ஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :>) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.
எல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்!) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
முக்கியமான விஷயம் - நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை!) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு! (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)
(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள்! இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே!)
“எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு? புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு? எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு? புராணம்...”
“தலைவரைப் பற்றியுமா புராணம்?”
“புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்?”
“உதாரணம்?”
நஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி?”
“குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”
“எப்படி வந்தது?”
“புரியவில்லை.”
“பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.
அப்புறம் வேறென்ன? நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா? புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். :-) ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way!
No comments:
Post a Comment