Thursday, June 24, 2010

மொபைலில் இருந்து நேரடியாகப் பதிவு. சோதனை.

மொபைலில் இருந்து நேரடியாகப் பதிவு. சோதனை.

தமிழ் இல்லாத மொபைல்களிலிருந்து தமிழில் டிவிட் செய்ய அல்லது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?

தமிழில் நேரடியாக டிவிட் செய்ய வசதியிருக்கும் புண்ணியவான்கள், இப்ப தமிழ்ல டிவிட் செய்யலைன்னா என்ன என்னும் தத்துவவாதிகள், இந்த டிவிட்டையே ஒழிச்சாத்தான் சரிப்படும் என்னும் புரட்சிவாதிகள், இதோ இந்த எழுத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.

மொபைலில் இருந்து எப்படியும் தமிழில் டிவிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் என்னைப் போன்ற தீவிரவாதிகளுக்கு நல்வரவு.

நேரடியான எளிமையான வழியை, நேற்றிரவு இதற்கென உழைத்து, கிருபா உருவாக்கித் தந்துவிட்டார். நான் ஊருக்குப் போவதால் இதனைச் செய்து தாருங்கள் எனக் கேட்டது எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. இப்படியெல்லாம் கேட்காவிட்டால் இவர் செய்யமாட்டார் என்பதும் அதன் இன்னொரு பக்கம்!

http://krupashankar.com/tamiltweet/a.aspx

மொபைலில் மேலே உள்ள யூ ஆர் எல்லுக்குச் சென்று, உங்கள் டிவிட்டர் ஐடி பாஸ்வேர்டை கொடுத்து, நீங்கள் டிவிட் செய்யவேண்டும். ஆங்கிலத்தில் தட்டிவிட்டு அனுப்பினால், அது தமிழாக மாற்றப்பட்டு டிவிட்டரில் வரும். நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது, தமிழ் ஃபொனடிக்கை மனத்தில் வைத்துக்கொண்டு தட்டவேண்டும். ஏனென்றால் அதில் தமிழ் டிஸ்ப்ளே (ப்ரிவியூ) வராது. இது ஒரு வழி. ஜிபிஆர்எஸ் உள்ள பெரும்பாலான மொபைல்களுக்கு இது போதுமானது. இன்னும் இதில் அதிகரிக்கவேண்டிய வசதிகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கிருபா செய்வார் என எதிர்பார்க்கலாம். (விடமாட்டோம்!)

இன்னொரு வழி - மூக்கைச் சுற்றி காதைத் தொடும் வழி.

என் நோக்கியா ஈ71 மொபைலில் இது சரிப்பட்டு வருகிறது.

இந்த சுற்றி மூக்கைத் தொடும் வழிக்கு கீழே உள்ள வசதிகள் உங்கள் மொபைலில் இருக்கவேண்டும்.

01. உங்கள் மொபைலில் காப்பி + பேஸ்ட் ஆப்ஷன் இருக்கவேண்டும்.
02. தமிழ் இண்டிக் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி இருக்கவேண்டும்.
03. ஒரு அப்ளிகேஷன் ஓடிக்கொண்டிருக்கும்போதே, பின்னணியில் இன்னொரு அப்ளிகேஷனை ஓட்டிக்கொள்ளும் வசதி இருப்பது நல்லது. (Background running.)

இனி நீங்கள் செய்யவேண்டியது இதுதான்:

01. முதலில் தமிழ் இண்டிக் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அதில் நீங்கள் அனுப்ப நினைக்கும் டிவிட்டை டைப் செய்து, அதனை டிராஃப்டாக சேவ் செய்துகொள்ளுங்கள்.

02. உங்கள் டிவிட்டர் பக்கத்தைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.

03. உங்கள் மொபைலில் defaultஆக இருக்கும் மெசேஜில் சென்று, நீங்கள் சேமித்த டிராஃப்ட் எஸ் எம் எஸ்ஸை திறந்துகொள்ளுங்கள். நீங்கள் தமிழில் தட்டியது கட்டம் கட்டமாக இருக்கும். அதனைப் பற்றிக் கவலைப்படாமல் அதனை காப்பி செய்துகொள்ளுங்கள்.

04. உங்கள் டிவிட்டரில் சென்று, அதனை பேஸ்ட் செய்யுங்கள். அப்போதும் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். நீங்கள் டிவிட்செய்துவிட்டால், ப்ரௌசரில் சரியாகத் தெரியும்.

அவ்வளவுதான்.

மேலே உள்ள சுற்றி வளைத்த தமிழ் உள்ளிடுகையில் உள்ள பயன்கள் என்ன என்ன?

01. தவறு வராமல் டைப் செய்ய ப்ரிவியூ உள்ளது.

02. இதே முறையில் நீங்கள் மடலும் அனுப்பலாம் என்பதுதான் மிக முக்கியமானது.

செம்மொழி மாநாட்டில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் நம் முதல்வர் நினைத்தால் ஒரே நாளில், இனி தமிழ்நாட்டில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் தமிழ் உள்ளிடும் வசதியும், தமிழ் பார்க்கும் வசதியும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று சட்டமியற்ற இயலும். அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து, இதனை இந்தியா முழுமைக்குமாக, இந்திய மொழிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே மொபைலை இந்தியாவில் விற்க இயலும் என நிர்ப்பந்திக்க முடியும். இந்தியா என்னும் மாபெரும் சந்தையை, இந்த நிர்ப்பந்தத்தால் எந்த மொபைல் நிறுவனமும் இழக்க முன்வராது. இதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால் நாம் என்றைக்கு நிரந்தரத் தீர்வைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறோம்?

கருணாநிதியைப் பற்றி ஒருவரியாவது எழுதாவிட்டால், பதிவு எழுதிய நிறைவே வருவதில்லை. :-)

Tuesday, June 22, 2010

பார்த்ததில் ஈர்த்தது - 22 ஜூன் 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பிதழாக வந்து குவிந்திருக்கும் பெரும்பாலான பத்திரிகைகளில் கருணாநிதிக்கு வீசப்படும் சாமரமே முதலாவதாக உள்ளன. ஜனநாயக முறைப்படி, எனக்குப் பிடித்த செய்திகளை மட்டும் இங்கே தருகிறேன். சாமரம் வீச ஆயிரம் பேர் உள்ளபோது, முக்கி முனகித் தவிக்கும் குரலை வெளிப்படுத்துவதுதான் என் ஜனநாயகம். (இன்னும் வாசிக்காத இதழ்களில் வருபவற்றை நான் பார்க்க நேர்ந்து அவை என்னை ஈர்க்க நேர்ந்தால் அவற்றையும் பகிர்ந்துகொள்வேன்.) செம்மொழி மாநாட்டோடு தொடர்பில்லாத செய்திகள் கூட வரலாம். சும்மா இருப்பவர்கள் படித்து வைக்கவும்.

