வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.
மொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.
நேற்று ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.
சில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். :-)
நாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் உட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.
இன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.
இவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.
பின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.
2 comments:
அநத ஆசிரியரை எனக்குத் தெரியும். அடிபட்ட காரணமும் தெரியும்.
""ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.”
இதுதான் கண் பட்டுவிட்டது போல இருக்கு. சீக்கிர்ம் வந்து ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பதிவுகள் போட்டு பழி வாங்கவும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
நடராஜன்
//பின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.//
:-)))))))))))
Post a Comment