவனுக்கு அவமானம் தரும் விஷயமாக இருந்தது. பூனைக்கு அதிகம் பசியை உண்டாக்கும் மருந்தை தேடி வாங்கிக்கொண்டு வந்தான். அதை பூனைக்குக் கொடுத்தான். அன்றிரவு பூனையை தனியே விட்டுவிட்டு, படத்திற்குச் சென்றான். எந்தப் படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் முதல் நாள் பார்த்த படத்திற்குத்தான் டிக்கெட் கிடைத்தது. அதைப் பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் என்று வீதியில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தான். ஒருவித எதிர்ப்பார்ப்போடு கதவைத் திறந்தான். வீடெங்கும் பூனையில் உடல்துண்டங்கள் சிதறிக்கிடந்தன.

முதன்முறையாக ஒரு எலிக்குப் பயந்தான். மூன்றாம் வீட்டுக்காரர், "நான் தான் சொன்னேனே ஹா ஹா ஹா" என்று கெக்கலிப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஒரு சாயலில் அந்த எலியின் சாயல் அவர் முகத்தில் தெரிந்தது போல் இருக்கவும் கஸி அவரை முழுமையாக வெறுத்தான். பகக்த்துவீட்டு நண்பன், சில பெருச்சாலிகள் அப்படி துவம்சம் செய்வது உண்டென்றாலும், பூனையை எந்த எலியும் கொன்றதில்லை என்றும் சொன்னான். அவனுக்கு பயமாகவும் தன் மீதே கேவலமாகவும் இருந்தது. அன்றிரவுதான் அவன் கனவில் முதன்முதலாக எலி வந்தது. பக்கத்துவிட்டுக்காரனிடம் பேசும்போது அந்த எலியை சனி சனி என்று திட்டுவான். ஒருவாறாக அந்த எலியின் பெயரே சனி என்று ஆகிப்போனது.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு நாள்கள். வரிசையாக என்னென்னவோ செய்தான். சிலிண்டரில் ஒரு வாயு விற்கிறது என்றும் அதை பீய்ச்சினால் எலிகள் ஓடி வந்து செத்துவிழும் என்றும் சொன்னார்களென்று அந்த வாயுவை வாங்கிக்கொண்டுவந்து பீய்ச்சினான். கடுமையான செலவு பிடித்தது. தன் கையிலிருக்கும் பணம் முழுதும் செலவழிந்து தான் பிச்சை எடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே அதைச் செய்தான். சரியாக ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது, எதிர்த்த வீட்டு பகக்த்துவீட்டு எலிகள் எல்லாம் ஓடி வந்து செத்து விழுந்திருந்தன. ஆனால் சனியைக் காணவில்லை. அவனுக்கு சனியின் சாயல் நன்றாகத் தெரியும், சனி சாகவில்லை. சனியைக் காணவில்லை என்று நண்பனிடம் சொன்னான். அவன் சொன்னான், 'எங்க வீட்டுல இப்ப எலியே இல்லடா. ரொமப் தேங்க்ஸ்டா' எங்கிருந்தோ சனியின் அகங்காரச் சிரிப்பு வீட்டுக்குள் ஒலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.

தொடர்ந்து கனவுகளில் சனி அழிச்சாட்டியம் செய்தது. பக்கத்து வீட்டு நண்பன் இன்னொரு உபாயம் செய்தான். எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வ்ந்து, அதிலுள்ள சில முறைகளைச் சொன்னான். கஸி சிரித்தான். எதை எதையோ துவம்சம் செய்துவிட்ட எலி இதற்கு எப்படி அகப்படும்? நண்பனின் வற்புறுத்தலில் சரியென ஒப்புக்கொண்டான்.