இப்படி பார்த்ததில் ஈர்த்தது வரிசையாக போரடித்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். நிறையப் பேர் அக்கப்போர் என்று சொன்னால், இன்னும் தீவிரமாகத் தொடர ஏதுவாக இருக்கும்.

வழக்கம்போல அங்கிருந்து இங்கிருந்து என சீரில்லாமல் எடுக்கப்பட்டது. தொடர்ச்சி இருக்காது.

துக்ளக் இதழில் வந்தது:

தமிழின் பெயரால் வீண் செலவு!
-என். முருகன் ஐ.ஏ.எஸ்.(ஓய்வு)

...சினிமாத் துறையினருக்கு நிலம் வழங்குவது சட்டப்படி தவறு என்று நான் கட்டிக் காட்டியிருந்தேன். அரசு நிலங்கள் பொது நன்மைக்காக ஒதுக்கப்படலாம். ஆனால் 'ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு, விலை உயர்ந்த நிலத்தை, மிகக் குறைந்த கட்டணத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது, பொது நன்மை ஆகாது' என்பது சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விலை உயர்ந்த நிலத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

...செம்மொழி மாநாட்டிற்கான ஒரு பாடலை எழுதி, இசையமைக்கச் செய்து, அந்தப் பாடலை இரவெல்லாம் கண் விழித்து கேட்டுக் கொண்டிருந்ததாக முதல்வர் அப்பாடல் வெளியீட்டு விழாவில் அறிவிக்கின்றார். இதுபோன்ற விழாக்களில் எல்லா அமைச்சர்களும் ஆஜர். இப்படி இருந்தால், அரசு வேலைகள் எப்படி நடக்கும்? அரசின் கோப்புகளை பார்க்க முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே!

...சோழ மன்னர்களின் காலத்தில் இருந்தது போன்ற தர்பார் அரங்கு, கேரளா ராஜஸ்தான் மற்றும் தஞ்சாவூரிலிருந்து வந்த வல்லுநர்களால் வெல்வெட்டுத் துணிகள் வைத்து உருவாக்கப்படுகின்றன. வெளிநாட்டு தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தரமான ஆய்வுக் கட்டுரைகளை புரிந்துக் கொள்ளும் தகுதி உடையவர்களை மட்டும் வைத்து, இந்த செம்மொழி மாநாட்டை நடத்த ஒரு கல்யாண மண்டபம் அளவிலான குளிர்சாதன வசதியுடைய மண்டபமே போதும்....

இந்தச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதால் தமிழ் வளரும் என்ற ஒரு பிரச்சாரமும், தமிழர்களுக்கு பெருமை என்ற கருத்தும் பல பொதுக்கூட்டங்களில் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆனால், எங்களில் நிறைய பேர் தமிழ் வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் - இந்த மாநாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நினைக்கிறோம்.

...தமிழை மற்றவர்களின் மீது திணிப்பது சரியல்ல. அதைவிடவும் தமிழார்வம் மிக்க தலைவர் ஒருவர் அரசியலில் சேர்ந்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தால், அதற்காக அவர் பட்ஜெட் பணத்தை தமிழின் பெயரால் வீணடிப்பது மிகவும் தவறு. எனக்கு டென்னிஸ் விளையாட்டு மிகவும் பிடிக்கும். காலத்தின் கோலத்தினால் நான் ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டால், ராட்லேவர், போர்ஃப், ஃ¦ப்டரர், ரால்ஃப் நடால்... போன்ற டென்னிஸ் வீரர்களுக்கு எல்லாம் சிலை வைத்து, டென்னிஸ் பற்றிய கருத்தரங்கங்கள், மாநாடுகள், விழாக்கள் போன்றவற்றை பொதுப் பணத்தில் நடத்துவது எவ்வளவு தவறோ, அதுபோன்ற தவறுதான் தற்போது தமிழ் மொழியின் பெயரால் மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதும் ஆகும்!

துக்ளக் இதழில் வந்த துர்வாசரின் கட்டுரை. துர்வாசர் என்ற பெயரில் முன்பு வண்ண நிலவன் எழுதி வந்தார். இப்போது யார் எழுதிகிறார்கள் எனத் தெரியவில்லை.

செம்மொழி மாநாட்டுக்கு ஏன் விடுமுறை?
-துர்வாசர்

வள்ளுவர் கோட்டம், கண்ணகி கோட்டம், மிக உயரமான வள்ளுவர் சிலை... இவற்றால் தமிழ் மொழிக்கு என்ன லாபம்? இந்தப் போலியான தமிழ் படாடோபங்களால், தமிழரின் பண்பாட்டை ஒரே நாளில் உலகம் அறிந்துவிட்டதா? தி.மு.க.வுக்கு வேண்டிய கான்ட்ராக்டர்கள் பயன் அடைந்ததைத் தவிர, இவற்றால் யாருக்கு என்ன பலன் கிடைத்தது...? வள்ளுவர் கோட்டம், கூட்டம் நடத்துகிற ஹாலாகப் பயன்படுகிறது, கண்ணகி கோட்டம் தூங்கி வழிகிறது. குமரிமுனை வள்ளுவர் சிலை உப்புக் காற்றில் செய்வதறியாது நிற்கிறது.

செம்மொழி மாநாட்டைக் கண்டு களித்தே தீருவோம் என்று பெற்றோர்களோ, மாணவர்களோ விடுமுறை கேட்டார்களா?...

...உலக தமிழ் மாநாட்டுக்கு மாணவர்களும், பொதுமக்களும் ரயிலேறி வரத் தயாராக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, தமிழகம் பூராவிலுமுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவானேன்? அதுவும் ஒரு நாளல்ல, மூன்று நாட்கள் விடுமுறை. இந்த நாட்களில் நடந்திருக்க வேண்டிய பாடங்களை கருணாநிதியா வந்து நடத்தப்போகிறார்?

கல்கி இதழில் கருணாநிதியின் கட்டுரை ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கல்கியுமா என நினைத்துப் புரட்டினால், அதே இதழில் வெளிவந்துள்ள பிரபஞ்சனின் முக்கியமான கட்டுரை கண்ணில் பட்டது. இரண்டையுமே கல்கி வெளியிட்டிருப்பது ஆச்சரியம்தான். பிரபஞ்சனின் கருத்துகளோடும், அரசியலோடும் உடன்படாதவன் என்றாலும், இந்த அவரது நிலைப்பாடு என் அரசியலோடு ஒத்துப்போகிறது! கடைசி வரியில் கொஞ்சம் சிரிப்பு வந்தால் மட்டும் அடக்கிக்கொள்ளுங்கள். கல்கி இதழைக் காசு கொடுத்து வாங்கி, பிரபஞ்சனின் முழுக்கட்டுரையையும் நிச்சயம் வாசியுங்கள்.

