இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும் தசாவதாரம் பற்றிய எண்ணங்களைச் சொல்ல?
அடியேன் ரங்கராஜன் நம்பி என்கிற கமலின் கர்ஜனையில் நம்மை உள்வாங்கிக்கொள்ளும் படம், ரங்கநாதர் சிலை கடலுக்குள் வீசி எறியப்பட்டதும் தியேட்டரில் நம்மைத் துப்பிவிடுகிறது. மீண்டும் சுனாமியில் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. இந்த பத்து நிமிஷத்திற்காகத்தான் இவ்வளவு ஆர்பாட்டமுமா என்கிற எண்ணம் ஏற்பட்டுப்போகிறது. கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற வாலியின் வரியில் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. சைவ மன்னன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. வைணவக் கடவுளான ரங்கநாதர் இல்லை என்றே சொல்லுகிறான். அப்படியிருக்க ஏன் கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது ரங்கராஜன் நம்பி பாடுகிறார் எனத் தெரியவில்லை. கேயாஸ் தியரி என்று கமல் கதையளக்க கிராஃபிக்ஸ் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது. உண்மையில் இந்த கேயாஸ் தியரிக்கும் ரங்கராஜன் நம்பியை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் சைவ வைணவ மோதலுக்கும் படத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. கமல் ஆரம்பத்தில் பேசத் தொடங்கும்போது நாம் 12ஆம் நூற்றாண்டுக்குப் போகவேண்டிய தேவையுள்ளது என்று சொல்லி என்னவோ காரணம் சொல்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்த சைவ வைணவ மோதல் படத்திற்கு அவசியமே இல்லாத ஒன்று. பிராமணக் காட்சிகளின்மேல் கமலுக்கிருக்கும் காதல் நாம் அறிந்ததே. தொடர்ந்து நாத்திகக் கருத்துகளைச் சொல்லி வரும் கமல், தொடர்ந்து பிராமணர்கள் தொடர்பான காட்சிகளைத் தன் படத்தில் காண்பிக்காமல் இருப்பதில்லை. தனக்குத் தேவையான விளம்பரங்களைப் பெற இதுபோன்ற காட்சிகளையும், தனக்கு முற்போக்கு முகம் தரும் கருத்துகளைப் படம் முழுக்க அள்ளி வீசியுமிருக்கும் கமலின் பேனா மறந்தும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் பக்கம் திரும்பிடவில்லை. பேனா முனை முறிந்துவிடும் அபாயம் பற்றித் தெரிந்திருப்பதால், 'இந்து மதமே அபயம்' என்கிறார் கமல். ஸூடோ செக்யூலர்களின் தொடர் ஓட்டத்தில் கமலுக்கு இல்லாத இடமா, அன்போடு அழைத்து ஏற்றுக்கொள்கிறது 'எவ்வளவு நல்லவண்டா' மதம்.
கமலின் நடிப்பைப் பற்றியும் கமலின் கடும் உழைப்பைப் பற்றியும் சொல்லப் புதியதாக ஒன்றுமில்லை. அதே ஆர்வம், அதே அர்ப்பணிப்பு, அதே உழைப்பு. அசர வைக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முறை மேக்கப் கமலுக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பேசும் நாயுடுவும் புரட்சி செய்யும் தலித் கிறித்துவ போராளியும் கமலோடும் அதன் மேக்கப்போடும் ஒட்டிப்போவதுபோல் மற்ற வேஷங்கள் ஒட்ட மறுக்கின்றன. அவர் போட்டிருக்கும் ஐயங்கார் வேஷமும் எப்போதும்போல் ஒட்டிப்போகிறது, மேக்கப் இல்லாமலேயே. மொட்டைப் பாட்டியும் அவ்தார் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் தங்கள் முகம் எப்போது பிய்ந்து விழுமோ என்கிற பயத்துடன் நடிப்பது போலவே இருக்கிறது. குரலில் வித்தியாசம் காண்பிக்கிறேன் என நினைத்துக்கொண்டு, சன் டிவி மூப்பனார் பேசிய தமிழுக்கே சப்-டைட்டில் போட்ட தேவையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் கமல்.
