கேள்விகள்--ஹரன் பிரசன்னாஇரவு முழுதும் செய்த வேலையின் அலுப்பு உடலெங்கும் பரவியிருந்தாலும் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அக்கணத்தை இரம்மியமானதாக ஆக்கிகொண்டிருந்தது. வேகமான எதிர்காற்று மூக்கினுள்ளே சென்று ஒருவித சுகமான எரிச்சலை விட்டுச் சென்றது. காதுகளின் வழியே அது சீறிப்பாயும் வேகம் சத்தத்தில் தெரிந்தது. ஆலையின் ஒவ்வொரு புகைபோக்கியாய்க் கடந்து நகர எல்லைக்குள் நுழையும்போது சாலையின் இரு புறங்களிலும் கருப்புத்தோல் பெண்கள் கலையத்திலும் எவர்சில்வர் தூக்குச் சட்டியிலும் பதனீர் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வித சினேகப் பார்வையும் நாம் மறையாத வரை அவர்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும் ஒரு வித வியாபார அழைப்பு.
காற்றில் கலையும் தலைமுடியை கைகளால் கோதினேன். நிறைய மணற்துகள்கள் கையில் ஒட்டிக்கொண்டன. ஹெல்மேட் அணிந்துகொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு இருபது காட்டியது. பைக்கின் வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கையில் நான் போய் செய்யப்போவது எதுவுமில்லை. தூக்கம், சாப்பாடு, ஷி·ட் என்பன தரும் அலுப்பில் ஒரு வித சந்தோஷம் கண்டுகொள்ளப் பழகினால் வாழ்க்கை இனிமையாயிருப்பதாய்க் கற்பிதம் கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.
டவுண்ஷிப் தாண்டி ரவுண்டானா கடந்து பிள்ளையார் கோவில் பக்கத்து சந்தில் திரும்பி அக்ரஹாரத்தில் நுழைந்தபோது பெருமாள் கோவிலிருந்து புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. பட்டருக்கு எப்போதும் ·பர்ஸ்ட் ஷி·ப்ட் என்று நினைத்துக்கொண்டேன்.
வண்டியை கோவிலுக்கு பக்கவாட்டிலுள்ள என் வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு டீக்கடைக்காரனுக்கு ஒரு புன்னகை புரிந்துவிட்டு வாசல்படியில் இருந்த தினந்ததியைக் கையிலெடுத்த போது பக்கத்துவீட்டு மாடியிலிருந்து ரேணுகா மாமி என்னவோ கேட்டாள்.
"என்ன மாமி.. காதுல சரியா விழல."
ஜன்னல் வழியாக வரப்போகும் குரலைத் தெளிவாய்க் கேட்க ஆயத்தமானேன்.
"மாமா உன்னப் பார்க்கணும்னார். அவசரமில்லை. எப்பமுடியுமோ அப்ப வா.."
"இப்பவே வரட்டா"என்றேன்.
ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "சரி வா"என்றாள். தினத்தந்தியைக் கையிலெடுத்துக் கொண்டு சாவியை சுழற்றியபடி மாமிவீட்டு மாடிப்படியில் ஏறினேன். காலிங்பெல்லை அழுத்துமுன் மாமியின் குரல் உள்ளிருந்து, "வெறுமனே தெறந்துதான் இருக்கு.வா"என்றது. செருப்பை விட்டுவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மாமி வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் குளிக்கவில்லை போல. அப்படியானால் மாமா சமையல் கட்டில் தான் இருக்கவேண்டும்.
"என்ன மாமி.. இன்னைக்கும் ராவுஜிதான் சமையலா?"
"ஆமா.. உள்ளதான் இருக்கார் போ”
எந்தவித சங்கோஜமும் இல்லாமல் சமையற்கட்டு வரை செல்வது எனக்கே ஆச்சரியமான ஒன்று. ராவுஜி சிவப்பான தொந்தியை ஒரு துண்டால் இறுக்கிக் கொண்டு கடுகை வெடித்துக்கொண்டிருந்தார். துண்டு எப்போதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற எண்ணத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராவுஜிக்கு அந்தக் கவலை இருந்ததாகவே தெரியவில்லை.
