Sunday, August 22, 2010

ரொம்ப நாள் ஆச்சு...

வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதே மறந்துவிடும் அளவுக்கு, நான் பதிவு எழுதி நிறைய நாள்கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன ரெஃப்ரெஷ்மெண்ட்டாக சில விஷயங்கள்... ஒன்றும் முக்கியமான விஷயங்கள் இல்லை. எனவே நேரம் அதிகம் இருந்து போர் அடிக்கும்போது, அதாவது நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் மனநிலையில் இருக்கும்போது மட்டும், படிக்கலாம்.

* பக்ஸ் என்னும் ஒரு அனிமேஷன் படம் பார்த்தேன். எறும்புகளின் படம். மிக நன்றாக இருந்தது.

* திட்டக்குடி படத்டைப் பற்றி ஆளாளுக்கு புகழ்ந்து விமர்சனம் எழுதியிருந்தார்கள் - சில பத்திரிகைகளில். அரை மணி நேரம் கூடப் பார்க்க முடியவில்லை. மட்டமான படம். தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் என எல்லா வகையிலும் அமெச்சூர்.

* லோக் சபாவில் கன்னட மாஃபியா அடிக்கும் கூத்தைச் சகிக்க முடியவில்லை. நல்ல திரைப்படங்கள் போட்டுக்கொண்டிருந்த சனிக் கிழமைகளில் ஒரே கன்னடப் படங்களாக, அதுவும் மொக்கைப் படங்களாக வர ஆரம்பித்துவிட்டன. அதிலும் சென்ற வாரம், ராஜ்குமார் நடித்த ஹரிச்சந்திரா திரைப்படத்தைப் போட்டதெல்லாம் கொடுமை. நேற்று ரமேஷ் அரவிந்த் நடித்த ஹூ மழ என்னும் இன்னொரு மொக்கை. இந்த அராஜகத்தை எப்படித் தடுத்து நிறுத்த என்று தெரியவில்லை. தமிழில் நல்ல படங்கள் இல்லை என்பது முகத்தில் அறைந்தாலும், இந்திய அளவில் உள்ள எத்தனையோ நல்ல படங்களை ஒளிபரப்பாமல், ஒரு கன்னட மாஃபியா லோக் சபா சானை ஹைஜாக் செய்திருப்பது அநியாயம்.

* ஜெனரல் நாலெட்ஜுக்காக் இந்தச் செய்தி - வசந்த் தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு மேற்படி படங்களாக ஒளிபரப்புகிறார்கள். மேற்படிக் காட்சிகள் எதுவும் வருவதில்லை என்று சக பணியாளர்கள் புலம்பினாலும், இப்படி படங்கள் ஒளிபரப்படுகின்றன என்பது யாருக்கும் இதுவரை தெரியாது என்பதால் சொல்லி வைக்கிறேன். சுயமுன்னேற்றம் அடிப்படையில் இதனை ஒளிபரப்புகிறார்கள் என நினைக்கிறேன். வசந்த்தின் சேவை நாட்டுக்குத் தேவை.

* எந்திரன் திரைப்படப் பாடல்களைக் கேட்க கேட்க மிகவும் பிடித்துப் போய்விட்டது. இன்னும் கேட்க கேட்க கொஞ்சம் சலிப்பும் வந்துவிட்டது. சில நாள்கள் கேட்காமல் இருந்து, நேற்றிலிருந்து மீண்டும் கேட்க ஆரம்பித்தேன். என்னவோ மிகவும் பிடித்த நண்பர் நீண்ட நாள்காள் பேசாமல் இருந்து, திடீரென்று பேசத் தொடங்கியது போன்ற ஒரு அனுபவம். அரிமா அரிமா அசத்தல் பாடல். வைரமுத்து கலக்கல். பா.விஜய் எழுதிய ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இனிமை. பாடல் வரிகளில் தொடர்ச்சியின்மை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றாலும், பல வரிகள் அசத்தல். புதிய மனிதா என்னும் வயதான எஸ்பிபியின் பாடலும், ஐசக் அஸிமோவின் மூளையோ பாடலும் செம மொக்கை. (படம் பார்த்த பின்பு இந்த இரண்டு பாடல்களும் செம சூப்பர் என்று எழுத வாய்ப்புள்ளது! ரஜினி படத்தை அப்படி விட்டுவிடமுடியாது.)இரும்பிலே ஓர் இருதயம் நன்றாக உள்ளது. முதல் பாடல் என்ற வகையில் மதன் கார்க்கி - பாடலை எழுதியவர் - ஓகே. ஆனால் இதையெல்லாம் என்றோ வைரமுத்து ஓடி (பாடி!) களைத்துவிட்டார். இன்னும் வைரமுத்துவை நெருங்கக்கூட தமிழில் ஒரு திரைப்படப் பாடலாசிரியர் தோன்றாதது சோகம். அவரது மகனான மதன்கார்க்கிக்கு திரைப்படப் பாடல் எழுதுவது முதல் நோக்கமா என்பது தெரியவில்லை. ரஜினி மகள்கள் திரைத்துறைக்கு வருவது போல என் பிள்ளைகள் வருகிறார்கள், இதிலென்ன தவறு என்று கேட்டாராம் கருணாநிதி. இனி அவர் வைரமுத்துவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

