Sunday, October 26, 2008

Spirited Away



2001ல் வெளியான அனிமேஷன் திரைப்படம். இயக்குநர்: Hayao Miyazaki

புதிய நகருக்குக் குடிபெயர்கிறார்கள் Chihiroம் அவளது பெற்றோரும். குறுக்கு வழியில் செல்லும்போது தன் வழியை இழக்கும் Chihiroன் பெற்றோர்கள் ஒரு பாழடைந்த தீம் பார்க் போன்ற ஓரிடத்தை அடைகிறார்கள். ஆரம்பம் முதலே அவ்விடத்திற்குச் செல்லவேண்டாம் எனச் சொல்லும் Chihiro வின் பேச்சைக் கேட்காமல் அங்கே செல்கிறார்கள் அவளது பெற்றோர். அங்கு பல உணவிடங்கள் இருக்கின்றன. ஆனால் யாரையும் காணவில்லை. ஒரு உணவிடத்தில் சுடச்சுட உணவு தயாராகக் கிடக்க அந்த உணவை உண்ணத் தொடங்குகிறார்கள். Chihiro உண்ண மறுத்து, அவ்விடத்தை விட்டு விலகி வேறு இடத்திற்குச் சென்று பார்க்கிறாள். அங்கே ஒரு பாய்லர் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது அங்கே Haku என்னும் சிறுவன் வந்து, விளக்கேற்றுமுன் அவளை உடனே அங்கிருந்து ஓடச் சொல்கிறான். பகல் மறைய விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. காரணம் புரியாது Chihiro தன் பெற்றோரைத் தேடி உணவகத்திற்கு ஓடுகிறாள். அவர்கள் அங்கே பன்றிகளாக உருமாறியிருக்கிறார்கள். அதுவரை அங்கே யாருமில்லாமல் இருந்த இடங்களிலும், உணவகங்களிலும் ஆவிகள் உலவுகின்றன. Chihiro என்ன செய்வது எனத் தெரியாமல் பயந்து நடுங்குகிறாள். அவளது உடலும் மறையத் தொடங்குகிறது. மீண்டும் Haku அவளுக்கு உதவுகிறான். உண்ண ஒரு உருண்டையைக் கொடுத்து அவளின் உருவத்தை மீண்டும் கொண்டுவருகிறான். மனிதர்களுக்கு அங்கே இடமில்லை என்றும், அதை மீறி மனிதன் அங்கே தங்கவேண்டுமானால் அவ்விடத்தின் சூனியக்காரியான Yubaba விடம் அவ்விடத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்றும் சொல்கிறான். தான் அவளுக்கு நண்பன் என்றும் சொல்கிறான்.

Yubaba நடத்தும் ஆவிகளுக்கான குளியளிடத்தில் வேலை கேட்கிறாள். முதலில் தர மறுக்கும் Yubaba கடைசியில் அவளுக்கு வேலை தருகிறாள். அதற்கு பதிலாக Chihiroவின் பெயரை வாங்கிக்கொள்கிறாள். அவளுக்கு சென் என்கிற பெயரைத் தருகிறாள். இனி Chihiroவின் பெயர் சென் என்பதுதான். பின்பு அவளைச் சந்திக்கும் Haku, இப்படி பெயரை மறக்கடிப்பதன் மூலமே தங்கள் பழைய விஷயங்களை மறக்கச் செய்கிறாள் Yubaba என்கிறான். தானும் அப்படி பெயர் ம்றந்தவனே என்றும் சொல்லிவிட்டு, சென் தன் உண்மையான பெயரான Chihiroவை மறக்கக்கூடாது என்று சொல்லி அதை எழுதிக்கொடுத்துவிட்டு, டிராகனாக மாறிப் பறந்துபோகிறான்.

அங்கே வேலை செய்தபடியே எப்படி தங்கள் பெற்றோரை மீட்கிறாள் என்பதே மீதிக்கதை.