இருக்கும் நூறு; இல்லாத ஆயிரம்.
-பிரபஞ்சன்

திராவிட இயக்கமும் அதன் அரசும் தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியை ஏற்படுத்தின என்பது உண்மைதான். இந்த உணர்ச்சி வளர்ச்சியை நோக்கித் திருப்பிவிடப்பட்டதா என்றால் இல்லை. ஒரு மொழி, வெறும் உணர்ச்சியால் வளர்ந்து விடாது. அப்படி வளர்ந்ததாக வரலாறும் இல்லை...

...இந்த லட்சியத்தை நோக்கி, நடக்கவிருக்கும் உலகச் செம்மொழி மாநாடு செயல்பட வேண்டும் என்பதே என் உள்ளார்ந்த விருப்பம். வெறும் உணர்ச்சிக் குப்பைகள், கனக விசயரின் தலையில் கல் சுமக்க வைத்த பழங்கற்பனைகள். கூட்டம், கூட்டம் பார்க்க வந்த கூட்டம், ரங்கராட்டினம், சோடா, கலர், சுண்டல், கண்காட்சி, ஊர்வலம், அவிழ்த்துவிட்ட கண்ணகியின் கூந்தல் - இவை எதுவும் தமிழை வளர்த்துவிடாது. தமிழ் வளர்ச்சி என்பது வேறு....

...தமிழ் இனத்துக்கும் மொழிக்கும் ஒரு முழுமையான, முறையான, அறிவியல் சார்ந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறதா, இன்று வரை?...

...கல்வெட்டுகளைப் படி எடுத்து மக்கள் அறிஞர்கள் பார்வைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்திருக்கின்றனவா?ஏன் இல்லை? அதுபோலவே செப்போடுகளும்.

...குமரி, நெல்லை, மதுரை தொடங்கி முக்கிய ஊர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்....

...கடந்த 20 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற எந்த ஆசிரியரது படைப்பும் முழுமையாகத் தமிழில் வரவில்லை.

...1960-களில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம் - தமிழ், அகராதிகளுக்குப் பிறகு, இத்துறையில் தமிழின் இன்றைய வளர்ச்சியைக் கணக்கில் கொண்ட என்ற அகராதி முயற்சியும் அரசு தரப்பில் செய்யப்படவில்லை.

...தமிழில் முன்னரே உள்ள சிறப்புகள் அல்ல பிரச்னை. இல்லாத சிறப்புகளே நம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. தமிழில் உள்ளவை சில நூறுகள். இல்லாதவை பல ஆயிரங்கள். நாம் கவலைப்படுவது இந்த இல்லாமைக்காகத்தான். அறிவாளர்கள் இந்த இன்மைகள் பற்றி, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுபவர்களே உண்மையான அறிவாளிகள்.

நான் வேண்டுமென்றே கருணாநிதிக்கு எதிரான கருத்துகளை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று சந்தேகப் படாதீர்கள். சந்தேகமே வேண்டாம், அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன், செய்யப் போகிறேன். ஒரு நண்பர் கிண்டலாக அடிக்கடிச் சொல்வார், கண்ணை மூடிக்கொண்டு கருணாநிதிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலே போதும், அது சரியாகத்தான் இருக்கும் என்று. அவரை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

1996ல் ஜெயலலிதாவின் ஆடம்பரத்தின், தற்புகழ்ச்சியின் மீதிருந்த அதே வெறுப்பும், எரிச்சலும், குமட்டலும் இப்போது தமிழ்ச்செம்மொழி மாநாட்டினால் மீண்டும் வருகிறது - இலக்கு மாறியபடி.

Monday, June 21, 2010

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பொது நூலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்

அனுப்பநர்

ஹரி ஹர பிரசன்னா
4/31 ஈ, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 600 089.

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
பொது நூலக இயக்ககம்,
737/1, எல் எல் ஏ கட்டடம்,
அண்ணா சாலை,
சென்னை - 600 002

ஐயா, வணக்கம்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நான் கீழே உள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தேவையான விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

01. 2006, 2007, 2008, 2009ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க வேண்டி படிவங்களைச் சமர்ப்பித்த பதிப்பகங்களின் பட்டியல் தேவை.

02. 2006, 2007, 2008, 2009ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க, ஒவ்வொரு பதிப்பகமும் சமர்ப்பித்த புத்தகங்களின் எண்ணிக்கை தேவை.

03. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் நூலக ஆணை வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை தேவை.

04. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் நூலக ஆணை வழங்கப்பட்ட புத்தகங்களின் மொத்த மதிப்பு (ரூபாயில்) தேவை.

05. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வாங்க அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அளவும், அதன்படி வாங்கப்பட்ட மொத்த நூல்களின் மதிப்பும் தேவை.

06. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகத்தால் வாங்காமல் மறுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், பதிப்பகம் வாரியாக, தேவை.

07. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் எத்தனை தவணைகளில் வாங்கப்பட்டது என்கிற விவரம் தேவை.

08. 2006, 2007, 2008ம் ஆண்டுகளில், பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க, எந்த எந்த தவணைகளில் எந்த எந்த பதிப்பகங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது என்கிற விவரம் தேவை.

மேலே உள்ள தகவல்களைப் பெற, ஒளிநகல்கள் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பணம் செலுத்தவேண்டியிருந்தால், அதை நான் செலுத்திவிடுகிறேன் என்று கூறிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

V. ஹரிஹர பிரசன்னா,
4/31 ஈ, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 600 089.

இந்தக் கேள்விகளுக்கு பொது நூலக இயக்ககத்தில் இருந்து வந்த பதிலின் நகல் கீழே. (பெரிதாக்கிப் படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)



அதாவது நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் வீண் செலவு என நினைக்கிறார்கள். நேரில் வரவேண்டாம் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்பது. இவர்கள் மீண்டும் நேரில் வரச் சொல்கிறார்கள். பிடிஎஃப் அல்லது ஹெச் டி எம் எல் கோப்பாகக் கொடுத்தால் 20 ரூபாய் செலவு கூட ஆகாது. எந்த எந்த பதிப்பகங்கள் எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன, அதில் எத்தனை புத்தகங்களுக்கு ஆர்டர் கிடைத்தன என்பது தெரிந்தால், பல்வேறு விஷயங்கள் நமக்குப் புலனாகும்.

நாம் இதை எல்லாம் தகவலாக அறியும் உரிமையாக இல்லாமல், அரசு நிறுவனமே தகவலை வெளிப்படுத்தும் கடமையாக இருக்கவேண்டும். நாம் கோரும் எல்லா விஷயங்களையும் தாமாகவே இணையத்தில் அரசு நிறுவனங்கள் வெளிப்படுத்தலாம். இது நடக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?

