வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.
நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா...’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. :-) கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.
தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.
மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’
இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.
’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.
5 comments:
/*புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம்.*/
சில எழுத்தாளர்களின் எழுத்தை விட, இதை ஜீரணிப்பது சுலபம் அல்லவா..?
குழந்தைகள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்
/*தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.*/
இப்படி அவங்க வாங்கிட்டு போற புக்ஸை, நீங்களே பிடுங்கி கொண்டால், அடுத்த வருஷம் அந்த பக்கம் அவரு தலை வைத்து படுப்பாரா....?
கி...கி....கி....
//காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.
//
It is very true in my case
///தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார்.///
ஃ ஃ ஃ ஃ நெனப்புதாம்லே பொழைப்பைக் கெடுக்குது. வருஷா வருஷம் எனக்கு இலக்கிய ஜுரம் வரலேன்னா ஒரு மோசமான இலக்கியவியாதிக்கு புத்தகம் வாங்கித்தரதா நேர்த்திக்கடன். :((
Is there a website for infomaps?
Post a Comment