Tuesday, December 4, 2007
சுப்ரமண்ய ராஜு கதைகள் - சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிய எழுதிய வரிகளின் மூலமாக சுப்ரமண்ய ராஜுவைப் படிக்கவேண்டும் என்கிற தீவிரமான எண்ணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'சுப்ரமண்ய ராஜு கதைகள்' மூலம், கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நிறைவேறியது. மாலனும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இடையில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட 'ஞானரதம் இதழ்த் தொகுப்பு' நூலுக்காக படித்துக்கொண்டிருந்தபோது சுப்ரமண்ய ராஜுவின் கதையொன்றையும் கவிதையொன்றையும் வாசித்தேன். இரண்டுமே சிறப்பாக இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த இரண்டுக்குள்ளாகவே சுப்ரமண்ய ராஜுவின் மொத்த உலகமும் அடங்கிப்போனதுதான்.
வித்தியாசமான உத்தி, சிறுகதையின் எல்லைகளை பரிட்சைக்கு உட்படுத்துதல், நவீன - பின்நவீனத்துவ கதை கூறல் என்கிற எந்தவிதமான யோசிப்புக்கும் இடம் வைக்காத, வாசகனை அதிகம் மெனக்கெட வைக்காத எழுத்து. எவ்விதக் குழப்பத்தையும் வைக்காமல் நேரடியாக, எளிமையாகப் பேசுகிறது. சுஜாதாவின் நாடகங்கள் போல, தொடர்ச்சியான பேச்சு; மறுபடியும் பேச்சின் மூலமாக கதாபாத்திரங்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை எடுத்துச் செல்கின்றன. எல்லாக் கதைகளுமே பேச்சின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுஜாதாவிற்கு இருக்கும் சாமர்த்தியம் மற்றும் ஹ்யூமரைப் போன்றே சுப்ரமண்ய ராஜுவின் கதைகளிலும் சாமர்த்தியமும் நகைச்சுவையும் கதை நெடுகிலும் பரந்திருக்கின்றன. இது வாசிப்பை சுலபமாக்குகிறது; ஒரு கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. அடுத்து என்ன என்கிற எண்ணத்தையும் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்கூட்டிய தீர்மானத்தையும் இக்கதைகள் வெகு சீக்கிரமே பெற்றுவிடுகின்றன. ஆனால் இதைப் பற்றி சுப்ரமண்ய ராஜு யோசித்ததாகவோ கவலைப்பட்டதாகவோ அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை. அவர் பாட்டுக்கு, ஒரு மாமி எதிரிலிருக்கும் பொம்மைக்கு மிமிக்ரி கலந்து கதை சொல்லுவதுபோல, ஓயாமல் பேசிக்கொண்டே கதைகளைச் சொல்லிச் செல்கிறார். இதனால் கவனிக்கப்படவேண்டிய கதைகள் எவை என்பதை நாம் மீண்டும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
சுப்ரமண்ய ராஜுவின் கதைத்தன்மையை மொத்தமாக, மேம்போக்காகப் பார்த்தால், ஆண்களின் பெண்கள் மீதான ஏளனப் பார்வையை முன்வைக்கும் கதைகளாகச் சொல்லலாம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அவை ஆண்களின் ஹிபோகிரைசியைத் தோலுரித்து, பெண்களுக்கு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் தருவதை அவதானிக்கலாம். சுப்ரமண்ய ராஜுவிற்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு கதை முழுதும் காணக் கிடைக்கிறது. பெண் இல்லாமல், பெண் பற்றிய உடல் ஈர்ப்பில்லாமல் கதைகளே இல்லை. எல்லா கதைகளும் பெண்ணையும் பெண் உடலையும் சுற்றிச் சுற்றியே வருகின்றன. பெண் கதையை நடத்திச் செல்லும்போதுகூட ஆண்களின் ஹிபோகிரைசியை தோலுரித்துவிட்டு, மிக சாதரணமாக அந்த ஹிபோகிரைசியை தான் அடைந்துகொள்கிறாள்.