மாமி அங்கிருந்தே கத்தினாள்.
"அவனுய காபி ஆக்கி கொட்றி"
ராவுஜி காபி குடிக்கிறியா என்றார். சரி என்றேன். பிறகு காபி போடுவதில் மும்முரமாகிவிட்டார். அறை முழுதும் சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்து கிடந்தன. மாமி வீட்டில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்காது. குறைந்த பட்சம் ராஜி இருந்திருந்தாலாவது..
இந்த எண்ணம் எழுந்ததும் வயிற்றுக்குள் என்னவென்று தெரியாத ஒரு உருண்டை புரண்டு அடங்கியது. அதற்குள் ராவுஜி காபி ரெடி என்றார். காபியைக் கையில் எடுத்து குடித்துக்கொண்டே ராவுஜியைக் கேட்டேன்.
"என்ன விஷயம்?"
நான் காபியைப் பற்றி கமெண்ட் சொல்வேன் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? ஒரு நொடி சுதாரிப்புக்குப் பின் சொன்னார்..
"நேத்து பஜார்ல நம்ம இன்ஸ்பெக்டரைப் பாத்தேன்."
அவர் முகம் சீரியஸாகியது. குரல் தணிந்தது. மாமிக்கு கேட்ககூடாது என்று நினைத்திருக்கலாம். அதுவும் சரிதான். எனக்கும்கூட கொஞ்சம் படபடப்பு உண்டானதை அறிந்தேன். இனி ராவுஜியின் முகத்தைப் பார்க்கும் சக்தி இருக்காது என்று எனக்குத் தெர்¢யும். ராவுஜிக்கும் அப்படித்தான். இது பற்றி பேசும்போது அவர் என்னைப் பார்க்கமாட்டார். எந்த ஒரு அப்பாவிற்கும் அப்படித்தான். நான் காபியின் நுரைகள் எப்படி அடங்குகின்றன என்பதைப் பார்த்தவண்ணம் ராவுஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தாளித்த வாணலியில் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டே,
"அவர வந்து பாக்கச் சொன்னாரு. நீயும் கூட வந்தீன்னா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். இன்னைக்கு காலேல போகலாம்னு இருக்கேன். வர்றியா?"
பதிலுக்காய் தொக்கி நிற்கும் கேள்விகள் கேட்பது ராவுஜியின் பழக்கமல்ல. நைட் ஷி·ப்ட் முடிந்து தூங்கிகொண்டிருந்தாலும் எழுப்பி பதினோரு மணிக்காட்சிக்கு வா என்பார். வர்றியா என்பது இப்போது தொற்றிக்கொண்டுள்ள புதுப்பழக்கம்.
எப்போதும் யோசனையிலிருக்கும் அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு இடைவெளி விழுந்தது போன்ற உணர்வு எனக்கு மேலிட்டது. அதை அவரால் தவிர்க்க இயலாதென்பதும் உண்மை.
"இன்னைக்கு ஆ·ப்தானே ராவுஜி. கண்டிப்பா வர்றேன்."
"கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? எண்ணி வெச்சிருப்பியே"என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நேரத்துடன் ஒட்டாத வெறுமை நிறைந்த சிரிப்பு எனக்கு எப்போதும் இஷ்டமாய் இருந்ததில்லை. அதை அவர் கண்டு கொண்டதுபோல நிறுத்திக்கொண்டார். நான் பதிலேதும் சொல்லாமல் சுருட்டிய தினத்தந்தியால் கையில் தட்டியபடியே வெளியில் வந்தேன். மாமி ராவுஜியிடம் "காபி கொட்றியா?"என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
வளைந்த மாடிப் படிகளின் கீழிருந்த சிறிய மணற்வெளியில் குட்டையாய் தென்னை நின்றுகொண்டிருந்தது. இதைக்காணும்போதெல்லாம் ராஜியின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தென்னையின் கிளைகள் ஆடுவதற்கும் ராஜியின் சிரிப்புக்கும் எப்போதும் வித்தியாசம் தெரிந்த்தில்லை எனக்கு.