உடல் மொழியைப் பொருத்த வரையில் பாட்டியின் குறுகலான உடலமைப்பை கடைசிவரை காப்பாற்றுவதில் கமல் ஜெயிக்கிறார். அதேபோல் தெலுங்கு நாயுடுவும் பூவரகனும் தங்கள் உடல்மொழியை சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். அவ்தார் சிங்கின் உடல்மொழியும் பேச்சும் செயற்கைத்தனமாக இருக்கிறது. இப்படி பத்துவேடங்களைப் பத்து பேர் செய்திருக்கிறார்கள் என்கிற எண்ணம்வர கமல் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிரமான உழைப்பு நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் கதை? உலகம் சுற்றும் வாலிபன், குருவி என அதன் தொடர்ச்சியில் வந்திருக்கும் இன்னொரு அம்புலிமாமா கதை. ஒரு வணிகப்படத்திற்கு அம்புலிமாமா கதை போதுமானதே. எந்தவொரு படமும் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும்போது வெற்றி பெறுகிறது. ஆனால் பெரும்பாலான வணிகப்படங்களில் இது சாத்தியமல்ல. ஆனால் அவை பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றாமல், பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு, படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடமால் கட்டிப்போடுவதில் பெரும் கவனம் கொள்கிறது. இதுவே கில்லி முதல் சிவாஜி வரையிலான வணிகப்படங்களின் முக்கிய நோக்கம். அந்த மூன்று மணி நேரத்தில் பார்வையாளர்களை லாஜிக் பற்றியோ படத்தில் தெரியும் சிறிய குறைகளைப் பற்றிப் பெரியதாக நினைக்கவோ நேரம் கொடுக்காமல், படத்தை செறிவாக அடைக்கப்பட்ட பண்டமாக மாற்றுவதில் தீவிர கவனம் கொள்கின்றன. இதைத் தவற விட்டிருக்கிறது தசாவதாரம். லாஜிக் ஓட்டையை அடிப்படையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதன்மேல் கட்டப்படும் காட்சிகளில் லாஜிக் தவறில்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. திரைக்கதை ஆசிரியராக இதில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் கமல்.
அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து பொந்துகளும் தெரிந்திருக்கிறது. அவர் பைக் ஓட்டுவதுபோல் தமிழ்நாட்டில் யாரும் பைக் ஓட்டமுடியாது. அப்படி 'ஓட்டியிருக்கிறார்' கமல். இந்த வில்லன் கமல் செய்யும் அக்கிரமங்களுக்குச் சற்றும் இளைத்ததல்ல, பகுத்தறிவு பேசிக்கொண்டு திரியும், அறிவியல் முனைவரான இன்னொரு கமல் செய்யும் ஓட்டுதல்கள். எப்படியும் கீழே விழும்போது அங்கே கார்கோ இருக்கப்போகிறது, அதன் கம்பி தட்டி மயக்கமாகப் போகிறோம் என்பதை முடிவு செய்தபின்பு ஏன் அத்தனை இழுவை அந்தக் கிருமியும் கமலும் கார்கோவில் ஏற எனத் தெரியவில்லை. மிக நீண்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கார்கோவிலிருந்து வரும் முனைவர் கமல் வசம் ஒரு ஐடி கார்டு கூட இருக்கக்கூடாது. ரா பிரிவின் உயரதிகாரி கிட்டத்தட்ட ஒரு லூஸு. இரண்டு நிமிடங்களில் போலிஸிடம் சொல்லியிருந்தால் தீர்ந்திருக்கவேண்டிய பிரச்சினையை திரைக்கதையாளர் கமல் பெருமாளுக்குச் சொல்லிவிடுகிறார். கலிகாலம் என்று பெருமாளும் ஓடுகிறார். உண்மையில் பைத்தியகாரப் பாட்டியாக வரும் கமல் செய்யும் பைத்தியக்காரத்தானங்களே மிக்குறைவு என்னுமளவிற்குப் பைத்தியக்காரத்தனங்கள் செய்கிறார்கள் மற்ற எல்லாரும். இருநூறு முகவரிகளில் சரியாகச் சிதம்பரம் போகிறார்கள் வில்லன் கமலும் மல்லிகா ஷெராவத்தும். ஒரு போலிஸ் தப்பித்து