பெரும்பாலான கதைகள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, அதை நிராகரித்து அல்லது அதை கேள்விக்குட்படுத்தி, கடைசியில் அதே புள்ளியிலேயே முடிந்துவிடுகின்றன. இதை ஒரு டெம்ப்ளேட் என்று சொல்லிவிடத்தக்க அளவில் எல்லாக் கதைகளிலும் சுப்ரமண்ய ராஜு பயன்படுத்தி இருக்கிறார். பாலசந்தரின் படங்கள் - பெரும்பாலானவை - இப்படிப்பட்ட ஒரு சுழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் கண்டிக்கும் ஒரு விஷயத்திற்குள் அக்கதாபாத்திரமே, சூழ்நிலை காரணமாகவோ விரும்பியோ வேறு வழியின்றியோ விழுந்துவிடுவது என்கிற தொடர் சித்திரம் எனக்கு பெரும் அலுப்பை ஏற்படுத்தும் ஒன்று.
ஆண்களின் உலகை பட்டவர்த்தனமாக படம்போட்டுக் காட்டும் கதைகள், சுப்ரமண்ய ராஜுவின் உலகத்தில் சபலிஸ்டாக இல்லாத ஆண்களுக்கு இடமே இல்லையோ என்கிற தவிர்க்கமுடியாத கேள்வியை எழுப்புகின்றன. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள் மாத்திரமே என்கிற எண்ணத்தைச் சொல்ல நினைக்கும் ராஜு தன் எல்லா கதைகளிலும் இப்படி ஆண்களை ஒவ்வொரு பெண்ணாக ஓட வைக்கிறார். அதையே பெண்களின் விஷயத்தில் சுதந்திரமாக மாற்றி, சிறந்த சிந்தனையுள்ள, ஆணைச் சாராத பெண்ணாகப் படைத்துவிடுகிறார். தூண்டில், வெளிச்சம், உமா, முகமூடி, முதல் கதை போன்ற கதைகள் ஒரு ஆணின் மனத்தில் இருக்கும் வக்கிரத்தைப் பேசுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் ஆணின் மனதைப் படம் பிடிக்கும் இக்கதைகள், மிக மேம்போக்காக, ஆனால் மீண்டும் மீண்டும் ஆண்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் ஒரு அழுத்தத்தை உருவாக்க முயல்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவை வெறும் வார்த்தைகளாகத் தங்கி விடுகின்றன. அதேசமயம் இக்கதைகளில் வரும் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். 'நாளை வரும்' கதையில் தன் கணவனுக்கு இருக்கும் தொடர்பை மிக எளிதாக துண்டிக்க வைக்கிறாள் ஒரு பெண். கணவனிடம் கேள்வி கேட்டால் தன் வாழ்க்கை போய்விடும் என்கிற பயத்தின் காரணமாக எதார்த்தமாகச் சிந்திக்கிறாள் அப்பெண். இப்படி சுப்ரமண்ய ராஜு ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி பெரிய சித்திரம் ஒன்றை வலிந்து கொடுக்க முனையாவிட்டாலும், அவர்களை பெண்ணியம் பேசும் வீர வசனங்களுக்கு உட்படுத்தாவிட்டாலும், பெண்களின் பாத்திரப்படைப்பு என்பது யதார்த்தத்தையும் சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாகவே அமைந்து முழுமை பெற்றுவிடுகிறது.
சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான 'வழியில் வந்த முட்டாள்கள்' இப்படி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. கதையின் உத்தி, மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லும் அலுப்பு தரும் உத்தியாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் சிறந்த பதின்ம வயதுக் கதையாக இதைக் கொள்ளமுடியும். எதிர்ப்படும் ஆண்களையெல்லாம் தன் அழகைச் சார்ந்து ஏற்படும் அதீத கர்வத்தால் புறந்தள்ளும் ஒரு பெண்ணை, புறந்தள்ளுகிறான் ஒருவன். பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கும் அப்பெண், தன் ஈகோவைத் தொலைத்துவிடாமல் அவனை மறந்து முதலில் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஆணுக்கு மீண்டும் 'ஹலோ' சொல்கிறாள். பெண்ணின் பார்வையில் வெளிப்படும் இக்கதை, பெண்ணை ஆணுக்குரிய சாயலில் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லும்போது கூட, சுப்ரமண்ய ராஜுவால் அவரே ஆண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் சுழலிலிருந்து மீள இயலவில்லை என்கிற எண்ணம் வருகிறது. இக்கதையின் பெண், அவரின் மற்ற கதையின் ஆண்களைப் போலவே சிந்திக்கிறாள்.
