Sunday, July 5, 2009

குதலைக் குறிப்புகள் - 6

நீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.

பள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

இப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!

பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.

பள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.

நல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.

மதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.

மாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.

மாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் - எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.

என் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு 'மாதிரி ஆசிரியர்.' அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.

5 comments:

கானகம் said...

ஆசிரியர் மாணவர் உறவுமுறைகளையும், ஜாதி உணர்வுகொண்ட ஆசிரியர்களைக் காண நேர்ந்ததின் விளைவா ?? சும்மா அடிச்சு ஆடியிருக்கிறீர்கள். சுத்தம் சூருபோடும், சுகாதாரம் கொளம்பு ஊத்தும் என கிண்டல் செய்திருக்கிறேன். அவ்வளவு வெறுப்பு இருவது.. ஆனால் சில சமயங்களில் அப்படி வளர்க்காமல் விடப்பட்டிருந்தால் நகர மாணவர்கள் போல மனனம் செய்து வாந்தி எடுக்கும் ஒருவனாகத்தான் ஆகி இருப்பேன். அப்படி இல்லாமல் அப்படி சிரமப் படுத்தப்பட்டதை நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் கலந்ததுதான் பள்ளி அனுபவங்கள். நன்றாக இருந்தது உங்களது குதலை

ரா.கிரிதரன் said...

//மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.//

என் பள்ளியிலும் இதைப் போன்ற நிகழ்வுகளைப் பார்த்துள்ளேன். என்னுடன் படித்த நண்பனின் அப்பா தினமும் அவனுக்கு மதிய சாப்பாடு கொண்டு வருவார்.

ஒரு நாள் சாப்பாடைக் கொடுத்துவிட்டு சும்மா போகாமல், `உன் பிரெண்ட்ஸையெல்லாம் அறிமுகப்படுத்து` என்றார் பெருந்தன்மையாக. வரிசையாக தன் காமெண்டுகளை வாரிவிட்டுக்கொண்டிருந்தார் - பனிரெண்டு வயதுகூட முடியாத எங்களிடம் - `அய்யரா(அய்யர்/அய்யங்காருக்கு பலருக்கும் வித்தியாசம் தெரியாதது ஆச்சர்யமாக இருக்கும் அப்போதெல்லாம்) பாம்பை விடு,பாப்பான அடி`. கிறுஸ்துவனா - `ஞாயித்துக்கெழமை போய் பாவ மன்னிப்பு கேப்பயில்லை?` - என அடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.

அதற்கு சிரித்து மழுப்பினாலும், பின்னர் நண்பர்கள் அதையே ரிப்பீட்டு செய்தனர் - கோபமான நேரத்திலும் அதேதான்.

இது ரொம்ப சர்வ சர்தாரணமாக நடக்குமென தெரியாததால் - நான் என்ன தப்பு செய்தேனென - பல நாள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன்.

அதன் பிறகே என் தாத்தா செய்யும் பல கிரியைகளுக்கு எதிர் கேள்வி கேட்கத் தொடங்கினேன், சின்னபுள்ளத் தனமாக !!

ny said...

:)

ஜடாயு said...

வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் பிரசன்னா.

ஹிந்து உணர்வுடன் நடத்தப் படும் பல பள்ளிகள் அதிக கட்டணம் வாங்குபவையாக இருக்கின்றன (குறிப்பாக சென்னை போன்ற நகர்களில்) என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மை. இவை தனியார் அறக்கட்டளைகளால் நடத்தப் படுபவை. இவை முற்றாக வணிக நோக்கமும், அதே சமயம் முற்றாக சேவை மனப்பான்மையும் இல்லாதவை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஸ்பேஸ் இவர்களுடையது. இத்தகைய பள்ளிகள் தான் இனிவரும் காலங்களில் பெருகும்.. ஒரு கட்டத்தில் கட்டணங்கள் சரிவிகித நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தலித் மாணவர்கள் பள்ளிகளில் அவமதிக்கப் பட்டது அம்பேத்கர் போன்ற சரித்திர நாயகரின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்று விட்டது. அது பலருக்கும் தெரியவரும்.

ஆனால் தமிழகத்தில் பள்ளிகளில் புழக்கத்தில் இருந்த/இருக்கும் பள்ளிக் சாதிய ஸ்டீரியோடைப்பிங் & அதன் விளைவுகள் அப்படி இல்லை. இது பற்றி நீங்கள் பதிவு செய்திருப்பது முக்கியமானது. இத்தகைய பதிவுகள் இன்றும் கூட தமிழில் எந்த வெகுஜன பத்திரிகையிலும் இல்லாமல் இணையத்தில் தான் வரும் நிலையில் உள்ளன என்பதும் குறீப்பிடத் தக்கது.

Anonymous said...

ஹ பி,

பள்ளிக்கூடங்கள் கற்றுத்தருவதற்கு இல்லை. வேலை வாங்கித்தர பையனை ரெடி பண்ணுவதற்கு. இதில் நீங்கள் குழம்பிக்கொள்ளக்கூடாது. லட்சக்கணக்கில் போட்டி இருக்கும்போது எந்த சிஸ்டம் வைத்தாலும் அது பையன்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். மார்க்குகளைக் குத்தம் சொல்லிப்பிரயோசனமில்லை.

மற்றபடி சாதியைப்பற்றிய உங்கள் கருத்து தெளிவாக இல்லை. ஏதோ குதலை ஞாபகமாய் எழுதியிருக்கிறீர்கள் போல! சாதியை உங்கள் பையன் சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்வது இப்போதே நல்லது. அது அவன் கழுத்தைச்சுற்றியிருக்கும் கயிறு! அவனால் இந்த ஜன்மத்தில் கழட்டிவிட முடியாது. சமூகம் விடாது.

சொல்மண்டி இரா.