ஓடுகிறார். அவர் சென்று யாரிடமும் சொல்வதில்லை அறிவியலறிஞரான கமல்தான் நல்லவர் என்று. அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? யாருக்கும் தெரியாது. நட்டநடுத் தெருவில் மல்லிகா ஷெராவத்தைச் சுடுகிறார் வில்லன் கமல். ஆனால் போலிஸ் அறிவியலறிஞரை தீவிரவாதியாக அறிவிக்கிறது. மல்லிகா ஷெராவத் மார்பையும் இடுப்பையும் பிருஷ்டத்தையும் ஆட்டிவிட்டு, கடைசியில் தலையையும் ஆட்டிவிட்டுச் சாகிறார். இவரால் வேறெந்தப் பயன்களும் இல்லை, ஐந்து நிமிடங்கள் குஜாலான காட்சிகள் இருந்தது என்பதைத் தவிர. ஜெயப்பிரதாவைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை, கொடுமை என்பதைத் தவிர. அவ்தார் சிங் சீக்கிரம் செத்தால் நல்லது என்பதுபோல நடிக்கிறார். இந்தக் கொடுமைகளிலிருந்து நம்மையும் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றுகிறது நாயுடு பாத்திரம். அவர் தமிழே அழகு. மொபைல் ரிங்டோன் என்று தெரியாமல் பாட்டை ரசித்து ஆடுமிடமாகட்டும், எப்படி போலிஸ் துன்புறுத்துவார்கள் என்று லெக்சர் கொடுக்குமிடமாகட்டும் சிரிப்பை வரவழைக்கிறார். அதேபோல் தலித் இளைஞனாக வரும் கமலின் நடிப்பும் கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. ஆனால் கதையமைப்பைப் பொருத்தவரை இக்கதாபாத்திரமும் அசாருதீன் மாதிரி வந்து யாருக்குமே புரியாமல் என்னவோ பேசும் அப்பாவி முஸ்லிமும் அவசியமே இல்லாத பாத்திரங்கள்.
அறிவியலறிஞர் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். இசைக் 'கலைஞர்.' இவை இரண்டும் போதாதா நாத்திகக் கருத்துகளைப் பேச? படம் முழுக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கமல் நாத்திகம் பரப்பித் தள்ளுகிறார். ஆனால் காட்சி அமைப்பைப் பார்த்தால் ஆத்திகத்தை ஆதரிக்கும் காட்சிகளாக வருகின்றன. 'நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்' என்று சொன்ன மறுநிமிடமே 'ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது' என்று சொல்லிக் குழப்பும் ரஜினிக்கும் மேலாகக் குழப்புகிறது நாத்திகக் கருத்துகளும் ஆத்திகக் காட்சிகளும். கமல் எந்தப் பாலத்திலிருந்து எப்போது குதித்தாலும் எப்படியாவது ஒரு வண்டி வந்து அவரைக் காப்பாற்றிவிடுகிறது. எப்படி வண்டி வந்தது? அப்படி ஒரு வண்டியில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கமல் கடவுள் இருந்திருக்கலாம் என்பார். அந்தக் கல்லும் ஒரு கடவுள். அதுவும் சுனாமி வழியாக வந்து தன்னைக் கரைசேர்த்துக்கொண்ட கடவுள்.
பகுத்தறிவு பேசும் அறிவியலறிஞர் கமலுக்கு மூளை இல்லையோ என யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் வசனங்கள் கமலின் டாப் நகைச்சுவை. சுனாமியில் பத்தாயிரம் பேர் சாகிறார்கள். ஆனால் கிருமி பரவியிருந்தாலோ தமிழகமே, ஏன் இந்தியாவே இல்லாமல் போயிருந்திருக்கும். அப்படியானால் ஒரு பகுத்தறிவுவாதி எப்படி யோசிக்கவேண்டும்? நல்லவேளை சுனாமி வந்தது என்றுதான் யோசிக்கவேண்டும். ஆனால் அறிவியலறிஞர் கமலோ ராமசாமி நாயக்கரின் மகன். அவர் கேட்கிறார், பத்தாயிரம் பேர் செத்ததுதான் கடவுளோட செயலா என்று. அந்தப் பகுத்தறிவு நமக்கு வராது என்று ஏற்கெனவே புரிந்துவிட்டதால் அது பற்றிப் பேச ஒன்றுமில்லை என்பதும் தெரிந்துவிடுகிறது. பகுத்தறிவு அதோடு நிற்பதில்லை. ஒரு இஸ்லாமியர் சொல்கிறார், நாம இருநூறு