* மங்காத்தாவின் டிரெய்லரை அஜித் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்றார்கள். இப்போதைக்கு அதில் ஒரு மண்ணும் இல்லை. அஜித்தைப் பார்க்க பாவமாக இருக்கிறது என்பதுதான் அந்த டிரெய்லரின் முக்கியத்துவம்.

* சினிமா வியாபாரம் புத்தகம் படித்தேன். இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான புத்தகம். சினிமாவில் வியாபாரம் எப்படி நடக்கிறது என்பது பற்றி ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடிட் செய்து, இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தியிருந்தால், இப்புத்தகத்தின் ரீச் இன்னும் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. அடுத்தடுத்த பதிப்புகளில் அதனைச் செய்வது நல்லது.

* ராமாபுரத்திலிருந்து கீழ்க்கட்டளைக்கு வீடு மாற்றினேன். வீட்டில் தேவையற்ற பொருள்களையெல்லாம் வெளியில் எறிந்தேன். கிட்டத்தட்ட 800 புத்தகங்கள் இருந்தன. இவை தேவையற்றவை பட்டியலில் இல்லை! படிக்காத புத்தகங்கள் மட்டும் 200 இருக்கும்! ஒரு வீட்டில் 20% பொருள்களை 80%மும், 80% பொருள்களை 20%மும் பயன்படுத்துகிறோம். மிகச் சரியாக 80-20 விதி பொருந்திப் போகிறது. சிடி மட்டும் கிட்டத்தட்ட 200 சிடிக்கள் உள்ளன. பார்க்கவேண்டியவை மட்டும் 80லிருந்து 100 இருக்கலாம். புத்தகங்களையும் சிடிக்களையும் யாருக்கும் இரவல் தரமுடியாது, ஸாரி. :-) கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை நான் இலவசமாகப் பெற்றுப் படிக்கிறேன். கிழக்கு பதிப்பகத்துக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