வேறு யாரேனும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். எனக்கு எரிச்சலாகிவிட்டது. :-)

பார்த்ததில் ஈர்த்தது (ஸ்கூப் புத்தகத்திலிருந்து)

குல்தீப் நய்யாரின் ‘ஸ்கூப்’ (மதுரை பிரஸ் வெளியீடு - காலச்சுவடு விற்பனை உரிமை) படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து சில வரிகள், நான் ரசித்தவை அல்லது என்னை யோசிக்க வைத்தவை அல்லது நான் புதியதாகப் படித்தவை - இங்கே. (இதைப் படித்துவிட்டு அனைவரும் மதுரை பிரஸ் வெளியிட்டிருக்கும் ‘ஸ்கூப்’ புத்தகத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :>) தொடர்ச்சி இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்ப் பதிப்பிற்கான முன்னுரையிலிருந்து சில வரிகள்:

நெருக்கடி நிலை காலகட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலையானதும் காமராஜரைச் சந்தித்தேன். தான் இந்திரா காந்தியைத் தவறாகக் கணித்துவிட்டதாக மிகவும் வருந்தினார் காமராஜர். சென்னையில் அவரது வீட்டிற்கு வெளியில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்திருந்தார் காமராஜர். நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் நடந்த அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அதனால் அதைப் பற்றித் தொடர்ந்து பேச அவர் விரும்பவில்லை. இந்திரா காந்தியை பிரதமராக்கிய குற்ற உணர்வில் இருந்தார் காமராஜர்.

ஒருவகையில் பார்த்தால் நீங்களும்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பொறுப்பாளி என்று அவரிடம் சொன்னபோது எதுவும் பேசாமல் மூன்று, நான்கு முறை தலையில் அடித்துக் கொண்டார். அவரது மனப்போராட்டமும் நிராசையும் அதில் வெளிப்பட்டன.

மௌண்ட்பேட்டனுடனான சந்திப்பு குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.

பிரிவினையால் ஏற்பட்ட விளைவுகளை அவர் (மௌண்ட்பேட்டன்) மறுக்கவில்லை. என்னால் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் பிரிவினையைத் துரிதப்படுத்தியாக வேண்டியிருந்தது என்றார் அவர். நான் இறந்துபோய் கடவுளிடம் செல்லும்போது இப்படிச் சொல்வேன்:

''இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரிலிருந்து கடற்படைக்கு தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது உணவுக் கப்பல்களை வங்காளத்திற்கு அனுப்பி இரண்டரை மில்லியன் பேரைக் காப்பாற்றியிருக்கிறேன். இத்தனைக்கும் அப்படிச் செய்ய வேண்டாம் என்று சர்ச்சில் சொன்னார். அதனால், என் கணக்கில் இன்னம் ஒன்றரை மில்லியன் பாக்கியிருக்கிறது என்று அவரிடம் வாதாடுவேன்'' என்று சொன்னார் மெளன்ட்பேட்டன்.

உங்களது பாகிஸ்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் துண்டுதுண்டாகிவிடும் என்று ஜின்னாவிடம் சொன்னேன் என்று நினைவு கூர்ந்தார் மெளன்ட்பேட்டன். ''என்னுடைய கணிப்பு சரியாகிவிட்டதென்று ராஜாஜி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.'' எனக்கு என் வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறதென்று அவருக்கு நான் பதிலெழுதினேன் என்று திரும்பவும் அழுத்திச் சொன்னார் மெளன்ட்பேட்டன்.

எல்லாம் நடந்த பிறகுதான் இவருக்கு இது தோன்றியது என யாரும் குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற கவனம் அந்த வார்த்தைகளில் இருந்தது.

பிரிவினைத் திட்டத்தில் பங்குவகித்த பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் எச்.வி. ஹட்சனிடமும் கேம்பெல் ஜான்சனிடமும் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்துவிடும் என்று மெளன்ட்பேட்டன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா என்று கேட்டேன். இப்படி ஒரு விஷயத்தையே தாங்கள் இப்போதுதான் கேள்விப்படுவதாக சொன்னார்கள் அவர்கள்.

ரெட்க்ளிஃப் குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள். இந்தியப் பிரிவினையின்போது இந்திய, பாகிஸ்தான் எல்லையை வகுத்து, எந்த நாடுகள் எதனுடன் சேரவேண்டும் என்னும் பொறுப்பை நிறைவேற்றியவர் ரெட்க்ளிப்.

''நீங்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பாகிஸ்தானிலிருக்கும் முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்'' என்று ரெட்க்ளிப்பிடம் சொன்னேன். அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் ரெட்க்ளிஃப். ''இந்தியாவுக்குச் செல்லவேண்டிய லாகூரை நான் பாகிஸ்தானுக்கு அளித்தேன். அப்படியில்லாவிட்டாலும்கூட, இந்துக்களை விட முஸ்லிம்களுக்குத்தான் நான் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறேன்'' என்றார் ரெட்க்ளிஃப்.

''காஷ்மீரைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. நான் லண்டனுக்கு திரும்பி வெகுநாட்களுக்குப் பிறகுதான் அதைப் பற்றியே கேள்விப்பட்டேன்'' என்று சொன்னார் ரெட்க்ளிஃப்.

''உங்களுடைய உளுத்துப்போன பாகிஸ்தான் இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் இருக்காது என்று ஜின்னாவைத் தான் எச்சரித்ததாக மெளன்ட்பேட்டன் சொன்னார். அது உண்மைதானா'' என்று ரெட்க்ளிஃபிடம் கேட்டேன். ''நான் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, நீங்கள்தான் முதன்முறையாக இதைப் பற்றிச் சொல்கிறீர்கள்'' என்றார் ரெட்க்ளிஃப்.

ரெட்கிளிஃப் காஷ்மீரையே கேள்விப்பட்டதில்லையாம். நல்ல நபர் நாட்டைப் பிரிக்க. லாகூரை பாகிஸ்தானுக்குக் கொடுத்தேன் என்கிறார். தேங்காயை பக்கத்து வீட்டு மாமிக்குக் கொடுத்தேன் என்ற ரேஞ்சுக்குப் பேசுகிறார். ஒரு நாட்டைப் பிரிப்பதில் என்ன அவசரம் பாருங்கள். நேரு பக்கவாதம் வந்து படுத்துக் கிடந்தார், குளியறையில் கால் வழுக்கிக் கீழே விழுந்து இறந்தார் என்பது போன்ற செய்திகளெல்லாம் ஒவ்வொரு வரியில் வந்து போனாலும், அப்படியே மனதில் தங்கி, பெரும் எண்ண அலையையே ஏற்படுத்திவிடுகின்றன.