மல்லிகைப்பூ, உறவு, விலை, நடுவிலே நான், தாகம், இப்படியா சின்னப் பெண்ணை பயமுறுத்துவது போன்றவை ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எழுதிப்பழகும் கதைகளை ஒத்திருக்கின்றன. 'செல்லிக்கு படிப்பு வரவில்லை' மோசமான கதைகளுள் ஒன்று. இது குமுதத்தில் தண்டமாக எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று முன்னுரையில் சொல்கிறார் தேவகோட்டை மூர்த்தி. புத்தகத்தில் இருக்கும் கதை குமுத்தத்தால் எடிட் செய்யப்பட்டதா அல்லது முழுமையானதா எனத் தெரியவில்லை. 'கொடி' சிறுகதையை முக்கியமான சிறுகதையாகக் கருதுகிறார் தேவகோட்டை மூர்த்தி. என்னைப் பொருத்து அது அப்பாவிக்கான கதை. கடைசியில் தன் மாமனார் போலவே அவனும் ஆகும் அதே கதைச் சுழல்!
ஆண்களும் பெண்களும் பதின்ம வயதும் ஏமாற்றலும் களவொழுக்கமும் சலிக்க சலிக்க வரும் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி சில கதைகள் (லெவல் கிராஸிங், நாலு பேர்) மேலே செல்ல முயல்கின்றன. லெவெல் கிராஸிங் சக மனிதர் மீதான அன்பைச் சொல்லும் மிகச் சிறிய நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் சாதாரணமான கதை. 'நாலு பேர்' அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து, ஒரு நண்பனின் சாவை எதிர்கொள்ளும் நான்கு நண்பர்களின் மனநிலையை அலசுகிறது. இக்கதை ஆண்-பெண் ஏமாற்றம்/ஏமாற்றப்படுதலைப் பற்றிப் பேசாமல், அதை மீறிய கதையொன்றைக் கொஞ்சம் யோசனைக்கு இடம் கொடுத்துச் செல்வதாலேயோ என்னவோ எனக்கு பிடித்துவிட்டது. இக்கதையிலும் ஆண்களுடன் உரச பெண்களும், அவர்களுடன் மோகம் கொள்ள ஆண்களும் வருகிறார்கள். ஆனால் அவை நடக்கும் சூழலுக்குப் பின்னே நிறைந்திருக்கும் பெரும் சோகம் இவற்றைத் தாண்டிய யோசனையைத் தருகிறது.
மொத்தமாக சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் ஆண்கள் பெண்களின் மன நிலையை விவரிக்கும்போது, கூடவே மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் அவர்களின் எண்ணங்களையும், நகரத்து மக்களின் மனப்போக்கைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கின்றன. சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் இவை ஒரு முக்கிய அம்சம். ஆனால் இவற்றை ஒரு வாசகன் வலிந்து தேடி அடையவேண்டியிருக்கிறது. எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாமல் சொல்லப்படும் கதைகள் இந்த அம்சத்தை மிக மெல்லிய குரலில் சொல்கின்றன. உரத்து மீண்டும் மீண்டும் வலிந்து சொல்லப்படும் ஆணின் உலகம் இதை மறைத்து வைத்துவிடுகிறது என்றும் சொல்லலாம்.
