Saturday, January 17, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 09)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

ஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான்.

நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன. உடல்நலம் சார்ந்த, தீவிர இலக்கிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சாளரம் வெளியிட்ட குழந்தைகள் பற்றிய புத்தகம், அடையாளம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.

கிழக்கு அரங்கிற்கு கவி (சன் பண்பலையில் ’சின்னதம்பி பெரியதம்பி’ நிகழ்ச்சியில் பெரிய தம்பியாகக் குரல் கொடுப்பவர்) கடை மூடும் நேரத்தில் வ்ந்தார். பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளில் நான் கேட்டவற்றில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. பெரிய தம்பி திருநெல்வேலிகாரராக இருக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் மயிலாடுதுறைக்காரராம். மயிலாடுதுறையிலிருந்து கேள்வி கேட்டே பிரபலமானவர் தொடங்கி, இப்படி நெல்லை மொழியில் பேசி பிரபலமானவர் வரை பலர் இருக்கிறார்கள் போல. :-) இன்று கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘யாரும் போகாதீங்க’ன்னு சொல்லணும் என்றார். ’என்ன வேணும்னா சொல்லுங்க’ என்று சொன்னேன்.

சாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள் புத்தகத்தை புரட்டியபோது கண்ணில் பட்டது.

பிழை:

வயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.

அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது.

கத்தியைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்ததோடு வெளியேறியது. “ச்சே... ச்சே... நான் தவறு செய்துவிட்டேன்.”


இப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சஞ்சாரம்’ இதழில் வெளியாகியிருந்த சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களைப் படித்தபின்புதான் இந்த நூலை வாங்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஏற்கெனவே இப்புத்தகம் நிழல் வெளியீடாக வெளிவந்து, பதிப்பில் இல்லாமல் இருந்தது. இப்போது புலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களும் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது.

சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.

இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களில் நல்ல கூட்டம் வரும் என்று வழக்கம்போல நம்புகிறோம். நாளையும் வழக்கம்போல எழுதவேண்டிய நிலை வந்துவிடக்கூடாது.

பின்குறிப்பு 1: பத்ரி ‘ஆஞ்சநேயர் வடை’ கொண்டு வந்துகொடுத்தார். சில நாள்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி வந்தபோது, பல கோவில்களில் இதை பிரசாதமாகக் கொடுத்தார்கள். வடை என்றால் வடையல்ல, தட்டை போல இருக்கும். கடிக்கும்போது படபடவென சத்தம் கேட்கும். உடைவது பல்லா தட்டையா என்பதைக் கண்டறிய சில நொடிகள் எடுக்கும். ‘இதை சாப்பிட்டதாலதான் ஆஞ்சநேயர் வாய் வீங்கிட்டோ’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடை நன்றாக இருந்தது. எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன்... சே... எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் பதிப்பாளர்களைக் காக்கட்டும்!

பின்குறிப்பு 2: இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.

பின்குறிப்பு 3: சுரேஷ் கண்ணன் ஃபோன் செய்து ‘என்னென்ன சிற்றிதழ்கள் கிடைக்கின்றன’ என்று கேட்டார். இவர் திருந்த வாய்ப்பில்லை போலிருக்கிறது.

2 comments:

உண்மைத்தமிழன் said...

பாவம்.. நடந்த அலுப்பு தீர சாப்பிட வருகிறார்கள். இந்த வசதியும் இல்லாமல் போயிருந்தால் நானே கந்த சஷ்டி கவசம்போல் 1008 முறை அங்க போகாதீங்க என்று எழுதியிருப்பேன்.

எது, எதுக்குத்தான் பொறாமைப்படணும்னு இல்லையா..?

அது சரி.. யார் அந்த தோழர்..?

KarthigaVasudevan said...

சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டு இல்லையோ என நினைத்தேன்.தொடர்ந்து உங்கள் புத்தகக் கண்காட்சி பதிவை வாசித்ததில் அது நிஜமே என்று புரிகிறது.புத்தகங்கள் மீதான ஈர்ப்பு நிறைய இருந்தாலும் வர முடியாத நிலையில் இருந்தவர்களும் இருக்கிறார்கள் !அடுத்த வருடம் பார்க்கலாம் வித்தியாசத்தை!