பேர் மசூதிக்குள் இருந்ததால்தான் தப்பித்தோம் என்று. அப்போது அங்கே யாரும் கேள்விகள் எழுப்பவதில்லை, செத்த பத்தாயிரம் பேருக்கு என்ன பதில், அதுதான் அல்லாவின் கருணையா என்று. ஏனென்றால் பகுத்தறிவு பேசுபவராக வரும் கமல் பிறந்தது தமிழ்நாட்டில். அவர் எங்கு வேலைக்குச் சென்றாலும், என்ன டாக்டர் பட்டம் பெற்றாலும் அவருக்குத் தெரிவதென்னவோ தமிழகம் தந்த பகுத்தறிவு மட்டுமே. இந்து மதத்தை விமர்சிப்பது நடுநிலைமை, மற்றெந்த மதத்தையும் பாராட்டுவதும், விமர்சிக்காமல் இருப்பதும் முற்போக்கு என்பது கமலுக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டிருக்கிறது. அறிவியலறிஞர் கமலை நாயுடு விமர்சிக்கும்போது தேவையே இல்லாமல் கேட்கிறார், 'நீ ஐஎஸ்ஐயா, அல் குவைதாவா' என்று. என்னடாவென்று பார்த்தால், கடைசியில் ஒரு இஸ்லாமியரிடம் அதே கேள்வியைக் கேட்கவேண்டியிருக்கிறது. முதலில் ஒரு காட்சியில் இதைச் சொல்லாமல் கடைசியில் மட்டும் கேட்டுவைத்தால் வரும் எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பது கமலுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அரசியலில் இந்தப் பாகுபாடு கமலுக்கு இல்லை. உச்சகட்ட காட்சியில் கருணாநிதி வரப்போகிறார் என்றதுமே சுனாமியைப் பார்வையில் ஜெயலலிதா வந்துவிடுகிறார். ஏனென்றால் நிஜக்கமல் பிறந்ததும் தமிழ்நாடு என்பதால் அவருக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. இந்து மதத்தின் மீது வைக்கும் விமர்சன 'தைரியம்', அரசியலின் மீது கிடையாது. நல்லதுதான், இல்லையென்றால் அடுத்த ஆட்சியில் அடுத்த படம் வருமா என்பது யாருக்குத் தெரியும். 'சண்டியரை' 'விருமாண்டியாக்கிய'வரிடம் மோத யாருக்குத் தைரியம் வரும்? மோதவேண்டுமென்றால் இருக்கிவே இருக்கிறது ஒரு 'தமிழ்நாட்டு செக்யூலரின்' வழி. பிறகென்ன கவலை?
வசனகர்த்தாவாக கமல் அதிகம் சொதப்பிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு வசனம் என்பது அது பேசும் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது என்பதைக்கூடவா கமல் புரிந்துகொள்ளவில்லை? மிகவும் சீரியஸான கட்டங்களில் ஆளாளுக்கு கிரேஸித்தனமாக வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். அறிவியலறிஞரில் தொடங்கி, லூஸு பாட்டியிலிருந்து, அவ்தார் சிங் வரை எல்லாரும் நாயுடு மாதிரியே பேசிக்கொண்டு திரிகிறார்கள். போதாதற்கு நேரம்கெட்ட நேரத்தில் ஜோக்கடிப்பதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டும் நாகேஷும் கே.ஆர். விஜயாவும். இப்படி ஆளாளுக்குப் பேசும் வசனங்களில் படம் பல காட்சிகளில் கிரேஸி மோகன் நாடகம் போல ஆகிவிட்டது. இந்த சொதப்பலில் சில நல்ல வசனங்கள் நினைவுக்கு வராமலேயே போயிவிடுகின்றன. ('உங்கள மாதிரி ஒரு தெலுங்கன் வந்து தமிழைக் காப்பாத்துவான் சார்' - நான் ரசித்த வசனத்தில் ஒன்று.)
பின்னணி இசையில் பேரிசைச்சலே முதன்மை பெறுகிறது என்றாலும் மோசமில்லை. குறிப்பாக நாயுடு 'தெலுங்கா' என்று கேட்கும் காட்சியில் வரும் இசை. பாடலில் கல்லை மட்டும் கண்டால் பாடலும் முகுந்தா முகுந்தா பாடலும் நன்றாக இருக்கின்றன. முகுந்தா முகுந்தா பாடலில் தோல் பாவைக்கூத்து காட்டுகிறார் பிராமணரான அசின். எனக்குத் தெரிந்து எந்த பிராமணரும் தோல் பாவைக்கூத்து செய்வதில்லை. மண்டிகர் சாதியைச் சேர்ந்தவர்களே தோல் பாவைக்கூத்து செய்கிறார்கள்.