சொல்லத் தோன்றும், ஆனால் அதிகம் பொருட்படுத்தத் தேவையற்ற, இன்னொரு விஷயம், சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் வரும் ஆண்களின் பெயர்கள். ராஜாராமன், கணேசன், முத்து - இந்தப் பெயர்கள்தான் பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. தீவிர எண்ணமின்றி தோன்றிய உடனே எழுதிக் கொடுத்துவிட்டுப் விடுவதைப் போன்ற சித்திரம் ஒன்று என் மனதுள் எழுகிறது.
சிறுகதைகளோடு இரண்டு குறுநாவல்களும் தொகுப்பட்டுள்ளன. 'இன்று நிஜம்' குறுநாவல் பணத்தை படாடோபத்தை சுதந்திரமற்ற வாழ்க்கையை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதையையும் வறுமையால் அந்த இளைஞனுக்கு சித்தியாகும் ஒரு பெண்ணின் நிலையையும் ஆராய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. இதிலும் மற்ற சிறுகதைகளின் நீட்சியாகவே இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அமைகின்றன.
அங்கங்கே சட்டென தெறிக்கும் சுப்ரமண்ய ராஜுவின் சாமர்த்தியமும் நகைச்சுவையும் அதிசயிக்க வைக்கின்றன. இப்படி நிறைய இடங்களில் வருவது கதையை வாசிக்கும்போது ஒரு புன்னகையை வரவழைக்கிறது. உப்பு சப்பற்ற கதைகளைக் கூட கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு வைத்திருப்பது சுப்ரமண்ய ராஜுவின் இந்த சாமர்த்தியமே. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு கண சம்பவங்களும் இந்த சாமர்த்தியமும் மட்டுமே கதைகளாகிவிடுவதில்லை. இதை சுப்ரமண்ய ராஜூ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.
தேவகோட்டை மூர்த்தி சுப்ரமண்ய ராஜுவின் கதைகளைப் பற்றிக் கொஞ்சமும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றி நிறையவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜுவை இவர் சிறந்த இலக்கியவாதியாக நம்புவதாகத் தெரிகிறது. சுஜாதா தான் வெளியிட்ட பட்டியலில் புதுமைப்பித்தனைச் சேர்க்கவில்லை, சுப்ரமண்ய ராஜூவைச் சேர்த்திருந்தாராம். காலத்தின் கொடுமையில் இதுவும் ஒன்று. ஒருவேளை அப்போது சுஜாதாவிற்கு இலக்கியம் பிடிபடாமல் இருந்திருக்கலாம். இப்போது அவர் இப்படி நினைக்கமாட்டார். ஏனென்றால் காலத்தின் கரங்கள் குரூரமானவை.
கிழக்கு பதிப்பகம் வழக்கம்போல சிறப்பாக இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால் கதைகளைத் தொகுத்தவர் பெயர் இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் முழுக்கதைத் தொகுப்பு என்னும்போது தொகுத்தவர் பெயர் முக்கியமானதாகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து தொகுத்தவர் பெயர் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறலாம். அதேபோல் கதைகள் வந்த வருடங்கள் குறிக்கப்படவில்லை. இது ராஜுவின் எழுத்து குறித்த வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிட்டது. ஒரு செம்மையான தொகுப்பிற்கு இவையயெல்லாம் முக்கியமானவை.
சுப்ரமண்ய ராஜு 1973ல் ஞானரதம் இதழில் எழுதிய கவிதை:
புலி
எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?
இக்கவிதையில் அடங்கி விடுகிறது சுப்ரமண்ய ராஜுவின் ஒட்டுமொத்த கதைகளும் அவரது உலகமும். கற்கால மனிதன், கற்கால எண்ணம் என்கிற சொல்லாடல் கூட நிறையக் கதைகளில் வருகிறது. பல பரிமாணங்களற்ற, தட்டையான கதைகள் சுப்ரமண்ய ராஜுவின் தோல்வியில் முக்கியப் பங்காற்றும் விஷயமாகும்.