முதல்முறை கண்டபோதே வந்த ஈர்ப்பும் பழகப் பழக விரிந்த நட்பும் என் வழக்கமான வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருந்ததை எப்போதும் நினைப்பேன். என்றோ நிச்சயிக்கப் பட்டுவிட்ட அவளின் அவனை, கொஞ்சம் உரிமை எடுத்து நான் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவள் சந்தோஷமும் பொய்க்கோபமும் கலந்து அண்ணா என்று கூப்பிடும் அந்த ஒலி இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
வெளியில் வந்து கேட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது டீக்கடைக்காரன் சொன்னான்.
"தம்பி.. காபி கொண்டுவந்தேன். வூடு பூட்டியிருந்துச்சு"
"ராவுஜி வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நேரம்கழிச்சு கொண்டுவாங்க"என்று சொல்லிவிட்டு என் வீட்டு படிகளில் ஏறினேன். மேலேயிருந்து ராவுஜி குரல் கொடுத்தார்.
"பதினோரு மணிவாக்குல ஸ்கூலுக்கு வா"
பூட்டிய என் வீட்டுக் கதவைத் திறந்த படியே சரி என்று கத்தினேன்.
மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்துக்கொண்டே இருந்த ஞாபகம் இருக்கிறது. எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை. ஒரு வித அரை குறை உறக்கம். எப்போதும் விழித்திருப்பது போன்ற எண்ணமும் நன்றாகத் தூங்கியது போன்ற எண்ணமும் ஒன்றாய் எழுந்து என்னை அலுப்பாக்கியது. கண்ணைத் திறந்து மணியைப் பார்க்கத் தோன்றாமல் அலாரம்தான் அடிக்கட்டுமே என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ராவுஜி காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் மேலோங்கவும் போர்வையையும் சோம்பேறித்தனத்தையும் உதறிவிட்டு குளிக்கச் சென்றேன். என்னவென்னவோ நினைவுகள் என்னைச் சுழற்றிக்கொண்டிருந்தன. அன்றும் இதே போன்ற ஒரு விடுமுறை நாள்தான். எப்போதும்போல விழிக்கவில்லை. ரேணுகா மாமியின் அலறலும் ராவுஜியின் கதறலும் கேட்டு அடித்துப்புரண்ட நினைவு இப்போதும் கலவரமேற்படுத்துகிறது. நான் போவதற்குள் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டிருந்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டார்கள். எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. ராஜி தூக்கில் தொங்கிவிட்டாள். இப்போது உயிரில்லை. பிணமாய்த் தொங்கும் ராஜியை எல்லோரும் கஷ்டப்பட்டு கீழே இறக்கியபோது நான் வெளியில் எங்கேயோ வெறித்தவண்ணம் இருந்தேன்.
அதற்குப் பிறகு ராவுஜியை பார்க்கும் தைரியமோ அவரைத் தேற்றும் பக்குவமோ அழுது அழுது வீங்கிப்போன மாமியின் முகத்தைப் பார்க்கும் சக்தியோ எனக்கில்லை. இப்படியெல்லாம் நேரும் என்பதும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் என்னால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையல்ல. அங்கேயே மரம் போல நின்றிருந்தேன். என்னென்னவோ சொன்னார்கள். போலீஸ் கேஸாகுமுன் பிணத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லி ஐந்து மணி நேரத்தில் காரியத்தை முடித்தார்கள். நேற்று பேசியவள் இன்றில்லை என்னும் உண்மை நெஞ்சைக் குடைந்தபோது கொஞ்சம் கலவரமடைந்துதான் போனேன். ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்வி என் மனதில் ஓடிய வண்ணம் இருந்தது.