வீதிகளில் அலைந்து ஒரு மரத்தாலான எலிப்பத்தாயத்தையும் ஒரு வெங்காய வடையையும் வாங்கினார்கள். எலிப்பத்தாயம் விற்பவன் ஒரு கேலியோடு அதைக் கொடுத்தான். 'இன்னும் இதுக்கு மதிப்பிருக்குதுன்றீங்க?' கஸி அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் சனியின் ஓட்டத்தை அவனால் உணர முடிந்தது. கையிலிருந்த வெங்காய வடையை முகர்ந்து பார்த்தான். அந்த மணம் சனியை அல்லாட வைக்கிறது என்பது புரிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இது மட்டும் சக்ஸஸ் ஆனால் எப்படி இருக்கும்? ஆரம்ப கட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியிருந்தால் எவ்வ்ளவு மிச்சமாகியிருக்கும்? நிறையப் பணம், ஒரு பூனையின் உயிர், கொஞ்சம் வயர், கொஞ்சம் பஞ்சு, நிறைய பிரட். எல்லாம் இப்போது வீணாகப் போய்விட்டது. என்றாலும் பரவாயில்லை. பிரச்சினை தீர்ந்தால் சரி.

இதுவரை அவன் எலிப்பத்தாயத்தில் வெங்காய வடையை வைத்ததே இல்லை. முதலில் சரியாக வைக்கவரவில்லை. பின்பு கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தியதும் அதன் எளிமையான சூத்திரம் பிடிபட்டுவிட்டது. லாகவமாக வெங்காய வடையை வைத்தான். பத்தாயத்தின் மேலே இருக்கும் கொக்கியை பத்தாயத்தின் முதுகின் மிக நுனியில் மாட்டி வைத்தான். சனி உள்ளே நுழைந்து வடையைத் தொட்டாலே போதும், சட். பின்பு அதை உண்டு இல்லையென்று ஆக்கிவிடலாம். நிறைய கேள்விகளைத் தயார் செய்துவைத்துக்கொண்டான். இதையெல்லாம் நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கணும் என்பார்களே, அப்படி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

இரவு மிகவும் மெல்ல வருவதுபோலத் தோன்றியது. ஏன் பகலில் சனி வ்ந்து வெங்காய வ்டையைத் தின்று தொலைக்கவில்லை?

இரவு வ்ந்த்ததும் சனிப்பத்தாயத்தை சரியான இடத்தில் வைத்துவிட்டு, மனதிற்குள் 'சீ யூ' சொல்லிவிட்டு, அறையைப் பூட்டிவிட்டு படத்திற்கு போனான். ஆச்சரியமாக அன்று விசிலடித்தான். அன்றைக்கு பூனை எலியைத் துரத்தும் படம். பூனை எலியைத் துரத்து துரத்தென்று துரத்தியது. திரையில் ஒன்றுமே திரையிடப்படாத நேரத்தில்கூட கைதட்டி ஆரவாரம் செய்தான். பக்கத்திலிருப்பவன் கடுப்பாகி 'வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்' என்றான். கஸி சிரித்துக்கொண்டே 'சனி' என்றான்.

சோதனையாக அன்று வீட்டிற்கு பஸ்ஸே கிடைக்கவில்லை. என்னவோ பிரச்சினை என்று போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள். நடந்தே வீட்டுக்கு வந்தான். உண்மையில் நடப்பதே அவனுக்குப் பிடிக்காது. அன்று அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெங்காய வடை தன்னைக் கைவிடாது என்று உறுதியாக நம்பினான். தனக்குப் பிடித்த பழமையான பாடலைப் பாடிக்கொண்டு நடந்தான். அப்போது பழமையை மிஞ்சக் கூடிய புதுமையென்று எதுவுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அந்த நிமிடத்தில் பழமையின் மீது தீராத காதல் கொண்டான். பாரதியார் பாடல்களைத் திக்கித் திணறிப் பாடிப் பார்த்தான். நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான். பழைய காதலி சிலி நினைவுக்கு வந்தாள். பழமையால் நிரம்பிய புது உலகம் என்கிற சொற்றொடர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமே மாறிப்போனது போல் உணர்ந்தான்.

வீட்டிற்குள் சென்று கதவைத் திறந்தான். சனிப்பத்தாயத்தில் சனி மாட்டிக்கொண்டு "லீவ் மீ லீவ் மீ" என்று கத்திக்கொண்டிருந்தது. கற்பனை ரொம்ப இனிமையாக இருந்தது. அந்த இனிமையை கொஞ்சம் அனுபவித்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

சனிப்பத்தாயம் காலியாக அவன் வைத்திருந்த மூலையில் கிடந்தது. ஓடிச்சென்று அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே வெங்காய வ்டையைக் காணவில்லை. ஒரு கடிதம் இருந்தது. "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று எழுதி, மிகவும் பரத்தலாக என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.


