Sunday, June 6, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா - சிறுகுறிப்பு



இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் நான் எதிர்பார்த்தது போலவே அவரது ராமாயணச் சொற்பொழிவைப் பற்றிப் பேசினார். மறுபக்கம் திரைப்படத்தைப் பற்றியும் பேசினார். சிவகுமார் நன்றாக நடித்த ஒரே திரைப்படம் மறுபக்கம்தான் என்று சொன்னால் என்னைப் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்! நான்கைந்து வரிகள் இந்திரா பார்த்தசாரதியைப் பற்றியும் பேசினார். ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்குவார் என எதிர்பார்த்தேன், நல்லவேளை, அக்காட்சி இடம்பெறவில்லை.

திருப்பூர் கிருஷ்ணன் இந்திரா பார்த்தசாரதியின் கதை மிக அருமையாக வாசித்துக் காட்டினார். சிறுகதை என்பது வாசிப்பு அனுபவத்துக்கு ஏற்றதே ஒழிய, அதனைப் பிறர் சொல்லக் கேட்பது கொஞ்சம் கொடுமையானதுதான். ஒரு சிறுகதையை வாசித்துக் காட்டியே கொன்றுவிடலாம். ஆனால் திருப்பூர் கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட கதை உணர்ச்சியமானது என்பதால் அவர் சொல்லக் கேட்கும்போதும் நன்றாகவே இருந்தது. பொதுவாகவே இபாவின் கதைகள் உரையாடல்களை மையமாகக் கொண்டவை. உரையாடல்களின் வழியே ஸ்தாபிக்கப்படுபவை. அதோடு இக்கதையில் உணர்ச்சியும் சேர்ந்துகொண்டதால் திருப்பூர் கிருஷ்ணனின் கதை சொல்லல் மிகக் கச்சிதமாக அமைந்தது. அதற்குப் பின் கதை சொன்னவர்கள் என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதிலும் அஸ்வத்தாமன் கதையைச் சொன்னவர் அதிக நேரம் எடுத்துக்கொண்டு, ’நான் சொல்லவில்லை எழுத்தாளர் சொல்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே போனார். அறையின் ஏதோ ஒரு மூலையில் அஸ்வத்தாமன் விசும்பிக்கொண்டிருந்திருப்பாரோ என்னவோ. அஸ்வத்தாமா போன்ற வாசிப்புக்கு ஏற்ற கதையை சொல்வது என்பது அதற்குச் செய்யும் கொடுமைகளில் ஒன்று.

இந்திரா பார்த்தசாரதி பேசினார். நான்கு நிமிடங்களில் அட்டகாசமாகப் பேசினார். அனுபவமே அனைத்திலும் சிறந்தது என நிரூபித்தார். சிறுகதைகளின் முழுத் தொகுப்பு என்று பத்ரி சொன்னாலும், நான் இனிமேல் கதை எழுதமாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன், இனியும் எழுதுவேன், அந்தத் தொகுப்பும் வரும் என்று அவர் சொன்னது ஹைலைட்.



இ.பாவின் சிறுகதைகளைவிட என் ரசனையில் அவரது நாடகங்களும், நாவல்களும் முக்கியமானவை. இப்போது கிழக்கு வெளியிட்டிருக்கும் இபாவின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் ஒரு சேர படிக்கும்போது இக்கருத்து வலுப்பெறுகிறதா மாறுகிறதா எனப் பார்க்கவேண்டும். இபா என்ற ஒரு மூத்த படைப்பாளிக்கு கிடைத்த நல்ல ஒரு மரியாதை இந்த விழா.

விழாவின் அறிவிப்பை பத்ரி அவரது பதிவில் வெளியிட்டபோது, அதில் அவர் சொல்லியிருந்த கெடுபிடி எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனிப்பட்ட ஒருவரால் ஒரு விழா எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கு ஈடாக, ஒரு விழாவால் தனிப்பட்ட ஒருவரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதும் முக்கியமானதுதானே என நினைத்தேன். இன்று விழாவில் பத்ரி சொன்னது போலவே விழா ஆரம்பித்ததும் கதவை மூடிவிட்டார்கள். யாரையும் நிற்க விடவில்லை. இதனை முதலிலேயே பத்ரி அவரது பதிவில் சொன்னது நல்லதாகப் போனது என்று தோன்றியது. தனிப்பட்ட முறையில் அவர்கள் நடத்தும் விழா என்பதால் இப்படி செய்துகொள்கிறார்கள். அது அவர்களது இஷ்டம். இந்தக் கெடுபிடிகள் பலருக்கு வருத்தம் தந்திருக்கிறது என்பது புரிகிறது. அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எவ்வித கெடுபிடிகளும் இல்லாத கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மீண்டும் சந்திப்போம். :>

5 comments:

பிச்சைப்பாத்திரம் said...

//சிவகுமார் நன்றாக நடித்த ஒரே திரைப்படம் மறுபக்கம்தான் என்று சொன்னால் என்னைப் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்!//

:-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்வுக்கு நன்றி

அருமை.......

Goinchami 2 said...

நல்ல பதிவு நன்றி பத்ரி. ஆனால் :> என்பது எமது சங்கத்தலைவரின் காப்பிரைட் டிஜிட்டல் கையொப்பம். அதைத்தாங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோருகிறோம்.

Unknown said...

ஐ... அந்த நீலக் கலர் சட்டை நான் தான்.....

சங்கர் said...

//ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்குவார் என எதிர்பார்த்தேன், நல்லவேளை, அக்காட்சி இடம்பெறவில்லை.//

நானும்:))