ராவுஜியையும் மாமியையும் எல்லாரும் தேற்றிக்கொண்டிருந்த போது ஒரு காரில் இருந்து ராஜிக்கு பேசி வைக்கப்பட்டிருந்த பையனும் வேறு சிலரும் இறங்கினார்கள். ராஜியின் கட்டாயத்தின் பேரில் அந்தப் பையனை நான் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கூட வருவது அவன் அப்பாவும் அவரின் நண்பர்களுமாய் இருக்கவேண்டும். அவன் அப்பா அவனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எல்லா கூட்டத்தையும் மீறி வீட்டினுள்ளே சென்றார். அவனைப் பார்த்ததும் மாமி மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராவுஜி துண்டைஎடுத்து வாயை மூடிக்கொண்டு சரிந்திருந்த மார்புகள் குலுங்கக் குலுங்க அழுதார். பையனின் அப்பா கேட்டார்.
"என்னாச்சு?"
கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். ராவுஜி கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னார். பையனின் அப்பா ராவுஜியின் மன நிலையைக் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.
"நீ என்ன பண்ணிருக்கனும்? நாங்க வர்ற வரைக்கும் வெச்சிருக்கணுமா வேண்டாமா?
அவனப் பாரு.. அழுது அழுது.. அவனுக்கு என்ன ஆறுதல் சொல்றது நானு? அவன் கடைசியா அவ மொகத்தைப் பார்த்திருந்தான்னா கூட ஒரு ஆறுதலா இருந்திருக்கும்.."
"இல்லடா. போலீஸ் கேஸாயிரும்னுதான்.. .. "
"சும்மா சொல்லாத.. திடீர்னு வந்து என் பொண்ணுக்கு ஒன் பையனக்கொடுன்னு சொன்னப்பவே யோசிச்சேன். சரி கூட படிச்சவனாச்சேன்னு நம்பித்தான் சரின்னேன். என்னடா தூத்துக்குடியில இல்லாத ஸ்கூலான்னதுக்கு அவ அத்தை வீட்டுல தங்கிப் படிக்கட்டும்ன. இப்பதான் புரியுது அவ பத்தாவது படிக்கும்போதே எவன் பின்னாடியோ சுத்திருக்கான்னு. "
ராவுஜி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தார். பையன் பேசினான். அதிகமாய் ராஜியை நேசித்திருப்பான் போல. பேசும்போது கண்ணிலிருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது.
"அப்பா சும்மா இர்றி.."என்று அவன் அப்பாவை அதட்டிவிட்டு ராவுஜியை நோக்கி "மாமா. அவரு சொல்றத கேக்காதீங்க. எனக்குத் தெரியும் என் ராஜி பத்தி. அவ எம்மேல உசிரயே வெச்சிருந்தா. என்கிட்ட கூட சொல்லாம இப்படிச் செஞ்சிக்கிட்டான்னா வேற ஏதோ காரணம் இருக்கணும்.. சொல்லுங்க.. என்ன காரணம்? "
"தெரியலையேப்பா.."ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் ராவுஜி.
"பொய் சொல்றீங்க.. உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை. சரி விடுங்க. ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருந்தாளா?"
ராவுஜி எதுவும் இல்லையென்று தலையசைத்தார். பையன் தனக்கு கடிதம் எழுதி வைக்காமல் ராஜி சாகமாட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். மீண்டும் பையனின் அப்பா கத்தத் தொடங்கினார். ராவுஜி திட்டம்போட்டு தன்னையும் தன் பையனையும் ஏமாற்றிவிட்டதாகக் கத்தினார். தெருக்காரர்கள் சிலர் சமாதானம் பேசி அவரை அனுப்பி வைத்தார்கள். போகும்போது தனக்கும் ராவுஜி குடும்பத்திற்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்.
