Sunday, June 20, 2010

கருணாநிதியின் அன்புத் தொல்லை - செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு

நன்றாக சொதி சாப்பிட்டுவிட்டு கட்டையைச் சாய்க்கலாம் என்னும்போது +914044621260 என்னும் எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துக் கேட்டால், ஏ.ஆர். ரகுமான் ஹை டெஸிபிளில் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்று காதைக் கிழித்தார். ஏற்கெனவே தமிழ் செம்மொழி மாநாட்டு எஸ் எம் எஸ் நிறைய வந்து இம்சைப் படுத்திக்கொண்டிருந்தன. அதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தால், உடனே கருணாநிதி பேசினார். அன்பு உடன்பிறப்பே, உன்னை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கிறேன் என்று.

கொஞ்சம் கூர்ந்து கேட்கும்போது, அது கருணாநிதியின் குரல் இல்லை என்றும் கருணாநிதியின் குரலைப் போன்ற ஒரு குரல் என்றும் தோன்றியது.

எஸ் எம் எஸ் அனுப்பித் தொல்லை கொடுத்தார்கள். திரும்பிய பக்கமெல்லாம் செம்மொழி மாநாடு செம்மொழி மாநாடு என்று சொல்லி, ஏன் இந்த 2010ல் தமிழ்நாட்டில் இருந்து தொலைத்தோம் என்று நினைக்க வைத்தார்கள். எந்தத் தினசரியை எடுத்தாலும் செம்மொழி மாநாட்டு விளம்பரங்கள் வந்து பயமுறுத்தின. தொலைக்காட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் செம்மொழியான தமிழ்மொழியாம் என்று போட்டுக் கலங்கடித்தார்கள். உங்கள் தொல்லையே வேண்டாம் என்று, திரையரங்குக்குப் போனால் அங்கேயும் செம்மொழியான தமிழ்மொழியாம் துரத்தியது. அதிலும் ஓரிடத்தில் ஒரு பெண் பாடகர் வேக வேகமாக தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம் என்று சொல்லும்போது ரொம்பவே எரிச்சல் வருகிறது.

இதை எல்லாம் தாண்டி தொலைபேசி அழைப்பிலும் செம்மொழி மாநாட்டுக்கு வா என்றால் என்ன செய்வது. என்னவோ தொலைபேசி அழைப்பு வருகிறதே என்று எடுத்துக் கேட்டால் இந்தத் தொல்லை. இதையெல்லாம் செய்ய யார் அனுமதி தருகிறார்கள்? எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்தத் தொலைபேசி அழைப்பு விளம்பரம் எரிச்சல் தருகிறது. இதனை எதிர்த்துப் போராடவெல்லாம் திராணி இல்லை. வழக்கம்போல ஒரு தமிழன் ஸ்டைலில் கேட்டுக் கொள்கிறேன் - ஐயா பாவம் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துகொண்டுவிட்டோம். அதற்காக இந்தப் பாடு படுத்தாதீர்கள். தெரியாமல் செமொழி தகுதியுடைய ஒரு மொழியில் பிறந்துவிட்டோம் என்று நெக்குருக வைத்துவிடாதீர்கள்.

இந்த செம்மொழி மாநாடே கருணாநிதிக்கு பேக் ஃபயர் ஆனால் எப்படி இருக்கும் என்று நப்பாசையில் இருக்கிறேன். இதுவரை நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதைக் காட்டுகின்றன. ஆனாலும், கருணாநிதியின் வாழ்க்கையின் உச்சத்தில், அந்த எதிர்ப்புணர்வு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாமலும் போகலாம் என்றும் தோன்றுகிறது. என்னவோ நடக்கட்டும், ஆனால் இந்தத் தொலைபேசியில் அழைத்தெல்லாம் எரிச்சல் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

இன்று கருணாநிதி அழைத்தார், நாளை ஜெயலலிதா அழைத்துப் போகாதீர்கள் என்று சொன்னால் நான் என்ன செய்யமுடியும்? என்னை என் வழியில் போகவிடுங்கள். :-)

7 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்தத் தொல்லை வேற கொடுக்குதா பெருசு!

Anonymous said...

இதன் மறுபக்கம் எப்படி இருக்கும். ஒரு கற்பனை.
செம்மொழி மாநாட்டிற்கு தொ(ல்)லைபேசி மூலமாக அழைப்பு விடுப்பவர்: ’இந்த ஹரன் பிரசன்னாவை அழைத்து இ.வ வில் ஒரு பதிவு செம்மொழிக்கு ஆதரவாய் இடச் சொல்ல வேண்டும். எண்ணை தட்டி பார்ப்போம்’
முயற்சி செய்கிறார். தொலைபேசியிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது.
‘இந்த சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்’
உடனே தமக்குள் பேசிக்கொள்கிறார்:
அட ராவணா! இவரும் ஓடிப் போய்விட்டாரா? மாநாட்டுக்கு ஆள் சேர்க்கணுமே? என்ன செய்வது? மீண்டும் முயற்சிப்போம். விடக்கூடாது”

goma said...

ஆங்கில பாணியில் செம்மொழி பாடல்- செவி ஏற்றுக் கொள்ள மறுக்கிறது...

ரவி said...

ரொம்ப கொடுமைப்படுத்தறாங்க போலிருக்கு

Anonymous said...

//அதிலும் ஓரிடத்தில் ஒரு பெண் பாடகர் வேக வேகமாக தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம் என்று சொல்லும்போது ரொம்பவே எரிச்சல் வருகிறது.
//

நண்பர் சுரேஷ் கண்ணனை வருத்தப்படுத்தும் அல்லது கலவரப்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் வன்மையாக
கண்டிக்கிறேன்!

ராம்கி

NAGA INTHU said...

**இந்த செம்மொழி மாநாடே கருணாநிதிக்கு பேக் ஃபயர் ஆனால் எப்படி இருக்கும் **
மழை பெய்யு்ம் போது மடையும் புட்டுக்கொண்டா மாதிரி தாத்தா தனலாகி விடுவார்

Anonymous said...

தாத்தா டர்ர்ர்ரரரரரரரராகி விடுவார்