புவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.
இனி நாவலை விட்டுவிடலாம். :-)
இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.
இடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது - என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும்? இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.
நான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.
உண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.
யாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.
40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது? அது எப்பேற்பட்ட அநியாயம்? உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்?
இதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.
நான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.
No comments:
Post a Comment