1.
நதியின் படிக்கட்டில்
நீரில் எழுதிய கோடுகள்
விரிந்து விரிந்து
ஒன்றோடு ஒன்றிணைய
இடையில் கிடக்கின்றன
நீரால் நனைக்கப்படாத
கட்டங்கள்
என் கவன ஈர்ப்பாக.
-oOo-
2.
அவன் புன்னகைப்பதற்குள்
நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்
அதற்குள் சிரித்துவிட்டான்
நானும் சிரித்துவைத்தேன்
இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது
எவ்வளவு யோசித்தும்
யாரென்றே சிக்கவில்லை
அவனிடமே கேட்டபோது
'அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்' என்றான்,
எங்களிடையே ஒரு பூ மலர.
-oOo-
3.
கடும் மழையிலும்
பூ விற்கிறாள் கிழவி
ஐந்து முழம் வாங்கினேன்
தலையை சுற்றியிருக்கும்
கோணிப்பை அகற்றி
மலர்ச்சியுடன் தந்தாள்
மொட்டு மல்லிகைகளை
எனக்கும் அவளுக்கும் மட்டுமான
மழை பெய்துகொண்டிருக்கிறது
நிறைவான இசையின் தாளத்தோடு.
-oOo-
4.
பூட்டிய வீட்டுக்குள்
செத்துக்கிடந்தது
தெரு நாயொன்று
எப்படி உள்ள போச்சு என
எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க
என் நினைவை அழுத்துகிறது
தனிமையைக் கண்டுவிட்ட
தெரு நாயின் சாபம்.
-oOo-
5.
நேற்றிரவு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
உறுதியாகத் தெரியவில்லை என்றார்கள்
அவன் செல்·போன் எண் என்னிடம் இருக்கிறது
ஆனாலும் அவனை அழைக்கவில்லை.
-oOo-
10 comments:
பிரசன்னா ஐயா,
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஹூகூ வா புதுக்கவிதையா இரண்டுமாக இருக்குமோ?
/// மலர்ச்சியுடன் தந்தாள்
மொட்டு மல்லிகைகளை ///
கிழவியின் மலர்ச்சியில் மல்லிகைகள் மங்கினவோ!!! மகிழ்ச்சியை விட மலர்ச்சியை போட்டு கவிதையை சூப்பராக்கியிருக்கிறீர்கள். எனக்கு கவிதை தெரியாவிட்டாலும் படித்தால் மனசை பிசைகிறது. அதனால், இந்த பாமரனின் இரண்டு வரி பாராட்டுகள்.
நன்றி
ஜயராமன்
ஜெயராமன், உங்கள் கருத்துக்கு நன்றி.
ஐயா என்றழைக்காமல் பிரசன்னா என்றழைத்தாலே போதுமானது.
அவன் புன்னகைப்பதற்குள்
நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்
அதற்குள் சிரித்துவிட்டான்
நானும் சிரித்துவைத்தேன்
இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது
எவ்வளவு யோசித்தும்
யாரென்றே சிக்கவில்லை
அவனிடமே கேட்டபோது
'அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்' என்றான்,
எங்களிடையே ஒரு பூ மலர//
அருமை
உஷா, நன்றி. என் வலைப்பக்கமும் வர்றீங்கன்னு சொல்லுங்க!
எல்லா கவிதைகளும் அருமை பிரசன்னா.. குறிப்பிட்டுச்சொல்ல இயலாமல் எல்லா கவிதைகளும் நன்றாய் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்த்துக்கள் பிரசன்னா..
இரண்டும் மூன்றும் மிகவும் பிடித்திருந்தன. ஒன்று மாதிரியான கவிதைகள்
(நல்ல கவிதைதான்!) இப்போது வாரமலரில்கூட வருவதால், எழுதியது பிரசன்னாவா
என்று பெயரை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். நான்கும் ஐந்தும் இருண்மையான
கவிதைகள் எழுதுகிற முயற்சிகள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
முதல் கவிதை உங்க 'கோலம்' ங்கற long long ago, nobody knows how long ago எழுதின கவிதையை நினைவுப்படுத்துது. அந்தக் கவிதை எல்லாம் எங்க?
உஷா... கவிதை.. உடம்பு ஏதும் சரியில்லையா உஷா? :P
//http://nizhalkal.blogspot.com/2003/12/blog-post_15.html//
ஜெஸ்ரீ, மேலே இருக்கிறது கவிதை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது. நான் எழுதியதே எனக்கு மறந்துவிடுவதுதான் காரணம். இரண்டையும் வெவ்வேறு விஷயங்களை வைத்து எழுதினேன் என்பதை என்னால் மட்டும்தான் தெரிந்துகொள்ளமுடியும் என்பதும் புரிகிறது.
உஷா கவிதைக்கு போட்ட கமெண்ட் எனக்கும் ஷாக். :)
ஆ, என் நியாபகசக்திக்கு ஒரு ஷொட்டு(யாரும் தராததால எனக்கு நானே திட்டத்துல)! ரங்கோலின்னு பேர் வெச்சிருக்கீங்க, அதான் நான் கோலம்னு தேடி, காணலை. :P
5 ஆவது கவிதையும் அருமை.
நல்ல அவதானிப்பு.
பெரியதாய் கண்முன் வந்து நிற்கும் என்னால் அழைக்கப்படாமலிருக்கும் சில செல் போன் எண்கள்.
Post a Comment