அலாரம் அடித்த போதுதான் ஷவரில் நெடு நேரமாய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். வேகவேகமாய் தலைதுவட்டிக்கொண்டு கத்தும் அலாரத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டேன்.
ராவுஜி பயந்தபடி ஒன்றும் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தன் பையனுக்கு ட்யூசன் சொல்லித்தரவேண்டுமென்று கேட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. பஜாரில் பார்த்தபோதோ அல்லது ஒரு ·போன் போட்டோ கேட்டிருக்கலாம். ஆனால் ராவுஜி அப்படியெல்லாம் நினைத்ததாகத் தெரியவில்லை. தனது கடமை அது என்பது போல பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ராஜி விஷயத்தில் இன்ஸ்பெக்டர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சியாய் இருந்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்கவேண்டும் என்ற தொனியில், "எப்ப கல்யாணம்? என்னைலேர்ந்து லீவு", என்றார். உடனே மறந்துபோகும்படியான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு பரஸ்பரம் சிரித்துவிட்டு நானும் ராவுஜியும் கிளம்ப ஆயத்தமானபோது ராவுஜி இன்ஸ்பெக்டரிடம்,
"நீங்க வரச்சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்"
"என்னவோ ஏதோன்னா.. ஓ.. நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறீங்களா? அது முடிஞ்சி போச்சு. ஆக்சிடென்டல் டெத்துன்னு சர்டி·பிகேட் வாங்கின பின்னாடிதான எரிச்சோம். இனிமே ஒரு பிரச்சனையும் வர வாய்ப்பில்ல. நீங்க மறக்கவேண்டியதுதான் பாக்கி"
"நா எப்பவோ மறந்துட்டேனே.. எப்ப அவ எங்கள வேண்டாம்னு நெனச்சிட்டாளோ அப்பவே அவள நாங்க மறந்தாச்சு.."
ரொம்ப அலட்சியமாய் பேசுவதாய் ராவுஜி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் குரல் அவருடன் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை.
"ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி.. உண்மையிலேயே அவ லெட்டர் எழுதும் எழுதி வைக்கலயா?"
எனக்குள்ளிருந்த அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் கேட்கவும் கொஞ்சம் உன்னிப்பானேன்.
"என்ன சார் நீங்க.. லெட்டர் இருந்திருந்தா உங்க கிட்ட கொடுத்திருக்க மாட்டேனா.. நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்றீங்க.."
ராவுஜி இதைத் தவிர எதுவும் சொல்லமாட்டாரென எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டருக்கும் அதே எண்ணமோ என்னவோ. "ஓ.. ஜஸ்ட் கேட்டேன்"என்றார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். ராவுஜியை ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். நானும் ராவுஜியும் எங்கு போனாலும் நடந்து போவதே பழக்கம். ராவுஜிக்கு நான் பைக் ஓட்டும்போது என் பின்னே அமர்ந்து வர பயமும் கூட. ரேஷ் ட்ரைவிங் என்பார்.
என் சிந்தனைகளைக் கலைக்கும் விதமாகவும் அவரை அவரே சாந்தப் படுத்திக்கொள்ளும் விதமாகவும் எங்களிடையே நிலவியிருந்த மௌனத்தை அவரே கலைத்தார்.
"அப்புறம் கல்யாண வேலைலாம் ஊர்ல அப்பாவும் அம்மாவும் பார்க்குறாங்களா?"
அந்தக் கேள்வி அவருக்குள்ள படபடப்பைக் காட்டுவதைத்தவிர வேறொன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை.
"ம்"
"என்ன யோசனை பலமா இருக்கு?"
அவரை ஆழ ஊடுருவிப் பார்த்தேன். எனக்குள்ளிருந்த அந்தக் கேள்வியை கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். நீயுமா என்பது பதிலாய் இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டேன்.
