இப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில்? உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :>)
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.
சுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது - கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆழங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
ராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது.
அம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன்.
இப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்க இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான்.
ஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்!
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html
5 comments:
பிரசன்னா, நல்லதொரு மீள்வாசிப்பு அனுபவம். பதின்மங்களில் வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளாகளில், இன்றும் வாசிக்க முடிவது சுஜாதாவைத்தான். நாவல்களில் அதீத நாடகத்தனங்கள் இருந்தாலும், இடையில் தென்படும் ஒருவரி மின்னல்கள் அந்தச் சலிப்பை போக்கி விடும்.
இ-ரீடரில் விஷ்ணுபுரமா? அவ்வ்வ்வ.
கிழக்கின் பலங்களுள் ஒன்று, நூல் அட்டையை ரசனையுடனும் நேர்த்தியாகவும் உருவாக்குவது. ஆனால் இந்த நூலின் அட்டை மிக மோசமான ரசனையுடன் உள்ளது. ஒரே ஒரு துரோகம் என்பதால் ஒரே ஒரு கண்ணா? நலல லாஜிக். :)
//கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம்//
அப்படியானால் இப்போது விஷ்ணுபுரத்தை அச்சு வடிவில் எளிதாகப் படிக்கமுடிகிறது என்று அர்த்தமா? :>
- என். சொக்கன்,
பெங்களூரு.
ஹரன் , கிழக்குக்காகவே ஒரு இ-ரீடர் மென்பொருள் உருவாக்கி , கிழக்கு வெளியீடுகளை இ-புத்தகங்களாக விற்க இ-ரீடர்கள் பெருகியுள்ள இக்காலம் சரியானதுதானே ?
புதியதாக முயன்று பார்க்க தயங்காதவர்கள்தானே கிழக்கினர் ?
Hi
I am looking for PDF version of the novel in order to read in my iphone or ipad
When I buy online using the link u provided, will I get the PDF version. Since I am living abroad I donot want paper version
Regards
Sudharsan
அரங்கசாமி,
கிழக்குக்கான ஈரீடர் மென்பொருள் நிறைமாதத்தில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நிச்சயம் அது எக்ஸெலண்ட்டாக இருக்கும். ஈ ரீடரோடு சில ஆஃபர்களும் இருக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான் டிரைலர்!
சுதர் (இப்படி ஒரு பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்), ஈ ரீடர் வரும்வரை கொஞ்சம் காத்திருங்கள். வேறு வழியில்லை.
சொக்கன், எனக்குத் தமிழ் எழுத மட்டும்தான் வரும், படிக்க வராது. :)
Post a Comment