Sunday, June 20, 2010

கருணாநிதியின் அன்புத் தொல்லை - செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு

நன்றாக சொதி சாப்பிட்டுவிட்டு கட்டையைச் சாய்க்கலாம் என்னும்போது +914044621260 என்னும் எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துக் கேட்டால், ஏ.ஆர். ரகுமான் ஹை டெஸிபிளில் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்று காதைக் கிழித்தார். ஏற்கெனவே தமிழ் செம்மொழி மாநாட்டு எஸ் எம் எஸ் நிறைய வந்து இம்சைப் படுத்திக்கொண்டிருந்தன. அதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தால், உடனே கருணாநிதி பேசினார். அன்பு உடன்பிறப்பே, உன்னை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கிறேன் என்று.

கொஞ்சம் கூர்ந்து கேட்கும்போது, அது கருணாநிதியின் குரல் இல்லை என்றும் கருணாநிதியின் குரலைப் போன்ற ஒரு குரல் என்றும் தோன்றியது.

எஸ் எம் எஸ் அனுப்பித் தொல்லை கொடுத்தார்கள். திரும்பிய பக்கமெல்லாம் செம்மொழி மாநாடு செம்மொழி மாநாடு என்று சொல்லி, ஏன் இந்த 2010ல் தமிழ்நாட்டில் இருந்து தொலைத்தோம் என்று நினைக்க வைத்தார்கள். எந்தத் தினசரியை எடுத்தாலும் செம்மொழி மாநாட்டு விளம்பரங்கள் வந்து பயமுறுத்தின. தொலைக்காட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் செம்மொழியான தமிழ்மொழியாம் என்று போட்டுக் கலங்கடித்தார்கள். உங்கள் தொல்லையே வேண்டாம் என்று, திரையரங்குக்குப் போனால் அங்கேயும் செம்மொழியான தமிழ்மொழியாம் துரத்தியது. அதிலும் ஓரிடத்தில் ஒரு பெண் பாடகர் வேக வேகமாக தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம் என்று சொல்லும்போது ரொம்பவே எரிச்சல் வருகிறது.

இதை எல்லாம் தாண்டி தொலைபேசி அழைப்பிலும் செம்மொழி மாநாட்டுக்கு வா என்றால் என்ன செய்வது. என்னவோ தொலைபேசி அழைப்பு வருகிறதே என்று எடுத்துக் கேட்டால் இந்தத் தொல்லை. இதையெல்லாம் செய்ய யார் அனுமதி தருகிறார்கள்? எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்தத் தொலைபேசி அழைப்பு விளம்பரம் எரிச்சல் தருகிறது. இதனை எதிர்த்துப் போராடவெல்லாம் திராணி இல்லை. வழக்கம்போல ஒரு தமிழன் ஸ்டைலில் கேட்டுக் கொள்கிறேன் - ஐயா பாவம் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துகொண்டுவிட்டோம். அதற்காக இந்தப் பாடு படுத்தாதீர்கள். தெரியாமல் செமொழி தகுதியுடைய ஒரு மொழியில் பிறந்துவிட்டோம் என்று நெக்குருக வைத்துவிடாதீர்கள்.

இந்த செம்மொழி மாநாடே கருணாநிதிக்கு பேக் ஃபயர் ஆனால் எப்படி இருக்கும் என்று நப்பாசையில் இருக்கிறேன். இதுவரை நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதைக் காட்டுகின்றன. ஆனாலும், கருணாநிதியின் வாழ்க்கையின் உச்சத்தில், அந்த எதிர்ப்புணர்வு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாமலும் போகலாம் என்றும் தோன்றுகிறது. என்னவோ நடக்கட்டும், ஆனால் இந்தத் தொலைபேசியில் அழைத்தெல்லாம் எரிச்சல் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

இன்று கருணாநிதி அழைத்தார், நாளை ஜெயலலிதா அழைத்துப் போகாதீர்கள் என்று சொன்னால் நான் என்ன செய்யமுடியும்? என்னை என் வழியில் போகவிடுங்கள். :-)

தமிழில் எஸ் எம் எஸ் அனுப்ப

தமிழில் எஸ் எம் எஸ் அனுப்ப இது ஒரு தற்காலிகத் தீர்வு. இது எல்லோருடைய தேவையையும் தீர்க்குமா எனத் தெரியவில்லை. நேற்று இரவு உறக்கம் வராதபோது மொபைலில் இணையத்தை மேய்ந்த போது கண்ணில்பட்ட ஒரு அப்ளிகேஷன் இது.



என்னுடைய மொபைல் நோக்கியா ஈ 71. இதில் தமிழில் படிக்க ஒபேரா சிறிய உலாவியினைப் பயன்படுத்துகிறேன். இதையும் முழுத்தீர்வு என்று சொல்லமுடியாது, ஆனால் சிறந்த தற்காலிகத் தீர்வு. அதேபோல் எஸ் எம் எஸ் தமிழில் அனுப்ப, வரும் தமிழ் எஸ் எம் எஸஸைப் படிக்க வழி இல்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஈ 71ஐத் தவிர எந்த மொபைல்களில் இது வேலை செய்கிறது என்பதெல்லாம் தெரியாது. தேவைப்பட்டவர்கள் முயன்று பார்க்கவும். இதிலிருந்து தமிழில் எஸ் எம் எஸ் அனுப்பினால், தமிழ் ஏற்கெனவே உள்ள மொபைல்களில் நேரடியாகப் படிக்க இயலும். அப்படி தமிழ் ஏற்கெனவே இல்லாத தமிழ் மொபைல்களில் இந்த Indisms என்னும் அப்ளிகேஷனை நிறுவினால் மட்டுமே படிக்க இயலும்.

இதிலுள்ள குறை, இதனைப் பயன்படுத்தி மெயில் அனுப்ப வசதி இல்லாதது. குறைந்தபட்சம் காப்பி & பேஸ்ட் வசதியாவது இருந்திருக்கலாம். அதுவும் இல்லை. எனவே இப்போதைக்கு எஸ் எம் எஸ்ஸுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஃபொனடிக் தமிழ்தான். ஆனால் நாம் பயன்படுத்தும் கீபோர்டைப் போல் அல்லாமல் சிறிய மாற்றங்களுடன் உள்ளது. மெல்லப் பழகிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அதன் உதவி பக்கத்திலேயே என்ன என்ன கீ என்ன என்ன எழுத்தைத் தரும் என்கிற விவரமெல்லாம் உள்ளது.

எனது மொபைலுக்கு ஒரு நல்ல தீர்வு இது. மற்ற பைல்களுக்கு-? தெரியவில்லை. இதன் மற்ற நிறை குறைகளை கிருபா, நாகராஜன் போன்ற பெரியவர்கள்தான் சொல்ல்வேண்டும்.