ஒளிப்பதிவின் குளுமை படம் முழுக்க வரும் கிராஃபிக்ஸில் காணாமல் போய் ஒருவித எரிச்சலே காணக் கிடைக்கிறது. நெட்டைக் கமல் வரும் பெரும்பாலான காட்சிகளில் அவர் தலை பாதி தெரிவதில்லை. நெட்டைக் கமலைப் பார்த்து பேசுவதாக நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுகிறார்கள். கிராஃபிக்ஸ் கோளாறு. அதிகம் செலவு செய்துவிட்டால் பிரம்மாண்டம் வந்துவிடாது என்பதற்கு குருவியும் தசாவதாரமும் உதாரணங்கள். சிவாஜி திரைப்படத்தின் பிரம்மாண்டம் அதன் செலவுகளில் மட்டுமில்லை, ஷங்கரின் திறமையில் உள்ளது.
பல லாஜிக் ஓட்டைகளுக்கு மத்தியில், நாத்திகப் பிரசாரத்திற்கு மத்தியில், ஒட்டாத மேக்கப்புகளூக்கு மத்தியில் கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அசின் நன்றாக நடித்திருப்பதும், நாயுடு கொண்டு வரும் சிரிப்பும் இல்லாவிட்டால் படத்தை குப்பையாகச் சேர்த்திருந்திருக்கலாம். கமலின் உழைப்பை மட்டும் மனதில் கொண்டு, மாறுவேடப் போட்டி பார்ப்பது போல் பார்க்கலாம்.
கடைசியாக ஒரேயொரு சந்தேகம். 'தசாவதாரம்' என்பது தமிழ் கிடையாது. எப்படி இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தந்தார்கள்? சிவாஜி படம் வந்தபோது அதற்குப் பெயர்ச்சொல் என்கிற விளக்கம் தரப்பட்டது. இதற்கு என்ன விளக்கமோ? பேசாமல் தன்னைப் புகழும் எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வரிவிலக்கு தரலாம் என்று அரசு அறிவித்துவிடலாம். கேள்விகள் எழாது.
மதிப்பெண்கள்: 41/100
19 comments:
ஐயா,
மிகுந்த யோசிப்புடன் நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள் என்பது படிக்கும் போது தெரிகிறது. விசிலடிச்சான்குஞ்சுகளின் ஆகா, ஓகோ விமர்சனங்களுக்கும், காழ்ப்பு நிறைந்த "சாதிமல"ங்களின் வெறுப்பு விமர்சனத்துக்கும் இடையே இப்படி ஒரு அலசல் நிச்சயம் தேவைதான். உங்களுக்கு உறுப்பினர் கார்ட் அவசியம் கிடைக்க வேண்டும்.
ஆனால், நடுநிலைமையோடு பார்த்தால் இந்த படத்தை நீங்கள் கிழித்து தொங்க விட்டு வீட்டீர்களே, அதுபோலத்தான் பார்க்க தோன்றுகிறது. கதையில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் அது அந்த லாஜிக் பார்க்கும் லாஜிக்கை கூட மறந்து கட்டிப்போட வேண்டும் என்று அலசியிருக்கும் இந்த விமர்சனம் அருமை.
நன்றி
ஜயராமன்
Good work. Keep watching all the latest tamil movies and post your comments.
Saravana Kumar, bangalore
+919880761456
//'நீ ஐஎஸ்ஐயா, அல் குவைதாவா' என்று. என்னடாவென்று பார்த்தால், கடைசியில் ஒரு இஸ்லாமியரிடம் அதே கேள்வியைக் கேட்கவேண்டியிருக்கிறது. முதலில் ஒரு காட்சியில் இதைச் சொல்லாமல் கடைசியில் மட்டும் கேட்டுவைத்தால் வரும் எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பது கமலுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும்//
சரியாக கவனித்துள்ளீர்கள். நம்ம செக்யூலர்வியாதிகளின் குணாதியசங்கள் தெரிந்ததுதானே. இதில் கமல் விதிவிலக்கா? அவரும் அந்த குட்டையில் ஊறின மட்டைதானே.