ஆவிகள் குளியலறைக்குக் குளிக்கவரும் முகமற்ற, துர்நாற்றம் பீடித்த ஆவியொன்றிற்கு சென் குளிக்க உதவுகிறாள். அது மகிழ்ந்து அவளுக்கு ஓர் உருண்டையைத் தருகிறது. அதைத் தின்றால் தங்கள் பெற்றோர்கள் உருவம் பெறுவார்கள் என நம்புகிறாள். இரக்க மனம் படைத்த சென் அதை தன் பெற்றோருக்குத் தருவதற்கு முன்பாகவே, Haku டிராகனுக்கும் உடலற்ற இன்னொரு ஆவிக்கும் தந்து உதவுகிறாள். Haku டிராகனைத் துரத்தி வரும் பேப்பர் பறவையான சூனியக்காரியின் தங்கையான இன்னொரு சூனியக்காரி Zeniba, தன் அக்காவின் இராட்சத மகனையும், தன் அக்காவின் பறவையான காக்கையையும் சிறு குழந்தையாகவும் ஹம்மிங் பறவையாகவும் மாற்றிவிட்டுச் சென்றுவிடுகிறாள். சிறுகுழந்தையும் ஹமிங் பறவையும் சென்னுடன் கூடவே செல்கிறார்கள். Hack டிராகன் தங்கை சூனியக்காரி Zenibaவின் சூனியக்கோளத்தை திருடிவிட்டதால் அவனைத் துரத்திக்கொண்டு வந்தவள், சென்னின் உதவியால் அவனை ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறாள். தன்னிடமிருக்கும் உருண்டையை வைத்து Hakuவைக் காப்பாற்றும் சென், Zenibaவின் சூனியக்கோளத்தை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்று கொடுக்கிறாள். மனம் மகிழும் Zeniba, இனி தன் அக்காவால் Hakuவை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி அனுப்புகிறாள்.

இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடும் Yubaba கடும் கோபத்துடன் Hakuவிடம் கேட்கிறாள். தான் அக்குழ்ந்தையை மீட்பதாகவும் அப்படி மீட்டுவிட்டால் சென்னையும் அவர்களது பெற்றோரையும் விட்டுவிடவேண்டும் என்றும் கேட்கிறான். ஒரே ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறாள் Yubaba. சென் Yubabaவின் மகனை அவளிடம் ஒப்படைக்கிறாள். Yubabaவின் கடைசி பரிட்சைக்கும் தயாராகிறாள். கூடிக்கிடக்கும் பன்றிக்கூட்டத்தில் சென்னின் பெற்றோரை சரியாகக் கண்டுபிடிக்கச் சொல்கிறாள் Yubaba. அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவளுக்கு விடுதலை, இல்லையென்றால் அவளின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதுதான் கடைசி பரிட்சை. மிகச்சரியாக, அப்பன்றிக்கூட்டத்தில் தன் பெற்றோர் யாருமில்லை என்று சொல்லி வெல்கிறாள் சென். Chihiro என்கிற தனது பெயரோடு தன் பெற்றோரைத் தேடி ஓடுகிறாள். அவர்கள் முதலில் வந்த பாழடைந்த தீம் பார்க்கில் இவளைத் தேடி நிற்கிறார்கள். அவர்களுக்கு இப்படி நேர்ந்த எதுவுமே தெரிவதில்லை. அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

இப்படத்தை சுருக்கமாக அனிமேஷன் கலக்கல் என்று சொல்லலாம். யாருமற்ற உணவகத்தில் திடீரென விளக்குகள் ஒளிர்வதும், எல்லா இடங்களிலும் உடலற்ற ஆவிகள் தோன்றி குளிக்கச் செல்வதும், உண்ணச் செல்வதும், அப்போது வரும் பின்னணி இசையும் ஒரு அனிமேஷன் பிரம்மாண்டத்தை நிகழ்த்துகின்றன. டிராகன் வரும் காட்சிகள் எல்லாம் அனிமேஷன் போன்றே இல்லை. அவ்வளவு கச்சிதம். கற்பனையின் உச்சம் பல காட்சிகளில் தென்படுகிறது. கடலுக்குள் தண்டவாளமும், கடலில் தொடர்வண்டி செல்வதும், சென்னுக்கு விளக்கே நட்ந்து சென்று வழிகாட்டுவதும், தவளையை உண்டு தவளைக் காலுடன் நடக்கும் உடலற்ற ஆவியும் என பல இடங்களில் கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. முகமற்ற பேய் குளிக்க செய்யும் ஏற்பாடுகளும் சிறிய சிறிய கருப்பு உயிரினங்கள் கரியை சுமந்து பாய்லரில் போடுவதும், ஏகப்பட்ட கைகளுடன் இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்யும் மனிதனுமாக அனிமேஷன் ஒரு பெரிய பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த அனிமேஷன் கலக்கலுக்கு மிகப்பெரிய பலம் அதன் பின்னணி இசை.

அனிமேஷன் படங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. எல்லோரும் ரசிக்க அதில்தான் எத்தனை காட்சிகள். உலகெங்குமுள்ள அனிமேஷன் ரசிகர்களின் 'சிறந்த பத்து அனிமேஷன் படங்கள்' பட்டியலில் இப்படம் எப்படியும் இடம்பெற்றிருக்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

1 comment:

ISR Selvakumar said...

கதையை விளக்கமாகக் கூறி, பார்க்கவேண்டுமென்ற ஆவலை அதிகப்படுத்திவிட்டீர்கள். நன்றி!