Indisms அப்ளிகேஷனை தரவிறக்க http://www.getjar.com/mobile/18661/indisms/

Saturday, June 19, 2010

ராவணன் - சில குறிப்புகள்

ராவணன் திரைப்படம் குறித்த என கருத்துங்கள் இங்கே.

நன்றி: இட்லிவடை.

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

Monday, June 14, 2010

ஆரிய சமாஜம் - புத்தகப் பார்வை

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)



மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரிய சமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர்.

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன்.

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார்.

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது.

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html

Sunday, June 13, 2010

பார்த்ததில் ஈர்த்தது - 13-ஜூன்-2010

படித்ததில் பிடித்தது என்று வைத்து யாராவது காப்பிரைட் கேஸ் போட்டால் என்னாவது என்பதால் பார்த்ததில் ஈர்த்தது என்று நாடகத்தனமாக வைத்துவிட்டேன். படித்ததை எப்படி பார்த்தது என்று சொல்லலாம் என்னும் பொருள் சார்ந்த தமிழ்ச்சண்டைகள் வரவேற்கப்படுகின்றன.

முன்பிலிருந்தே வாசிப்பதில் நம்மைக் கவருவதைத் தரவேண்டும் என நினைத்துக்கொள்வேன். இனியாவது சாத்தியமாகுமா எனப் பார்க்கலாம். உடனே மிரளவேண்டாம், அதற்காக நானே ஒரு வலைப்பதிவை எழுதி பார்த்ததில் ஈர்த்தது என்றெல்லாம் எழுதமாட்டேன்!

13-ஜூன்-2010 தேதியிட்ட கல்கியில் இந்திரா பார்த்தசாரதி, இளமைப்பாலம் பகுதியில்...

“வள்ளுவர் ‘பிறருக்கு புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்” என்று சொல்லவில்லை. வள்ளுவ உள்ளத்தை நன்கறிந்த பரிமேலழகர் ‘பிறருக்கு’ என்ற சொல்லை வருவித்துக் கொள்கிறார். வள்ளுவத்தைப் பரிமேலழகரைக் காட்டிலும் நன்கறிந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் இக்காலத்திய அரசியல்வாதிகள், ‘தமக்கும் தம் உறவினர்க்கும்’ என்ற சொற்களை வரவழைத்துக்கொண்டு இக்குறளுக்குப் பொருள் சொல்லக்கூடும். ‘தமக்கும் தம் உற்றார் உறவினர்க்கும் புரைதீர்ந்த அரசியல், பொருளாதாரப் பலன்களைத் தருமாயின், நாம் சொல்லுகின்ற பொய்கள் அனைத்தும் சத்தியவாக்கு என்பதில் சந்தேகமேயில்லை’ என்பது இக்காலத்துப் பொருள்.


16-ஜூன்-2010 தேதியிட்ட துக்ளக் கேள்வி பதிலில் சோ...

கே: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் சீன விஜயம், இந்தியாவுக்கு நன்மை பயக்குமா?

ப: ஒரு ஜனாதிபதி சில தினங்கள் நாட்டில் இல்லை என்பது, நாட்டிற்குப் பெரிய நன்மை என்று சொல்லிவிட முடியுமா என்ன? நான் அப்படி நினைக்கவில்லை.


அம்ருதா மே 2010 இதழில் ஆனைமுத்துவின் நேர்காணலில் இருந்து...

1973 செப்டெம்பரில் அவருக்கும் (பெரியாருக்கும்) எனக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி ஒரு நீண்ட வாக்குவாதக். ‘நாம இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பது அவருடைய கோரிக்கை. ‘நாம் வெளியேற முடியாது’ என்பது என் கருத்து. நான் கேட்டேன்: ‘அய்யா! வெளியேறணும்னு சொல்றீங்களே! வெளியேறிய பிறகு, உங்களுக்கு என்ன பெயர்?’ ‘பகுத்தறிவாளன்னு நான் வச்சுக்குவேன்’ என்றார் அவர். ‘ஆனா, பகுத்தறிவாளன்னு சொன்னாக்கூட இந்து இல்லைன்னு யார் சொன்னா உங்களை?’ என்றேன் நான். ‘அப்படி இல்லியா?’ என்றார் அவர். ‘இல்லியே! பகுத்தறிவாளன்னு சொன்னாலும் அப்புறமும் இந்துதான்’ என்றேன் நான். ‘அப்போ, நாத்திகன்னு சொல்லிட்டா?’ என்றார் பெரியார். ‘நீங்க நாத்திகன்னு சொல்லிட்டாலும், அப்பவும் நீங்கள் இந்துதான்.’ - இதுதான்.

உடனே பெரியார், ‘நான் நாத்திகன்னு சொல்லி, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவுல நோட்டிஃபை பண்ணிட்டா?’ என்றார். ‘அய்யா நீங்க நெத்தியில நாத்திக்கன்னு பச்சை குத்திக்கிட்டாலும், அப்போதும் இந்துவாகப் பிறந்த நீங்கள் இந்து மதத்தைவிட்டு மாறாத வரையில் நீங்கள் இந்துதான். அதை நீங்கள் மாற்றவே முடியாது. பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னேன். ‘சட்டத்துல அப்படி இருக்குதா?’ என்று கேட்டார். ‘ஆமா’ என்று நான் பதில் சொன்னேன்.

நீங்கள் சிலையை உடைத்தாலும் இந்துதான். பார்ப்பானை உதைச்சாலும், அடிச்சாலும், வாடா போடான்னு சொன்னாலும் இந்துதான். உதாரணமாக உங்கள் அப்பா இருக்கிறார். நீங்கள் உங்கள் அப்பாவை மதிக்கவில்லை. அடிக்கிறீர்கள், திட்டுகிறீர்கள், மீறி நடக்கிறீர்கள். அப்போது மகன் இல்லை என்று ஆகிவிடுமா? மகன், மகந்தானே. ‘என்னை திட்டுகிறான், அடிக்கிறான், உதைக்கிறான், குடிக்கிறான், அவனுக்கு சொத்து குடுக்க முடியாது’ என்று சொல்லமுடியுமா? கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவன் என்னவாக இருந்தாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை, உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்போது பெரியார் கேட்டார். ‘முஸ்லீமா மாறிட்டா?’ நான் உடனே சொன்னேன்: ‘நீங்க 1924லேர்ந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எத்தனை பேரு மாறினான்? ஏன் மாறலை? அது இயற்கை இல்லை, செயற்கை. பொறந்த மதத்தைவிட்டு எவனும் போகமாட்டான்யா!’ என்று சொன்னேன். உடனே அவர், ‘கிறித்துவனா மாறிட்டா?’ என்று கேட்டார். நான் சொன்னேன்: ‘நம்ம ஊர்லல்லாம் பாப்பார கிறித்துவன், வெள்ளால கிறித்தவன், படையச்சி கிறித்தவன்னு நிறைய பேரு இருக்காங்களே! எங்க ஊர்ல ஒரு தொகுதியில படையாச்சி கிறித்தவன் தேர்தல்ல சின்னாத்தான் ஜெயிக்க முடியும். அவ்வளவு கிறித்தவன் இருக்கான். அவங்களெல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால கிறித்துவங்களா மாறினவங்க. அதனால, ‘இங்க எல்லாவித ஜாதிலயும் கிறித்தவங்க இருக்காங்கய்யா!’ என்று சொன்னேன். ‘ஆமாம்ப்பா, இப்பதாம்ப்பா புரியுது’ என்று சொல்லிவிட்டு, என்ன சொன்னாரென்றால், ‘இவ்வளவையும் நம ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் பூரா சொல்லிடணும்’ என்றார்.