* கிழக்கு பதிப்பக வெளியீடாக அடுத்து வரவிருக்கும் இரண்டு மொழிபெயர்ப்புப் புத்தகங்களைப் படித்தேன். ஒன்று ஒபாமாவின் ‘நம்மால் முடியும்.’ ரூமியின் மொழிபெயர்ப்பு அட்டகாசம். அமெரிக்கா இந்தியாவிலிருந்து எப்படி அரசியலில் மேம்பட்டிருக்கிறது என்றும், அமெரிக்காவிலும் இந்தியா போலவே எப்படி பிரச்சினைகளை அரசியலாக்குக்கிறார்கள் என்றும் ஒரு சேர ஒரு புதிய அனுபவத்தைத்தைத் தந்த புத்தகம். இன்னொரு புத்தகம் பிஸ்கட் கிங்கான ராஜன் பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி அவரது சகோதரரே எழுதிய புத்தகம் ‘ராஜன் பிள்ளையைக் கொன்றது யார்.’ நேரடியாக ஒரு வழக்கைப் பார்ப்பது போலவும், ஒரு வாழ்க்கையைப் பார்ப்பது போலவும் உணர்ந்த புத்தகம். மொழிபெயர்ப்பு மகாதேவன். மொழிபெயர்ப்பை ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், ‘அபாரம்.’ ராஜன் பிள்ளையின் வாழ்க்கையில் நடந்தவற்றைப் படிக்க படிக்க மனதுக்குள் மெல்லிய சோகம் ஒரு வாயு போலப் படர்ந்தது. நிச்சயம் அவரது சகோதரர் முன்வைக்காத, இந்தியப் பெரு முதலாளிகளுக்கான நேர்மையற்ற ஒரு முகம் ராஜன் பிள்ளைக்கும் இருக்கும் என்றாலும், அதைத் தெரிந்து கொண்டால் இந்தப் பரிவு மறையுமென்றாலும், ராஜன் பிள்ளையின் புத்தகத்தில் விரிந்த வாழ்க்கை என்னைக் கலங்க வைத்தது உண்மை. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் எனப் பரிந்துரைக்கிறேன். இந்த இரண்டு புத்தகங்களின் மொழிபெயர்ப்பையும் நான் பாராட்டுவது, அதன் மூல மொழியை ஒப்பிட்டு அல்ல. மாறாக, தமிழில் நேரடியாக எழுதப்படும் புத்தகங்களை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவத்தோடு ஒப்பிட்டு மட்டுமே. அந்த வகையில், நான் படித்தவற்றுள் என்னைப் பரவசப்படுத்திய மொழிபெயர்ப்புகள் - சீனா விலகும் திரை (கிழக்கு வெளியீடு, மொழிபெயர்ப்பு ராமன் ராஜா), என் வாழ்க்கை என் தேசம் (அத்வானியின் சுயசரிதை, அல்லயன்ஸ் வெளியீடு, மொழிபெயர்ப்பு - வசந்தன் பெருமாள், சுதாங்கன்), அடுத்து இவை.

* வடக்கு வாசல் ஆகஸ்ட் இதழில் கொல்கொத்தா கிருஷ்ணமூர்த்தியின் பேட்டி நன்றாக வந்துள்ளது. கல்கி அந்நாளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு சன்மானம் அனுப்புவதோடு, மூல நூலின் ஆசிரியர்களுக்கும் சன்மானம் அனுப்புவார்களாம். அவர்களை அதனைக் கண்டு, சிறிய தொகைதான் என்றாலும், ஆச்சரியப்படுவார்களாம். இதனைப் படிக்க ஏனோ சந்தோஷமாக இருந்தது.

