Monday, June 21, 2010

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பொது நூலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்

அனுப்பநர்

ஹரி ஹர பிரசன்னா
4/31 ஈ, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 600 089.

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
பொது நூலக இயக்ககம்,
737/1, எல் எல் ஏ கட்டடம்,
அண்ணா சாலை,
சென்னை - 600 002

ஐயா, வணக்கம்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நான் கீழே உள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தேவையான விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

01. 2006, 2007, 2008, 2009ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க வேண்டி படிவங்களைச் சமர்ப்பித்த பதிப்பகங்களின் பட்டியல் தேவை.

02. 2006, 2007, 2008, 2009ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க, ஒவ்வொரு பதிப்பகமும் சமர்ப்பித்த புத்தகங்களின் எண்ணிக்கை தேவை.

03. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் நூலக ஆணை வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை தேவை.

04. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் நூலக ஆணை வழங்கப்பட்ட புத்தகங்களின் மொத்த மதிப்பு (ரூபாயில்) தேவை.

05. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அளவும், அதன்படி வாங்கப்பட்ட மொத்த நூல்களின் மதிப்பும் தேவை.

06. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகத்தால் வாங்காமல் மறுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், பதிப்பகம் வாரியாக, தேவை.

07. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் எத்தனை தவணைகளில் வாங்கப்பட்டது என்கிற விவரம் தேவை.

08. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க, எந்த எந்த தவணைகளில் எந்த எந்த பதிப்பகங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது என்கிற விவரம் தேவை.

மேலே உள்ள தகவல்களைப் பெற, ஒளிநகல்கள் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பணம் செலுத்தவேண்டியிருந்தால், அதை நான் செலுத்திவிடுகிறேன் என்று கூறிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

V. ஹரிஹர பிரசன்னா,
4/31 ஈ, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 600 089.

இந்தக் கேள்விகளுக்கு பொது நூலக இயக்ககத்தில் இருந்து வந்த பதிலின் நகல் கீழே. (பெரிதாக்கிப் படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)



அதாவது நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் வீண் செலவு என நினைக்கிறார்கள். நேரில் வரவேண்டாம் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்பது. இவர்கள் மீண்டும் நேரில் வரச் சொல்கிறார்கள். பிடிஎஃப் அல்லது ஹெச் டி எம் எல் கோப்பாகக் கொடுத்தால் 20 ரூபாய் செலவு கூட ஆகாது. எந்த எந்த பதிப்பகங்கள் எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன, அதில் எத்தனை புத்தகங்களுக்கு ஆர்டர் கிடைத்தன என்பது தெரிந்தால், பல்வேறு விஷயங்கள் நமக்குப் புலனாகும்.

நாம் இதை எல்லாம் தகவலாக அறியும் உரிமையாக இல்லாமல், அரசு நிறுவனமே தகவலை வெளிப்படுத்தும் கடமையாக இருக்கவேண்டும். நாம் கோரும் எல்லா விஷயங்களையும் தாமாகவே இணையத்தில் அரசு நிறுவனங்கள் வெளிப்படுத்தலாம். இது நடக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?

வேறு யாரேனும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். எனக்கு எரிச்சலாகிவிட்டது. :-)

5 comments:

மாயவரத்தான் said...

எவ்வளவு ஆயிரம் செலவாகும் என்று கூட சொல்ல முடியாதாமா? பெரிசா வெட்டி முறிக்கிற மாதிரி மனித உழைப்பு வீணாகும் என்று ஒரு பதில்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவலே தெரிவிக்கவில்லை என்று வழக்கு தொடரலாமே?!

ஹரன்பிரசன்னா said...

உழைப்பு வீணாகும் என்பது போன்ற பதில் எனக்கும் எரிச்சலையே தந்தது. ஆனாலும் அவர்கள் வெட்டி முறிக்காமல் இல்லை. இது ஒரு புறம் இருக்கட்டும்.

பதில் தரவில்லை என்றால், நீங்கள் மேல் முறையீடு செய்யவேண்டும். அதற்கும் 30 நாள்களில் பதில் சொல்லவில்லை என்றாலோ, திருப்திகரமான பதில் தரவில்லை என்று நீங்கள் நினைத்தாலோ ஆணையத்திடம் முறையிடவேண்டும். இதுதான் வழிமுறை.

சு. க்ருபா ஷங்கர் said...

ஆமாம், இவ்வளவு செஞ்சீங்களே, குறுந்தகட்டுச்செலவையும் ஏற்றுக்கொள்ளவதாக ஒரு வரி எழுதியிருந்திருக்கவேண்டுமோ? யாருக்குத் தெரியும், அதற்கு வினவல் செய்ய கொஞ்சம் மனித உழைப்பு தேவைப்படும் :-)

அதுதான் எல்லாவற்றையும் கணிணிமயப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்களே, முடிந்தால் அந்த டேட்டாபேஸ் கோப்பை வாங்க முடியுமா என்று பாருங்கள் :-)

Anonymous said...

நூல்கவரியாக மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வளவு. ஒவ்வொரு வருடத்துக்கும் என்ற கேள்வியை கேட்டிருக்கலாமே?

Anonymous said...

நூல்களின் பட்டியல்,பதிப்பாளர் பட்டியலை இவர்கள் நிச்சயம் வைத்திருப்பார்கள்.அதை கம்ப்யூட்டரில் ஏத்தி இருப்பார்கள்.அதை பிடிஎஃப் கோப்பாக மாற்றி கேள்வி கேட்பவர்களுக்கு அனுப்புவதே முறை.விவரங்கள் கேட்க்கும் அனைவரையும் நேரில் தான் வரசொல்வார்களாமா...இவர்கள் ரொம்ப நாள் சோம்பேரியாக இருக்க முடியாது..எல்லோரும் தனி தனியாக இதே கேள்வியய் கேட்க வேண்டும்..