Sunday, January 11, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி

இது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது! ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்‌ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.

கேண்டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.

இன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.

எனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.

காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.

கீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.

அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.

தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.

இலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.

நேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.

No comments: