Saturday, October 10, 2009

ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்

மெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.

வார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:

“அன்பே
என் உடலைத்தான்
உனக்குத் தரமுடியும்
ஏனென்றால்
என் உயிர்
இந்தியாவுக்கு.”


என்ன ஒரு இந்தியன்!

-oOo-

ஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.

நல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்! முடியல.

நான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.



மேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’

படம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். :-)

இந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.

-oOo-

SPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். :-)

ஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான்! அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.

ஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கதை.

குதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.

ஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

9 comments:

Anonymous said...

ஹி...ஹி.. கடைசி பாராவுக்கு மட்டும்!

ராம்கி

தேவன் said...

Thiruttu DVD parpathu Sattapadi thappu

Unknown said...

//அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
//

:-))

பிச்சைப்பாத்திரம் said...

//அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். //

குசேலன் பற்றிக் கூட இங்கே எழுதியிருந்தேன்.
http://pitchaipathiram.blogspot.com/2008/07/blog-post_31.html

ராம்கி சொன்ன அதே ஹி...ஹி.. :-)

சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. :-)

பிச்சைப்பாத்திரம் said...

சொல்ல விட்டுப் போனது.

Spirit பரிந்துரைக்கு நன்றி. தொடரவும்.

ஹரன்பிரசன்னா said...

குசேலன் ரஜினி படமா??

சொந்தமாக யோசித்தால், சந்தான பாரதி டைரக்‌ஷனில் குணா எடுத்த மாதிரிதான் ஆகும். சுந்தர் சி அன்பே சிவத்தில் சொந்தமாக யோசித்தாரா? என்ன கமெண்ட்டு ஐயா இதெல்லாம்.

Anonymous said...

உண்மைதான்,
ஃபெயிலியர் ஆகும் ரஜினி படங்கள்,ரஜினி படங்கள் அல்ல.

மாதவராஜ் said...

//இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.//

உண்மைதான்.
பகிர்வுக்கு நன்றி.

சாணக்கியன் said...

/* சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. :-)
*/

சு.கா.-வா கொக்கா? எப்படி கலக்கிப்புட்டாரு எங்காளு...