(இக்கவிதை பற்றி: எனக்குப் பிடித்த கவிதை இது. ஆரம்பத்தில் படர்க்கையில் வரும் கவிதை சில வரிகளுக்குப் பின் தன்னை நோக்கித் திரும்பி, அதை முன்வைத்து ஆண்களின் பொதுவான தளத்திற்குச் செல்கிறது.)
சுப்ரமண்ய ராஜு கதைகள், கிழக்கு பதிப்பகம், விலை: 200 ரூபாய்.
இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=26120
Labels:
புத்தகப் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சுப்ரமணிய ராஜு, ஞானரதத்தில் எழுதிய புலி என்ற கவிதை எனக்கும் பிடித்தமானதே. தனிப்பட்ட உரையாடலில் நான் அதைப்பற்றி நண்பர்களிடமும் தோழிகளிடமும் சொல்லியிருக்கிறேன். - பி.கே. சிவகுமார்
ஒரே எழுத்தாளரை ஒரே மூச்சில் படித்தால் இந்த வித சலிப்பு ஏற்படுமோ?
உங்க பக்கப்பட்டையைப் பார்த்தா ஏகப்பட்ட படம் பார்க்கிறீங்கன்னு தெரியுது. இரண்டு கேள்விகள்:
1. இந்த டிவிடிகள் எங்க கிடைக்குது?
2. நீங்க அதிகம் மதிப்பெண் போட்ட படம் எது? எவ்வளவு? அதைப் பற்றி விமர்சனம் எழுதினால் நல்லா இருக்கும்.
சிவா நன்றி.
பாஸ்டன் பாலாஜி, தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா, ஆ.மாதவன் கதைகள், புதுமைப்பித்தன் கதைகள் இவற்றையெல்லாம் ஒரே மூச்சில்தான் (அதாவது தொடர்ந்து) படித்தேன். அவை இப்படி ஏமாற்றவில்லை. நாமாக ஒரு காரணம் தேடிக்கொள்ளவேண்டுமானால் அப்படி நினைத்துக்கொள்ளலாம்.
ரவிஷங்கர், மதிப்பெண் ஒரு ஒப்பிடுதலுக்காக. மிகவும் பிடித்த் படங்களைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன், எழுதுவேன். சில படங்களை நிறைய பேர் இணையத்தில் எழுதியிருந்தால் நான் எழுதுவதில்லை. அனைத்து உலகப்பட டிவிடிக்களூம் சென்னையில் கிடைக்கின்றன.இந்தியப் படங்களை லோக்சபா சானில் பார்க்கிறேன். நன்றி.
பிரசன்னா,
சுப்ரமண்யராஜூ கதைகளைப் பற்றி என்னுடைய பதிவில் முன்னர் எழுதியவற்றை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்.
http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_115114878785476656.html
()
சுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக
'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு
மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த
எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.
சுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்'
என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை
வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய
முன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு
கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப்
பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார்.
இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.
ராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த
சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி
என்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு
உடன்பாடு இல்லை)
வெகு காலத்திற்கு முன்பு கணையாழியில் சுஜாதா "காலத்தை வென்று
நிற்கக்கூடிய சிறுகதைகள்" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார்.
புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட்
அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின்
பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாட்டாமை தீர்ப்ப மாத்தி
சொல்லு" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில்
ஏற்பட்ட ஒரு பிரமை.
()
இது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-
ஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான
வாசகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட
பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி
குறிப்பிட்டிருக்கிறார். ஏதொவொரு
'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற
சிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. "WOW".
இதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில்
எழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன்,
எஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்
மட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய
வாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற
துள்ளலான எழுத்தாளரைப் பற்றி.
என் சிறுவயதில் "சுஜாதா"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த
போது "இரவிச்சந்திரனைப் படித்திருக்கிறீர்களா?" என்றார். "யார் அவர்?"
என்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார்.
எனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக
நம்மால் என்றாவது எழுத முடியுமா?" என்கிற தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையும் கலவையாக தோன்றியது.