Very Good review.
என்ன நடக்குது இங்கே உலகத்துல ஒண்ணுமே புரியமாட்டேங்குதே கண்ணை கட்டுதே
நல்ல விமர்சனம்.
நன்றி
பிரசன்னா, வலையெங்கும் கொட்டிக் கிடக்கும் தசாவதார விமர்சனங்களைப் பற்றி விமர்சனம் எழுதினால் அதில் முதல் மார்க் உங்களுடையதற்குத் தான்.
விட்டால் படத்தில் மச்சாவதாரத்தையும், வராகாவதாரத்தையும் கூட தமிழர்கள் தரிசித்து புல்லரிப்பார்கள் (பத்ரி பதிவில் ஒருவர் மெய்யாலுமே அப்படி செய்திருக்கிறார்). இந்தச் சித்ரவதைகளுக்கு மத்தியில் உங்கள் விமர்சனம் பெரும் ஆறுதல் தருகிறது.
ரசிப்புத் தன்மை, கலை, சமூகம், திரைப்பட நுணுக்கங்கள் என்று அனைத்துப் பார்வைகளாலும் படத்தை அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். பஞ்ச் லைன்கள் அருமை.
After reading such an erudite thrashing review, I tend to feel the movie was acually worth it for the money and hype, for it brought out an "artistic display" so much of muck that the popular Tamil politics, society and its Ulaga Nayakan have stored up!
The film reminds me of the song in the film "Thiruvilayadal", where Lord Shiva to contain the EGO of the singer (Balaiya) sings the song, "Paattum Naane, Bhavamum Naane...". If we could stretch this song, it aptly fits to describe the K in Dasavatharam
மிக நல்ல விமர்சனம் இது..
“எந்தவொரு படமும் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும்போது வெற்றி பெறுகிறது. ஆனால் பெரும்பாலான வணிகப்படங்களில் இது சாத்தியமல்ல. ஆனால் அவை பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றாமல், பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு, படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடமால் கட்டிப்போடுவதில் பெரும் கவனம் கொள்கிறது. இதுவே கில்லி முதல் சிவாஜி வரையிலான வணிகப்படங்களின் முக்கிய நோக்கம். அந்த மூன்று மணி நேரத்தில் பார்வையாளர்களை லாஜிக் பற்றியோ படத்தில் தெரியும் சிறிய குறைகளைப் பற்றிப் பெரியதாக நினைக்கவோ நேரம் கொடுக்காமல், படத்தை செறிவாக அடைக்கப்பட்ட பண்டமாக மாற்றுவதில் தீவிர கவனம் கொள்கின்றன. இதைத் தவற விட்டிருக்கிறது தசாவதாரம்”
பார்வையாளர் பங்கேற்பாளர் குறித்த தங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன்.பங்கேற்பு என்ற சொல்லின் அர்த்தம் படத்தின் Genreக்கு ஏற்ப மாறுபடும். ஒரு Romantic comedyயில் பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாக மாற்ற முயன்றால் படம் வெற்றி பெருமா என்பது சந்தெகமே. சிவாஜியோ கில்லியோ பார்வையாளர்களை பார்வைவையாளர்களாகவே பார்க்கிறது. தன் உலகத்துக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. அவர்களின் கனவு கலையாமல் இருக்கவே பெரும்பாடு படுகிறது. இதில் உள்ள பங்கேற்ப்பு வேறு வகையானது. தசாவதாரம் வேறு வகை. இதில் பார்வையாளர்களின் கனவை அவ்வப்போது கலைக்கவே அது முற்படுகிறது. 'இது எந்த கமல்..அடுத்த கமல் எப்போ வருவார்' என்ற ஒரு எதிர்பார்ப்பை பார்வையாளர்களின் கனவைக் கலைத்து உருவாக்குகிறது. Anti-Novel போல் இது Anti-Cinema. இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஒழுங்காக இதை செயற்படுத்தவில்லை என்றால் படத்தில் கதையோட்டத்தில் பல jerkகுகள் இருக்கும். தசாவதாரத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
முதலில் ஒரு நல்ல விமர்சனத்துக்கு நன்றி. திரு ஜெயராமன் சொல்வது போல ஒரு 'Agenda' இல்லை உங்கள் எழுத்தில். இந்தப் படம் என்னைப் பொறுத்தவரை ஒரு முழுமையான வணிகப்படம். கமலுக்கு வணிக வெற்றி மிக அவசியமாகவும் அவசரமாகவும் தேவை. ஓரளவுக்காவது நல்ல படங்களான அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்கள் பின்னர் அறவே ஒழிந்துவிடும். ஒரு புறம் தோல்வியாகும் அவரது தீவிர முயற்சிகள் (அஃது நல்ல விமர்சகர்களை திருப்தி அடைய வைக்கவில்லை எனினும்) (ஹே ராம், விருமாண்டி, மஹாநதி, குணா); மறுபுறம் அவர் நகைச்சுவை நடிகராகிவிட்டரோ என அஞ்ச வைக்கும் பம்மல், பஞ்சதந்திரம், காதலா, தெனாலி, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற வணிக வெற்றிப் படங்கள். இந்த சூழலில் இந்தப் படம் இப்படி எடுக்கப் பட்டதை என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடிவதால், பெரிய ஏமாற்றமோ, எரிச்சலோ எதுவும் அடையவில்லை. இது கே.எஸ்.ரவிகுமாரின் படம். கமல் என்னும் நடிகர் தனது திறமைகளையும் காட்டியுள்ளார் என்று கொண்டால் பெரிய குறையொன்றுமில்லை இப்படத்தில்.