ஜூன் 2010 அமுதசுரபி இதழில், கிரேஸி மோகன் ரமணாயணம் என்னும் தலைப்பில் வெண்பாவில் ரமணரின் கதையை எழுதப் போகிறார் எனா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் வெளியாகியிருந்த சில சாம்பிள் வெண்பாக்கள்.

திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்ப்பம் - உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு

சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
சகோதரன் போலூரைச் சுற்றும் - மகானிவன்
அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
ஒத்திகை பார்ப்பான் உணர்ந்து

செப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
அப்பளத்து மாவை அவன் தொட - உப்பலாய்
பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
தங்கைக் கை என்பர் துதித்து!


இன்னும் என்ன என்ன வருமோ. என் பதிவைச் சொன்னேன்!


Friday, June 11, 2010

மாடலன் சொன்ன கதை

கண்ணகியும் சிலப்பதிகாரமும் இன்று அரசியலாக்கப்பட்டுவிட்ட நிலையில், ‘சிலப்பதிகாரம் (நாவல் வடிவில்)’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். பெரியார் கேட்ட கேள்விகள் நினைவிலாடின. கண்ணகியை மறுக்கவேண்டியதற்கான நியாயங்களை முன்வைத்தார். சிலப்பதிகாரத்தை எரிக்கச் சொன்னார் என நினைக்கிறேன். முரண் என்னவென்றால், இன்று கண்ணகியும் சிலப்பதிகாரமும் தமிழ் வடிவங்களாக, அவரைத் தலைவராகக் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டதுதான்.



இப்படி வந்த நினைவை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கண்ணகி எப்படி தமிழச்சிகளின் முன்மாதிரி ஆவாள் என்ற கேள்விகள் தரும் தருக்கங்களுக்குள் செல்லாமல், தமிழின் மிக முக்கியமான காப்பியங்களில் ஒன்று என்கிற சுவை நோக்கில் மட்டும் வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏற்கெனவே பள்ளிகளில் படித்தபோது சிலப்பதிகாரத்தின் சில பாடல்களையும், மொத்தக் கதையையும் கேட்டிருக்கிறேன். அதனை மீண்டும் எளிய தமிழில், எந்த சிக்கலும் இல்லாத நடையில் நாவல் வடிவில் படித்தபோது, மீண்டும் பள்ளியில் படித்த நாள்களுக்குள் சென்று வந்தது போல இருந்தது. பள்ளியில் சிலப்பதிகாரத்தை ஆர்வத்துடன் நடத்திய தமிழாசிரியர்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.

கதை என்று பார்த்தால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியம் எவ்வளவு வல்லமை பெற்றிருந்தது என்பதைப் பொட்டில் அறைந்து சொல்வது போல இருந்தது. ஒரு உணர்ச்சிமயமான நாடகத்துக்கு ஏற்ற வடிவத்துக்கான கதை. மீண்டும் பாடல்களைப் படித்து, வார்த்தைகளையும் அதன் உள்ளுறைகளையும் புரிந்து கொள்ள நேரமில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அப்படி வாசிப்பதுதான் சரியான பொருளையும், சுவையையும் தரவல்லது என்பதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. அப்படி மூலப் பாடல்களைப் படித்துப் பொருள் கொண்டு, ரசிக்க இயலாதவர்களுக்காக, சிலப்பதிகாரம் நாவல் நடையில் புத்தகத்தை வாசித்தேன்.

ஒருவித அசிரத்தையுடந்தான் இதனை வாசிக்க ஆரம்பித்தேன். அதே போன்ற ஆரம்பப் பக்கங்கள் அதிகம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் அதே நாடகத்தன்மையே என்னை கதைக்குள் உள்ளிழுத்துக்கொண்டது என்பதை நான் அறிந்தபோது பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரே காரணம் காப்பியத்தின் கச்சிதமான கதையே.

மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இதே கதையை இலக்கிய உலகமும் திரை உலகமும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டன. ஆனால் இது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. காரணம், கதையின் தாக்கம் அன்றி வேறல்ல.

கதையின் இன்னொரு முக்கிய அம்சம், ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர்கள் அளவில் பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பதுதான். ஒரு காவியத்தின் தன்மை இதுவாகத்தான் இருக்கமுடியும். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இப்படி கதாபாத்திரங்கள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்பதைப் பார்க்கமுடியும். சிலப்பதிகாரத்தின் மாதவியின் மகள் மணிமேகலையின் கதை தனியொரு காப்பியமாக வளர்வதும் நல்ல ரசனைதான். அதேபோல், கதை சோழ நாட்டில் தொடங்கி, பாண்டிய நாட்டில் எழுச்சி பெற்று, சேர நாட்டில் உச்சம் பெறுவதும் நல்ல உத்தி.

கதை சொல்லல் முறையிலேயே ஆரம்பிப்பதால் மிக எளிதில் திரைப்படம் (அல்லது நாடகம்) ஒன்றின் தேவையை நெருங்கிவிடுகிறது சிலப்பதிகாரம். மாடலன் என்னும் கதை சொல்லி முனி சேரன் செங்குட்டுவனுக்குக் கதை சொல்கிறான். கதை நடந்துகொண்டிருக்கும்போதே இடையில் வரும் கதை சொல்லி, மீண்டும் கதையைத் தொடர்கிறான். மீண்டும் கதை நிகழ்காலத்துக்கு வந்து, நிகழ்காலத்திலேயே முடிவடைகிறது. இதனால் இரண்டு விஷயங்களை சுதந்திரமாகச் செய்யமுடிகிறது. ஒன்று, கதை சொல்லல். இந்தக் கதை சொல்லல் வடிவம் எப்போதும் எல்லாரையும் கவரக்கூடியது. இரண்டாவது, கதைக்கான தொன்மையை உருவாக்குவது. இரண்டும் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. இக்காலத்துக்கு எந்த வகையிலும் பொருந்தாத கண்ணகியின் கதை மட்டும் எக்காலத்துக்கு பிடித்துவிடுவது ஆச்சரியம்தான்.