"Better Luck Next Time"

With Luv,
Sani, The Boss.


-oOo-

(இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது.)

வகை: அறிவியல் புனைகதை.

15 comments:

நக்கீரன் said...

எ(லி)ளிய நடைல நல்லா எழுதியிருக்கீங்க.
நீங்க நிறைய வாசிக்கிறீங்கன்றது
உங்க நடைலயே தெரியுது.

PKS said...

உங்கள் நடை எளிமையாகி வருகிறது. அதனால் அழகு பெறுகிறது. இந்தக் கதையில் நிறைய அசோகமித்ரன் சாயல் தெரிகிறது. இவையெல்லாம் நல்ல சகுனங்கள். உங்களுக்கும் இலக்கியத்திற்கும் நல்ல காலம் பிறக்கிறது என்பதற்கு. - பி.கே. சிவகுமார்

பாச மலர் / Paasa Malar said...

எலிக்கதை நன்றாயிருக்கிறது...கஸி பார்த்த திரைப்பட அனுபவம், பழமை பற்றிய சிந்தனை..Sani, the boss...
நன்று..

கானகம் said...

நல்ல கதை.. அனைவரும் குறிப்பிட்டுள்ளதுபோல எழுத்து எளிமையாய் உள்ளது. பயந்து போய் நடையை மாற்றிவிட வேண்டாம்..

நன்றாகவே உள்ளது.. சனி.. த பாஸ்..

ஓகை said...

சரளமான எழுத்து. பராட்டுக்கள்.

Nimal said...

Sani, the boss...
எலிக்கதை...
சிறப்பாக இருக்கிறது...

Anonymous said...

கதை, வடிவம், ஓட்டம் எல்லாமே சூப்பர்... (முடிவில் எதுவும் நச் இல்லையே!)

ஹரன்பிரசன்னா said...

மோகன், நக்கீரன், பிகேஎஸ், பாசமலர், ஓகை, நிமல், பாபா - நன்றி.

பாபா, முடிவில் நச் என்பதைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகள் உலவுகின்றன என்று தெரிகிறது. முடிவில் ஒரு சிரிப்பு, எதிர்பாராத சின்ன ட்விஸ்ட் போதும். அதை மீறி பெரிய நச்செல்லாம் வெகு சில சமயம் அமையலாம். அதுவும் கூட ஒருசிலருக்கு நச்சாகவும் ஒரு சிலருக்கு ஏற்கனவே எதிர்பார்த்ததாகவும் அமையும். இதுபோன்ற 'நச்சென்றே முடியும்' என எதிர்பார்ப்போடு படிக்கப்படும் கதைகளுக்கு இந்த சவால் (சங்கடம்!) இன்னும் அதிகம். இதை மனதில் கொண்டு, கதைக்கு எந்த அளவு நச் போதுமோ அது இருக்கட்டும் என்று நினைத்து எழுதினேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி......!

அரை பிளேடு said...

எலிமயமான வாழ்க்கை :)
கஷ்டம்தான்.

SurveySan said...

ஹா ஹா:)

நல்ல சீரிய நடை. அருமை.

ஹரன்பிரசன்னா said...

அரைபிளேடு, சர்வேசன் - நன்றி.

Nithi said...

பராட்டுக்கள்.

அன்புடன் அருணா said...

ஐயோ எப்பிடிங்க?....எப்பிடி? அப்பிடியே எங்க வீட்டில் உக்கார்ந்து பார்த்த மாதிரி எழுதி இருக்கிங்க? சூப்பர் அருணா

Anonymous said...

முத்துலிங்கம் சிறுகதை படிச்சீராவே? அதுலதான் பாம்பைக் கொல்ல ஒருத்தன் படுற அவஸ்தையை எழுதியிருந்தாரு அவர். நடை எளிமையாகியிருப்பது உமக்கு நல்ல காலம். என்னை மாதிரி நல்ல எழுதலாம்னு நெனச்சிட்டீரு போல் இருக்கு. நல்லா இரும்வே!

சாத்தான்குளத்தான்

ஹரன்பிரசன்னா said...

ஆசிஃப், உங்கள மாதிரி நல்லா எழுதறதா...! நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்கு புது வருஷம்.