வணிக முனைப்பு என்றாகிவிட்டபின் 'அரசியல் சரிநிலை' (சாதி, மதம், கட்சி, கடவுள் உட்பட) என்பது தவிர்க்கமுடியாதது மட்டுமின்றி அவசியமாகவும் இருப்பது நடைமுறை உண்மை.
உங்கள் விமர்சனத்துடன் முற்றிலும் ஒத்துப் போகிறேன். அதே சமயம், படம் ஏன் இப்படி எடுக்கப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்னால்.
ராஜா
நான் இன்னும் படம் பார்க்கவில்லை ;;
ஆனாலும் உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது என சொல்ல முடியும்
சிரத்தையுடன் எழுதிருக்கீங்க
படித்த பல விமர்சனங்களில் உருப்படியான ஒன்று. நச்
”கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற வாலியின் வரியில்” அர்த்தமே இல்லாத வரிகளா?
”மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை” என்ற திருமூலரின் பாடலின் உல்டா அன்றோ அது?
இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா !!!
ஓரு ரசிகனின் பார்வையில்:
http://madsmusings.wordpress.com/2008/06/23/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/
கதையில் பல “லாஜிக்” ஓட்டைகள் இருப்பது உண்மை. அதை சுட்டி காட்டியிருக்கலாம்.
படத்தின் சில விஷயங்கள் உங்களை பாதித்துவிட்டதால், எதோ எழுதவேண்டும் என்ற அளவில் வேக வேகமாக எழுதியிருப்பதால், படத்தில் உள்ள ஓட்டைகளை விட உங்கள் விமர்சணத்தில் அதிகம் ஓட்டைகள்
உதாரணமாக
//கார்கோவிலிருந்து வரும் முனைவர் கமல் வசம் ஒரு ஐடி கார்டு கூட இருக்கக்கூடாது. //
சாமி, அவர் கோவிந்த் என்பதை மட்டும் தான் அடையாள அட்டை வைத்து நிருபிக்க முடியும். அவர் கோவிந்த் என்பதில் பலராமுக்கு எந்த சந்தேகமும் கிடையாது.
பிரச்சனை அவர் “நல்லவரா, கெட்டவரா” என்பதில். (கெட்டவர் - கிருமியை திருடியவர்)
அதை அடையாள அட்டை மூலம் நிருபிக்க முடியாது.
:)
//கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற //
என்னது :) :)
//நட்டநடுத் தெருவில் மல்லிகா ஷெராவத்தைச் சுடுகிறார் வில்லன் கமல். ஆனால் போலிஸ் அறிவியலறிஞரை தீவிரவாதியாக அறிவிக்கிறது.//
காவல்துறை, அவர்களுக்கு முதலில் கிடைத்த தவறான தகவலை நம்பிவிடுவதால்
நானும் படத்தை பல இடங்களில் கிழித்திருக்கிறேன் (ஆனால் கிழிக்க வேண்டிய இடங்களில் மட்டும் தான்)
http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html
The Best review sofar in Blogs. Good work...keep posting. I am a Kamal fan, but I could not accept his approch on Hindus. Treat all religions same way, if he is not dare to do so, don't try to hurt somebody.