* ஆடி அமாவாசை பிறந்ததில் இருந்து வரிசையாக வீட்டில் பாரம்பரியப் பண்டிகைகள். ஆடி அமாவாசை பூஜை, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி பூஜை, ஆவணி அவிட்டம், ராகவேந்திரர் ஆராதனை, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி... என வரிசையாகப் பண்டிகைகள். ஒவ்வொரு நாளும் நல்ல சமையல் செய்து, சாப்பிட்டுவிட்டு, ஆபிஸுக்குச் செல்வதே பெரும்பாடாக உள்ளது. இதில் வரலக்ஷ்மி பூஜைக்கு இன்னொரு வீட்டில் இருந்து அழைப்பு. எனவே எடுத்தேன் விடுப்பு! ஒரே மாத இடைவெளியில் இத்தனை பண்டிகைகளையும் வைத்து மக்களை, குறிப்பாக பிராமணர்களை, ஓட்டாண்டியாக்கிய கடவுளை என்ன செய்யலாம்? இதில் ஆவணி அவிட்டத்தில் மூன்று வகை. ஒன்றில் ரிக்வேதம், அது ஒரு நாள். யஜூர் வேதம் மறுநாள். சாம வேதம் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளாம்! இங்கே பள்ளிகளுக்கு யஜூர் வேதம் அன்று விடுமுறை. வீட்டில் பல ஐட்டங்களுடன் சமைத்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஆபிஸுக்குச் செல்வது பெரும்பாடாக உள்ளது. காமெடி என்னவென்றால், எங்களுக்கு ஆவணி அவிட்டம் இல்லாத நாளில் பையனுக்கு விடுமுறை. ரிக்வேத யஜூர்வேதச் சண்டை இப்படி நடந்துகொண்டிருக்கிறது. வரலக்ஷ்மி பூஜையை என் உறவினர் வீட்டில் தடபுடலாகச் செய்தார்கள். ஆசாரியாரை அழைத்து, கலசம் வைத்து, கடும் ஆசாரத்துடன் செய்தார்கள். நான் சாப்பிடச் சென்றேன். வரலக்ஷ்மி விரதம் அன்று ஏகாதசி என்பதால் அன்று பூஜை இல்லை. மறுநாள் துவாதசி அன்று பூஜையும், நைவேத்யமும், சாப்பாடும். காலை 8.30க்கே சாப்பாடு போட்டுவிட்டார்கள். கோசம்பரி உப்பு, (ஊற வைத்த பருப்பும் தேங்காயும்), கொத்தமல்லி துவையல், வாழை பொரியல், வெண்டைக்காய் பொரியல், பருப்பு, அரவனை பாயாசம், பாதுஷா, பருப்பு வடை, மைசூர்பா, கேக், எலுமிச்சை சாதம், கொழம்புக்கூட்டு (உலிக்கூட்டு என்பார்கள் கன்னடத்தில்), மோர்க்குழம்பு, ரசம், மோர் எனச் சாப்பாடு - காலை 8.30க்கு. கடும் ஆசாரம் என்று சொன்னேன் அல்லவா, சாப்பாடு ஐட்டத்தில் மைசூர்பா, கேக், பாதுஷா தவிர அனைத்தையும் கரியடுப்பில் சமைக்கவேண்டும். அன்று அப்படித்தான் சமைத்திருந்தார்கள். இன்னும் எனக்கு ஆச்சரியம் தீரவில்லை. சாப்பிட்ட களைப்புடன் வேலைக்குப் போனேன். சமைத்த உறவினர் களைப்பில் வேலைக்குப் போகவில்லை. உடம்பைக் குறைப்பது பற்றி யோசிக்கவிடாமல் சாப்பாடு இருந்துகொண்டே இருப்பதுதான் என் பிரச்சினை என நினைக்கிறேன்.

3 comments:

வற்றாயிருப்பு சுந்தர் said...

Prasanna,

Welcome back! Tit-Bits - நன்றாக இருந்தன!

// சாப்பிட்ட களைப்புடன் வேலைக்குப் போனேன்.// :-)))

//வயதான பாலு//

குத்திக்காட்டலைன்னா பொழுது போகாதே?. வயசான ரஜினிக்கு வயசான பாலுதான் பாடமுடியும். ரஜினிக்கு - அவரது பேஸ் வாய்ஸூக்கு உன்னி கிருஷ்ணனோ அல்லது இன்றைய பொடிக் குரலில் சின்னப் பசங்களோ பாடினால் நல்லாவா இருக்கும்?

பிரிக்க முடியாதது என்னவோ என்றால் ரஜினி படமும் டைட்டில் பாடலுக்கு பாலுவும்தான். அது இல்லைன்னா படம் ஊத்திக்கும் என்பது வரலாறு! :-)

Jayashree Govindarajan said...

பெப்சுந்தரோட இதான் பிரச்சினை. குத்திக்காட்டினவங்களையும் திரும்ப ரொம்ப மென்மையாதான் சொல்லிக் காட்டுவாரு.

வயசானதால எக்கச்ச்ச்ச்சக்க்க்க்கமா மேக்கப் போட்டு தூக்கிநிறுத்தின ரஜினிக்கு, வயசானாலும் வாய்ஸ் மாறாத இளமையான எஸ்பிபி குரலே எக்ஸ்ட்ரா மேக்கப் மாதிரிதான். இதுவே ரொம்ப ஜாஸ்தின்னு திருப்திபட்டுக்கச் சொல்லுங்க. வந்திட்டாய்ங்க!

கானகம் said...

//பெப்சுந்தரோட இதான் பிரச்சினை. குத்திக்காட்டினவங்களையும் திரும்ப ரொம்ப மென்மையாதான் சொல்லிக் காட்டுவாரு. //

அதானே, அன்பா தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டாம்?