()
இரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா
பணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின்
எழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம்
சிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில்
சுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில்
உரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை
கையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு
சமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது
அதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு
கிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது
வருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்'
'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த
பதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.
()
Marathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு
உறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த
போது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு
பதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த
வலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.
அற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.
--சுரேஷ் கண்ணன்.
(சுரேஷ், நீங்கள் அனுப்பிய கமெண்ட்டை அவசரத்தில் ரிஜெக்ட் செய்துவிட்டேன்! ஸாரி. நான் காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி பல.)
(இன்று காலை பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசும்போது சொன்னதை இங்கேயும்
பதிந்து வைக்கலாம் என்று.)
1. ஜெயமோகன் எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "அவர் எழுத்துகளே
புரியவில்லை" என்று ஒற்றை வரியில் நிராகரிப்பவர்களுக்கும், தலைப்பிலேயே
சுப்ரமணிய ராஜுவின் எழுத்தைப் பற்றி நீங்கள் "சுழலில் சிக்கித் தவிக்கும்
கதைகள்" என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் எனக்கிருப்பதாகத்
தோன்றவில்லை. அதுதான் அவர் கதைகளைப் பற்றிய உங்கள் எண்ணம் என்றால், அதைக்
கட்டுரையில் விலாவரியாகச் சொல்லுங்கள். (சொல்லியிருக்க்கிறீர்கள்.!) ஓர்
எழுத்தாளனின் மொத்தச் சிறுகதைகளையும் அறிமுகப்படுத்துகிற ஒரு கட்டுரையின்
தலைப்பு ஒருவரியில் அந்த எழுத்தாளனை நிராகரிப்பதாக இருக்கக் கூடாது. அது
புதியதாய்ப் படிக்கிற வாசகர் மத்தியிலும், ஏன் இலக்கிய நுகர்வு உடைய
வாசகர் மத்தியிலும்கூட முன்னனுமானங்களை உண்டாக்கிவிட வழிவகுக்கும்.
அதற்காக, தலைப்பைப் பாராட்டும்படி வைக்க நான் சொல்லவில்லை. கதையிலிருந்து
எடுக்கப்பட்ட வரிகளோ, அல்லது நியூட்ரலான தலைப்பாகவோ இருக்கலாம்.
உதாரணமாக, இங்கே அவர் கதைகளின் மொத்தமும் இவ்வளவுதான் என்று இரண்டு
வரிகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைச் சுருக்கித் தலைப்பாக வைக்கலாம்.
உதாரணமாக, சோதனைக்குட்படுத்தப்படும் ஆண்கள், தோலுரிக்கப்படும் ஆண்கள்
ஹிப்போகிரஸி என்று உங்கள் கட்டுரையிலிருந்தே தலைப்புகளை நீங்கள்
தேர்ந்தெடுத்திருக்கலாம். உங்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு, சுப்ரமணிய
ராஜுவின் கதைகளையும் படித்துவிட்டுச், "சுழலில் சிக்கித் தவிக்கும்
கதைகள்" என்ற முடிவை வாசகர் எடுக்க உங்கள் விமர்சனம் உதவ வேண்டுமே தவிர,
தலைப்பிலேயே எந்த எழுத்தாளரையும் இப்படி நிராகரிப்பது எழுத்துக்கு
நியாயம் செய்வதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
2. மற்றபடிக்கு, சுஜாதாவின் சிறுகதையாளர்கள் வரிசையில் புதுமைப்பித்தன்
இல்லை, சுப்ரமணிய ராஜு இருந்தார் என்பதற்குச் சுஜாதாவுக்கு அப்போது
இலக்கியம் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறமாதிரியான
விமர்சனங்களில் எனக்கு உடன்பாடே.
3. சுப்ரமணிய ராஜுவுக்கே உங்கள் மனதில் இந்த இடம் என்றால் மாலன்
சிறுகதைகளைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன். ஏமாற்றிவிடாமல் விரைவில் எழுதவும். :-)
அன்புடன், பி.கே. சிவகுமார்
Post a Comment