கட்டாயத்தின் படியால் நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் வாசித்தேன். உங்கள் விமர்சனம் அல்லது உங்கள் opinion எனக்கு ஒப்பவில்லை.
படம் வெளியான முதல் நாளிலிருந்து இன்று வரை, பல பேர் சொல்லியிருப்பது போலத்தான் குறை சொல்லியிருக்கிறீர்கள். ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.
இதில் நீங்கள் குறைகூறிய "கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது" பொருளற்றது என்ற வாதம் மட்டும் unique. அதனால் அதற்கு மட்டும் பதில். கிருமிகண்ட சோழன் ரங்கராஜ நம்பியிடம் "இந்தக் கல் கடலுக்குள் மூழ்கப் போகிறது" என்று சொல்லுவார். கல்லாக அதைப் பார்க்காமல், தனது ஹரியாக பாவிக்கும் நம்பிக்கு அந்த வாக்கியம் உரைத்ததால்.. அந்த வரிகள் பாடலைத் துவக்குகின்றன.
படத்தில் இரசிப்பதற்கு பல விஷயங்கள் இருந்ததாலும், இன்டெர்னெட்டில் விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததாலும், நன்கு ரசித்துப் பார்க்க முடிந்தது.
திரு ஹரன்ப்ரசன்னா அவர்களே
நீங்கள் கூறிய அனைத்தையும் ஒப்புக் கொள்ளுகிறேன்
முக்கிமாக முகமதியராக வரும்
நாகேஷ் நல்லவேளை நாம் எல்லாம்
மசூதி உள்ள இருந்ததனால் தப்பித்தோம் என்கிறார்,அதற்கு பதிலாக இத்தனை பேர் செத்துப் போய்ட்டாங்களே எல்லாரும் மசூதி உள்ள வந்திருந்தா அல்லா காப்பாத்தி இருப்பாரே என்று சொல்லி இருந்தால்
அவருடைய கதாபாத்திரமும் நியாயப்படுத்தப் பட்டிருக்கும்
ஒரு நல்ல நடிகரை வீணடித்துவிட்டார் கமல்
அது மட்டுமல்ல அத்துணைபேர் இறந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது கமலும் அசினும் தனியாக ஒதுங்கி சூழ்நிலையின் துயரம் சிறிதும் பாதிக்கப் படாமல் தங்கள் காதலை
உறுதிப்படுத்திக் கொள்ளும் அவலம்
எதேச்சையாக சந்தித்த அசினின் காதலை உறுதிப்படுத்த
நான் எப்போது கடவுள் இல்லைன்னு சொன்னேன் ,கடவுள் இருந்தால் நல்லதுன்னு சொன்னேன் என்கிறார்
கமல் நல்ல படமா எடுத்திருந்தால்
நல்லா இருக்கும்னு சொன்னா ஒப்புக்கொள்ளுவாரா...?
கமல் நல்ல படம் எடுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை...!!!
எனெக்கேன் வம்பு,,,,?
அன்புடன்
தமிழ்த்தேனீ
எந்த ஊரில் முஸ்லிம்கள் இவ்வாறு தமிழ் பேசுகிறார்கள் என்று என்ணாக்கு புரியவில்லை. இன்னும் சொல்ல போனால் ராமநாததபுரம் முஸ்லிம் பேசும் தமிழ்
நடை கேட்பதற்கே இனிமையாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்களுக்கு தேவையான எல்லா இஸ்லாமிய நூலும் தமிழில்
இருக்கிறது. வேறு மொழியைும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு. ஏன் கமல் முஸ்லிம்களை இவ்வாறு அந்நியப்படுத்த முயற்சிக்கிறார்
என்று புரியவில்லை. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் மக்கள் தொகை இல் வெறும் 2.5 % தான் உருதுவை தாய் மொழியாக கொண்டவர்கள்
மற்றவர்கள் எல்லாம் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தான்.
ungal vimarsanam nanraga irunthathu..i am a die hard fan of kamal, but still i didnt like the movie, it has got lots of flaws as you said. I feel its not enough that our big time directors, actors not only watch world cinema, but concentrate of making atleast one film is in its substance (quality, standard can not be commented). No need to go out of India, its enough if they see some Malayalam and Bengali films...
Post a Comment