"ராஜி ஏன் அப்படி செஞ்சிக்கிட்டா? உங்களுக்கு நெஜமாவேத் தெரியாதா? அவ உண்மையிலேயே லெட்டெர் எதுவும் எழுதி வைக்கலயா?"
என்றாவது ஒரு நாள் இதைக்கேட்பேன் என்று ராவுஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ. பெரிய அதிர்ச்சி ஒன்றும் அவர் முகத்தில் இல்லை.
"அப்படி ஒன்னு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா?"
இதற்குப் பிறகு அவரிடம் இதைப் பற்றிக் கேட்பது முறையல்ல என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ற ரீதியிலான முகத்துக்கு நேரான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது, அமைதியாயிருப்பதைத் தவிர?
ராவுஜி ராஜியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் அவரையும் மீறி கண்ணீர் வந்தது. சீக்கிரம் ஸ்கூல் வந்துவிடாதா என்று இருந்தது எனக்கு.
"எப்படி வளர்த்தேன் தெரியுமா? ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு இப்படிப் போனா எப்படிடா வாழ்றது? என்ன விடு. மாமியை நினைச்சுப் பாரு. இப்பவும் ராத்திரியில பொலம்புறா.. அவ அழும்போது நெஞ்ச அடைக்கும் எனக்கு. நேத்து சொல்றா.. ராஜிய நெனச்சுப் பார்த்தாஅவ சிரிச்ச முகமே ஞாபகம் வரமாட்டேங்குதுங்க.. தொறந்த கண்ணும் வீங்குன முகமும் வெளிதள்ளின நாக்கும் ஞாபகம் வந்து பயமா இருக்குதுங்கன்றா. பெத்தவளுக்கு எப்படியிருக்கும்?"
எனக்கு பயமாய் இருந்தது. அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. நல்லவேளை. ஸ்கூல் வந்துவிட்டது.
"சரி ராவுஜி நான் கிளம்புறேன். ரொம்ப தூங்கிட்டேன்னா ராத்திரி ஒரு ஆறரைக்கு எழுப்பிவிட்டுருங்க. வரட்டா"என்றேன்.
சம்பந்தமில்லாத உரையாடல்களின் உதவி புரிந்தது.
அவர் பேச்சை மாற்றுவதைவிட அவரை விட்டு விலகிவிடுவது இப்போதைக்கு நல்லது. எனக்கும் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்.
ராவுஜி, "சரி போ. போய் தூங்கு. ஒரே ஒரு விஷயம். ஒங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லாதது தப்புதான். ஆனாலும் நீ புரிஞ்சுக்குவன்னு நெனைக்கிறேன்"என்ற பலமான பீடிககக்குப் பின், "ராஜி சாகுறதுக்கு முன்னாடி ஒரு லெட்டர் எழுதி வெச்சிருந்தா"என்றார்.
எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியோ இத்தனை நாள் என்னைக் குடைந்துகொண்டிருந்த என் கேள்விக்கு விடை கிடைத்தால் சரி என்ற எண்ணத்தால் உண்டான பரப்ரப்பை அடக்கிக்கொண்டு கேட்டேன்.
"நா மொதல்லயே நெனச்சேன். என்ன எழுதியிருந்தா?"
"அத நான் படிக்கவேயில்லை. படிக்காமயே கிழிச்சுப் போட்டுட்டேன். அவ எதாவது எழுதி அதைப் படிச்சுட்டு நம்ம பொண்ணா இப்படின்னு நினைக்கிறதை விட ஏன் செத்தான்னு எல்லாரையும் மாதிரி காரணம் தெரியாம இருந்தா போதும்னு நினைச்சிதான் அதைக் கிழிச்சிப் போட்டுட்டேன்"என்றார்.
நெஜமாவா என்று வாய் வரை வந்த கேள்வியை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்தேன். உண்மையோ பொய்யோ அதை எற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இன்னும் அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்றும் பட்டது.
"நீங்க செஞ்சது சரிதான்"
"மாமிகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்"
"சரி"என்றேன்.