ஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க!’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்...’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு!
நிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக்! பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள்? பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு! குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.
கூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். :-) அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை! புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். :-)
அருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.
இனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்!) வந்துவிடும்.
பின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. :-)
அவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.
குமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))
பின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.
‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா? பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.’
உடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.
‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே? அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.
2 comments:
அப்டீன்னா இனி மருதன் கம்யூனிசம் எழுத மாட்டாரா? விடுதலைப் புலிகள் புக் எங்கேதான் கிடைக்கும்?
இங்கே படிக்கவும்.
http://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post_09.html
இங்கே வாங்கவும்.
www.nhm.in
Post a Comment