மழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.
இன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.
நிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.
கிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல... குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்... அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம்? அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!
சில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு!) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.
(எடிட்டோரியல் (அன்பான!) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக!)
க்ரியாவின் ஸ்டாக் ரூம்!
கல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு
என் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்!
4 comments:
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நேரில் சென்று வந்த மாதிரி இருக்கிறது பிரசன்னா !!! மிக்க நன்றி :)
//எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். //
Why????
this pst has created too much hype in me :)
Is there a good canteen this time?
this pst has created too much hype in me :)
Is there a good canteen this time?
Post a Comment