நாவல் வடிவில் சிலப்பதிகாரம் கொண்டு வந்தது நல்ல யோசனை. அதனை எளிய வடிவிலும், அனைவரும் படிக்கும்படியாகவும் கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வடிவம். கானல் வரியில் அப்படி என்னதான் சண்டை நடந்தது என மாணவர்கள் இனி தவிக்கவேண்டியதில்லை! கதையை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் இப்புத்தகம் ஏற்றதாக அமையும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன்புதான், அண்ணாத்துரையின் ‘தீட்டுத் துணி’ புத்தகத்தைப் படித்தேன். எல்லாக் கதையிலும் பிராமணனே மோசமானவன். ‘இடையில மானே தேனே பொன்மானேல்லாம் போட்டுக்கணும்’ போல, எல்லாக் கதையில் ‘பிராமணை போட்டுவிட்டார்’ அண்ணா. அறிஞ்சர் அல்லவா, சும்மாவா. சிலப்பதிகாரத்தில் பிராமணன் எவர் குடியையும் கெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, கண்ணகி அந்தணர்களையும் அறவோர்களையும் விட்டுவிட்டு, மற்றவர்களை எரிக்கிறாள். இது அடுக்குமா? பின்னர் எப்படி இது தமிழர் இலக்கியமாகும்? நெஞ்சுக்கு நீதி வேண்டாமா? அண்ணா முதல் தம்பி வரை யோசித்து, வேறு ஏதேனும் ஓர் இலக்கியத்தை, புதிய தமிழர்திருநாள் அன்று புதியதாக அறிவித்தாலும் நல்லதுதான்.

நான் என்ன எழுதினாலும், அதை ஒரு பிஞ்ச் ஆஃப் சால்ட்டுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இங்கே ஏற்கெனவே சொல்லப்பட்டாகிவிட்டது. இவ்வளவு தூரம் எழுதி அந்த பிஞ்ச் ஆஃப் சால்ட்டைப் போடாமால் போனால் என்னாவது?

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க! - http://nhm.in/shop/978-81-8493-446-5.html

Sunday, June 6, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா - சிறுகுறிப்பு



இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் நான் எதிர்பார்த்தது போலவே அவரது ராமாயணச் சொற்பொழிவைப் பற்றிப் பேசினார். மறுபக்கம் திரைப்படத்தைப் பற்றியும் பேசினார். சிவகுமார் நன்றாக நடித்த ஒரே திரைப்படம் மறுபக்கம்தான் என்று சொன்னால் என்னைப் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்! நான்கைந்து வரிகள் இந்திரா பார்த்தசாரதியைப் பற்றியும் பேசினார். ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்குவார் என எதிர்பார்த்தேன், நல்லவேளை, அக்காட்சி இடம்பெறவில்லை.

திருப்பூர் கிருஷ்ணன் இந்திரா பார்த்தசாரதியின் கதை மிக அருமையாக வாசித்துக் காட்டினார். சிறுகதை என்பது வாசிப்பு அனுபவத்துக்கு ஏற்றதே ஒழிய, அதனைப் பிறர் சொல்லக் கேட்பது கொஞ்சம் கொடுமையானதுதான். ஒரு சிறுகதையை வாசித்துக் காட்டியே கொன்றுவிடலாம். ஆனால் திருப்பூர் கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட கதை உணர்ச்சியமானது என்பதால் அவர் சொல்லக் கேட்கும்போதும் நன்றாகவே இருந்தது. பொதுவாகவே இபாவின் கதைகள் உரையாடல்களை மையமாகக் கொண்டவை. உரையாடல்களின் வழியே ஸ்தாபிக்கப்படுபவை. அதோடு இக்கதையில் உணர்ச்சியும் சேர்ந்துகொண்டதால் திருப்பூர் கிருஷ்ணனின் கதை சொல்லல் மிகக் கச்சிதமாக அமைந்தது. அதற்குப் பின் கதை சொன்னவர்கள் என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதிலும் அஸ்வத்தாமன் கதையைச் சொன்னவர் அதிக நேரம் எடுத்துக்கொண்டு, ’நான் சொல்லவில்லை எழுத்தாளர் சொல்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே போனார். அறையின் ஏதோ ஒரு மூலையில் அஸ்வத்தாமன் விசும்பிக்கொண்டிருந்திருப்பாரோ என்னவோ. அஸ்வத்தாமா போன்ற வாசிப்புக்கு ஏற்ற கதையை சொல்வது என்பது அதற்குச் செய்யும் கொடுமைகளில் ஒன்று.

இந்திரா பார்த்தசாரதி பேசினார். நான்கு நிமிடங்களில் அட்டகாசமாகப் பேசினார். அனுபவமே அனைத்திலும் சிறந்தது என நிரூபித்தார். சிறுகதைகளின் முழுத் தொகுப்பு என்று பத்ரி சொன்னாலும், நான் இனிமேல் கதை எழுதமாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன், இனியும் எழுதுவேன், அந்தத் தொகுப்பும் வரும் என்று அவர் சொன்னது ஹைலைட்.



இ.பாவின் சிறுகதைகளைவிட என் ரசனையில் அவரது நாடகங்களும், நாவல்களும் முக்கியமானவை. இப்போது கிழக்கு வெளியிட்டிருக்கும் இபாவின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் ஒரு சேர படிக்கும்போது இக்கருத்து வலுப்பெறுகிறதா மாறுகிறதா எனப் பார்க்கவேண்டும். இபா என்ற ஒரு மூத்த படைப்பாளிக்கு கிடைத்த நல்ல ஒரு மரியாதை இந்த விழா.

விழாவின் அறிவிப்பை பத்ரி அவரது பதிவில் வெளியிட்டபோது, அதில் அவர் சொல்லியிருந்த கெடுபிடி எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனிப்பட்ட ஒருவரால் ஒரு விழா எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கு ஈடாக, ஒரு விழாவால் தனிப்பட்ட ஒருவரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதும் முக்கியமானதுதானே என நினைத்தேன். இன்று விழாவில் பத்ரி சொன்னது போலவே விழா ஆரம்பித்ததும் கதவை மூடிவிட்டார்கள். யாரையும் நிற்க விடவில்லை. இதனை முதலிலேயே பத்ரி அவரது பதிவில் சொன்னது நல்லதாகப் போனது என்று தோன்றியது. தனிப்பட்ட முறையில் அவர்கள் நடத்தும் விழா என்பதால் இப்படி செய்துகொள்கிறார்கள். அது அவர்களது இஷ்டம். இந்தக் கெடுபிடிகள் பலருக்கு வருத்தம் தந்திருக்கிறது என்பது புரிகிறது. அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எவ்வித கெடுபிடிகளும் இல்லாத கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மீண்டும் சந்திப்போம். :>